காதைச் சுத்தப்படுத்த வேண்டுமா? எப்படி?


காதைப் பொத்திக் கொண்டு வந்தாள் அந்தப் பெண்மணி.

காது வலியின் தாக்கத்தால் முகம் சோர்ந்திருந்தது.

தெளிவாகப் பார்ப்பதற்காக காதைத் திருப்பி கூர்வெளிச்சப் பக்கம் திருப்ப முயன்றபோது,

தொடாதையுங்கோ, காதைத் தொட்டால் உயிர் போகிற வலி” என்றாள்.

என்ன நடந்தது” என விசாரித்தேன்.

வழமையாக காது கடிக்கிறதுதான். இண்டைக்கு திடீரென இப்படியாயிற்று”

காது கடித்தால் என்ன செய்வீர்கள்?” வினவினேன்.

நெருப்புக்குச்சி, சட்டைப் பின், இயர்பட்ஸ் என்று எது கிடைத்தாலும் காதைக் குடையுறதுதான் வேலை” என்றான் கூட வந்த மகன்.

காது மென்மையானது. திடப்பொருட்களால் கிண்டியதால் உராய்வு ஏற்பட்டு கிருமி தொற்றிவிட்டது.

நுண்ணுயிர் கொல்லி மருந்துகளும் வலி நிவாரணி மருந்துகளும் கொடுக்கக் குணமாயிற்று.

இன்னுமொரு இளம் பையன் நீச்சலடித்த பிறகு காதுவலியோடு துடித்து வந்தான்.

நீந்திய பிறகு காது அடைப்பது போல இருந்ததாம். காதுக்குள் தண்ணி போய்விட்டதென எண்ணி இயர்பட்ஸ் வைத்துத் காதைத் துடைத்தான். வலி மோசமாகிவிட்டது.

காதுக்குள் குடுமி இருந்தால் குளிக்கும்போதோ நீந்தும் போதோ நீர் உட்சென்றால் காது அடைக்கும்.

அது தற்காலிகமானது. உட்காதுக்குள் நீர் போய்விட்டதோ என பயப்பட வேண்டியதில்லை.

காதுக்குடுமி நீரில் ஊறிப் பருத்ததால் காது அடைப்பது போன்ற உணர்வு ஏற்படும்.

அது உலர அடைப்பு எடுபட்டுவிடும்.

இந்தப் பையன் இயர்பட்ஸ் வைத்து நீர் எடுக்க முயன்றபோது குடுமி காதின் உட்பக்கமாக நகர்ந்து செவிப்பறையை அழுத்தியதால் கடுமையான வலி ஏற்பட்டது. நல்ல காலம் செவிப்பறை உடையவில்லை. உடைந்திருந்தால் கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.

தவாறான அணுகுமுறைகள்

இப்படி எத்தனையோ சம்பவங்களைக் கூறலாம். குளிக்க வார்க்கும் போது கைக்குழந்தைக்கு காதுக்குள் தண்ணி போனது என அதைச் சுத்தப்படுத்தப்போய் குழந்தையைச் செவிடாக்கியிருக்கிறார்கள் பல பாட்டிமார்கள்.

காதுக்குள் தண்ணீர், காதுக்கடி, அரிப்பு என எத்தனையோ காரணங்களுக்காக தேவையற்று காதைச் சுத்தப்படுத்த முனைவதால் ஏற்படும் பாதிப்புகள் இவை.

காதுக்கடி, அரிப்பு எனில் காதைக் கழுவுவதால் பிரயோசனமில்லை. அதற்கான மருத்துவத்தைச் செய்ய வேண்டும்.

காது குப்பைக் கூடையோ, சுத்தப்படுத்த வேண்டிய உறுப்போ அல்ல.

காதுக்குள் தண்ணீர் போனதை எண்ணிப் பயப்படத்தேவையில்லை. அது உலர்ந்துவிடும்.

காதுக்குடுமி பயனுள்ளது

காதுக்குள் உற்பத்தியாகும் குடுமி, காதைப் பாதுகாப்பதற்காகவே சுரக்கிறது.

அது காதின் சுவர்களை உலரவிடாமல் ஈரலிப்பாக வைத்திருக்க உதவுகிறது. போதிய காதுக்குடுமி சுரக்காமல் வரட்சியாக இருப்பவர்களுக்கே பெரும்பாலும் காது அரிப்பு காதுக்கடி போன்றவை ஏற்படுகின்றன.

பக்றீரியா, பங்கஸ் போன்ற கிருமிகள் காதின் சுவுர்களைத் தாக்காமல் பாதுகாக்கின்றன.

பூச்சி, வண்டுகள் போன்றவை காதிற்குள் புகாமல் தடுக்கின்றன

காதிற்குப் பாதுகாப்பை அளிப்பதால் அதை நீங்கள் அகற்ற வேண்டியதில்லை.


உலர்ந்த காதுக் குடுமி

சிலருக்கு காதுக் குடுமி உலர்ந்து காதை அடைப்பதும் உண்டு. இது அதிகமானால் காது கேட்பதில் குறைபாடு ஏற்படவும் கூடும்.

இதனை காது பட்ஸ், கெயர்பின், குடுமி நீக்கும் கிண்டிகள், போன்றவை கொண்டு அகற்ற முற்படுவது ஆபத்தானது. அது மேலும் உட்புறமாகத் தள்ளுப்பட்டு நிலைமையை மோசமாக்கும்

அடைத்த காதினுள் ஒலிவ் ஓயில் விட்டு அதனை இளகச் செய்யலாம்.  அல்லது அதற்கான பிரத்தியேக மருந்துகள் கிடைக்கின்றன. அவற்றை காதினுள் விட்டு குடுமியை மெதுமையாக்கலாம். ஒரு நாளில் மென்மையாகாவிட்டால் மேலும் ஓரிரு நாட்களுக்கு அவ்வாறு செய்யலாம்.

அதுவும் சரிவராவிட்டால் ,காது துப்பரவு செய்ய வைத்தியர் உதவி நாடலாம். அவர்களிடம் காது கழுவுவதற்குரிய சாதனங்கள் உண்டு.

- சிந்தனைக் களம்

0 comments:

Post a Comment