குறுங் கவிதைகள்


"சிந்தனை செய்து ... "

 


"சிந்தனை செய்து செயல் ஆற்றி

மாந்தனை மறவாமல் ஒன்று கூட்டி

நிந்தனை அகற்றி மதித்து நடந்து

நொந்தனை ஆயின் மனதை தேற்றி

வந்தனை செய்து மகிழ்ந்து வாழ் !"

 

(நொந்தனை ஆயின் – வருந்தினையாயின், மாந்தன் – மனிதன்)

↣↣↣↣↣↣↣↣↣↣

"கண்பேசும் வார்த்தைகள்!!"

 


அன்று:

"அச்சம் நாணம் தாண்டிய காதல்பேச்சு

அரவணைப்பையும் மிஞ்சிய காம உணர்வு

அனைத்தையும் பார்வையில் தந்த காவியம் 

அகிலம் போற்றும் 'கண்பேசும் வார்த்தைகள்'

'அண்ணலும் நோக்கினான்! அவளும் நோக்கினாள்!' "

 

இன்று:

"கடற்கரை ஓரம் காற்று வாங்கி

கடலை கொறித்து அலையை ரசித்து

கணிகை ஒருவளின் வருகை பார்த்து  

கயல்விழியில் மயங்கி துணை கேட்க 

'கண்பேசும் வார்த்தைகள்' விலை பேசும் !!

 

↣↣↣↣↣↣↣↣↣↣

"புத்தகம் [பொத்தகம்]"

 


"புத்தகம் உன்னை அழைத்து செல்லும்

புதுமைகள் சொல்லி அறிவு ஊட்டும்

புத்துணர்வு தரும் கவிதைகள் பாடும்

புதிய பழைய அறிவியலை கொடுக்கும்

புராணம் முதல் புதினம் வரை

புரட்டி புரட்டி படிக்க வைக்கும்!"

 

↣↣↣↣↣↣↣↣↣↣

"மங்கலம்"


"மங்கல மகளிர் வாழ்த்துக்கள் கூற

மங்கல இசை எங்கும்  ஒலிக்க

மகர தோரணம் காற்றில் ஆட  

மணமக்கள் வந்தனர் மகிழ்ச்சி கொண்டு

மங்கலம் பொங்கட்டும் வாழ்வு மலரட்டும்!"

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]


0 comments:

Post a Comment