"தமிழர்களின் பண்டைய நான்கு கற்கள்" / பகுதி 07

 
ஆவுரஞ்சிக் கல் [ஆ உராய்வுக் கல்]

 

மாடுகள் தமது உடல் எரிச்சலைப் போக்குவதறகு ஏதுவாக நமது முன்னோர்களால் உருவாக்கப் பட்ட அமைப்பு இதுவாகும். பொதுவாக மேய்ச்சல் நிலங்களுக்கு அருகிலும், குளக்கரைகளுக்கு பக்கத்திலும், கேணிகள் போன்ற நீர்நிலைகளுக் கருகிலும் இத்தகைய அமைப்புகள் அல்லது இந்தத் தூண்கள் உருவாக்கப்பட்டன. நீர்நிலைகள் இல்லாத போது இதனுடன் இணைந்த வகையில் தண்ணீர் தொட்டி ஒன்றும் கட்டப் பட்டிருக்கும். இந்தத் தூண்களில் கால் நடைகள் தங்கள் முதுகை உரசிக் கொள்ளும். கால் நடைகளின் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுத்து இதை உருவாக்கினர் போல் தெரிகிறது. மரங்களில் உரசினால் வளர்ச்சி பாதிக்கும் என்பதை அறிந்தே, இந்த ஏற்பாட்டை செய்தனர் என நம்புகிறேன். இதை ஆதீண்டு குற்றி, தன்மத்தறி, நடுதறி, ஆவுரிஞ்சி, ஆவுரிஞ்சு தறி, ஆதீண்டு கல், ஆவோஞ்சிக்கல், மாடுசுரகல் எனவும் அழைப்பார்கள்.

 

இதில்  நீங்கள்  கவனிக்க  வேண்டியது, இங்கு நடுவில் உரல் மாதிரி துளை இல்லை. 

 

மனிதர், நாய், பூனை போன்றவற்றிற்கு உடலில் அரிப்பு வந்தால் அவற்றால் சொறிந்து கொள்ள முடியும். ஆனால் ஆடு, மாடு போன்ற மிருகங்களால் சொறிந்து கொள்ள முடியாது. இதனால் இவை மரங்கள், வேலிகள் போன்றவற்றைத் தேடிச் செல்கின்றன. இவை சொறிந்து கொள்ள வசதியாக, எமது முன்னோர்கள் மேய்ச்சல் முடிந்து கால்நடைகள் திரும்பி வரும் பாதைகளில், கால்நடைகள் மேயும் இடங்களில், கால்நடைகள் நீரருந்தச் செல்லும் நீர் நிலைகளின் அருகில் ஆங்காங்கே "ஆ உராய்வு" (ஆ என்றால் பசு) எனப்படும் உருளை வடிவிலான, நீண்ட கற்களை நட்டு வைத்தனர். இதுவே காலப் போக்கில் மருவி ஆவுரஞ்சி, ஆவிரஞ்சிக் கற்கள் என்றாகின. சில இடங்களில் "ஆதீண்டு குற்றி" (பசு தீண்டும்/தொடும் குற்றி) எனவும் அழைக்கப்பட்டது.

 

அகநானூறு 167,  பசுக்கள் போல் யானை தன் முதுகைச் சொரியும் ஒரு நிகழ்வை எடுத்து காட்டுகிறது. வணிகக் கூட்டத்தைக் (சாத்து) கொன்று, அவர்களின் பொருட்களை கொள்ளையடித்து, பங்கு போட்டுக் கொண்டு வழியில் கூடி உண்ணும் ஆடவர்கள் அங்கே இருக்கிறார்கள். அவர்கள் வில்லும் அம்பும் கையில் வைத்துக் கொண்டு திரிவர். எனவே, அவர்களுக்குப் பயந்து யானை ஓடும். பீர்க்கங்கொடி [peerkkai vines] படர்ந்திருக்கும் பாழ் நிலத்தில் ஓடும். அங்கிருக்கும் முருங்கைத் தழைகளை [murungai leaves] மேயும். அருகில் இருக்கும் செங்கல் (இட்டிகை) சுவரில் தன் முதுகைச் (வெரிந்) சொரிந்து கொள்ளும். யானை தன் முதுகைச் சொரியும் போது அந்த வீட்டின் விட்டம் [cross beams] கீழே விழும். அப்போது அங்கு வாழும் மணிப்புறா ஓடும் என்கிறது.

 

"சாத்து எறிந்து

அதர் கூட்டுண்ணும் அணங்குடைப் பகழிக்

கொடு வில் ஆடவர் படு பகை வெரீஇ,

ஊர் எழுந்து உலறிய பீர் எழு முது பாழ், 10

முருங்கை மேய்ந்த பெருங் கை யானை

வெரிந் ஓங்கு சிறு புறம் உரிஞ, ஒல்கி

இட்டிகை நெடுஞ் சுவர் விட்டம் வீழ்ந்தென,

மணிப் புறாத் துறந்த மரம் சோர் மாடத்து"

[அகநானூறு. 167]

 

ஆவுரஞ்சிக்கற்களானவை கால்நடைகளுக்கு ஏற்படும் திணைவு எனும் ஒரு வகைக் கடியினை நீக்கும் முகமாக [உடல் எரிச்சலைப் போக்குவதறகு] உருவாக்கப்பட்டவை. அக்கற்கள் ஒரு மாடு உரசக் கூடியளவு உயரத்திலே சொரசொரப்பான மேற் பரப்பையுடையனவாக அமைக்கப்பட்டிருக்கும். ஆனாலும் இன்றைய காலத்தில் ஆவுரஞ்சிக் கற்களைக் காண்பது வெகு அரிதாகி விட்டது. எனவே, யாழ். பல்கலைக்கழக வரலாற்றுத்துறையினர் தமது  பல்கலைக் கழக முன்றலின் ஒரு பகுதியில், எங்கோ பெயர்த்தெடுத்து வந்த தண்ணீர்த் தொட்டியும் ஆவுரஞ்சிக் கல்லும் சுமை தாங்கிக் கல்லும் உரிய விளக்கங்களுடன் வைத்துள்ளனர் [படம் - 0 4] என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்தியா, தமிழ் நாடு, புதுக்கோட்டை மாவட்டத்தில் 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட ஆவுரஞ்சிக்கல் கண்டறியப்பட்டு அடையாளப்படுத்தப் பட்டுள்ளது. நச்சாந்துப்பட்டி அருகே உள்ள பிற்காலத்தை சேர்ந்த ஒரு கல்வெட்டில் 'மாடு உரசும் கல்' எனவும்  எழுத்து பொறிக்கப்பட்டு உள்ளது. அதே போல, ஒல்லாந்தர் கால ஆவுரஞ்சிக்கல்லும் அதில் பொறிக்கப் பட்ட  தமிழ்க் கல்வெட்டும் அதனோடு இணைந்துள்ள சிறு கேணி ஒன்றும்  இலங்கை, உடுப்பிட்டியில் 2013 இல் கண்டு பிடிக்கப் பட்டது [பேராசிரியர் ப.புஸ்பரட்ணம், தலைவர், வரலாற்றுத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்]. அந்த ஆவூரஞ்சிக் கல்வெட்டில், ஆனால் அது குளம் என்றே பதிய பட்டுள்ளது. கல்வெட்டின் முதல் ஐந்து வரிகளிலும் குளத்தை வெட்டுவித்தவரின் விபரம் தரப்பட்டுள்ளது. அதன் வாசகம் 'இந்தக் குளத்தை குமாரசுவாமி பெண் வீராத்தை வெட்டுவித்தது' என அமைந்துள்ளது. இதற்கு கீழே குளத்தின் பெயர், அதன் ஆழம், வருடம் குறிப்பிடப்பட்டுள்ள வாசகம் என்பன அமைந்துள்ளன. ஆயினும் கல்வெட்டின் கீழ்ப் பகுதியில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்கள் உப்புக் காற்றால் மாற்றமடைந்து காணப்படுவதால் அவற்றின் விபரங்களைத் தற்போதைய நிலையில் திட்டவட்டமாகக் கூற முடியாதிருக்கிறது.

 

யாழ்ப்பாணத்தில் இம்மரபு எக்காலத்தில் இருந்து பயன்பாட்டுக்கு வந்ததென்பதற்கு உறுதியான ஆதாரங்கள் காணப்படவில்லை. ஆயினும் இற்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன்னரே மந்தைகள்  உணவுக்காகவும், விவசாய உற்பத்திக்காகவும் வளர்க்கப்பட்டதற்கான சான்றுகள் கந்தரோடையில் பெருங்கற்காலப் பண்பாடு பற்றிய  அகழ்வாய்வின்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இதனால் தமிழகத்தைப் போல் யாழ்ப்பாணத்திலும் இதன் பயன்பாட்டிற்கு தொன்மையான வரலாறு இருக்கலாம் எனக் கருத இடமுண்டு.

 

போர்த்துக்கேயர் கடைப்பிடித்த கலையழிவுக் கொள்கையில் யாழ்ப்பாணத்தில் இருந்த ஆலயங்கள், வீடுகள், பிற கட்டிடங்கள் அழிக்கப்பட்டபோது அந்த அழிவிலிருந்து தப்பிய எமது பண்பாட்டு மரபுரிமைச் சின்னங்களில் ஒன்றாக ஆவுரஞ்சிக்கல்லையும், சுமைதாங்கியையும்  குறிப்பிடலாம். சில ஆவுரஞ்சிக்கற்கள் குழந்தைப் பிரசவத்தின்போது அகாலமரணமடைந்த பெண்களுக்காக அமைக்கப் பட்டவையாகும் அவ்வாறான ஆவுரஞ்சிக் கற்களில் இறந்த வரைப் பற்றிய சாசனம் பொறிக்கப் பட்டிருப்பதுடன், அவரது சமய நம்பிக்கையை வெளிப் படுத்தும் தெய்வ உருவங்களும், சமயச் சின்னங்களும்  பொறிக்கப் பட்டுள்ளன. அத்துடன் குறித்த பெண் இறந்த நாளில் அவர் நினைவாக அமைக்கப்பட்ட ஆவுரஞ்சிக் கல்லுக்குப் பூசை செய்து வழிபடும் மரபு இன்றும் வடமராட்சியில் காணப்படுகின்றன. சில பழைமையான ஆவுரஞ்சிகற்கள் காணப் பட்ட இடங்கள் பிற்காலத்தில் சிவன் கோவிலாக மாற்றப் பட்டு ஆவுரஞ்சிக் கற்களே சிவலிங்கமாக வழிபடப் படும் முறை காணப்படுகிறது என்றும் அறிய முடிகிறது.

 

கால்நடைகள், மேய்ச்சல் நிலம் குறைந்துவரும் இக்காலக்கட்டத்தில் இது போன்ற கால்நடைகளுக்கான நினைவுக் கல்லையும் கல்வெட்டுகளையும் பதிவு செய்து பாதுகாக்கப்பட வேண்டியது இன்றைய தலை முறையினரின் கடமையாகும்.

 

சுமைதாங்கி கல்:

இது பண்டைய தமிழர்களின் பாரம்பரிய பண்பாடுகளில் ஒன்றாகும். சுமைகளை சுமந்து செல்வோர் அதனை பிறர் துணையின்றி எளிதாக இறக்கி மீண்டும் தூக்கிக் கொள்வதற்காக கட்டப்பட்ட அமைப்பு இதுவாகும்.

 

முன்பு காலத்தில் கருவுற்ற ஒரு பெண்; குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இறந்து விட்டால் அவளுக்காகப் பொது இடங்களில், சாலை ஒதுக்குப் புறங்களில் சுமைதாங்கிக் கற்களை நட்டு வைத்தார்கள். அப்படி நட்டு வைத்தால் அந்தப் பெண்ணின் ஆசைகள் நிறைவேறும்; அவளின் ஆசைச் சுமைகள் குறையும் என்பது தமிழர்களின் நம்பிக்கையாகவும் வழக்கமாகவும் இருந்தன. எனினும் வேறு ஒரு காரணமும் இருந்தது.

 

பண்டைய காலத்தில் பொது மக்கள் தலைச் சுமையாகவே இடத்துக்கு இடம் பொருட்களை எடுத்துச் சென்றார்கள். தாங்கள் பயிர் செய்த பொருட்களைத் தொலைவில் உள்ள சந்தைகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டி இருக்கும். சந்தைகளில் வாங்கிய பொருட்களை வீடுகளுக்கு எடுத்து வர வேண்டி இருக்கும். அந்த வகையில் நெடுந்தூரம் சுமைகளைச் சுமந்து செல்ல வேண்டிய நிலை இருந்தது. எனவே  கண்டிப்பாகச் சிறிது நேரம் இளைப்பாற வேண்டி இருக்கும். சுமைகளை இறக்கி வைக்க வேண்டி இருக்கும். இதற்கு ஒரு அறச் செயலாகவும் கருதி இது வடிவமைக்கப் பட்டதாக கருதப் படுகிறது. 

 

இந்த வழக்கம் எப்போது தோன்றியது என்று தெரியவில்லை. ஆனால் நீண்ட நாட்களாக வழக்கத்தில் இருந்து உள்ளது. இப்படி உருவாக்கப்பட்ட சுமைதாங்கிகளில் சிலர் அந்தப் பெண்ணின் பெயர்; அந்தப் பெண்ணின் இறந்த நாள்; அந்தப் பெண்ணின் கணவர் பெயர் போன்ற விவரங்களையும் எழுதி வைத்து இருப்பார்கள்.

 

சுமைதாங்கி கல் ஏறக்குறைய நாலரை அடி உயரத்தில் இருக்கும். 2 அடி வரை தடிமன் (தடிப்பு) கொண்ட ஒரு சிறிய சுவர்க் கட்டுமானம் ஆகும். பெரும்பாலும் சுண்ணாம்புக் கற்களினால் உருவாக்கப் பட்டவை.

 

சில சுமைதாங்கிகளில் குழந்தைகளைப் படுக்க வைக்க சிறிய தொட்டில்களையும் அமைத்து இருக்கிறார்கள். முன்பு காலத்தில் தலைச் சுமையுடன் வரும் பெண்கள் தங்களின் குழந்தைகளையும் சேலைத் துணியில் அணைத்து வைத்து நெஞ்சில் கட்டித் தூக்கிக் கொண்டு வருவார்களாம். எனவே தாங்கள் இளைப்பாறும் போது குழந்தையை இந்தத் தொட்டிலில் தொங்க விடுவார்களாம்.

 

உதாரணமாக, இலங்கை யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் குறிப்பாக வல்வெட்டித்துறை ஊரிக்காடு, நெடியகாடு, சாவகச்சேரி, உடுவில், உடுப்பிட்டி போன்ற பல இடங்களில் காணப் படுகின்றன. வல்வெட்டித்துறையில் ஊரிக்காட்டில் காங்கேசன் துறை வீதியில் ஒரு சுமைதாங்கி உள்ளது. இதில் 1921-ஆம் ஆண்டில் மரணம் அடைந்த ஒரு பெண்ணின் விபரங்கள் பின்வருமாறு நினைவு எழுதப்பட்டு உள்ளது: ’1921- கம்பர் மலை அய்யாமுத்து பெண் பாறுபதி – உபயம்’ எனக் கல்லில் பொறிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத் தக்கது .

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

பகுதி 08 வாசிக்க அழுத்துங்கள்- Theebam.com: "தமிழர்களின் பண்டைய நான்கு கற்கள்" / பகுதி 08:  

ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துங்கள்- Theebam.com: "தமிழர்களின் பண்டைய நான்கு கற்கள்" / பகுதி 01:

0 comments:

Post a Comment