பழகத் தெரிய வேணும் – 26

 




↠↠↠வாய் எதற்கு?

அம்மா! ஆத்திலே நீ பேசக்கூடாதுங்கறே. ஸ்கூல்லே பேசினா டீச்சர் திட்டறா. வாய் எதுக்கு வேஸ்ட்?” வாய்கிழியக் கேட்டது என் நான்கு வயது மகள்.

அவள் ஒன்றரை வயதிலிருந்தே ஏதேதோ பேசுவாள். கேட்பவருக்கு ஒன்றும் புரியாது. அது நிராசையில் கொண்டுவிட, சுவற்றில் முட்டிக்கொள்வாள்.


அவளை எப்படி அடக்குவது என்றே புரியாமல், ஒரு புத்தகத்தைப் படித்துக் காட்டினேன்.


இன்னொரு தடவை, இன்னொரு தடவை,’ என்று அவள் கெஞ்ச, ஒரே கதையை பதினான்கு முறை இடைவிடாது படித்தேன். அதனால் அவளுடைய ஞாபகசக்தி அதிகரிக்கிறது என்பது பிறகுதான் புரிந்தது.

 

அதிகமாக எழுதவோ படிக்கவோ தெரியாத வயதில் மொழிவளத்தைப் பெருக்கிக்கொள்ள ஒரே வழி பேசுவதுதான்.

எட்டு வயதுப் பெண்குழந்தைகள் வாய் ஓயாமல் பேசுவார்கள். அந்தப் பிராயத்தில் சற்று கண்டிக்காவிட்டால், `மௌனத்தின் எதிரி நான்!’ என்பதுபோல் ஆகிவிடுவார்கள்.


பதினைந்து வயதில், நான் வகுப்பில் நிறைய பேசியதற்காக, நான் மட்டுமின்றி, எங்கள் வகுப்பு மாணவிகள் அனைவரும் ஒரு மணி நேரம் திறந்தவெளியில் நிற்கவேண்டும் என்ற தண்டனை அனுபவித்தோம். என்னை ஊக்குவித்து, என் பேச்சை ரசித்துக் கேட்டதற்காக அவர்களுக்கும் சேர்த்துத் தண்டனை.


படிப்பதில் எனது ஆர்வம் பெருகப் பெருக, எதையும் கூர்ந்து கவனிக்கும் பழக்கம் வந்தது., பேச்சு குறைந்துபோயிற்று.


 ↠↠↠எப்போது பேசலாம்?

ஒருவர் நமக்குத் தீமை இழைக்கிறார். அதைப் பொறுத்துப்போகலாமா? அவரை எதிர்க்க வேண்டும்.


எவ்வளவு வதையை அனுபவித்தாலும், தமக்கே உதவி செய்துகொள்ள இயலாதவர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கு நம்மால் முடிந்தவரை பரிந்து பேசலாம்.


உதாரணமாக, ஒரு மாணவியிடம் ஆசிரியர் முறைதவறி நடந்துகொள்வதைப் பார்த்தபின்னரும், ‘நமக்கேன் வம்பு?’ என்று ஒதுங்காது, அவரைப்பற்றி மேலிடத்தில் புகார் செய்வது.


கணவனிடம் பல ஆண்டுகள் உடல் ரீதியிலும், மன ரீதியிலும் வதைபட்டு, சாகும்வரை பொறுத்துப்போக வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் சில பெண்கள். அவர்களிடமிருந்து மாறுபட்டிருக்கும் பெண்கள்தாம் அவர்களுக்காக குரலெழுப்ப முடியும்.


இப்படிப்பட்ட செய்கைகளால் பல துன்பங்கள் வரலாம். ஆனால், ஒவ்வொருவரும் சுயநலத்தையே பெரிதாகக் கருதி ஒதுங்கினால், இவ்வுலகில் தவறுகள் மலிந்துவிடாதா!


 ↠↠↠மௌனத்தைக் கடைப்பிடி

நமக்குச் சம்பந்தம் இல்லாத ஒருவரைப்பற்றியோ, அல்லது தெரியாத ஒரு சமாசாரத்தைப்பற்றியோ பேசாது இருப்பது நல்லது. நாமே நம் முட்டாள்தனத்தை வெளிக்காட்டிக்கொள்வானேன்!


ஒரு முட்டாள் தலைவராக இருந்தால், அவரை எதிர்த்துப் பேசாமல் இருப்பது நமக்கே நாம் செய்துகொள்ளும் நன்மை.

சில சமயங்களில், நேர்மையைவிட மௌனமே சிறந்தது.


கதை:

ஒருவன், ‘என்னைக் காட்டிக்கொடுத்துவிடாதீர்கள்,’ என்று ஒரு முனிவரிடம் கெஞ்சிவிட்டு ஒளிந்துகொள்கிறான்.

அவனுடைய எதிரிகள், ‘இப்படி ஒருவனைப் பார்த்தீர்களா?’ என்றபோது மௌனம் சாதிக்கிறார்.


அவர் பொய்யுரைக்கவில்லை. உண்மையை மறைக்கவே வாய்பேசாது இருந்துவிடுகிறார்.


நாம் பேசுவதால் பிறரை நோகடிப்போம் என்றால், எதற்காகப் பேசுவது?


பிறர் சொல்வதைக் கேட்பவர்களில் பெரும்பாலோர் புரிந்துகொள்வதைவிட தாம் அதையடுத்து என்ன கூறலாம் என்றே யோசிப்பார்கள். பிறர் பேசுவதைக் கேட்கப் பொறுமை இராது.


உரத்த குரலில் ஏதாவது பேசிக்கொண்டே இருந்தால்தான் அறிவாளியா?

அறிவாளிகள் தம் அறிவைப் பறைசாற்றிக் கொள்வதில்லை.


நீங்கள் பேசுவதேயில்லையே!’ என்று குற்றம் சாட்டுவார்கள் பலர்.


மௌனமாக இருப்பவர்களுக்குப் பழகத் தெரியாது, அல்லது கர்வம் கொண்டவர்கள் என்பதில்லை. இவர்கள் சாதிப்பவர்கள். அவசியம் வந்தால் பேசலாம் என்ற கொள்கையைக் கடைப்பிடிப்பவர்கள். அதனாலேயே அமைதியாக இருப்பார்கள்.

 

பிறருக்கும் அவரிடம் தம் துன்பங்களைப் பகிர்ந்துகொள்ளத் தோன்றும்.


கவுன்சிலர்களுக்கு இருக்கவேண்டிய முக்கியமான குணம்: ஒருவர் தம் அந்தரங்கத்தைப் பகிர்ந்துகொள்கையில், குறுக்கே பேசாது, மௌனமாக கேட்டுக்கொள்வது. அவசியம் என்றால், தெளிவு ஏற்பட சில கேள்விகளைக் கேட்கலாம்.


நாம் மௌனமாக இருந்தாலும் நம்மைப் புரிந்துகொள்கிறவரே உற்ற துணை.


 ↠↠↠ஏன் தனிமை?

தனிமையில்தான் நம்மைப்பற்றி நிறைய யோசிக்கமுடிகிறதுநாம் செய்த தவறுகளை, பொறுத்த அவமதிப்புகளை, நம் எதிர்காலத்தை எப்படி அமைத்துக்கொள்வது போன்ற பல விஷயங்களை. அப்போதுதான் நம்மை நாமே புரிந்துகொள்ள இயலும்.


ஒரு முட்டாளை அவன் பேசுவதிலிருந்து அறியலாம். புத்திசாலியை அவனுடைய மௌனத்திலிருந்து அறியலாம்” (ஒரு தத்துவ ஞானி).


 ↠↠↠புரிதலால் அமைதி

நமக்குப் புரியாதது ஆத்திரத்தை உண்டாக்கும். புரிந்துவிட்டாலோ அமைதியாக இருக்க முடிகிறது.


கதை:

வீடுகள் நிறைந்த தெருவில் முன்னாலிருக்கும் கார் மிக மெதுவாகப் போய்க்கொண்டிருந்தது. பின்னால் போய்க்கொண்டிருக்கும் ஒரு காரோட்டிக்கு ஆத்திரம் எழ, திட்ட ஆரம்பித்தார்.


முன்னால் இருப்பவருக்குக் காது கேட்கப்போவதில்லை என்றாலும், தனக்கே அமைதி ஏற்படுத்திக்கொள்ள அவருக்குத் தெரிந்த வழி இதுதான்.

(பெண்கள் இப்படி ஆத்திரப்படுவதில்லை).


ஏன் இப்படி கெட்ட வார்த்தைகளைக் கொட்டுகிறீர்கள்?” என்று நான் அவரைக் கேட்க, “எனக்கு நிம்மதி கிடைக்கிறது,” என்றார்.


பிறரது மனநிலை புரியும்போது ஆத்திரம் எழாது.

இப்படியும் யோசிக்கலாமே! காரோட்டி அந்த இடத்திற்குப் புதிது. யார் வீட்டையோ தேடுகிறார்.


 ↠↠↠தனிமையும் கற்பனையும்

கோயிலுக்குப் போய் கடவுளை வேண்டினால் அமைதி கிடைக்கும் என்பார்கள். அங்கும் வீண்வம்பு பேசுகிறவர்கள் இல்லாமலில்லை. அதனாலேயே, சில கோயில்களில் `இங்கு அநாவசியமாகப் பேசக்கூடாதுஎன்ற எச்சரிக்கையை விடுத்திருக்கிறார்களோ!


பிரார்த்தனை, தியானம்இதெல்லாம் மனதை அமைதிப்படுத்துவது. பூஜை அறையில் கண்ணை மூடி அமர்ந்துகொண்டு, வெளியில் என்ன நடக்கிறது என்று காதைத் தீட்டியபடி இருந்தால், அவ்வப்போது குரலை எழுப்பி, வெளியில் உள்ளவர்களுக்கு `ஆலோசனைகூறத்தான் தோன்றும். அப்புறம் மௌனமாவது, அமைதியாவது!


மௌனமாக இருந்தால்தான் பிறரை மட்டுமின்றி, நம்மையும் நாமே புரிந்துகொள்ள முடியும்.

வாழ்வில் வெற்றிபெற்றவர்களிடம் எப்போதும் இருப்பது: புன்னகை, மௌனம். பேசாமலிருப்பதும் ஒரு மொழிதான் என்று புரிந்தவர்கள் அவர்கள்.

மௌனம் என்கின்ற மரத்தின் பழம்தான் அமைதி என்று சரியாகத்தான் சொல்லிவைத்திருக்கிறார்கள்.

:நிர்மலா ராகவன் :-எழுத்தாளர் /சமூக ஆர்வலர் / மலேசியா.

தொடரும்.... 
👉👉ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக 

0 comments:

Post a Comment