எதிர்காலத்தில் மனிதர் நிலை என்ன?


உலகம் இன்று வேகமாக மாறிக்கொண்டு இருக்கிறது. ஒரு புறம் தொழிநுட்பத்தின் அசுரர் மாற்றம், புவி வெப்பமடைதலில் காலநிலை மாற்றம், அவற்றோடு போட்டி போட்டுக்கொண்டு மனிதனும் மாறிக்கொண்டு இருக்கிறான்.
சொல்வேந்தர் சுகி சிவம் தனது உரையில்  ஒரு சந்தர்ப்பத்தில் இவ்வாறு கூறுகிறார்.
''முன்னரெல்லாம் வீட்டுக்கு விருந்தாளிகள் வந்தால் ,வீட்டில் உள்ள பெரியவர்களைக் காட்டி ,இவர் தாத்தா,இவர் பாட்டி, இவர் சித்தப்பா,இவர் மாமி என்று அவர்களுக்கு அறிமுகம்  செய்து வைப்போம். இப்போது எல்லாம் கூட்டுக் குடும்பம் கிடையாது. அன்பிலா நிலையில் தனிக்குடித்தன வாழ்க்கை. அதனால் வீட்டுக்கு வரும் விருந்தினருக்கு ''இது போன வருடம் வாங்கிய டிவி ,இது போனமாதம் வாங்கிய சோபா'' , என உயிரில்லாத பொருட்களைக் காட்டிப் பெருமையடைகிறோம்.
அதுமட்டுமா, திருமண வாழ்க்கை என்றால் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். அதனை எதிர்கொண்டு வாழ்வதுதான் வாழ்க்கை என்பது மட்டுமல்ல இல்வாழ்க்கையில் மனைவி,கணவன்  என்று  தங்கள் கடமைகளை முழுமையாக்குபவர்களே  பூரண மனிதன் எனப்படுவான். ஒருவர் மேல் ஒருவர் எப்படி அன்பினை பகிர்ந்து கொள்ளலாம் என்ற சிந்தனைகள் எதுவுமின்றி ,  இன்று மணவாழ்க்கையில் சந்திக்கும் முதல் கருத்து வேறுபாட்டிலேயே மணமுறிவு என்பது தமிழர் மத்தியில் மலிந்துவிட்டது.
மேலும் , கணவன் இருக்கக் கள்ளக் காதலனுடன் சேர்ந்து குழந்தையை கொன்ற தாய் , கணவனை கொன்ற மனைவி, தந்தையை கொன்ற தனயன் எனப் பலவாறு வெறுக்கத்தக்க செய்திகளே இன்றைய ஊடக செய்திகளாக வெளிவருகின்றன.
இன்னும் அன்பிலா நிலையில் மனிதன் மொழி, மதம், சாதி, பிரதேசம், கட்சி ,கல்விநிலை, நிறம், பணம்  என பலப்பிரிவுகளாக அடிபட்டுக் கொண்டிருக்கிறான். ஒருவனை ஒருவன் விழுங்குவதற்குத் துடித்துக் கொண்டு இருக்கிறான்.
விலங்குகள் அன்று இருந்த மாதிரியே வாழ்கின்றன.ஆனால் மனிதன் மட்டும் விலங்குகளை விடக் கீழ்நிலைக்குச் சென்றுகொண்டு இருக்கிறான்.எதிர்காலத்தில்  உண்மையிலேயே ஒருவனை ஒருவன் பிடித்து உண்ண ஆரம்பித்து விடுவானோ  என அச்சம் கொள்ளவே வேண்டியுள்ளது.

✍✍✍✍✍செ . மனுவேந்தன்✍✍✍✍✍ 

0 comments:

Post a Comment