'வன்முறைகளில் வதைபடும் வனிதையர்'

பாரத பூமியும், புத்தர் கண்ட இலங்கை தீவும் புண்ணிய பூமி என்றும்,  அறநெறியும் பண்பாடும் மிக்க பூமி என்றும், கூறுவார். இங்கே தான் விவேகம் கொண்ட பண்பாடு நிலைத்து, ஞானச் செல்வம்  அள்ள அள்ளக் குறையாமல் உள்ளது என நாம் போற்றுகிறோம். ஆனால்,  வனிதையர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பது செய்திகள் மூலம் நாம் தினம் தினம் அறிகிறோம். எனவே, வன்முறைகளில் வனிதையர் படும் இக்கட்டான நிலைகளை அலசி ஆராயும் பொழுது, சில குறைபாடுகள் எம் சமுதாயத்துக்குள்ளேயும் மற்றும் சில அரசிலும் காணக் கூடியதாக உள்ளது.

 

அரசை முதல் எடுத்து கொண்டால், அங்கு குறைந்த அளவு பெண் காவல் படையினர் [போலீஸ் அதிகாரிகள்] கடமையில் இருப்பது தெரிய வருகிறது. ஆனால், ஆய்வுகள் எமக்கு எடுத்து காட்டுவது, வன்முறைக்கு உள்ளாகும் வனிதையர்கள், அங்கு பெண் உத்தியோகத்தர் இருந்தால் தங்கள் முறைப்பாடுகளை எந்த தயக்கமும் இன்றி முழுமையாக வெளிப்படுத்தி, அதை கண்டுபிடித்து, அதில் ஈடுபட்டவருக்கு தண்டனை கொடுக்க, காவல் துறையுடன் ஒத்துழைப்பார்கள் என்பது ஆகும்.

 

அது மட்டும் அல்ல, காவல் துறை அமைப்பில் சாதாரண குடிமக்களுக்கு பாதுகாப்பு  கொடுப்பதைவிட, உயரடுக்கு மக்களுக்கே இன்னும் கூடுதலான கவனம் செலுத்துகிறார்கள் என்பதும் ஆகும். உதாரணமாக அண்மையில் வெளிவந்த 'ஜெய் பீம்' திரைப்படம் ஒரு எடுத்து காட்டு. இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது.

 

ஆண், பெண் இருபாலரும் சமமாக குடும்பத்தில் நடத்தப் படாமையும் இப்படியான வன்முறைக்கு காரணமாக அமைகிறது என்றும் கூறலாம். உதாரணமாக, எல்லா சமயங்களும் மக்களுக்கு உண்மையையும், நேர்மையையுமே  போதிப்பதாகவும்  அவை சகோதரத்துவத்தை வலியுறுத்துவதாகவும் கூறப்பட்டாலும், அங்கு கூர்ந்து கவனித்தால், இவைகளுக்கு மாறான பல உண்மைகள் தெரியவரும். சமுதாய அமைப்பிலும் அதன் தாக்கம் வெளிப்படையாகும்.

 

"யாயே, கண்ணினும் கடுங் காதலளே

எந்தையும், நிலன் உரப் பொறாஅன்; ‘சீறுடி சிவப்ப,

எவன், இல! குறு மகள்! இயங்குதி! என்னும்;’

யாமே, ...... "

 

என்று அகநானூறு 12 கூறினாலும், இன்று அந்த நிலை காண்பது அரிது. தமிழன் வரலாற்றில் கிறிஸ்துவுக்கு முன், சங்க கால தொடக்கத்தில் தாய் வழிச் சமூகமே இவ்வுலகில் ஆட்சி புரிந்தது.

குழுக்களாக வாழ்ந்த காலத்தில் தாயின் இராச்சியமே நடைபெற்றது. குழுவிற்கு தாய்தான் தலைமை தாங்கினாள். தாய் என்ற சொல்லே மருவி தலைவி என்றாகிவிட்டது என வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். பண்டைய தமிழர் வாழ்வில் பெண் மதிக்கப்பட்டு அவளுக்குரிய கௌரவம் வழங்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் பின் சமயங்கள் தலை தூக்க,  வஞ்சகமாக புராணங்களை மற்றும் சில கட்டுப்பாடுகளை, கோட்ப்பாடுகளை புகுத்தியது பெண்களின் வாழ்வுக்கு வீழ்ச்சியாக முதலில் அமைந்தது எனலாம்?

 

உதாரணமாக, விஷ்ணுவிற்கு துளசி பூஜை செய்கிற ஒவ்வொருத்தரும், ஒரு கற்பழிப்பை கொண்டாடுகிறார்கள்? அதுவும், அந்த பெண்ணின் தவறு என்னவென்றால், அவள் விஷ்ணுவின் பக்தையாம், மேலும் மிகுந்த பக்தியுடன் இருந்தாளாம் [ஜலந்தர்-பிருந்தா [துளசி] கதை]. இந்த கற்பழிப்பை எவரும் கண்டிக்கவும் இல்லை?

 

இப்படி பல பல. இவையை, இந்த புராணங்களை இன்னும் போற்றி வாழும் இந்த சமுதாயத்தில் எப்படி மாற்றம் ஏற்படும் ? இதை புராணமாக கூற, நாம் கேட்டு மௌனம் சாதித்து இன்னும் அங்கீகரிக்கின்றோம்? இப்படி அங்கு நடக்கிற கேவலங்களை கேட்டு கேட்டு காது பழகிவிட்டது. இப்படி பெண்களை இழிவு படுத்தும் காட்சிகள் ஏராளம். உதாரணமாக இன்றைய நவீன காலத்தில் கூட,  'உயிரே போனாலும் பெண்களை விட மாட்டோம்' என்னும் சபரிமலை பக்தர்களை இன்னும் காண்கிறோம்?

 

இந்த முள்ளுச்செடி விதைகளை காலம் காலமாக விதைத்துக் கொண்டு அவை வளர்ந்து குத்துகிறது என இடும் முழக்கம் நியாயமானதா?

 

இவற்றை எல்லாம் ஊக்குவித்து வளர்த்துக் கொண்டு அதன் பலன்களை கண்டு பொங்கி எழுவதில் என்ன பயன்?

 

வன்முறைகளில் வனிதையர்கள் அவதிப்படுவதற்கு காரணம் அவர்களே என்று கூறும் பல ஆண்களை இன்று காண்கிறோம். அவர்களுடன் சேர்ந்து தலையாட்டும் பெண்களும் உள்ளனர். உதாரணமாக பெண்கள் ஆர்வத்தைத்துாண்டுகிற உடை உடுகிறார்கள் என்பது அவர்களின் குற்றச் சாட்டு?

 

நம் சமுதாயத்தில் இன்று பல நடைமுறைகள் மாறி இருப்பினும் இன்னும் ஆண், பெண்பாற்களின் பாகுபாடு மட்டும் மாறாமல் ஓரளவு அதே நிலையோடு இருந்து வருகிறது என்பது உண்மையே. உதாரணமாக, இன்றும் எங்கள் சமூகத்தில் என்ன உடை அணிய வேண்டும், யாருடன் பழக வேண்டும் எனத் தொடங்கி, ஒரு பெண்ணை, குறிப்பாக இரவு நேரத்தில்,  தனியாக அனுப்ப தயங்குவதில் இருந்து பெண்கள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன என்பதை நாம் பார்க்கிறோம். மேலை நாட்டில் வாழும் எம் பெண்களிடம் இந்த கட்டுப்பாடுகள் ஓரளவு தளர்ந்து காணப்பட்டாலும், இலங்கை, இந்தியா போன்ற பகுதிகளில் இவை இன்னும் அப்படியே தான் பெரும்பாலும் இருக்கின்றன, இக்கட்டுப்பாடுகள் குறித்து பேசுபவர்கள், இவ்வனைத்துமே பெண்களின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கையாக எடுக்கப்படுகிறது என வாதாடுகிறார்கள். ஆமாம், பாதுகாப்பு முக்கியம் என்றாலும் அதற்கேற்றவாறு குழந்தைகளுக்குச் சம உரிமை வழங்கி ஆண், பெண் வேறுபாடின்றி வளர்க்க வேண்டும் மற்றும் அவர்களுக்கு சாலையில் இரவு நேரத்தில் எவ்வாறு பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்பது குறித்த விழிப்பு உணர்வுகளையும் ஏற்படுத்த வேண்டும். இவை அனைத்துக்கும் முக்கிய காரணம், பாலியல் வன்முறைக்கு உள்ளாவதை தடுப்பதுவே என்கிறார்கள். ஆணின், பெண்ணின் உடல் அமைப்பு இதற்கு சான்றாக கூறுகிறார்கள். உதாரணமாக, பெண்ணின் உடலமைப்பால், வலுக்கட்டாயமாக ஆணை தீண்ட முடியாது இருப்பதும், ஆனால் அதேவேளை, ஆணின் உடலமைப்பால், ஒரு பெண்ணை  வலுக்கட்டாயமாக தீண்டக் கூடியதாக இருப்பதும் [பாலுறுப்பு அமைப்பின் வேறுபாடுகளால்] இதற்கு ஒரு முக்கிய காரணம் என்கிறார்கள்.

 

வெறுமனவே பெண்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதால் இவற்றிற்கு தீர்வு வரா. ஆணும் பெண்ணும் இயற்கையின் இயல்போடு, பழகி. தவறுகள். செய்யக் கூடாது என்பதை அவர்களே உணரும் சூழலை உருவாக்கின், இதை, இந்த வேறுபாடை குறைக்க முடியும். மனித சமூகப் புரிதல் இருபாலாருக்கும் ஏற்படுத்த வேண்டும். ஆணும் பெண்ணும் தம் தம் பங்கை அங்கு உணரவேண்டும். ஒரு காலத்தில் பெண் கருவுற்று பிள்ளை பெற்று, அதனால்  குடும்ப நீட்சிக்கு, அன்று பெண்ணின் பங்கை அறியாமல், ஆணே காரணம் என கருதியதால், வளம் செழிக்க லிங்கம் அல்லது ஆண் குறி வழிபாடு அமைந்தது என வரலாறு கூறுகிறது. அது மட்டும் அல்ல, புராணக் கதைகளும் இந்திரன், விஸ்ணு போன்ற கடவுள்களின் பாலியல் வன்முறைகளை துதி பாடுகின்றன. ஆகவே, எம் சமூக அடித் தளத்தில் விஷ விதைகள்  விதைக்கப் பட்டு விட்டன என்ற உண்மையையும் நாம் உணர வேண்டும். எனவே எம் சமூகமும் விழித்தெழுந்து, ஆண் பெண் இரு பாலாருக்கும் இவைகளை சமமாக உணர்த்தி, சிறு வயதில் இருந்தே அவர்களை சரியான வழியில், ஒருவரை ஒருவர் மதித்து நடக்க பழக்கப்பட வேண்டும் என்று நான் கருதுகிறேன்

 

ஆக மொத்தத்தில்.. வெறுமனவே ஆண்களை திட்டுவதாலோ.. பெண்களை வீட்டுக்குள் அடைத்து  வைப்பதாலோ. இவற்றிற்கு தீர்வு வராது. ஆணும் பெண்ணும் இயற்கையின் இயல்போடு சகஜமாகப் பழகி, தவறுகள் செய்யக் கூடாது என்பதை அவர்களே உணரும் சூழலை உருவாக்கின், நிச்சயம் அதுவே, மனித வாழ்க்கை சிறக்க உதவும் !

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

0 comments:

Post a Comment