புறநானுற்று மா வீரர்கள் [பகுதி03]

["மாவீரன் பாண்டியன் நெடுஞ்செழியன்"]

வீரயுக காலம் என கலாநிதி கைலாசபதியால் கருதப்பட்ட , சங்க கால தமிழ் பெண்களின் / தாயின் வீரம் செறிந்த பண்பினை முன்பு பார்த்தோம். மானமா? உயிரா? என்று கேட்டால், மானமே பெரிது என்று வாழ்ந்த வாழ்க்கை தான் புறநானூறு வாழ்க்கை. "மயிர் நீப்பின் உயர் வாழாக் கவரி மான்" தான் அந்த வீரர்கள். இதைத் தான் வள்ளுவரும் தனது குறள் 969 இல்

"மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின்."

என்று கூறுகிறார். அதாவது நாணி நிற்கும் சூழல் நேரா வண்ணம் நம்முடைய செயல்கள் ,குணங்கள் இருக்க வேண்டும் என்கிறார். அப்படித்தான் அன்று வீர மரணம் அடையும் போக்கு சங்க கால வீரனிடம் இருந்தது.

இந்த வலிமையை வீரத்தை சேர்ப்பது தாய் முலைப் பாலடா என்கிறார் பாரதியார்.

 

"கருவினில் வளரும் மழலையின்

உடலில் தைரியம்

வளர்ப்பாள் தமிழன்னை..

களங்கம் பிறந்தால்

பெற்றவள் மானம்

காத்திட எழுவான் அவள்பிள்ளை!"

["அச்சம் என்பது மடமையடா" / மன்னாதி மன்னன் (1960)]

என்கிறான் கண்ணதாசன். தாயின் கருவில் உண்டாகும் போதே ஒரு மனிதனின் பண்புகள் உருவாகின்றன என்கிறது விஞ்ஞானம். இந்த வீரத் தமிழ் தாய் அத்துடன் நிற்கவில்லை. தமது பிள்ளைகளின் மார்பில்  ஐம்படைத் தாலி அணிவித்து இன்புற்றனர் என்கிறது சங்க பாடல்கள். அதுமட்டும் அல்ல, கம்பராமாயணம் / பால காண்டம் / நாட்டுப் படலத்தில் [58] கூட :

"தாலி ஐம்படை தழுவு மார்பிடை

மாலை வாய் அமுது ஒழுகு மக்களைப்

பாலின் ஊட்டுவார் செங்கை ... "

என்று கூறுகிறது. அதாவது  ஐம்படைத்  தாலி அணி செய்யும் மார்பிலே சொள்ளு நீர் வழியும் [saliva - உமிழ்நீர்; எச்சில்] தம் குழந்தைகளுக்குத்  பாலமுதைப்  புகட்டும்  தாய்மார்களின் அழகிய கைகள் என்று கூறுகிறது. அது என்ன  ஐம்படைத் தாலி? வேல் [அல்லது சங்கு], சக்கரம், தண்டாயுதம், வாள், வில் ஆகிய ஐந்து கருவிகளின் உருவங்களால் அமைந்த தாலியை பிறந்து ஐந்தாம் நாள் அணிவித்து மகிழ்கிறார்கள். அதன் பின் சிறிது வளர, அவர்களின் விளையாட்டு காலங்களில் சேவற்கோழி, ஆட்டுக்கடா, எருது போன்ற வற்றை ஒன்றோடு ஒன்று மோத விட்டு பார்த்து மகிழ விடுகிறார்கள். இப்படி வீரத்தை ஊட்டியவர்கள் இந்த வீர பெண்கள் / தாய்கள். அதாவது வீரத்தையே பாலாக ஊட்டி வளர்த்த பண்பினை காண்கிறோம்.

 

"வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி

மக்களின் மனதில் நிற்பவர் யார்?

மாபெரும் வீரர் மானங் காப்போர்

சரித்திரந்தனிலே நிற்கின்றார் “

இப்படி கண்ணதாசன், அதே பாடலின் இறுதியில் கூறுகிறான். அப்படி மக்கள் மனதிலும் சரித்திரத்திலும் நிற்கின்ற, அவர்கள் வளர்த்த சில  மாவீரர்களை இனி பார்ப்போம்.

 

 

மாவீரன் பாண்டியன் நெடுஞ்செழியன்:    

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் என்ற சிறப்புப் பெயரைப் பெற்ற சங்ககாலப் பாண்டிய நாட்டினை கி.பி. 205 முதல் 215 வரை ஆட்சி செய்த ஒரு மன்னன். இவரின் தந்தை இளமையிலேயே இறந்ததும், இவனது தாயும் அந்த கால மரபுப்படி உடன்கட்டை ஏறியதாலும் [கணவனை இழந்த மனைவி அவரின் சடலம் தீமூட்டப்படும் போது அந்தத் தீயில் தன்னை அழித்துக் கொள்ளுதல் உடன்கட்டை ஏறுதல் எனப்படுகிறது. இந்த சடங்கு ஆங்கிலேயர் ஆட்சியில் 1829 ம் ஆண்டு சட்டத்துக் எதிரானதாக ஆக்கப்பட்டது], சிறு வயதிலேயே முடிசூட்டப் பட்டவன் இவன். புறநானூறு 77 இவனை, இந்த பாலகனை,

"கிண்கிணி களைந்த கால் ஒண் கழல் தொட்டு,

......................................................................

......................................... தார் பூண்டு,

தாலி களைந்தன்றும் இலனே; பால் விட்டு

அயினியும் இன்று அயின்றனனே;  "

என்று பாடுகிறது. அதாவது சலங்கை கழற்றப் பட்ட கால்களில் ஒளி பொருந்திய கழல்கள் அணிந்திருக்கிறான் [கழல் என்பது காலில் அணியும் ஒருவகை அணி. காலில் கழல் அணிவது அவர்களுடைய வீரத்தை எடுத்துக் காட்டுவதற்காக. அதற்குப் பெயரே 'வீரக்கழல்'. ஆண்கள் அணிவது இந்த வீரக் கழலைத் தான்.] ......... ஆனால் அவன் இன்னும் (சிறுவர்கள் அணியும்) ஐம்படைத் தாலியைக் கழற்றியதாகத் தெரியவில்லையே! பாலுணவு உண்ணுவதை நிறுத்தி இன்று தான் சோற்றுணவு உண்டவன் போலத் தோன்றுகிறானே! என்று கூறுகிறது.

 

நெடுஞ்செழியன் இளையவன், வயது முதிராதவன் ஆற்றல் இல்லாதவன் என இகழ்ந்து சோழநாட்டை ஆண்ட இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, சேர நாட்டை ஆண்ட மாந்தரஞ்சேரல் இரும்பொறை, கொங்கு நாட்டினை ஆண்ட திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேள், பொருநன் ஆகிய குறுநில மன்னர்கள் போன்றோர் கூறினர். இவ்வனைவரும் சேர்ந்து பாண்டிய நாட்டின் மீது படை யெடுத்துத் தலையாலங்கானம் என்னுமிடத்தில் தாக்கினர். இதை அறிந்த இவன்:

 

“இந்தப் பாண்டியன் நெடுஞ் செழியனுடைய நாட்டையும் சிறுவனாகிய இவன் அரசாள்வதையும் தங்கள் அறியாமையால் சிலர் இகழ்ந்து கூறிக் கொண்டிருக்கிறார்கள். அத்தகையவர்கள் சிரித்து இகழத்தக்கவர்கள். அவர்கள், என்னை அறியாப் பருவத்தினன் என்று கூறித் தங்கள் யானைப் படைகளையும் தேர்ப் படைகளையும் குதிரைப் படைகளையும் காலாட் படைகளையும் செருக்கோடு திரட்டிக் கொண்டு வந்திருக் கிறார்கள். அவர்கள் தங்களைப் பற்றித் தாங்களே தேவைக்கு அதிகமான தன்னம்பிக்கை கொண்டிருப்பவர்கள் என்னையும் என் அரசையும் துணிவாக இழித்துப் பேசியவர்கள் ஆவார்கள்.

 

அவர்களை வேரோடு அழிந்து சிதைந்து போகும் படியாகத் தாக்கி முரசத்தையும் குடையையும் கைப் பற்றிக் கொண்டு வெறுங்கையர்களாகத் துரத்த வில்லையானால் என் பெயர் பாண்டியன் நெடுஞ்செழியனில்லை. என் வெண்கொற்றக் குடையின் நிழற் கீழே வாழும் குடிமக்கள் என் ஆட்சியில் அறம் காணாமல் ‘இந்த அரசன் கொடியவன்’ என்று பழி தூற்றப் படுவேனாக! மிக்க சிறப்பையும் உயர்ந்த அறிவையும் உடைய மாங்குடி மருதனைத் தலைவராகக் கொண்ட பாண்டிய நாட்டுப் புலவர்கள் என்னை விரும்பிப் பாடா தொழியட்டும். ஆளப்படும் மக்களெல்லாம் அழுது புலம்பிட, ‘இல்லை யென்று கேட்ட இரவலர்க்கு இட்டு மகிழாத பாவம் என்னை வந்து சேரட்டும். இது என் சபதம்...”

என தனது புறநானூறு பாடல் 72 மூலம் வஞ்சினம் கொட்டி, உடனே படைகளோடு போருக்குப் புறப் பட்டான். அத்தனை அரசர்களையும் எதிர்த்துப் போரிட்ட இந்த, நெடுஞ்செழியன் அனைவரையும் தோற் கடித்தான் என்பது வரலாறு. இவனது இந்த பெருமையை புலவர் மாங்குடி கிழாராகிய மருதனார் இப்படி கூறுகிறார்:

 

மிக ஆழமான பெருங்கடலில் காற்றால் உந்தப்பட்டு / தள்ளப்பட்டு ஓடும் மரக்கலம் நீரைக் கிழித்துக் கொண்டு செல்வது போல, உன் யானைகள் சென்று போர்க் களத்தில் வீரர்களை விலக்கி இடம் அகலச் செய்து ஊடுருவ, அவ்வாறு களம் அகலச் செய்த பரந்த இடத்தில், அதாவது அந்த யானை சென்ற அகன்ற பாதையில், ஒளிவிடும் வேல்களை ஏந்தி உன்னை எதிர்த்த அரசர்களை அழித்து போர்க் களத்தைக் கலக்கி, அவர்களது புகழ் பொருந்திய முரசுகளை நீ கைப்பற்றினாய். அவ்வரசர்களின் முடி [கிரீடம்] யணிந்த தலைகளை அடுப்பாகவும்,அவர்களின் குருதியை உலை நீராகவும், வீரவளை அணிந்த அவர்களின் கைகளைத் துடுப்பாகவும் கொண்டு துழாவிச் சமைக்கப்பட்ட உணவால் போர் வேள்வி செய்த செழிய! நிலை பெற்ற புகழுடைய வேள்விகளைச் செய்து முடித்த வேந்தே! நீ அவ் வேள்விகளைச் செய்த பொழுது, நிறைந்த கேள்வி, ஐம்புலன்களை அடக்கிய மனவலிமை, நான்கு வேதங்களையும் கற்றதால் பெற்ற அறிவு, ஆகியவற்றையுடைய அந்தணர்கள் உன்னைச் சூழ்ந்திருந்தார்கள்; பகை மன்னர்கள் உனக்கு ஏவல் செய்தார்கள். உன்னோடு மாறு பட்டு உன்னை எதிர்த்த பகைவர்களும் ஒருவகையில் நோன்பு செய்தவர்கள் தான். அவர்கள் போரில் வீரமரணம் அடைந்ததால், அவர்களும் விண்ணுலகம் சென்று வாழ்கிறார்கள். அதாவது போரில் வீரமரணம் அடைந்தவர்கள் எல்லோரும் எந்த வேறுபாடும் இன்றி சொர்க்கம் போவார்கள் என்று உரைக்கப்படுகிறது. இனி அந்த பாடலை பார்ப்போம்.

"நளிகட லிருங்குட்டத்து

வளிபுடைத்த கலம்போலக்

களிறுசென்று களனகற்றவும்

களனகற்றிய வியலாங்கண்

ஒளிறிலைய வெஃகேந்தி

 

அரைசுபட வமருழக்கி

உரைசெல முரசுவௌவி

முடித்தலை யடுப்பாகப்

புனற்குருதி யுலைக்கொளீஇத்

தொடித்தோட் டுடுப்பிற் றுழந்த வல்சியின்

 

அடுகளம் வேட்ட வடுபோர்ச் செழிய

ஆன்ற கேள்வி யடங்கிய கொள்கை

நான்மறை முதல்வர் சுற்ற மாக

மன்ன ரேவல் செய்ய மன்னிய

வேள்வி முற்றிய வாய்வாள் வேந்தே

நோற்றோர் மன்றநின் பகைவர் நின்னொடு

மாற்றா ரென்னும் பெயர்பெற்

றாற்றா ராயினு மாண்டுவாழ் வோரே."

[புறநானூறு பாடல் 26]

 

மேலும், புறநானூறு 19, & 25, அகநானூறு 36, 175 & 209, நற்றிணை 387, மதுரைக்காஞ்சி 55, 127 பாடல்களில் இந்த தலையானங்கானத்து போரைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. அப்படி பெருமை பெற்ற, சிறப்பு பெற்ற இவனின் தந்தை, வெற்றிவேற் செழியன் ஆகும். இவன், கண்ணகியின் கணவன் கோவலனைக் கள்வன் என்று பழி சுமத்திக் கொலை செய்த, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்பவனின் தம்பி ஆகும்.

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

பகுதி 04 - "மாவீரன் சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்" தொடரும். வாசிக்க அழுத்துங்கள்👉  Theebam.com: புறநானுற்று மா வீரர்கள்-பகுதி04  

ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துங்கள்👉Theebam.com:

 புறநானுற்று மா வீரர்கள் [பகுதி/Part 01]

♔♔♔♔♔♔♔♔♔♔♔♔♔♔♔

 


உலகில் விநோதங்கள் -(அறிவியல்)

 'தேவதை புகைபோக்கிகள்' 

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, துருக்கியின் கப்படோசியாவில் உள்ள மக்கள் இப்பகுதி முழுவதும் எழுந்திருக்கும் 'தேவதை புகைபோக்கிகள்' எனும்  ஒரு இருப்பை  செதுக்கியுள்ளனர். இந்த கோபுரங்கள் மென்மையான  இயற்கையான எரிமலை சாம்பலில் இருந்து உருவாகின்றன. ஏரிமலையின் பாறை மென்மையானது, கப்படோசியர்கள் எண்ணற்ற குகைகளைத் மலையில் தோண்டினர். அவர்கள் இந்த குகைகளை அடைக்கல வீடுகளாக, தேவாலயங்களாக, முழு நிலத்தடி சமூகங்களாக கூட அடிக்கடி எதிரிகளிடமிருந்து தமக்குப்  பாதுகாப்பை வழங்கினர். நகரத்திலிருந்து விலகி, இந்த கல் கோபுரங்கள் நிலப்பரப்பைச் சூழ்ந்துள்ளன. ஆனால் உஹிசார் நகரத்தில், அவை மலையில் உள்ள பல குகைகளுடன் கலக்கின்றன, அவற்றில் சில இன்றும் குடியிருப்புகளாகப்பயன்படுத்தப்படுகின்றன.

👸👸👸👸👸👸👸👸👸
லீமர்ஸ் -The lemurs 

மடகாஸ்கர் தீவுக்கே தனித்துவமான  லீமெர்ஸ் விலங்கு  உலகப் புகழ்பெற்றது. ஒரு திமிங்கலம் (இந்திரி) போல பாடுவதிலிருந்து ஒரு பாலே நடனக் கலைஞர் (சிஃபாகா) போல மணலில் குறுக்கே குதிப்பது வரை பல சுவாரஸ்யமான நடத்தைகளைக் காட்டுகின்றன. அவை சிறிய உடல், நீண்ட மூக்கு மற்றும் பெரிய கண்களால் வகைப்படுத்தப்படுகின்றன.

புதைபடிவ பதிவின்படி  லீமெர்ஸ்போன்ற முதன்மையான விலங்குகள் சுமார் 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவின் பிரதான நிலப்பரப்பில் தோன்றி, கண்ட அசைவுகளால்  பிரிந்த மடகாஸ்கருக்கு சென்றதால் தனிமையான தீவில் இவை தங்கள் இனத்தினை தக்க வைத்துக்கொண்டன. குரங்குகளின் சில சமூக மற்றும் நடத்தை பண்புகளைப் பகிர்ந்து கொள்கின்றன  அதாவது,பாலூட்டிகளாக , சமூகக் குழுக்களை உருவாக்குதல், பழங்கள் மற்றும் தாவரங்களை உண்பது மற்றும் பகலில் சுறுசுறுப்பாக இருப்பது, மரங்களில் வாழ்வது என்பதாகும்.

👹👹👹👹👹👹👹👹
அரசை கலங்க  வைத்ததமிழர்

யுத்த காலத்தில் ஹம்டன் என்னும் நீர்மூழ்கியின் பெயரை கேட்டாலே பிரிட்டிஷ் காரர்கள் பயந்து நடுங்கினர்.(ஜெர்மனியுடையது). 1914 செப்டெம்பர் 22 ,ஹம்டன் எனும் பிரமாண்ட நீர்மூழ்கி சென்னை சென் ஜோர்ஜ் கோட்டையை தாக்கி பிரிட்டிஷ் அரசை கலங்க  வைத்ததது. இதனை செலுத்தியவர் இந்த கப்பலின் பொறியியலாளரும் இரெண்டாவது கமாண்டருமான செண்பக ராமன். ஒரு தமிழர்.

                                          🛸🛸🛸🛸🛸🛸🛸🛸🛸 

                மனித முக சுறா 

இந்தோனேஷியாவில் மனித முகத்துடன் காணப்பட்ட சுறா ஒன்று பிடிபட்டுள்ளது. கிழக்கு நியூஷா டென்காரா கடல் பகுதியில் சில மீனவர்கள் மீன்பிடித்த போது அவர்களின் வலையில் மனித முகம் போன்ற தோற்றம் கொண்ட சுறா ஒன்று சிக்கியது. அதனைக் கண்ட அவர்கள் ஆச்சரியத்துடன் கரைக்கு கொண்டு வந்தனர்.கரைக்கு வந்த சிறிது நேரத்தில் இறந்து விட்ட அந்த வெள்ளைச் சுறா மரபணு குறைபாட்டினால் இதுபோன்று பிறந்திருக்க வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

🐟🐟🐟🐟🐟🐟🐟

உடலை வளர்த்த கடல் அட்டை 

ஜப்பானில் உள்ள நாரா மகளிர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், சாகோக்ளோசான் என்ற கடல் அட்டை குறித்து ஆராய்ச்சி நடத்தி வந்தனர்.அப்போது ஒரு நாள், தங்கள் லேப்பில் இருந்த கண்ணாடி மீன் தொட்டியில், இருந்த ஒரு கடல் அட்டையின் தலை மட்டும் தனியே நீந்தியபடி இருந்தது. அதன் உடல் தனியே மிதந்து சில மணி நேரத்தில் இறந்துவிட்டது. ஆனால், தலை இறந்து விடாமல், மெல்ல மெல்ல தனது உடலை வளர்த்துக்கொண்டே வந்தது. அடுத்த சில நாட்களில், அந்த அட்டைக்கு, இதயம் உள்பட உடலின் அனைத்து உள் அங்கங்களும் கொண்ட புதிய உடல் முளைத்துவிட்டது.அட்டைகளுக்கு இப்படி ஒரு சக்தி இருக்கிறது என்பது விஞ்ஞானிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி விட்டது. அட்டைகள் உலகில் இப்படி ஒரு நிகழ்வு பதிவாவதும் இதுவே முதல் முறை என நாரா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆச்சரியம் தெரிவித்துள்ளனர்.

👈👈👈👉👉👉


கழுத்து வலியை ஏற்படுத்தும் 'ஒன்லைன்' வகுப்புகள்!

 


'ஒன்லைன்' வகுப்புகளில், சிறு குழந்தைகளை பல மணி நேரம் ஒரே இடத்தில் உட்கார வைப்பதால் கை, கால், கழுத்து, மூட்டுகளில் வலி இருப்பதாக குழந்தைகளை பெற்றோர் அழைத்து வருகின்றனர்.

'டேப், மொபைல் போன், லேப்டாப்'பை குழந்தைகள் பயன்படுத்தும் போது, குறைந்தது 2 மீட்டர் இடைவெளியில் வைத்து பயன்படுத்தும்படி, சொல்ல வேண்டும். அருகில் வைத்து பார்ப்பதால், கழுத்தை அதிகமாக முன்பக்கம் சாய்க்க வேண்டியிருக்கும்.

வகுப்பை கவனித்து கேட்பது ஒரு பக்கம் இருந்தாலும், கை, கால், கழுத்தை அதிகம் முன் பக்கமாக சாய்ப்பது வலியை ஏற்படுத்தும். இதனால் சிறிது நேரத்தில் குழந்தைகள் சோர்ந்து விடுகின்றனர். விளையாடாமல் ஒரே இடத்தில் இருந்தால், எலும்பு திசு வளர்ச்சியை அதிகமாக பாதிக்கும்; எலும்பு வலிமையாக வளராது.

குழந்தைகள் வெளியில் செல்லாமல் வீட்டிலேயே இருப்பதால், 'விட்டமின் டி' குறைபாடு வரலாம். மொட்டை மாடியில், அதிகம் கூட்டம் இல்லாத இடத்தில் தினமும் சிறிது நேரமாவது குழந்தைகளை விளையாட விட வேண்டும்.

வயதானவர்களும் வீட்டிலேயே முடங்கி இருக்காமல், முக கவசம், சமூக இடைவெளி என்ற உரிய பாதுகாப்புடன் நடை்பயிற்சி செய்யலாம்; இது எலும்பு மூட்டுகள், தசைகளுக்கு நல்லது. கொரோனா தொற்று ஏற்பட்டு குணமான பின், உடனடியாக முழு வீச்சில் உடற்பயிற்சி செய்ய வேண்டாம்.

முதலில் தினமும் சிறிது நேரம் நடைபயிற்சி, நாலு - ஆறு வாரங்கள் கழித்து மற்ற உடற்பயிற்சிகளை செய்யலாம். விட்டமின் டி குறைபாடு இருந்தால், டாக்டரின் ஆலோசனைப்படி, வாரத்தில் ஒரு நாள் அதற்கான மாத்திரை சாப்பிடலாம். தினமும் 30 நிமிடங்கள் சூரிய வெளிச்சத்தில் இருப்பது, குறைபாடு நீங்க உதவும்.

டாக்டர் எஸ்.செந்தில் குமார்,  
எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர்,
தி இந்து மிஷன் மருத்துவமனை, சென்னை.