சாப்ளின்



தன் கண்ணீரை மறைத்து உலகிற்கு புன்னகையைப் பரிசாக அளித்த சார்லி சாப்ளின்! சிரிக்காத நாட்களெல்லாம் வீணான நாட்கள்தான்’ என்பதை உணர்ந்து, தான் சிரிக்காவிட்டாலும், தன் மூலம் மற்றவர்கள் சிரிக்க வேண்டும் என வாழ்ந்து மறைந்தவர் தான் பிரபல நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின். ‘திரைப்படத்தின் மூலம் உங்களை சிரிப்பலைகளில் மிதக்க வைக்க, எனக்கு ஒரு பூங்கா, ஒரு போலீஸ்க்காரர், மற்றும் அழகிய ஒரு பெண் இருந்தால் போதும்’ என்பது தான் சாப்ளினின் பாலிசி. எப்படிப்பட்டவர்களையும் சிரிக்க வைத்து விடும் சாப்ளினின் நடிப்பு. காலம் கடந்து இப்போதும் உலகம் முழுவதும் சாப்ளினுக்கும், அவரது படங்களுக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்தளவிற்கு சாப்ளினின் படங்களில் சிரிப்பிற்கு கியாரண்டி உண்டு. நம்மை இப்படியெல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார் என்றால், அவரது மனம் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என நமக்கு தோன்றலாம். ஆனால் திரையைத் தாண்டி நிஜவாழ்க்கையிலும் தன் சோகங்களை மறைத்து மற்றவர்கள் முன் மகிழ்ச்சியாக இருப்பதாகவே நடித்தவர் தான் சாப்ளின். அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் சொல்லொண்ணாத் துயரங்கள். வாழ்க்கை அவரை ஒவ்வொரு முறை காயப்படுத்திய போதும், தன் புன்னகையால் அவற்றை வென்று காட்டிய உன்னதக் கலைஞர் அவர். 'மழையில் நனைந்துகொண்டுச் செல்வது எனக்கு மிகவும் பிடிக்கும். காரணம் அப்போதுதான் நான் அழுவது மற்றவர்களுக்குத் தெரியாது’ என்ற இந்த வரிகளே சாப்ளினின் வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருந்தது என்பதற்கு சான்று. கடந்த 1889-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ம்தேதி லண்டனில் ஏழைக் குடும்பம் ஒன்றில் பிறந்தார் சாப்ளின். எப்போதும் நினைத்து மகிழும்படி, அவரது குழந்தைப்பருவம் அவ்வளவு இனிமையானதாக இருக்கவில்லை. அவர் பிறந்த சில தினங்களிலேயே இசைக்கலைஞர்களான அவரது பெற்றோர் சார்லஸ் ஹன்னாவும், ஹாரியட் ஹில்லும் கருத்துவேறுபாடு காரணமாகப் பிரிந்தனர். வாடகை தர முடியாத காரணத்தால் அவரது தாய் ஹன்னா, சகோதரர் சிட்னி, சாப்ளின் மூவரும் குடியிருந்த வீடுகளிலிருந்து அடிக்கடி துரத்தப்பட்டனர். இதனால் அடிக்கடி தங்களது தட்டுமுட்டுச் சாமான்களைத் தூக்கிக்கொண்டு அவர்கள் வீடு மாற்றிக் கொண்டே இருந்தனர். பல நாட்கள் பூங்காக்களிலும், தெருக்களிலும் அவர்கள் படுத்து உறங்கியுள்ளனர். ‘உலக பணக்காரர்களின் வரிசையில் நானிருந்தாலும், என்னால் ஏழையாகத்தான் சிந்திக்க முடிகிறது. பணம் இடையில் வந்தது. ஆனால், ஏழ்மை என் ரத்தத்தில் ஊறியது’ - சாப்ளின். சாப்ளினும் தன் அம்மாவோடு சேர்ந்து சில நாடகங்களில் நடித்தார். அப்போது சிறு பையனாக சாப்ளினின் குறும்புத்தனமான நகைச்சுவை நடிப்பு பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பது போல், பின்னாளில் உலகத்தையே தன் நகைச்சுவை நடிப்பால் கட்டிப் போடப் போகிறவர் என்பது சிறுவயதிலேயே அவருக்கு இருந்த ரசிகர்கள் மூலம் உறுதியானது. குடிபோதைக்கு அடிமையான சாப்ளினின் தந்தை, குடும்பத்தைப் பிரிந்த சில ஆண்டுகளிலேயே உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். தொடர் குடும்பப் பிரச்சினைகளால் மன அழுத்தத்திற்கு ஆளானார் தாய் ஹாரியட். இதனால், பேசும் திறனை இழந்த ஹாரியட்டுக்கு மனநலப் பாதிப்பு ஏற்பட்டது. எனவே, அவர் சிகிச்சைக்காக மனநலக் காப்பகத்திற்கு அனுப்பப்பட்டார். ஹான்வெல் என்னும் ஆதரவற்ற சிறுவர்களுக்கான இல்லத்தில் சாப்ளின் சேர்க்கப்பட்டார். அங்கே சாப்ளின் சந்தித்ததெல்லாம் வாழ்வில் ஒருபோதும் எதிர்பார்த்திராத துயரங்களை மட்டுமே. தனிமையும், உடல் உபாதைகளும் அவரை மிகவும் வாட்டியது. ஆனால், அவை அத்தனையையும் சகித்துக் கொண்டு அங்கேயே இருந்தார் சாப்ளின். ‘நிலைக் கண்ணாடி போன்ற நல்ல நண்பன் எனக்கு வேறு யாரும் கிடையாது. ஏனென்றால் நான் அழும்போது அதற்குச் சிரிக்கத் தெரியாது’ - சாப்ளின். ஓரளவு வளர்ந்ததும் அமெரிக்காவுக்கு பயணமானார் சாப்ளின். அங்கு மெக்சன்னட்டின் நாடகக்குழுவில் அவர் சேர்ந்தார். 1914ம் ஆண்டு அவர் நடித்த நாடோடி கதாபாத்திரமான டிரெம்ப் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து 1940 வரை ஏறத்தாழ 25 வருடங்கள் அது போன்ற வேடத்திலேயே நடித்து உலகை சிரிப்புக் கடலில் ஆழ்த்தினார். ‘உன் வேதனை பலரைச் சிரிக்க வைக்கலாம். ஆனால், உன் சிரிப்பு யாரையும் வேதனைப்பட வைக்கக்கூடாது’- சாப்ளின். சிறிய மீசை, கிழிந்த கோட்டு, தலைக்குப் பொருந்தாத தொப்பி, வித்தியாசமான நடை, வலிகளை மறைக்கும், மறக்க வைக்கும் புன்னகை என தனக்கென ஒரு அடையாளத்தை அவர் உருவாக்கிக் கொண்டார். நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி கதாசிரியர், இயக்குநர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமையாளராக திகழ்ந்தார் சாப்ளின். சாப்ளினின், டிரேம்ப் (TRAMP), தி கிட் (The kid), கோல்ட் ரஷ் (Gold Rush), சர்க்கஸ் (Circus), சிட்டி லைட்ஸ் (City lights), மாடர்ன் டைம்ஸ் (Modern Times), தி கிரேட் டிக்டேட்டர் (The great Dictator) ஆகிய படங்கள் இன்றளவும் திரை உலக இதிகாசங்களாகப் புகழ் பெற்று விளங்குகின்றன. ‘லாங் ஷாட்டில் பார்க்கும் போது ஒவ்வொருவரின் வாழ்க்கையும் மகிழ்ச்சிகரமானதுதான். க்ளோசப் ஷாட்டில் பார்க்கும்போதுதான் அதில் சோகத்தை நம்மால் கவனிக்க முடியும்’ - சாப்ளின் 1927ம் ஆண்டு முதல்பேசும் படங்கள் வெளிவரத் தொடங்கியது. ஆனால், அதிலிருந்து நீண்டகாலம் ஒதுங்கியே இருந்தார் சாப்ளின். ‘டாக்கி (பேசும் சினிமா) வந்ததும் நடிப்புக்கலை செத்து விட்டது’ என்பதே சாப்ளினின் கருத்து. ஆனபோதும் காலத்தின் கட்டாயத்தால் 1940ம் ஆண்டு, சாப்ளின் தனது முதல் பேசும் படமான ’தி கிரேட் டிக்டேட்டர்’ ஐ ரிலீஸ் செய்தார். உலகையே தன் அடிமையாக்கும் நோக்கத்தோடு சர்வாதிகாரியாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த ஹிட்லரின் நடவடிக்கைகளை விமர்சித்து அப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. ‘உலகம் ஒரு சர்வாதிகாரியின் கையில் சிக்கினால் மக்களின் நிலை என்னவாகும்?’ என்பதே அப்படத்தின் கருவாக இருந்தது. உலகமே அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்த ஒரு மனிதனைப் பற்றி எவ்வித தயக்கமோ, பயமோ இல்லாமல் தைரியமாக விமர்சித்திருந்தார் சாப்ளின். 1972 ல் சாப்ளினுக்கு சிறப்பு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது. நமது இந்திய அரசாங்கம் அவரது தபால் தலையை வெளியிட்டு ஒரு கலைஞனுக்கு செய்ய வேண்டிய மரியாதையைச் செய்தது. சாப்ளினின் நகைச்சுவைக்கு கண்டங்கள் தாண்டியும் வரவேற்பும், அங்கீகாரமும் இருந்தது. 40 ஆண்டுகள் அமெரிக்காவில் பிரபல நடிகராக வாழ்ந்தபோதும், அவர் அந்நாட்டின் குடியுரிமையைப் பெறவே இல்லை. எனவே, தனது இறுதிக்காலத்தை அவர் இங்கிலாந்திலும், சுவிட்சர்லாந்திலும் தான் கழித்தார். ‘இந்த உலகில் எதுவுமே நிரந்தரமானதல்ல, நமக்கு வரும் துன்பங்கள் உள்பட’ - சாப்ளின். வயது வித்தியாசம் இல்லாமல் சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரையும் சிரிக்க வைத்த அந்த மாபெரும் நடிகர், தவிர்க்க இயலாத காரணத்தால் 1977ம் ஆண்டு டிசம்பர் மாதம் உலகமக்களை கண்ணீர் சிந்த வைத்தார். ஆம், அன்று தான் சாப்ளின் இந்த உலகை விட்டு மறைந்தார்.



திரைப்படக் கலைஞர் சார்லி சப்ளின்  அவரை நினைவு கூர்ந்து இக் கட்டுரை வெளியாகிறது.


0 comments:

Post a Comment