ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவா அல்லது மூன்று வேளை உணவா? - எது சிறந்தது?

பொதுவாக நாம் ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டுள்ளோம். ஒரு நாளில் காலை உணவு சாப்பிடுவது என்பது மிக முக்கியமான உணவாக கருதப்படுகிறது. அலுவலகங்களில் மதிய உணவுக்கு என்று நேரம் ஒதுக்கப்படுகிறது. இரவு உணவு நம் குடும்பத்தினருடனோ அல்லது நண்பர்களுடனோ சாப்பிடுகிறோம். ஆனால், மூன்று வேளை சாப்பிடும் பழக்கம் என்பது ஆரோக்கியமான நடைமுறையா?

 

நாம் அவ்வப்போது எப்படி சாப்பிடுவது என்பதை சிந்திக்கும் முன், எப்போது சாப்பிடக் கூடாது என்பதை சிந்திக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

 

ஒரு நாளைக்கு எட்டு மணிநேரத்திற்கு எதுவும் சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருப்பது குறித்து ஆராய்ச்சிக்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. ஒரு நாளைக்கு குறைந்தது 12 மணிநேரம் உணவு இல்லாமல் இருக்கும் நிலையை நம் உடலுக்கு கொடுப்பதால், செரிமானத்திற்கு ஓய்வு அளிக்கிறோம் என்று கலிபோர்னியாவில் உள்ள உயிரியல் ஆய்வுகளுக்கான சால்க் இன்ஸ்டிட்யூட்டில் மருத்துவ ஆராய்ச்சியாளராக உள்ள எமிலி மனோகன் தெரிவிக்கிறார்.

 

"ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரம் சாப்பிடாமல் இருப்பது, சில நன்மைகளை தரும்", என்று விஸ்கான்சின் பல்கலைக்கழக மருத்துவம் மற்றும் பொது சுகாதாரப் பள்ளியில் இணைப் பேராசிரியரான ரோசலின் ஆண்டர்சன் கூறுகிறார்.

 

ஒரு நாளைக்கு எவ்வளவு வேளை சாப்பிடலாம்?

"நம் உடல் எப்படி பரிணாம வளர்ச்சி அடைந்தது என்பதுடன் தொடர்புடையது இத்தகைய உண்ணாவிரதம்" என்கிறார் ஆண்டர்சன். இதன் மூலம் நம் உடலுக்கு ஓய்வு கிடைத்து, நம் உடல் உணவை சேகரித்து வைக்கிறது. மேலும், நம் உடலில் எங்கு ஆற்றல் தேவையோ அங்கு அனுப்புகிறது. ஆற்றலை விடுவிப்பதற்கான வழிமுறையை இது ஏற்படுத்துகிறது."

 

"இரவு உணவை முன்னதாக சாப்பிடுவது, இந்த உண்ணாவிரத நேரத்தை அதிகரிக்கிறது. இதன்மூலம் நம் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன", என்கிறார், இத்தாலியில் உள்ள படோவா பல்கலைக்கழகத்தில் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு அறிவியல் பேராசிரியரான அன்டோனியோ பாவ்லி.

 

ஆனால், ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு உண்ணாவிரதம் இருப்பது ஆரோக்கியமான உணவு முறை என்றால், ஒரு நாளைக்கு எவ்வளவு வேளை சாப்பிடலாம்?

 

நியூயார்க்கில் உள்ள கார்னெல் பல்கலைக்கழகத்தின் மனித சூழலியல் கல்லூரியின் பேராசிரியரான டேவிட் லெவிட்ஸ்கி உட்பட சில வல்லுநர்கள் ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு சாப்பிடுவது சிறந்தது என்று கருதுகின்றனர்.

 

"நான் உங்களுக்கு உணவையோ அல்லது உணவின் படங்களையோ காட்டினால், நீங்கள் சாப்பிட வாய்ப்புள்ளது என்று பல தரவுகள் கூறுகின்றன. மேலும், அடிக்கடி உணவு உங்கள் முன்னால் இருந்தால், அந்த நாளில் நீங்கள் அதிகமாக சாப்பிடுவீர்கள் என்று நிறைய தரவுகள் உள்ளன," என்று அவர் கூறுகிறார்.

 

ஒரு வேளை சாப்பிட்டால் பசி ஏற்படாதா?

ஏனெனில், குளிர்சாதனப்பெட்டிகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் பயன்படுத்துவதற்கு முன், நாம் உணவு கிடைக்கும்போது சாப்பிட்டோம். வரலாறு முழுவதும், நாம் ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவை உண்டு வாழ்ந்திருக்கிறோம். பண்டைய ரோமானியர்கள் மதியம் ஒரு வேளை சாப்பிடுவார்கள் என உணவு வரலாற்றாசிரியர் செரன் சார்ரிங்டன்-ஹாலின்ஸ் கூறுகிறார்.

 

ஒரு நாளைக்கு ஒரு வேளை சாப்பிட்டால் நமக்கு பசி ஏற்படாதா? ஏற்பட பெரிதாக வாய்ப்பில்லை, ஏனென்றால் பசி பெரும்பாலும் ஒரு உளவியல் உணர்வு என்று லெவிட்ஸ்கி ஒரு கருத்தை முன்வைக்கிறார்.

 

"நம் கடிகாரம் மதியம் 12 மணி என்று பார்க்கும்போது, ​நமக்கு சாப்பிட தூண்டும் உணர்வு ஏற்படலாம். அல்லது நீங்கள் காலையில் காலை உணவை உண்ண வேண்டும் என்று கட்டாயம் ஏற்படலாம். ஆனால், இது முட்டாள்தனம். நீங்கள் காலை உணவைச் சாப்பிடாவிட்டால், அந்த நாளுக்கு நீங்கள் குறைவான கலோரிகளையே சாப்பிடுவீர்கள் என்று தரவு காட்டுகிறது," என்கிறார்.

 

"விருந்துக்கும், உண்ணாவிரதத்திற்கும் இடையே நம் உடலியல் கட்டமைக்கப்பட்டுள்ளது," என்று அவர் கூறுகிறார். ஆனால், நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த அணுகுமுறையை லெவிட்ஸ்கி பரிந்துரைக்கவில்லை.

 

ஆனால், மனோகன் ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவை கடைப்பிடிப்பதை பரிந்துரைக்கவில்லை. ஏனெனில் இது நாம் சாப்பிடாமல் இருக்கும் போது நமது ரத்தத்தில் குளுக்கோஸின் அளவை அதிகரிக்கலாம். இது உண்ணாவிரத குளுக்கோஸ் என்று அழைக்கப்படுகிறது. இது நீண்ட காலத்திற்கு தொடர்ந்தால், அதிக அளவான உண்ணாவிரத குளுக்கோஸ் காரணமாக, டைப் 2 நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

 

ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைக் குறைக்க, ஒரு நாளைக்கு ஒரு முறைக்கு மேல் தொடர்ந்து சாப்பிடுவது அவசியம் என்று மனோகன் கூறுகிறார், இது நம் உடல் பசியுடன் இருப்பதாக நினைப்பதைத் தடுக்கிறது. இறுதியில், நீங்கள் சாப்பிடும் போது அதிக குளுக்கோஸை வெளியிடுகிறது.

 

அதற்கு பதிலாக, ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று வேளை உணவு சாப்பிடுவது சிறந்தது என்று அவர் அவர் கூறுகிறார்.

 

"காலையில் சீக்கிரம் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்"

"உங்கள் உணவின் பெரும்பகுதியை நீங்கள் முன்னதாகவே சாப்பிட்டால், உங்கள் உடலில் சேமிக்கப்படும் கொழுப்பு, நாள் முழுவதும் நீங்கள் உண்ணும் ஆற்றலை உங்கள் உடல் பயன்படுத்த முடியும்," என்று மனோகன் கூறுகிறார்.

 

ஆனால், காலையில் சீக்கிரம் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது உண்ணாவிரதத்திற்கு போதுமான நேரத்தைக் கொடுக்காது என்று அவர் கூறுகிறார்.

 

நம் உடல்கள் ஒரே இரவில் மெலடோனினை (melatonin) வெளியிடுவதால், அது நாம் தூங்க உதவுகிறது. ஆனால், மெலடோனின் உடலில் குளுக்கோஸைச் சேமிக்கும் இன்சுலின் உருவாக்கத்தையும் தற்காலிகமாக நிறுத்துகிறது. நாம் தூங்கும் போது மெலடோனின் வெளியேறுவதால், நாம் தூங்கும் போது, சாப்பிடாமல் இருக்கும் போது அதிக குளுக்கோஸை எடுத்துக் கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்ய நம் உடல் அதைப் பயன்படுத்துகிறது", என மனோகன் கூறுகிறார்.

 

மேலும், இரவு நேரங்களில் வேலை செய்பவர்களும், ஒழுங்கற்ற நேரங்களில் பணி செய்பவர்களும் இதை பின்பற்றுவது கடினமாக இருக்கும் என்பதால், சாப்பிடுவதற்கு சிறந்த நேரத்தைக் குறிப்பிடாமல் இருப்பது தான் நல்லது என்கிறார் மனோகன்.

 

"இரவு 7 மணிக்குள் சாப்பிட்டு முடித்துவிடுங்கள் என்று சொல்வதில் பயனில்லை. ஏனென்றால் மக்கள் வெவ்வெறு பணியில் இருப்பார்கள். உங்கள் உடலை ஒரே வழக்கத்திற்கு பழக்க நினைத்தால், மிகவும் தாமதமாகவோ அல்லது சீக்கிரமாகவோ சாப்பிட வேண்டாம். மேலும் பெரும் விருந்தாகவும் சாப்பிடவேண்டாம். இது உதவும். மனிதர்கள் குறைந்தபட்சம் இதில் சிலவற்றை பழக்கமாக்க வேண்டும்," என்று அவர் கூறுகிறார்.

 

"உங்கள் காலை உணவில் ஒரு சிறிய தாமதம் மற்றும் உங்கள் இரவு உணவை சாப்பிடுவதில் நீங்கள் ஒரு மாற்றத்தைக் காணலாம். வேறு எதையும் மாற்றாமல் இதை வழக்கமாகச் செய்வது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்."

 

எந்த மாற்றத்தையும் தொடர்வது முக்கியம்

ஆனால், நீங்கள் எந்த மாற்றங்களைச் செய்தாலும், அதை தொடர்வது முக்கியமானது என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.

 

எத்தனை உணவுகளை நாம் சாதாரணமாகக் கருதுகிறோம் என்று வரும்போது, ​​சார்ரிங்டன்-ஹாலின்ஸ் அடிப்படை மாற்றத்தை கவனிக்கிறார்.

 

"பல நூற்றாண்டுகளாக, நாம் ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவுக்கு பழக்கப்பட்டுவிட்டோம். ஆனால், இது இப்போது சவாலாக உள்ளது. உணவு மீதான மனிதர்களின் அணுகுமுறை மாறுகிறது. நம்மிடம் அமைதியான வாழ்க்கை முறைகள் உள்ளன. நாம் 19 ஆம் நூற்றாண்டில் செய்யும் வேலை, இப்போது செய்யவில்லை. அதனால், நமக்கு குறைவான கலோரிகளே தேவை."

 

"வரும் காலங்களில், வேலை வாரியாக என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்து, நாம் சிறியளவிலான உணவை மீண்டும் ஒரு முக்கிய உணவாக மாற்றுவோம் என்று நினைக்கிறேன். நாம் வேலை நேரமே இதற்கு அடிப்படையாக இருக்கும்.

 

திடீரென ஏராளமான உணவு கிடைத்ததால், நாம் ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவை ஏற்றுக் கொண்டோம். ஆனால் இதுவும் கடந்து போகும் - இப்போது உணவு எல்லா இடங்களிலும் உள்ளது."

0 comments:

Post a Comment