குறுங் கவிதைகள்

 


"அன்பு"

 

"அள்ளி அரவணைத்து அன்பு பொழிந்து

அனு தினமும் அடைக்கலம் அளித்து

அக்கறையாய் பேசி அமுதம் ஊட்டி

அமைதி தந்து அறிவூட்டிய தாயே

அன்றும் என்றும் அன்பின் பொருளே !!

 

 

"தொட்டவனை மறந்ததென்ன .."

 

"குட்டை பாவாடையில் உலகம் சுற்றியென்ன

வெட்டி பேச்சில் வெகுளி காட்டியென்ன

தட்டி கேட்க துணை தேடாமல்

தொட்டவனை மறந்ததென்ன  பெற்றவளை பிரிந்ததென்ன ?"

 

"ஒட்டி உடையில் தினம் திரிந்தென்ன 

போட்டி போட்டு அழகை காட்டியென்ன

ஒட்டி உரசி காதல் புரியாமல்

தொட்டவனை மறந்ததென்ன சுற்றத்தை துறந்ததென்ன  ??"

 

 

 

"கனவில் வந்த காதலனே!!"

 

"நெஞ்சைப் பறித்தவனே கனவில் வந்தவனே

தஞ்சம் கேட்டாய் அன்பைக் கொட்டினேன்

கொஞ்சம் மயங்கினேன் சந்தோசம் கண்டேன்

வஞ்சித்து இடையில் எங்கே போனாய் ?"

 

"கனவில் வந்த காதலனே! , மணாளனே!!

கடிஞை ஏந்துகிறேன் தாலி வேண்டியடா 

கன்னத்தில் முத்தமிட விடியுமுன் வாடா

கள்ளனே என்னை வயப்படுத்தி விட்டாயடா!!"

 

(கடிஞை - பிச்சைப் பாத்திரம்)

 

 

"என் நெஞ்சுக்குள் நுழைந்து விட்டாய்!!"


"எழுச்சி கொண்டேன் உன்னை கண்டதால்

எண்ணி எண்ணி காதல் வளர்த்தேன்!

எண்குணமும் அழகும் கொண்ட நீயோ   

எய்யாமை எல்லா அன்பையும் கொட்டி 

என் நெஞ்சுக்குள் நுழைந்து விட்டாய்!!"

 

"எப்பொழுதும் நீ என்னுடன் இருக்க

எழுது கோலால் நெஞ்சில் வரைந்தேன்! 

எக்காளம் இசைத்து மகிழ்ந்தேன், நீயோ

எதிர் காலம் நல்லதாக அமையவென  

என் நெஞ்சுக்குள் நுழைந்து விட்டாய்!!"

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]


(எண்குணம் - எட்டுக்குணங்கள் [தமிழ் உட்பட்ட பண்டை இந்தியத் துணைக் கண்டத்து மரபுகளில் வழங்கும் குணத்தொகுதியாகும்

 

எய்யாமை - அறியாமல்

 

எக்காளம் - ஒரு காற்றிசைக் கருவி. பழங்காலத்தில் வெற்றியின் அடையாளமாக இசைத்து மகிழ்வர்.)


0 comments:

Post a Comment