விஞ்ஞானம் வழங்கும் விந்தை

 அறிவியல்=விஞ்ஞானம் 


🥛பால் விநியோகம் செய்ய ட்ரோன்

ஐரோப்பிய நாடான ஸ்வீடனில் பால் விநியோகம் செய்யும் ட்ரோன் சேவை வரும் மே மாதத்தில் துவங்கப்படுகிறது. 12 கி.மீ., துாரம் பயணம் செய்யக்கூடிய இந்த ட்ரோனால் ஒரு பயணத்தில் 4 கிலோ, அதாவது 10 லிட்டர் பால் வரை சுமந்து செல்ல முடியும்.

 

🧠நினைவாற்றல் குறைபாடு சரி செய்ய

புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கு அதிகளவிலான மருந்து எடுத்துக் கொள்பவர்களுக்கு மூளையில் 'ப்ரெய்ன் ஃபாக்' எனப்படும் நினைவாற்றல் குறைபாடு ஏற்படும். இதை 40 ஹெர்ட்ஸ் அதிர்வெண் உடைய ஒலி, ஒளியைக் கொண்டு சரி செய்ய முடியும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த மாசசூசெட்ஸ் பல்கலை மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

 

❋புற்றுநோயை ஏற்படுத்துவதில் பாக்டீரியா

நம் குடல், வயிற்றுப் பகுதிகளில் வாழும் 'ஹெலிகோபாக்டர் பைலோரி' எனும் பாக்டீரியா பொதுவாக ஆபத்தற்றது என்று அறியப்பட்டு வந்தது. சமீபத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த நான்யாங் பல்கலை மேற்கொண்ட ஆய்வில், வயிற்றில் புற்றுநோயை ஏற்படுத்துவதில் இந்த பாக்டீரியா முக்கிய பங்கு வகிப்பதாகத் தெரிய வந்துள்ளது.

 

 🎈தாமதப்படுத்தும் அல்சைமர்

குறைவான மாவுச்சத்து, அதிக கொழுப்பு, மிதமான புரதச் சத்துள்ள உணவுகளை சாப்பிடுவது 'கீடோ' உணவு முறை. அமெரிக்காவைச் சேர்ந்த கலிபோர்னியா பல்கலை இந்த உணவு முறையைக் கடைப்பிடிப்பது, அல்சைமர் நோய் ஏற்படுவதைத் தாமதப்படுத்தும் எனக் கண்டறிந்துள்ளது.

 

⚖உடல் பருமனுக்கு தீர்வாகுமா புதிய ஆய்வு?

பலருக்கு மிகப் பெரிய பிரச்னையாக இருப்பது உடல் பருமன். இது நீரிழிவு, இதய நோய்களை விரைவுபடுத்துகிறது. குறிப்பாக, நடுத்தர வயது உடல் பருமன் மிகவும் ஆபத்தானது. இதைச் சரி செய்வதற்காகப் பல்வேறு ஆய்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர். ஜப்பானைச் சேர்ந்த ஒசாகா பல்கலை ஆய்வாளர்கள், மூளையின் நியூரான்களில் ஏற்படும் மாற்றங்களுக்கும் உடல் பருமனுக்கும் உள்ள தொடர்பை எலிகளில் சோதனை செய்து கண்டறிந்துள்ளனர்.

நம் உடலுக்குப் போதுமான கலோரி கிடைத்ததும், உணவு உட்கொண்டது போதும் என்று மூளைக்கு சமிக்ஞை அனுப்பும் ஒரு புரதம் தான் மெலனொகார்டின் 4 (MC4R). இது மூளை நியூரான்கள் உள்ள சிலியா எனப்படும் ஆன்டனா போன்ற பகுதிகளில் படிந்து இருக்கும்.

எலிகளைக் கொண்டு ஆய்வு செய்த விஞ்ஞானிகள், ஒரு பகுதி எலிகளுக்கு சாதாரண உணவையும், மற்றொரு பகுதி எலிகளுக்கு அதிக கொழுப்பு நிறைந்த உணவையும் தந்தனர். சாதாரண உணவு உண்ட எலிகளுக்கு சிலியா பகுதி நன்றாக இருந்தது. அதிக கொழுப்பு உட்கொண்ட எலிகளுக்கு சிலியா பகுதி விரைவாகச் சுருங்கியது. இதனால், இதில் படியும் மெலனொகார்டின் 4 புரதத்தின் அளவு குறைந்தது. இதன் விளைவாக இந்த எலிகள் அளவு தெரியாமல் அதிகமான உணவு உட்கொண்டு எடை கூடின.

இதன் வாயிலாக மெலனொகார்டின் 4 புரதத்திற்கும் உடல் பருமனுக்கும் இடையிலான தொடர்பு நிறுவப்பட்டது. இது மனிதர்களுக்கும் பொருந்தும். அதேபோல் லெப்டின் எனும் நாளமில்லா சுரப்பிக்கும் உடல் பருமனுக்குமான தொடர்பு ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளது.

பருமன் உள்ள மனிதர்களின் உடலில் உள்ள கொழுப்புத் திசுக்கள் அதிகளவிலான லெப்டினை உற்பத்தி செய்கின்றன. இந்த லெப்டினும் சிலியா பகுதியைச் சுருக்குகிறது. இது உடல் பருமனை மேலும் அதிகரிக்கும். இந்தப் புதிய ஆய்வின் மூலம் கொழுப்பு உணவின் புதிய பக்கவிளைவுகள் வெளிவந்துள்ளன. உடல் பருமனைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய ஆய்வுகளை இது முடுக்கிவிடும்.


🏔எரிமலை- கீழே உறைபனி

செவ்வாய் கிரகத்தில் மரைனர் 9 விண்கலம் மட்டுமே இதுவரை 20 எரிமலைகளைக் கண்டறிந்துள்ளது. தற்போது புதிதாக ஒரு எரிமலையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 9,022 மீ. உயரத்தில் இருக்கும் இந்த எரிமலை 450 கி.மீ. அகலம் உடையது. இதற்குக் கீழே உறைபனி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

🐡3டி பிரின்டிங் முறை தோல்

எலியின் சிதிலமடைந்த தோலின் மீது 3டி பிரின்டிங் முறையில் உயிருள்ள தோலைப் பொருத்தி அமெரிக்காவைச் சேர்ந்த பென்சில்வேனியா பல்கலை ஆய்வாளர்கள் சாதனை படைத்துள்ளனர். விரைவில் இது மனிதர்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று கூறியுள்ளனர்.

 

🌀மிக அதிகமாக ஆஸ்துமா நோய்

ஆஸ்திரேலியாவின் கேர்ட்டின் பல்கலையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் புறநகர்களில் வசிக்கும் குழந்தைகளை விட நகர மத்தியில் வசிக்கும் குழந்தைக்கு மிக அதிகமாக ஆஸ்துமா நோய் வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் நகரங்களில் ஏற்படும் கடுமையான காற்று மாசு ஆகும்.

 

🍬அழுத்தத்தை அதிகப்படுத்தும் இனிப்புகள்

பாரம்பரிய மருத்துவத்தில் பல்வேறு பயன்பாடுகளை உடையது அதிமதுரம் (Licorice). இதிலிருந்து பல இனிப்புகள் அமெரிக்காவில் தயாரிக்கப்படுகின்றன. இதில் உள்ள க்ளைசைர்ஹிசிக் அமிலம், ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் என சுவீடன் நாட்டைச் சேர்ந்த லின்கோபிங்க் பல்கலை சமீபத்திய மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒரு நாளைக்கு 57 கிராமிற்கு அதிகமாக எடுத்துக் கொள்வது ஆபத்து என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

 

🐍இறைச்சிக்காக மலைப்பாம்பு

இறைச்சிக்காக ஆடு, பன்றி, கோழி, மாடுகளை வளர்ப்பது சுற்றுச்சூழலுக்குப் பலவித தீமைகள் செய்கிறது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மக்குவாரி பல்கலை ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், மலைப்பாம்புகளை இவ்வாறு வளர்த்து உண்பது பல வழிகளில் நன்மை செய்யும் என்று தெரியவந்துள்ளது. விவசாயத்திற்குத் தொல்லை தரும் உயிரினங்களை உட்கொள்வதாலும், அவற்றின் மாமிசத்தில் அதிகளவு புரதம் இருப்பதாலும் விஞ்ஞானிகள் மலைப்பாம்பு உணவைப் பரிந்துரைக்கின்றனர்.

 

~கதிர்வீச்சுக்கே சவால்விடும் புழு

'செர்னோபில் விபத்து' என்பது 1986ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவின் செர்னோபில் என்கின்ற இடத்தில் இருந்த அணு மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தாகும். திடீரென ஏற்பட்ட கோளாறால் எதிர்பாராத விதமாக அணு உலையின் பல பகுதிகள் சிதைந்து, சுற்றியுள்ள பகுதிகளில் கதிர்வீச்சு பரவியது. கிழக்கே ரஷ்யாவில் துவங்கி மேற்கே இத்தாலி, பிரான்ஸ் வரை கதிர்வீச்சு பரவியது. இதனால் ஏராளமான மக்கள், கால்நடைகள், விலங்குகள் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களுக்கும் விலங்குகளுக்கும் புற்றுநோய் ஏற்பட்டது.

இவ்வளவு கொடிய கதிர்வீச்சிலும் கூட கொஞ்சம் கூட பாதிக்கப்படாத புழு ஒன்றை விஞ்ஞானிகள் தற்போது கண்டறிந்துள்ளனர். அணு உலையைச் சுற்றி 30 கிலோமீட்டர் துாரம் வரை கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருந்தன. இந்தப் புழுக்களுக்கு மட்டும் எந்த வகையான பாதிப்பும் ஏற்படவில்லை என்பது விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் பல்கலையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் உரியப் பாதுகாப்புக் கவசங்களை அணிந்துகொண்டு அணுஉலை அமைந்துள்ள கதிர் இயக்கப் பகுதிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட நெமெடோட்ஸ் (Nematodes) எனும் இந்த நுண் புழுக்களைச் சேகரித்தார்கள். இவற்றுடன் வேறு பகுதியில் வாழ்ந்த இதே புழுக்களை ஆய்வுக்கு உட்படுத்தினர். இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்ததில் அவற்றின் மரபணு ஒன்று போலவே இருந்தது தெரிய வந்தது.

இவை விரைவாக இனப்பெருக்கம் செய்வதாலும், குறைவான ஆயுளைக் கொண்டிருப்பதாலும் மரபணு குறைபாடுகளைச் சரிசெய்து கொண்டு ஆரோக்கியமாக மாறி இருக்க வேண்டும் என்கின்றனர் விஞ்ஞானிகள். கதிர்வீச்சுகளைத் தாங்குகின்ற அளவு ஆற்றல் பெற்றுள்ள இந்தப் புழுக்களை ஆராய்வதன் மூலமாக மனிதர்கள், விலங்குகளில் ஏற்படும் புற்றுநோயைத் தடுப்பதற்கான சாத்தியக் கூறுகளை அறிய முடியும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து.

 

🍥அல்சைமருக்கு அடிபோடும் மேக்னிடைடு

சுற்றுச்சூழல் மாசுபாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாகக் காற்று மாசினால் மார்பக புற்றுநோய், இதய கோளாறுகள் ஏற்படும் என, ஏற்கனவே பல ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

சமீபத்திய ஆய்வு ஒன்று, மூளை தொடர்பான நினைவாற்றல் குறைபாடு நோயான 'அல்சைமர்' நோய்க்கும், காற்று மாசுபாட்டிற்கும் உள்ள தொடர்பைக் கண்டறிந்துள்ளது. பொதுவாகவே காற்று மாசுபாடு அதிகம் உள்ள பகுதிகளில் வாழ்கிறவர்களுக்குத் தான் 'அல்சைமர்' வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.

அதிலும் குறிப்பாக, மேக்னிடைடு (Magnetite) எனும் நச்சு, 'அல்சைமர்' நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மூளையில் அதிகளவில் காணப்பட்டது. இயற்கையாகவே மனித மூளையில் உள்ள இரும்புச்சத்து மேக்னிடைட் ஆக மாற்றம் அடையும்.

வாகனப் புகை, மரக்கட்டைகளை எரிப்பதனால் வரும் புகை, நிலக்கரி மின் நிலையங்களில் இருந்து வரும் புகை ஆகியவற்றில் மேக்னிடைட் அதிகமாக இருக்கிறது. நாம் சுவாசிக்கும் போது இது மூக்கின் வழியாக உள்ளே நுழைந்து மூச்சுக் குழாயைக் கடந்து மூளையை அடைகிறது. மூளையில் உள்ள நியூரான்களை இது கடுமையாகப் பாதிக்கிறது.

இது தொடர்பாக விஞ்ஞானிகள், எலிகளை வைத்துச் சோதனை செய்தனர். இரும்பு, டீசல், மேக்னிடைடு ஆகிய மூன்று நச்சுகளால் மாசடைந்த காற்றை எலிகள் சுவாசிக்கத் தந்தனர்.

வெகு விரைவிலேயே மேக்னிடைடு கலந்த காற்றைச் சுவாசித்த எலிகளுக்கு மூளை நியூரான்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதனால் அவை நினைவாற்றலை இழந்தன.

இந்த ஆய்வின் மூலம் மேக்னிடைடினால் ஏற்படும் ஆபத்து வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எனவே, இது உற்பத்தியாகும் இடங்களில் இருந்து காற்றில் கலக்காதபடி பிரித்து எடுக்கப்பட வேண்டும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

தொகுப்பு;மனுவேந்தன்-செ

0 comments:

Post a Comment