இரைப்பை புண் வருவதற்கான காரணங்கள் என்ன...?

தொண்டையில் தொடங்கி இரைப்பை வரை உணவு செல்ல உதவும் உணவுக்குழாய், இரைப்பை, முன்சிறுகுடல் ஆகியவற்றில் ஏற்படும் புண்களைப் பொதுவாக ‘பெப்டிக் அல்சர்’ என்கிறோம்.


👉இரைப்பையில் உணவு செரிப்பதற்காகச் சுரக்கப்படுகின்ற ஹைட்ரோகுளோரிக் அமிலமும் பெப்சின் எனும் என்சைமும் சில காரணங்களால் அளவுக்கு அதிகமாகச் சுரக்கும்போது, இரைப்பை, முன்சிறுகுடலின் சுவற்றில் உள்ள மியூகஸ் படலம் அழற்சியுற்று வீங்கிச் சிதைவடையும். இதை 'இரைப்பை அழற்சி' என்கிறோம். இதைக் காலத்தோடு கவனிக்கத் தவறினால், நாளடைவில் இது இரைப்பைப் புண்ணாக மாறிவிடும்.

 

👉காரம் நிறைந்த, புளிப்பு மிகுந்த, மசாலா கலந்த உணவு, எண்ணெயில் பொரித்த உணவு வகைகளை அதிகமாகச் சாப்பிடுவது; மது அருந்துதல், புகைபிடித்தல், மென் குளிர்பானம், காபி, தேநீர் பானங்களை அதிகமாகக் குடிப்பது; ஸ்டீராய்டு மாத்திரைகள், ஆஸ்பிரின், புரூஃபென் போன்ற வலிநிவாரணி மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் அடிக்கடி சாப்பிடுவது, உணவை நேரம் தவறிச் சாப்பிடுவது, அதிகச் சூடாகச் சாப்பிடுவது, பட்டினி கிடப்பது போன்ற தவறான உணவுப் பழக்கங்கள் இரைப்பைப் புண்ணுக்கு வரவேற்பாக அமைகின்றன.

 

👉சுகாதாரமற்ற குடிநீர், கலப்பட உணவு, மாசடைந்த சுற்றுச்சூழல் போன்ற காரணங்களால் 'ஹெலிக்கோபாக்டர் பைலோரி' எனும் கிருமி உணவுப் பாதைக்குள் நுழைந்து இரைப்பைப் புண்ணை உண்டாக்குகிறது. மனக்கவலை, பணியில் பரபரப்பு, கோபம், தூக்கமின்மை போன்ற காரணிகளும் இரைப்பைப் புண் வருவதைத் தூண்டுகின்றன.

 

👉நமக்குப் பசி உணர்வு தோன்றியதுமே, ஹைட்ரோகுளோரிக் அமிலமும் பெப்சின் என்சைமும் சுரக்கத் தொடங்கிவிடும். அப்போது நாம் உணவைச் சாப்பிடாவிட்டால், இந்த அமிலம் இரைப்பையின் மியூகஸ் படலத்தைத் தின்னத் தொடங்கும். இது நாளடைவில் இரைப்பைப் புண்ணுக்கு வழிவகுக்கும்.


 மேற்கண்டவற்றில் கவனம் செலுத்துவதில் உள்ள சிரமத்தினை விட , குடற்புண் வலி பன்மடங்கு அதிகமானது என்று சிந்தித்தால் அனைவரும் இப்பாதிப்பிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

படித்ததில் பிடித்தது

0 comments:

Post a Comment