இப்படியும் ஒரு ஆசிரியர்


செல்லத்துரை வாத்தியார்
 இலங்கை வட மாகாணத்தின் வலிமேற்கில் பண்டத்தரிப்பு கோவில்பற்றில்  முத்துமாரி அம்மன் கோவிலை நடுவணா கக்கொண்ட ஒரு குக்கிராமமே பணிப்புலம் ஆகும்.

அக்கிராமத்தில் சிவமதப் பற்றாளர்களே செறிந்து வாழ்ந்தனர்.
அவர்களுள் சபாபதி இலக்சுமி தம்பதியரில் சபாபதியாருக்கு அவர் நாக்கிலிருந்து பாடல்கள் தாராளமாக பிறக்கும்.ஆதலால் அவரை புலவர் என்றே அன்று ஊரவர்கள்  அழைப்பர்.
அக்குடும்பத்தில்  மூத்த மகள் நன்னிப்பிள்ளைக்கும், அருணாசலம் மகன் சின்னக்குட்டிக்கும் அவர்கள் இல்லற வாழ்வில் மலர்ந்த மலர்கள் எட்டு. அவர்களில் ஐந்தாவது பிள்ளையே [பிறந்த திகதி:-03-12.1914] பின்னர் வாத்தியார்-செல்லத்துரை ஆனார். அவ்வரிசையில் கடைசியில் பிறந்தவரே இன்று கனடாவில் வதியும் கந்தையா வாத்தியார் ஆவார்.



இவர் பிறந்து,வளர்ந்த காலம் உறவுகள் வறுமைக்கோட்டின்
கீழ் வாழ்ந்தனர்.நல்ல கல்விக்கூடங்கள் அருகில் இருக்கவில்லை. 1872 இல் ஆரம்பிக்கப்படட காலையடி அமெரிக்கமிஷன்  பாடசாலையின் கிறிஸ்துவமே போதிக்கப்பட்ட்து. அதனால் அங்கு சென்று படிப்பதை வெறுத்தார்.
எனவே சுழிபுரம் ஆறுமுகவித்தியாசாலையில் ஆரம்ப கல்வியினை முடித்துக்கொண்ட ஆசிரியர் பின்னர் பண்ணாகம் மெய்கண்டான் பாடசாலையில் தனது கல்வியினை தொடர்ந்தார்.
தாய்வழிப் பேரனாரின் கவித்துவ வல்லமை இவரிடம் காணப்பட்டது..இனிமையாகப் பாடும் திறமையும், மேடை நடிப்பும் மெய்கண்டான் பாடசாலையில்  இவருக்கு பாராட்டுக்களைக் குவித்தது.
''சதானந்தன் சந்திரமதி'' எனும் நாடகத்தில் சதாநந்தனாக திறமையாக நடித்ததன்  மூலம் அப்பாடசாலை அதிபர் திரு .க.முருகேசுவின் அன்புக்குப் பாத்திரமானார்.
அப்பாடசாலையில் இறுதித் தேர்வில் திறமைச் சித்தியடைந்த செல்லத்துரை அவர்கள் அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்கி அங்கு சில மாதங்கள் உதவி ஆசிரியராக பணி புரிந்தார்.
மெய்கண்டான் சென்று ஒரு ஆசிரியர் நிலைக்கு உயர்ந்த அவரது வளர்ச்சிகண்டு ஊர் உறவுகள் பலரும் இவரினை பின்பற்றி மெய்கண்டான் பாடசாலையில் கல்விகற்க சென்றதால் காலையடி அமெரிக்கமிழன் பாடசாலையின் மாணவர் தொகை வெகுவாகக் குறைந்தது. இது கண்டு கலங்கிய அமெரிக்க மிஷன்மார்போதகர்கள் சிலர் அப்போது  காலையடி பாடசாலையின் அதிபர் செல்லப்பா வாத்தியாருடன் இணைந்து ஆசிரியர் செல்லத்துரை அவர்களை சந்தித்து, ஒரு கிறிஸ்தவராக மாறினால் காலையடி பாடசாலையில் தலைமை ஆசிரியப்பணி தருவதாக கேட்டுக்கொண்டனர். அதற்கு மறுத்த ஆசிரியர் மதம் மாறாமலேயே சாதாரண உதவி ஆசிரியர் நியமனத்தினை ஏற்றுக்கொண்டார்.


இவர் காலையடி அமெரிக்க மிஷன் பாடசாலையில் 1935 இல் தம் பணியினை ஆரம்பித்ததும் ஊர் மாணவர்கள் எல்லோரையும் திரட்டி காலையடியில் படிக்கச்செய்து வீழ்ந்த பாடசாலையினை நிமிர்த்தியதனை மிஷன் மாருக்கு காரணம் காட்டி மெல்ல மெல்ல சைவ பாடத்தினையும் அங்கு கற்பிக்க ஆவன செய்தார். அதே வேளையில்  தானும் ஆசிரிய தராதர பத்திர தேர்வில் தோற்றி ஆசிரியருக்குரிய தகுதியினை பெற்றுக்கொண்டார்.

அன்று ஊருக்குள் ஒரேயொரு ஆசிரியர் என்பதால் அவர் மதிப்பு மென்மேலும் பெருகியது.திருமண பேச்சு என்றால் வாத்தியாரிடம் தான் போய் ஆலோசனை கேட்கவேணும்.பிள்ளை பிறந்தால் நாள்,நட்ஷத்திரம் அறிய,நல்லநாள்,கெட் ட நாள் அறிய,ஐந்து வயது முடிந்த குழந்தைக்கு ஏடு தொடக்க, குடும்ப பிணக்குகள் தீர்க்க ,காணி,பூமி,எல்லை பங்கீடு என்று எல்லாவற்றிற்கு வாத்தியார் தான் போகவேணும். இதனால் ஊரில் உள்ள மூத்தோர்கள் கூட  அவரை அன்புடன் சடடம்பியார் என்றே அழைத்தனர்.

அதேவேளையில் ஊருக்குள் நடைபெறும் கலைவிழாக்களுக்குரிய கலைநிகழ்ச்சிகளில் ஆசிரியரே பொறுப்பாக இருப்பார்.அவர் ஊர் பிள்ளைகளை வைத்து பழக்கிய நடனங்களே அங்கு பாராட்டுக்களை பெறும்.
ஓரு இந்து பாடசாலையினை எமது ஊரில் நிர்மாணிக்கும் விருப்பில் செல்லத்துரை ஆசிரியர் அவர்கள் இருந்ததை அறிந்த அன்றய இலங்கை இந்து மகா சபையின் வடபிராந்தியத்தின்
தலைவராக இருந்த இராசரத்தினம் என்பவர் கட்டிட நிர்மாணத்துக்குரிய ஒரு பகுதி பணத்தினை  வழங்குவதாக சபை உறுதி அளித்ததின் பலனாக சாந்தையில் சிற்றம்பலம் செட்டியார் எனும் அன்பர்  பாடசாலைக்கு அளித்த  நன்கொடைக் காணியில் சிற்றம்பலவித்தியாசாலை கட்டும் பணி ஆசிரியரின் தலைமையில் ஆரம்பமானது. ஊரிலுள்ள இளையோரையும் தனது பிள்ளைகளையும்,தானும் இணைந்து வேதனம் எதுவும் பெறாது கூலி காரரிலும் மேலாக உழைத்ததுடன் இளையோர்கள், ஆசிரியர் இணைந்து தம் பணத்தினை யும் நன்கொடையாக பணம்  இட்டு அப்பாடசாலையினை 1959 இல் கல்விக்காக திறந்து வைத்தனர்.

அக்காலத்தில் ஒரு பாடசாலையும்,மாணவர்கள் தொகையையும் சபையினருக்கு காட்டினால் அவ்வூர் படித்த இளையோர்கள் ஆசிரிய நியமனம் பெற வாய்ப்பு இருந்தது.எனவே சிற்றம்பல வித்தியாசாலை மூலம் எமது இளையோர்கள்,எமது உறவுகள்பலர் ஆசிரியர்களாக நியமனம் பெற்றனர் என்றால் அதற்கு செல்லத்துரை ஆசிரியரே காரணம் எனலாம்.

 இதேவேளையில் ஊருக்கு ஒரு வாசிகசாலை தேவை என்பதனை உணர்ந்த இளையோர்களுடன் இணைந்து அதனை முத்துமாரியம்மன் ஆலய அருகில் நிர்மாணிக்க தீர்மானித்தனர். எந்த வித பண வசதிகளுமற்ற அக்காலவேளையில் ஆசிரியர் தனது கலைத்திறமையினை பயன்படுத்தி காலையடி பாடசாலை மாணாக்கர்களை திரட்டி அவர்களுக்கு கோலாடடம் போன்ற நடனங்களை பழக்கி மேடையமைத்து பணம் திரட்டி இவ் வாசிகசாலை 1946 இல் பூர்த்தியடைய கடுமையாக உழைத்தார்.
அச்சமயம் யாழ் மாவடடத்திலேயே முதல் தர வாசிகசாலை என பெயர் பெற்ற வாசிகசாலை எமது என்பது பெருமைக்குரியது. ஏனெனில் அன்று எமது வாசிகசாலை தையல் போன்ற வகுப்புக்களும்,சனசமூக நிலையமாகவும்,மாதர் சங்கமாகவும் மிளிர்ந்தது மறக்க முடியாதது.

அத்துடன் சுன்னாகத்திற்கு மாட்டுவண்டியில் சென்று சங்கீத க்கலையினை பயின்று அதனை எமது ஊர் இளையோர் கற்றுக்கொள்ள வாய்ப்பளித்தார்.


இலங்கை சுதந்திரம் அடைந்த பின் காலையடி அமெரிக்க மிஷன் பாடசாலை தமிழ்க்கலவன் பாடசாலையாக வெள்ளைக்காரனுடன் சேர்த்து கிறிஸ்தவத்தை வெளியேற்றியது.அப்பொழுது எம்மூரில் மிகவும் ஆர்வமுள்ள கார்த்திகேசு என்பவர் அதிபராக இருந்தார்.அவர் செல்லத்துரை ஆசிரியரிடம் இருந்த ஆர்வத்தினை உணர்ந்து மாணாக்கர்களின் மேலான பொறுப்பினை அவரிடமே கொடுத்துவிடடார். இதனால் [சக ஆசிரியர்கள் இவரை ஹெட் மாஸ்டர் என்றே அழைப்பர்] ஒவ்வொரு மாணாக்கரின் வரவிலும் ஆசிரியர் அவதானமாகவே இருந்தார்.ஒரு மாணவன் வர பிந்தினால் அவன் நிற்கும் இடம் சென்று அவர் பிரம்பு பேசும். அத்துடன் அக்கால வீடுகள் முன் விறாந்தை திறந்த பகுதியாகும் .எனவே படிப்பவர்களினை வீதியால் போவோர்கள் கவனிக்க முடியும் .இரவில் மாணவர்கள் படிக்கிறார்களா என ஒரு கை விளக்குடன்  தெருத்தெருவாக சென்று அவதானிக்கும் பழக்கத்தினையும்  ஆசிரியர் கொண்டிருந்தார்,இதனால்வீட்டிலும் மாணவர்கள் படிக்கும் பழக்கத்தினையும் கொண்டிருந்தனர். பெற்றோர்,ஆசிரியர்சந்திப்புக்களுக்கு சில  பெற்றோர்கள் வருவதில்லை.அவர்களை வீதிகளில் சந்தித்தால்   மாணவர்கள் கல்வியினை ஊக்குவிக்குமாறு அவர்களிடம் வேண்டிக்கொள்வார்.
இதனால் மாணாக்கர் வரவும் அவர்கள் கல்வி நிலையும் தரத்தில் உயர்ந்தே சென்றது. இதனால் பெரும் பாடசாலைகளுக்கு அருகில் வாழும் அயலூர் மாணவர்களும் காலையடி வந்து பயன் பெற்றனர்.



பின்னர் தலைமை ஆசிரியராக பணி புரிய வந்த அதிபர் பேரம்பலம் என்பவர் அதிபர் கார்த்திகேசு காலம் போலவே ஆசிரியர் செல்லத்துரை அவர்களை பணி யாற்றும்படி வேண்டிக்கொண்டார். தான் இளைப்பாறுமுன் புதிதாக ஏதாவது செய்ய எண்ணிய வாத்தியார் பேருந்து ஒழுங்கு செய்து மாணவர்களை அழைத்து  கொண்டு மிகிந்தலை, திருக்கேதீஸ்வரம்  போன்ற வரலாற்று முக்கியத்துவமான ஊர்களுக்கு சுற்றுலாப்ப யணம் செய்து அதுவரை வெளி உலகம் தெரியாத மாணவர்களை    அவ் உலகினை அறியச்செய்தார்.
அவரது விரல்கள் அச்சுப் போன்ற  பொன் எழுத்துக்கள்  எழுதும் வல்லமை உடையவை.அதேவேளை காணி உறுதி எழுதும் அனுமதியினையும் கொண்டிருந்தார்.உறுதி வேலைகளுக்கு குறைந்த பணத்தினையே அவர் பெற்றுக்கொள்வதினால்.பல வசதிகுறைதோரும் பெரும் பலன் பெற்றிருந்தனர்.

ஆசிரியரின் நீண்டகால பணி அவருக்கு 1968ம் ஆண்டில் தலைமை ஆசிரியர் பதவியினை வழங்கியது.
இக்காலம் வரையில் மாணவர்கள் தண்ணீர் அருந்துவதற்கு அயல் வீடுகளுக்கு செல்ல வேண்டியிருந்தது.எனவே அரச உதவிமூலம் பாடசாலைக் காணியில்  ஒரு கிணறும், மேடையுடன் கூடிய நவீன  வகுப்பறை மண்டபத்தினையும் கட்டுவதற்கு ஆவன செய்தார். அம் மண்டபத்தின் திறப்புவிழா ஆசிரியரின் மேற்பார்வையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் பயிற்றுவிக்கப்பட்டு ஊர் மக்கள் முன்னிலையில் இலவசமாக மேடையேற்றம் பிரமாதமாக நிறைவேறியது,அதில் பங்குபற்றிய மாணவர்களுக்கும்,பெற்றோருக்கும் பெருமைகள் சேர்ந்தது  ஆசிரியரையே சேரும்.


நன்றாகக் காய்க்கும் பெரும் மாமரம் ஒன்று பாடசாலை காணியில் காணப்பட்ட்து.அவற்றில் காய்க்கும் கனிகளைக்கூட மாணவர்களுக்கு பங்கிட்டு மகிழவுறும் பண்பு ஆசிரியரின் கண்டு பெருமைப்பட்டிருக்கிறேன்.
வார இறுதி நாட்களில் வந்து எல்லை வேலிகளை பராமரிப்பதன் மூலம்பாடசாலைச் சுற்றாடலையும் அவர் எப்படி பராமரித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1970 இல் பதவிக்கு வந்த அரசு படித்து வேலையற்றிருக்கும் பட்டதாரிகளுக்காக கொண்டுவந்த சட்டங்களில் ஒன்று என்னவெனில் -இளையோருக்கு தொழில் வாய்ப்பு ஏற்படும்முகமாக பணிபுரியும் முதியோர்கள் 55 வயதினிலே ஒய்வு பெறவேண்டும் -என்பதாகும். எனவே அவர் 1971 இல் தனது ஆசிரியர் பணியிலிருந்து  கட்டாய ஒய்வு பெற்றுக்கொண்டார்.

ஊருக்காக வாழ்ந்த ஆசிரியர் செல்லத்துரை அவர்கள் 21-02-1994  அன்று இறைவனடி சேர்ந்தார்.



குறிப்பு: அண்ணனை பெருமைப்படுத்துவதற்காக இக்கட்டுரையினை நான் வரையவில்லை.  அரச உத்தியோகத்திலிருந்து இக்காலத்தில்  ஒய்வு எடுத்துக் கொண்டிருக்கும் எம்மவர்கள் அவரால் தான் தாம் நன்றாக இருப்பதாக நன்றியுடன் கூற க்கேட்டிருக்கிறேன். அவரைப்போன்று,அவரால் படித்து வளர்ந்தவர்களைப் போன்று இன்னும் எம் ஊரில் பலர் உதயமாக வேண்டும்.அடுத்த ஊரவர் எம் வளர்ச்சியை கண்டு திகைக்க வேண்டும். என்ற ஆவலில் அவரின் வரலாறு ஒரு வழிகாட்டியாக அமையும் என்ற நம்பிக்கையுடன் எழுதியுள்ளேன்.

-சின்னக்குட்டி .கந்தையா [ஓய்வுபெற்ற ஆசிரியர்/அதிபர்]
திகதி;15 -06-2007- கனடா





0 comments:

Post a Comment