புதிய படத்தில் விக்ரம் ஜோடி, அக்‌ஷராஹாசன்?

கமல்ஹாசன் நடித்த ‘தூங்காவனம்’ படத்தின் டைரக்டர் ராஜேஷ் எம்.செல்வா அடுத்து ஒரு புதிய படத்தை டைரக்டு செய்கிறார். இந்த படத்தில் கதாநாயகனாக விக்ரம் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அக்‌ஷராஹாசன் நடிக்க இருப்பதாக தகவல்கள் பரவின. அந்த தகவலில் உண்மை இல்லை. இதுபற்றி விசாரித்தபோது, கிடைத்த தகவல்கள் வருமாறு:-

ராஜேஷ் எம்.செல்வா படத்தில், விக்ரம் நடிப்பது உண்மை. அவருடன், கமல்ஹாசனின் இளைய மகள் அக்‌ஷராஹாசன் நடிப்பதும் உண்மை. ஆனால், அவர் விக்ரம் ஜோடி அல்ல. அக்‌ஷராஹாசன், ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அவர் நடிக்கும் இரண்டாவது படம், இது.

அக்‌ஷராஹாசன் ஏற்கனவே அஜித்தின் ‘விவேகம்’ படத்தில், ஒரு முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார். அதுபோன்ற ஒரு முக்கிய வேடத்தில், ராஜேஷ் எம்.செல்வா டைரக்‌ஷனில் நடிக்கிறார்.

கவுதம் வாசுதேவ் மேனன் டைரக்‌ஷனில் விக்ரம் நடித்து வந்த ‘துருவ நட்சத்திரம்’ படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. அடுத்து அவர், ராஜேஷ் எம்.செல்வா படத்தில் நடிக்க இருக்கிறார். தமிழ் திரையுலகில் தற்போது, வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டம் முடிந்ததும், விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

அதில் யார்-யார் நடிக்கிறார்கள் என்ற விவரமும், மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் விவரமும் இன்னும் சில நாட்களில் வெளியாகி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-அகிலா, பரந்தாமன்

0 comments:

Post a Comment