சித்தர் சிந்திய முத்துக்கள் மூன்று / 17

சிவவாக்கியம்-155

மூலமாம் குளத்திலே முளைத்தெழுந்த கோரையை
காலமே எழுந்திருந்து நாலு கட்டு அறுப்பிரேல்
பாலனாகி வாழலாம் பரப்பிரம்மம் ஆகலாம்
ஆழம் உண்ட க ண்டர் பாதம் அம்மை பாதம் உண்மையே.

அதிகாலை எழுந்து நமது மூலாதார சக்கரத்தில் இருக்கும் குண்டலினி சக்தியை பிராணாயாம பயிற்சி செய்து கோரையைப் போல முளைக்கும் கோழையாகிய எமனைக் கட்டறுத்து வெளியேற்ற வேண்டும். பின் வாசியோகம் செய்து பிராணசக்தியை மேலேற்றி ரேசக பூரக கும்பகம் என்று மூச்சை கட்டுப்படுத்தி, மனதை இறைவனுடன் இருத்தி, நான்கு நாழிகை நேரம் முயற்சியுடன் தியானப் பயிற்சியைத் தொடர்ச்சியாக தினமும் செய்து வரவேண்டும். இதனை விடாமல் தொடர்ந்து செய்து வரும் யோகிகள் பாலனாகி வாழ்ந்து பரப்பிரம்மம் ஆவார்கள். ஆலம் உண்ட நீலகண்டர் பாதமும் அம்மை பாதமும் நம்முள் அமர்ந்திருப்பதை உண்மையாய் உணர்ந்து தியானியுங்கள்.

*******************************************

சிவவாக்கியம்-156  

செம்பினில் களிம்பு வந்த சீதரங்கள் போலவே
அம்பினில் எழுதொணாத அணியரங்க சோதியை
வெம்பி வெம்பி வெம்பியே மெலிந்து மேல் கலந்திட
செம்பினில் களிம்பு விட்ட சேதி ஏது காணுமே!

செம்பினில் களிம்பு வந்து சேர்ந்தது போல் நீ செய்த பாவங்கள் உயிரில் சேர்ந்து அது அழிவதற்கு காரணமாகின்றது. ஆகவே இச்சீவனை பாவங்கள் சேரா வண்ணம் சிவனோடு சேர்த்து தியானியுங்கள். அச்சிவன் நம் உடம்பில் எழுதா எழுத்தாகவும், அணி அரங்கமான அழகிய சிற்றம்பலத்தில் சோதியாக உள்ளான். அதனை அறிந்து அவனையே நினைந்து வெம்பி வெம்பி அழுது உன் உயிரும் ஊணும்  உருக உணர்ந்து தியானம் செய்து வாருங்கள். செம்பினில் களிம்பு போனால் தங்கமாவது போல் நீயும் பாவங்கள் நீங்கி இறைவனோடு சேர்ந்து இன்புறலாம்.
*******************************************
சிவவாக்கியம்-157 

நாடி நாடி நம்முளே நயந்து காண வல்லிரேல்
ஓடி ஓடி மீளுவார்  உம்முளே அடங்கிடும்
தேடி வந்த காலனும் திகைத்திருந்து போய்விடும்
கோடி காலமும் உகந்து இருந்தவாறு எங்ஙனே!

இறைவனை அடைவதற்கான வழி, அவனையே நாடி அவன் புகழைப் பாடி அவனை நயந்து தேடி நமக்குள்ளேயே கண்டு கொண்டு, யோகமும் தியானமும் பழகவேண்டும். அதனால் நம்மில் இருந்து வெளியேறி ஓடும் மூச்சு நமக்குள்ளேயே ஒடுங்கி பிராணசக்தி கூடி உயிரிலேயே   அடங்கிடும். இப்படியே தினமும் செய்ய வல்லவர்களுக்கு ஆயுள் கூடி தேடி வரும். எமனே திகைத்து திரும்பிடுவான், அவர்கள் கல்பகோடி காலமும் ஈசனோடு உகந்து இருப்பார்கள். ஆகவே யோக ஞான சாதனங்களைக் கைக்கொண்டு பிறவாநிலை பெறுங்கள்.

********************* அன்புடன் கே எம் தர்மா.






0 comments:

Post a Comment