"வாழும் வரைப் போராடு"- (குறுங்கதை)

 


நான் அன்று சாதாரண வகுப்பு ஏழை மாணவி. என் அப்பா அம்மா கூலி வேலை செய்துவந்தவர்கள். அவர்களின் உழைப்பில் நானும் தம்பியும் எதோ சமாளித்து, இரண்டு மைல் தூரத்தில் இருந்த ஒரு கிராம பாடசாலையில் நடந்து சென்றே கல்வி கற்றோம். பாடசாலை நேரத்தின் பின்  தனியார் கல்வி, விளையாட்டு அப்படி இப்படி என்றும் ஒன்றும் எமக்கு இருந்ததில்லை.

 

என் வகுப்பு வாத்தியார் ஒரு  கல்யாணம் ஆகாத இளம் ஆசிரியர்.அவர் பாடசாலைக்கு முதல் நியமனம் பெற்று வந்து ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தார். அவர் மிக அன்பாக என்னுடன் பழகுவார், நானும் ஒருவேளை என் நிலைமையை பார்த்து இரக்கப்பட்டு அப்படி பழகுகிறார் என்று, அந்த அறியாத பருவத்தில் கருதிக்க்கொண்டதனால்  அதை பெரிதாக பொருட்படுத்தவில்லை.

 

சாதாரண வகுப்பு பரீடசை நெருங்கிவரும் நேரம் அது. நான் அவரிடம் சில விளங்காத பாடங்களை கேட்க தொடங்கினேன். அவரும் அதற்கு இணங்கினாலும், பாடசாலை நேரம் கஷடம் என்றும் பாடசாலையின் பின் வீட்டில் வந்து படிப்பிப்பதாக கூறினார். என் பெற்றோரும் சம்மதிக்க அவரும் வரத் தொடங்கினார். பெற்றோர்கள் இருவரும் கூலி வேலைக்கு போவதால், அதிகமாக நானும் தம்பியும் மட்டுமே அவ்வேளை வீட்டில் இருப்போம். வீடு ஒரு குடிசை என்பதால், பாடம் படிப்பிக்கும் பொழுது தம்பியும் வெளியே விளையாட போய்விடுவார்.

 

எம் குடிசையில் வசதி குறைவு என்பதால், மிக அருகில் தான் படிப்பிக்கும் பொழுது இருப்போம். கை கால்கள் மெல்ல தொட தொடங்கி, அது வயது வித்தியாசமும் பார்க்காமல், அவரின் உறுதியையும் நம்பி, அவரின் விருப்பத்துக்கு இணங்கி  மிக நெருக்கமாக நானும் பழகினேன். இருசொல் இணைதல் புணர்ச்சி என்று இரண்டு பொருள்பட இலக்கணம் சொல்லி, இதுவரை நான் படிக்காத பாடம் எல்லாம் படிப்பித்தார்.

 

 

"இலக்கியம் சொல்லா ஆண்மை அழகில்

இதயம் பறிகொடுத்து உறுதி வாங்கி

இளமையும் வனப்பும் பொங்கும் உடலை

இரண்டு கையாளும் தானம் செய்தேன்!"

 

"இருசொல் இணைதல் புணர்ச்சி என்று

இரண்டு பொருள்பட இலக்கணம் சொல்லி

இங்கிதமாய் படிப்பித்து என்னை தழுவி

இணங்கு என மன்றாடி கேட்டான்!"

 

"இமைகள் மூடி இலக்கிய நாயகியாக

இசைந்து அவனுக்கு தலை ஆட்ட

இன்று படிப்பித்தது காணும் என்று

இதமாக கூறி அருகில் வந்தான்!"

 

"இச்சை கொண்டு என்னை அணைத்து

இறுக்கி தழுவி தோளில் சாய்த்து

இதழ்கள் பதித்து எதோ உளறி

இனியும் வேண்டுமா இலக்கியம் என்றான்!"

 

எனக்கு உறுதி வழங்கி, அவர்  மாற்றம் பெற்று  வேறூர் போக, என் வயிறும் ஊத தொடங்கியது. அன்று இருந்த போர் சூழலில் அவரின் தொடர்பும் அற்று போக, நானும் ஒரு மகனுக்கு தாயானேன். அவரை விசாரிக்க சென்ற தந்தை திரும்பி வரவே இல்லை, என்ன நடந்தது என்று இது வரை தெரியாது? தம்பியும் குண்டு பட்டு இறந்து விட்டார்.

 

தனிமை வந்தபோது  எனக்கு  துணிவும் வந்தது. எப்படியும் அவரை கண்டு பிடிக்கவேண்டும். இவள் என் மனைவி, இவன் என் மகன் என ஊரறிய கூற வைக்கவேண்டும். அது தான் என் நோக்கம், அதற்கு என்ன விலையும் கொடுக்க நான் தயாரானேன். என் அழகும் அதற்கு உதவியது.

 

அவர் திருமணம் செய்து வெளிநாடு போய்விட்டதாக அறிந்து நானும் தரகர் மூலம் மகனுடன் வெளிநாடு போனேன். துரதிர்ஷ்டவசமாக அவர் வாழும் நாட்டிற்கு பக்கத்து நாட்டிலேயே அடைக்கலம் கிடைத்தது.

 

அவர் வாழும் நாட்டில் சில நண்பர்களை பெற்று, அவரின் விபரம் அறிந்தேன். எப்படி என்று கேட்க வேண்டாம். ஆனால், C  N அண்ணாதுரை ஒரு முறை "நான் முற்றும் துறந்த முனிவரும் இல்லை, அவள் கற்பில் சிறந்த கண்ணகியும் இல்லை" என்று சொன்ன வாக்கியத்தை நினைவூட்டுகிறேன்

 

அவருடன் இன்று. கதைத்தேன். தான் யுத்த சூழ்நிலையால், சந்திக்க முடியாமல் போனதாகவும், பெற்றோரின் வற்புறுத்தலால் திருமணம் செய்து வெளிநாடு வந்ததாகவும் கூறியதுடன், தான் என்னையும் மகனையும் ஏற்பதாக உறுதி கூறினார். தன் பிழைக்கு மன்னிப்பும் கேட்டார். ஆனால் இது இன்னும் ஒரு நாடகமா எனக்கு தெரியாது. ஆனால் கட்டாயம் நான் இனி ஏமாற மாட்டேன். என் போராட்டம் தொடரும் !

 

'ஓடாத மானும், போராடாத இனமும் மீண்டதாக சரித்திரம் இல்லை' என்று யாரோ சொன்னது என் காதில் இன்னும் ஒலித்துக்கொண்டு இருக்கிறது !!

 

-[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]


0 comments:

Post a Comment