சென்னைத் தமிழ் அன்னைத் தமிழ் இல்லையா?

தமிழில் எத்தனையோ வட்டார வழக்குகள் இருக்கின்றன. ஆனால், இழிவாகக் கருதப்படுகிற ஒரே வட்டார வழக்குசென்னைத் தமிழ்’!

கலைவாணர் என்.எசு.கே முதல் சந்தானம் வரை தமிழ்த் திரைப்படங்களில் காலம் காலமாக அனைவராலும் நையாண்டிப் பொருளாக்கப்படுவதும் சென்னைத் தமிழ்தான். தனிப்பட்ட முறையில், தமிழர்கள் அனைவருக்குமே அடுத்தவர்களின் வட்டார வழக்கை நக்கலடிக்கும் வழக்கம் இருந்தாலும், பொதுவெளியில் அனைவராலும் கிண்டலுக்குள்ளாக்கப்படுவது சென்னைத் தமிழ்தான்.

 

பொதுவாக, வட்டார வழக்கு என்பதே மொழியின் அழிவுக்கான காரணிதான். தாய் வாழையைச் சுற்றி வளரும் கன்றுகளைப் போன்றவை அவை. ஏனெனில், வட்டார வழக்கு (Colloquial) புழக்கத்தில் நிலைபட நிலைபட நாளடைவில் அது தனிமொழியாக (Dialect) மாறிவிடும். அதனால், எந்த மொழியிலிருந்து அந்த வட்டார வழக்கு தனிமொழியாகக் கிளர்ந்ததோ அந்தத் தாய்மொழியைப் பேசுபவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும். அப்படி அந்த மொழியின் எல்லா வட்டார வழக்குகளும் தனிமொழியாக மாறினால் கடைசியில் தாய்மொழியே அழிந்து போகும். இதை நான் மட்டும் சொல்லவில்லை, ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல், பண்பாட்டு நடுவம் (UNESCO) மொழிகள் அழிவதற்கான காரணிகளின் பட்டியலில் முதன்மைக் காரணிகளுள் ஒன்றாக இதைக் குறிப்பிட்டுள்ளது. பார்க்க: அழியப் போகும் மொழிகளின் பட்டியலில் தமிழ்?! – ‘கூடல்தளத்தின் கட்டுரை.

 

இப்படி, வட்டார வழக்கு என்பதே தாய்மொழியை அழிக்கப் பிறந்ததுதான் எனும்பொழுது அவற்றுள் ஒன்று உயர்ந்தது மற்றது தாழ்ந்தது என நினைப்பது எப்பேர்ப்பட்ட மடத்தனம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்!

 

அப்படியானால், வட்டார வழக்குகளுக்கென எந்தச் சிறப்புமே இல்லையா எனக் கேட்டால், இருக்கிறது. அதுதான் அவற்றின்சொற்களஞ்சியம்’ (Vocabulary). பொதுத் தமிழில் கூட இல்லாத அரிய, பழம்பெரும் சொற்கள் பல இன்றும் வட்டார வழக்குகளில் உயிர்ப்போடு விளங்குகின்றன. வட்டார வழக்குகளுக்கு இருக்கும் ஒரே பெருமை இதுதான். இந்தப் பெருமை சென்னைத் தமிழுக்கும் உண்டு. மற்ற வட்டார வழக்குகளிலோ பொதுத் தமிழிலோ தென்படாத பல பழம்பெரும் அருந்தமிழ்ச் சொற்கள் சென்னைத் தமிழில் உள்ளன. அவற்றின் ஒரு சிறு பட்டியல், விளக்கத்துடன் இங்கே:

 

வலித்தல்

 

இழுத்தல்எனும் சொல் வர வேண்டிய இடங்களில்வலித்தல்எனும் சொல்லைச் சென்னை மக்கள் பயன்படுத்துவதைக் கண்டு இவர்கள் தவறாகப் பேசுவதாக நினைக்கிறார்கள் மற்றவர்கள். ஆனால், உற்று நோக்கினால் புரியும், ‘இழுத்தல்எனும் சொல் வர வேண்டிய எல்லா இடங்களிலும் இந்தச் சொல் பயன்படுத்தப்படுவதில்லை; சில இடங்களில் மட்டும்தான் பயன்படுத்தப்படுகிறது என்பது. ‘வலிஎன்பதற்குத் தமிழில் நோவு (Pain), வலிமை (Strength) என இரு வேறு பொருள் உண்டு. எந்த இடங்களிலெல்லாம் வலிமையைப் பயன்படுத்தி இழுக்க வேண்டியிருக்கிறதோ அங்கெல்லாம் மட்டும்தான்வலித்தல்ஆளப்படுகிறது. எடுத்துக்காட்டாக, “ரிச்சா (Rickshaw) வலிச்சுக்கினு வந்தேன்”, “நல்லா வலிச்சுக் கட்டுபோன்ற பல பேச்சு வழக்குகளைக் குறிப்பிடலாம். சில இடங்களில், “நல்லா வலிச்சு இழுஎனச் சொல்வதையும் கேட்கலாம். ஆக, ‘இழுத்தல்வேறு, ‘வலித்தல்வேறு. ‘இழுத்தல்பொதுச் சொல். வலிமையைச் செலவிட்டு இழுக்க வேண்டிய இடங்களில் மட்டும் பயன்படுத்துவதற்கான சிறப்புச் சொல்வலித்தல்’. இது புரியாமல், இது படிக்காத மக்களின் தவறான சொல்லாட்சி எனக் கருதிஇழுத்தல்என்பதையே எல்லா இடங்களிலும் ஆண்டு வருகிறோம் நாம்.

 

அண்டை

 

அருகில்என்பதற்கான இன்னொரு சொல் இது. பழமையானது. இதைத்தான்ஊட்டாண்ட’, ‘கோயிலாண்ட’, ‘உன்னாண்ட’, ‘என்னாண்ட’, ‘யாராண்டஎனப் பல இடங்களில் இன்றும் பயன்படுத்தி வருகிறார்கள் சென்னைத் தமிழர்கள். ஆனால், இதன் பொருள் புரியாமல் தவிர்த்துவிட்டு, இந்தச் சொல் வர வேண்டிய இடங்களிலெல்லாம் இதே பொருளைத் தருகிறபக்கம்’, ‘கிட்டபோன்ற சொற்களைப் பயன்படுத்துகிறோம். (.டு: வீட்டுப் பக்கம், கோயில் பக்கம், உன்கிட்ட, என்கிட்ட).

 

அப்பால், தொலைவு

 

Distance என்பதற்கான தமிழ்ச் சொற்கள் இவை. “அப்பால போய் நில்லு!”, “எம்மாந் தொலைவு கீது!” என எல்லா இடங்களிலும்தூரம்எனும் சொல்லுக்குப் பதிலாக இவற்றைத்தான் பயன்படுத்துவார்கள் சென்னைத் தமிழர்கள். [பல இடங்களில்அப்புறம், பிறகு, பின்னால்ஆகிய சொற்கள் வர வேண்டிய இடங்களில் கூடஅப்பால்எனும் சொல்லை இவர்கள் தவறாகப் பயன்படுத்துவதும் உண்டு! அப்படிச் செய்யும்பொழுது இது வட்டார வழக்குச் சொல்லாக (Colloquial Word) ஆகிவிடுகிறது]. ஆனால், படிக்காத மக்கள் பேசுபவை எனும் ஒரே காரணத்துக்காகத் தூய தமிழ்ச் சொற்களான இவற்றைத் தவிர்த்துத்தூரம்எனும் வடமொழிச் சொல்லையே பயன்படுத்துகிறோம்.

 

குந்து

 

பொருள் கூற வேண்டிய தேவையில்லாமல் எல்லாரும் நன்கறிந்த சென்னைத் தமிழ்ச் சொல் இது. ‘உட்கார்தல்’, ‘அமர்தல்என்பனவற்றைத்தான்குந்துதல்எனச் சொல்வதாகப் பலரும் நினைக்கிறார்கள். இல்லை. ‘குந்துதல்என்றால் குத்துக்காலிட்டு அமர்தல் எனப் பொருள். நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள்! சென்னையில் எந்த வீட்டிலாவதுதட்டெடுத்துக்கினு போய்க் குந்து! சோத்தை எடுத்துக்கினு வரேன்என யாராவது சொல்லக் கேட்டிருக்கிறீர்களா? “தட்டெடுத்துக்கினு போய் ஒக்காரு...” என்றுதான் சொல்வார்கள். காரணம், சாப்பிடும்பொழுது யாரும் குத்துக் காலிட்டுச் சாப்பிடுவதில்லை. (இங்கு நான் இரட்டுற மொழிதல் ஏதும் பயன்படுத்தவில்லை). சமனக்கால் போட்டுத்தான் சாப்பிடுகிறோம். எனவே, இதுவும் ஒரு சிறப்புச் சொல்லே!

 

நகரு / ஒத்து

 

நகரு, ஒத்துஎன்றால் Move என்று பொருள். ஆனால், “தள்ளுஎன்பதற்குப் பொருள் Push என்பதாகும். இரண்டும் வேறு வேறு சொற்கள் கூட அல்ல, மாறுபட்ட சொற்கள். Yes! These are not different words, totally opposite words. வழியில் நிற்பவரிடம்கொஞ்சம் நவுருங்க / ஒத்துங்கஎன்பார்கள் சென்னையர்கள். “கொஞ்சம் தள்ளுங்கஎனச் சொன்னால்என்னைக் கீழே தள்ளிவிடுங்கள்என்றுதான் பொருளாகும். ஆனால், தாழ்வானவர்களாகக் கருதப்படுகிற சேரி மக்கள் பயன்படுத்தும் சொற்கள் எனும் ஒரே காரணத்துக்காக இந்தச் சரியான சொற்களைப் புறக்கணித்துவிட்டு எல்லா இடங்களிலும்தள்ளுதல்எனும் சொல்லையே நாம் பயன்படுத்தி வருகிறோம். எப்பேர்ப்பட்ட இழிவான உளநிலை இது!

 

மிடறு

 

ஒரு முழுங்கு’, ‘ஒரு மடக்குஎன மற்ற வட்டார வழக்குகளில் சொல்லப்படுவதுதான் சென்னையில்ஒரு மிடறு’. அதாவது, ஒரு முறையில் விழுங்கக்கூடிய அளவிலான திரவப்பொருள். “ஒரு மொணறு காப்பியாவது குடிச்சிட்டுப் போங்களேன்!” எனும் விருந்தோம்பல் இதைத்தான் குறிப்பிடுகிறது.

 

மெய்

 

உண்மை என்பதற்கான இன்னொரு சொல். மிகப் பழமையானது. ‘மெய்யாலுமே சொல்றேன்”, “மெய்யாவா?” எனஉண்மைஎனும் சொல் வர வேண்டிய எல்லா இடங்களிலும் சென்னையர்கள் இதைத்தான் பயன்படுத்துவார்கள். ஆனால், இப்பொழுது உண்மை, மெய் ஆகிய இரண்டு தமிழ்ச் சொற்களையுமே கைகழுவிவிட்டுநிஜம்எனும் அயல்மொழிச் சொல்லைக் கட்டிக்கொண்டு அழுகிறோம்.

 

அட்டு

 

முட்டை ஆம்லட்டு (Omelette) என்பதற்குத் தமிழில் என்ன? யாருக்காவது தெரியுமா? விக்சனரி, தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் உள்ள பல்வேறு அகரமுதலிகள் போன்றவை கூட இதற்குத் தவறான சொல்லைத்தான் காட்டுகின்றன. ‘முட்டை அடைஎன. கெட்டியான மாவில் சுடுவதுதான் அடை. அதனால்தான் கேழ்வரகு மாவில் செய்வதைக் கேழ்வரகு அடை எனவும், பருப்பில் செய்வதைப் பருப்பு அடை எனவும், கம்பு மாவில் செய்வதைக் கம்பு அடை எனவும் சொல்லும் நாம் அரிசி மாவில் செய்வதை அரிசி அடை எனச் சொல்லாமல்தோசைஎன்கிறோம். காரணம், அது திரவ மாவு. கரண்டியை மாவில் தோய்த்துத் தோய்த்துச் சுடுவதால்தோயைஎனப் பெயர் பெற்று, பின் மருவித்தோசைஆனது. ‘அட்டுஎன்றால்வடிதல்’, ‘வார்த்தல்’ (Pour) எனப் பொருள். எனவே, முட்டையைத் தோசைக்கல்லுக்கு மேலிருந்து உடைத்து அப்படியே வடியவிட்டோ, கிண்ணத்தில் போட்டுக் கலக்கிப் பின் தோசைக்கல்லில் வார்த்தோ சுடும் இந்தப் பண்டத்தைமுட்டை அட்டுஎனச் சொல்வது சென்னை வழக்கு. ‘முட்டையை அட்டு ஊத்தித் தரவா, அவிச்சுத் தரவா?’ என்றுதான் இன்னும் என் பாட்டி கேட்கிறார். ‘அடையை விட இதுதான் இதற்குப் பொருத்தமானது. (ஆக, ‘அட்டு பிகர்என்றால் என்னவெனப் புரிகிறதா? வியர்வை வடிகிற பெண்ணாமாம்!).

 

செம்மை

 

செம்மைஎன்றால் நன்று, சிறப்பு, உயர்வு எனப் பொருள். “செம படம்ப்பா!”, “செமயா அடிச்சுட்டான்யாஎனப் பல வகைகளிலும் இன்றும் இந்தச் சொல் இங்கே வழங்கப்படுகிறது. தமிழரின் அயல்நிற மோகத்தைக் காட்டும் சொல் என்றாலும் பழமையான சொல்லான இஃது இன்றும் புழங்கப்படுவது ஒரு வகையில் சிறப்பே!

 

நாட்டிக் கொண்டது

 

சென்னைத் தமிழ்ச் சொற்களிலேயே என்னைப் பெரிதும் வியப்புக்குள்ளாக்குவது இதுதான். ‘கீழே விழுந்துவிட்டது, சாய்ந்துவிட்டதுஎன்பவற்றைக் குறிக்கும் சொல் இது எனப் பெரும்பாலோர் கருதுகின்றனர். தவறு! ஒரு மரம் சாய்ந்து கீழே விழுந்துவிட்டால்மரம் சாஞ்சிடுச்சி, உழுந்துடுச்சிஎன்றுதான் சென்னை மக்கள் சொல்வார்களே தவிர, “மரம் நாட்டிக்கிச்சிஎன யாரும் சொல்ல மாட்டார்கள். மயக்கம் வந்து ஒரு மனிதன் கீழே விழுந்துவிட்டால்நின்னுக்கினே இருந்தாரு, டமால்னு உழுந்துட்டாருபாஎன்பார்களே தவிர, யாரும்டமால்னு நாட்டிக்கிட்டாருஎனக் கூற மாட்டார்கள். குழந்தை முதன்முதலாகக் குப்புறப் படுப்பது கூடக்கொழந்தை கவுந்துக்கிச்சுஎன்றுதான் சொல்லப்படுகிறதே தவிர, ‘கொழந்தை நாட்டிக்கிச்சிஎனப்படுவதில்லை. ஆக, சாய்தல், விழுதல், கவிழ்தல் ஆகிய எதற்கும் இந்தச் சொல் ஆளப்படுவதில்லை. மாறாக, எப்பொழுது ஒரு பொருள்நெம்புகோல் கோட்பாட்டின்படித் தானாகக் கீழே விழுகிறதோஅப்பொழுது மட்டும் பயன்படும் சொல் இது. .டு: சிறிய கிண்ணத்தில் நீளமான கரண்டியைப் போட்டால் கரண்டியின் நுனியில் உள்ள எடை காரணமாகக் கிண்ணம் அப்படியே சாய்ந்து கவிழ்ந்து விடுவது, உயரமான இடத்திலிருந்து கீழே எட்டிப் பார்க்கும்பொழுது ஓரளவுக்கு மேல் குனிந்து விட்டால் அப்படியே கவிழ்ந்து கீழே விழுவது ஆகியவற்றைச் சொல்லலாம்! (இப்படி ஒரு கொடூர எடுத்துக்காட்டுக்காக மன்னிக்க!).

 

நெம்புகோல் கோட்பாட்டின்படித் தவறி விழுவதைக்குறிப்பதற்கென இப்படி ஒரு தனிச்சிறப்புச் சொல் ஆங்கிலம் முதலான பிற மொழிகளில் கூட இருப்பதாகத் தெரியவில்லை! (இருந்தால், தெரிந்தவர்கள் கருத்துப்பெட்டி மூலம் சொல்லலாம்). எப்பேர்ப்பட்ட சொல் வளம் இது!! எப்பேர்ப்பட்ட மொழி வழக்கு இந்தச் சென்னைத் தமிழ்!!!

 

இது சிறு பட்டியல்தான் இன்னும் நிறையச் சொற்கள் இருக்கின்றன. இப்படி, தனித்தன்மை வாய்ந்த பல சொற்களைக் கொண்ட ஒரு வட்டார வழக்கை நல்ல தமிழ் இல்லை எனச் சொல்வது சரியா? தமிழ் மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்! இவையெல்லாம் சென்னைத் தமிழிலேயே பிறந்த சொற்கள் எனச் சொல்லவில்லை. ஏற்கெனவே, தமிழ் அகரமுதலியில் இருப்பவைதாம். சங்க காலம் தொட்டு இலக்கியங்களில் பரவலாக ஆளப்படுகிற சொற்கள்தாம். ஆனால், அரிய தமிழ்ச் சொற்களான இவை சென்னைத் தமிழில் மட்டும்தான் இன்றும் வழக்கத்தில் இருக்கின்றன என்பதுதான் சென்னைத் தமிழின் சிறப்பு. இவை தவிர, சென்னை வட்டார வழக்கிலேயே பிறந்த காண்டு, கெத்து போன்ற பல சொற்களும் உண்டு. ஆனால், அவையெல்லாம் உண்மையான தமிழ்ச் சொற்கள்தாமா அல்லது வெறும் வட்டார வழக்குகளா (Colloquial), அயல்மொழிக் கலப்பால் பிறந்தவையா என என் சிற்றறிவுக்கு எட்டாததால் அவற்றைத் தவிர்த்திருக்கிறேன்.

 

என்ன இருந்தாலும் சென்னைத் தமிழ் கொச்சைத் தமிழ்தானே என்கிறீர்களா? சரி, முதலில் கொச்சை என்றால் என்ன? சொற்களைத் தவறாக ஒலிப்பதுதான் (pronunciation) கொச்சை என்றால் உலகத் தமிழர்கள் அனைவர் பேசுவதும் கொச்சைத் தமிழ்தான். யாரும் எழுத்தில் இருக்கும் தமிழை, அகரமுதலியில் இருக்கும் தமிழை அப்படிக்கு அப்படியே துய்யத் தூய்மையாகப் பேசுவதில்லை. “வன்ட்டாங்க, பூட்டாங்கஎனச் சென்னையில் பேசுவது கொச்சைத் தமிழ் என்றால்வந்துட்டாய்ங்க, போய்ட்டாங்க”, “வந்துட்டாக, போய்ட்டாகஎன்றெல்லாம் மற்ற வட்டார வழக்குகளில் பேசுவதும் கொச்சைத் தமிழ்தான். திருநீற்றைத்துண்ணூறுஎன்பதும் பழத்தைப்பயம்என்பதும் கொச்சை என்றால், மதுரையைமருதைஎன்பதற்கும் குதிரையைக்குருதைஎன்பதற்கும் பெயர் என்ன? தமிழ் மட்டுமில்லை உலகிலுள்ள எல்லா மொழிகளிலுமே எழுத்து வழக்குக்கும் பேச்சு வழக்குக்கும் வேறுபாடு உண்டு. தமிழில் அது கொஞ்சம் மிகுதி, அவ்வளவுதான். எனவே, ஒலிப்பு முறைக்காகச் சென்னைத் தமிழைக் கொச்சை எனச் சொன்னால் உலகிலுள்ள எல்லா மொழிகளின் பேச்சு வழக்குமே கொச்சைதான்.

 

தங்களுக்குள் பேசிக் கொள்வதற்காக, மற்றவர்களுக்குத் தாங்கள் பேசுவது புரியக்கூடாது என்பதற்காகச் செயற்கையாகத் தாங்களே உருவாக்கிக் கொள்ளும் மொழிதான்கொச்சை வழக்கு (Slang)’ என மொழியியலாளர்கள் வரையறுத்துள்ளார்கள். (மு.வரதராசனார், பெத்தனி கே.டூமாசு, சோனதன் லைட்டர் ஆகிய மொழியியலாளர்கள் இது பற்றி வகுத்துள்ள வரையறைகளைத் தமிழ், ஆங்கில விக்கிபீடியாக்களில் பாருங்கள்).

 

சென்னைத் தமிழில் அப்படிப்பட்ட சொற்கள் இருப்பது உண்மைதான் என்றாலும் (தொலைவைக் குறிப்பதற்கானஅப்பால்எனும் சொல்லைக் காலத்தைக் குறிப்பதற்கானஅப்புறம்எனும் சொல்லுக்கு மாற்றாகப் பயன்படுத்துவது போல்) அவற்றை மட்டுமே கொண்டது இல்லை சென்னைத் தமிழ். பெரும்பான்மையாகத் தமிழ்ச் சொற்களையும், நிறைய அயல்மொழிச் சொற்களையும், திசைச் சொற்கள், கலப்புச் சொற்கள் ஆகியவற்றையும் கொண்டதுதான் சென்னைத் தமிழ். எனவே, கொச்சைச் சொற்களைக் கொண்டது என்பதற்காகவே சென்னைத் தமிழைக் கொச்சைத் தமிழ் எனக் கொச்சைப்படுத்திவிட முடியாது. இதை நான் கூறவில்லை, கிலாது சக்கர்மேன் எனும் மொழியியல் அறிஞர் கூறுகிறார். ‘கொச்சைச் சொற்கள் நிறையக் கொண்டது என்பதற்காக ஒரு வட்டார வழக்கைக் கொச்சை வழக்கு எனக் கருதிவிட முடியாதுஎன்கிற அவர் கூற்றைப்பேச்சு வழக்கியல்எனும் கட்டுரையில் ஆங்கில விக்கிபீடியா மேற்கோள் காட்டுகிறது. (பார்க்க: Colloquialism). எனவே, சென்னைத் தமிழைக் கொச்சைத் தமிழ் என்பது மொழியியல்படிப் பொருத்தமில்லாத குற்றச்சாட்டு.

 

மற்ற வட்டார வழக்குகளை விடச் சென்னைத் தமிழில் அயல்மொழிக் கலப்பு கூடுதல் இல்லையா எனக் கேட்டால், ஒப்பீட்டளவில் அஃது உண்மைதான். நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக வடமொழி, அரபு, உருது, பார்சி, ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஏராளமான இனத்தினர் கலந்து வாழும் பகுதி இது. தாழ்த்தப்பட்ட சாதிக்காரன் தெருவில் காலடி வைத்துவிட்டாலே சவுக்காலடித்துச் சாணிப்பால் ஊற்றும் வழக்கத்தை அண்மைக்காலம் வரை கூடக் கடைப்பிடித்து வந்த தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் தமிழ் இன்னும் தூய்மையாக இருப்பதில் எந்த வியப்பும் இல்லை. மாறாக, இத்...தனை இன மக்கள் இத்தனை ஆண்டுகளாக வாழும்பொழுதும் சென்னைத் தமிழில் ஏராளமான செந்தமிழ்ச் சொற்கள் இன்றளவும் அழியாமலிருப்பதுதான் உண்மையிலேயே வியப்புக்குரியது.

 

சென்னைத் தமிழ் மரியாதைக் குறைவானது, வயது வேறுபாடின்றி எல்லாரையும் ஒருமையில் அழைக்கும் மொழி அது என்கிற ஒரு குற்றச்சாட்டும் உண்டு. ஆம்! அஃது உண்மைதான். ஆனால், தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் இருப்பது போல, தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்பதற்காக எழுபதாண்டு முதியவரை நேற்று பிறந்த சிறுவன்வாடா, போடாஎன அழைக்கும் வழக்கம் இங்கில்லை என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

 

மற்றபடி, சென்னைத் தமிழ் மற்ற தமிழ் வழக்குகளை விட வினோதமாகத் தோற்றமளிக்கக் காரணம், அது பேசப்படும் வேகம். ‘இருக்கிறதுஎன்பதைக்கீதுஎன்பார்கள்; ‘இதோ இவ்வளவாக உண்டு (இதோ! இவ்வளவு சிறியதாக இருக்கிறது)’ என மூன்று சொற்கள் கொண்ட சொற்றொடரைதிவ்ளூண்டுஎன அநியாயத்துக்குச் சுருக்குவார்கள். இவற்றுக்கெல்லாம் காரணம் இங்குள்ள படுவேகமாக வாழ்க்கை முறை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நகர வாழ்க்கை இங்கு நிலவுகிறது. (ஆம்! வெள்ளைக்காரர் வருகைக்கு முன்பிருந்தேதான். பார்க்க: சென்னைவிக்கிப்பீடியா). சில ஆண்டுகள் முன்பு வரை கூடஏனுங்க, பாக்குறீங்கஎன்று பேசிக் கொண்டிருந்த கோவைத் தமிழ் உடன்பிறப்புக்கள், இன்று கோயம்புத்தூர், மாநகரமாக மாறியதும்ஏனுங், பாக்குறீங்எனச் சுருக்கிப் பேசுவது, ஒரு பகுதி நகரமாக வளர வளர, அங்குள்ள மக்களின் வாழ்க்கை வேகம் கூடக் கூட அங்குள்ள மொழி வேகமும் கூடும் என்பதற்குக் கண்கண்ட எடுத்துக்காட்டு. அப்படிப் பார்த்தால், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நகரமாக விளங்கி வரும் சென்னையில், தமிழ் இப்படி வேக வேகமாகச் சுருக்கிச் சுருக்கிப் பேசப்படுவதில் வியப்பு என்ன?

 

தவிர, சென்னையின் இந்தச் சுருக்கிச் சுருக்கிப் பேசும் முறைக்கு வேறொரு காரணமும் இருக்கலாம் எனத் தோன்றுகிறது. ஒரு மொழியில் எந்த அளவுக்குச் சொற்கள் சிக்கனமாக ஆளப்படுகின்றனவோ அந்தளவுக்கு அது நாகரிகமானதாகவும் சொல்வளமிக்கதாகவும் சிறப்பாகவும் கருதப்படுகிறது. மொழிகள் பற்றிய உலகளாவிய மதிப்பீடுகளுள் இன்றும் நிலவும் ஒன்று இது. பன்னெங்காலமாகப் பல்வேறு மொழி பேசும் மக்களோடு கலந்து வாழ்கிற, மற்ற தமிழர்களை விடத் திரைகடலோடித் திரவியம் தேடும் வாய்ப்பு கூடுதலாக உள்ள சென்னைத் தமிழர்களுக்கு இது வெகு காலத்துக்கு முன்பே தெரிந்திருக்கும். அதனால்தான் இமயம் முதல் ஈழம் வரை தமிழர்கள் எல்லாரும் நான்கிலிருந்து நாற்பது அடிகள் வரை பா புனைந்து கொண்டிருந்த காலக்கட்டத்தில் முதன்முறையாக ஈரடி வெண்பாவை அறிமுகப்படுத்தித் தமிழ்ச் சொல்லாட்சியை உச்சக்கட்டத்துக்குக் கொண்டு சென்றார் சென்னைத் தமிழரான திருவள்ளுவர்!

 

தமிழில், சொற்களைச் சிக்கனப்படுத்தக் கையாளப்படும் எளிய வழிகளில் ஒன்று சொற்களை ஒன்றோடொன்று கோப்பது. (.டு: இல்லாமல் இருக்கும் = இல்லாமலிருக்கும், வளம் மிக்கது = வளமிக்கது). சொற்சிக்கனம் எனும் நாகரிக மோகம் கொண்ட சென்னைத் தமிழர்கள் பேச்சு வழக்கிலும் இதைக் கடைப்பிடித்திருக்க வேண்டும். பிற்காலத்தில், இந்து சமய ஆதிக்கத்தின் காரணமாகத் தமிழ்நாடெங்கும் படித்தவர்கள் எண்ணிக்கை குறைந்து போனதால், சென்னையர்களின் இந்தச் சொல்கோக்கும் முறை இலக்கண நெறி பிறழ்ந்து ஏடாகூடமாகி இருக்கலாம். ‘திவ்ளூண்டு’, ‘இஸ்த்தாடா’ (இழுத்துக் கொண்டு வாடா!), ‘தாராந்துருவே’ (தாரை வார்த்து விடுவாய்) போன்ற பல வினோதமான சொற்சேர்க்கைகளுக்கு இதுவே காரணமாக இருக்கலாம். ஆக, எதை நாம் நாகரிகமற்றது என எண்ணுகிறோமோ உண்மையில் அது நாகரிகத்தின் காரணமாகவே எழுந்ததாகக் கூட இருக்கலாம்.

 

எல்லாவற்றுக்கும் மேல், சென்னைத் தமிழ் இழிவாகக் கருதப்படுவதற்கான உண்மைக் காரணம் வேறு. அதைப் பேசும் மக்களின் வாழ்க்கை முறை சார்ந்தது அது. இழு வண்டி (Rickshaw) வலிப்பவர்கள், தானி (Auto rickshaw) ஓட்டுநர்கள், தெரு கூட்டுபவர்கள், சாக்கடையைத் துப்புரவு செய்பவர்கள் போன்ற, அடிமட்டத் தொழில்களாகக் கருதப்படுகிற வேலைகளைச் செய்பவர்கள்தாம் இதைப் பேசுகிறார்கள் என்பதுதான் பலரும் இதைப் புறக்கணிக்க மெய்யான காரணம். அவர்கள் மட்டும் இந்த மொழியைப் பேசக் காரணம் அவர்கள்தாம் இந்தச் சென்னை நகரின் உண்மையான மண்ணின் மைந்தர்கள்! பள்ளத்தை நோக்கி வெள்ளம் பாய்வது போல நகரப் பகுதியை நோக்கி மற்ற பகுதி மக்கள் வருவதும் இயல்பானது. அப்படி, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நகரமாக விளங்கும் இப்பகுதியை நோக்கித் தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலிருந்து மட்டுமின்றி இந்தியாவின் பிற பகுதிகள், வெளிநாடுகளிலிருந்தெல்லாம் கூடப் பன்னெடுங்காலமாக வந்து சேர்ந்து கொண்டே இருக்கிறார்கள் மக்கள்.

 

புதிதாக ஓரிடத்துக்கு வருபவர்கள், ஏற்கெனவே அப்பகுதியில் இருப்பவர்களை விடக் குறைவான ஊதியத்துக்குப் பணியாற்ற முன்வருவது வழக்கம்தான். அப்படிப் பல்லாயிரக்கணக்கோனோர், இலட்சக்கணக்கானோர் முன்வந்ததால் இங்கிருந்த மண்ணின் மைந்தர்கள் வேலை இழந்து அடிமட்டத் தொழில்களாகக் கருதப்படும் பணிகளுக்குத் தள்ளப்பட்டார்கள். அடிமட்டத் தொழிலாளர்கள் எனக் கருதப்பட்டவர்கள் பேசுவதால், இம்மொழியும் மட்டமானது எனும் கருதுகோள் நாளடைவில் உருவானது. ஆக, சென்னைத் தமிழ் கீழ்த்தரமானது என்பது யார் உள்ளத்திலும் சொந்தமாக உருவான கருத்து இல்லை. அது, எந்த ஒன்றையும் அதனுடைய சொந்தத் தகுதியைக் கொண்டு மதிக்காமல் அதைக் கையாள்பவர், அவருடைய பின்னணி ஆகியவற்றைக் கொண்டு மதிப்பிடும் கீழ்த்தரமான மதிப்பீட்டு முறையைக் கொண்டுள்ள இச்சமூகத்தாலும், ஊடகங்களாலும் தலைமுறை தலைமுறையாக நமக்குள் விதைக்கப்படுவது. எனவே, சென்னைத் தமிழைக் கீழ்த்தரம் எனச் சொல்வதே ஒரு கீழ்த்தரமான போக்குதான் என்பதை மற்ற தமிழர்களை விடச் சென்னைத் தமிழர்கள் முதலில் உணர வேண்டும்.

 

இப்படி, சென்னைத் தமிழைக் கீழ்த்தரமானதாகச் சொல்லி சொல்லி, அதைச் சென்னையர்களும் நம்பத் தொடங்கிவிட்டதால் சென்னைத் தமிழ் சென்னையின் எந்தப் பகுதியிலும் இப்பொழுது அவ்வளவாகப் புழக்கத்தில் இல்லை. இருக்கும் இடங்களிலும் அது முழுமையாக இல்லை. பெரும்பாலான சென்னை மக்கள் தங்கிலீசுக்கு மாறிவிட்டார்கள்! தலைநகரில் வாழ்பவர்களின் வாழ்க்கை முறைதான் நாகரிகமானது எனக் காலங் காலமாக ஒரு மூடநம்பிக்கை நம்மிடையே நிலவுவதால் இந்த மொழிவழக்கு ஏவுகணை வேகத்தில் தமிழ்நாடெங்கும் பரவி வருகிறது. வாழ்விடங்கள், கிழமைகள், எண்கள், உறவுப் பெயர்கள், அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் பொருட்கள் என ஏறத்தாழ எல்லாவற்றையும் ஆங்கிலத்திலேயே குறிப்பிட்டுவிட்டு வெண்பொங்கலில் முந்திரிப் பருப்பு போல் மேலோட்டமாக ஆங்காங்கே மட்டும் தமிழ்ச் சொற்களைத் தூவிப் பேசும் இப்புதிய வழக்கு தமிழுக்கு வந்திருக்கும் உச்சக்கட்டச் சீர்கேடு! ஏராளமான நல்தமிழ்ச் சொற்களைக் கொண்டிருந்த சென்னைத் தமிழை அதுவும் அன்னைத் தமிழின் ஒரு வடிவமே என ஏற்காமல், ஆராயாது தீட்டு கற்பித்ததன் விளைவுதான் இஃது என்றால் அது மிகையாகாது!

 

ஆதலால், எந்த ஆடை அணிந்திருந்தாலும் பெற்ற தாய் தாயே என்பது போல எப்படிப் பேசப்பட்டாலும் தமிழ் தமிழே; அவ்வகையில் சென்னைத் தமிழும் நம் அன்னைத் தமிழே என ஏற்போம்! தங்கிலீசைத் தவிர்ப்போம்!

 

பி.கு: சாதி, மதம், வட்டாரம் என எவ்வகையிலும் தமிழர்கள் தங்களுக்குள் பிரிவினை பார்க்கக்கூடாது; ‘தமிழர்எனும் ஒரே குடைக்கீழ் அனைவரும் திரண்டு நிற்க வேண்டும்! அப்படி நிற்க வேண்டிய நேரம் இது எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருபவன் நான். இணையத்தின் பல இடங்களில் நான் அப்படி எழுதியிருப்பதைக் காணலாம். ஆனால், ஏற்றத்தாழ்வைக் கண்டித்து எழுத நேரும்பொழுது ஏற்றத்தாழ்வு கற்பிப்பவர்களையும் தாழ்த்தப்படுபவர்களையும் வேறுபடுத்திக் காட்ட வேண்டி வருவதைத் தவிர்க்க முடியவில்லை. ஆகவேதான் இப்பதிவின் பல இடங்களில் தமிழர்களைப் பேச்சு வழக்கின் அடிப்படையில் பிரித்துக் காட்டும் விதத்திலான கருத்துக்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவை, வேறு வழி இல்லாததால் தவிர்க்க முடியாமல் எழுதப்பட்டவையே தவிர, தமிழர்களுக்கிடையில் வேறுபாடு கற்பிக்கும் உளநிலையிலோ அது போன்ற வேறெவ்வகையிலான உள்நோக்கத்துடனே எழுதப்பட்டவை அல்ல என்பதைத் தாய் மேல் ஆணையாக இங்கே கூறிக்கொள்கிறேன்.

நன்றி: .பு.ஞானப்பிரகாசன்/ கீற்று


1 comments:

 1. Manu Sella
  தமிழரின் கையில் இல்லாத அரசியலும் , தமிழரின் கையில் இல்லாத ஊடகங்களும் தமிழ் மொழியினை தமிழ்நாட்டில் வேகமாக அழித்து வருகின்றன என்பதே கசப்பான உண்மை
  Reply1w
  Yasodha Roger
  சென்னைத் தமிழ் புரிந்து கொள்வது கடினமாயிருப்பதுண்டு.ஆனாலும் அதில் இத்தனை பழஞ் சொல்வழக்கா..வியந்தேன்.
  Reply1w
  Manu Sella
  Yasodha Roger நன்றி, தொடர்வோம்

  ReplyDelete