குறள் 1150 தந்த புதுக்கவிதை

"வம்பு பேசும் என் ஊரே

வசனம் அறிந்து அளவாய் பேசு

வண்டுகள் மொய்க்கும் மலர் நானல்ல

வசவி ஆக என்னை நினைக்காதே!"

 

"வட்டம் போட்டு குந்தி இருந்து

வஞ்சம் இன்றி கதை பரப்பி

வதுகை ஆக என்னை மாற்ற

வரிந்து கட்டிய அலருக்கு நன்றி!"

 

"வயல் வெளியில் என்னை சந்திக்க

வனப்பு மிக்க என் காதலன்

வருவான் என்னை துணை ஆக்க

வருந்த வேண்டாம் வாழ்த்துங்கள் அப்பொழுது!"

 

"வளமான வாழ்வு எமக்கு அமைய

வரைவு கொள்ளலே நலம் என்று

வங்கணத்தி எமக்கு ஆதரவு தர

வழி காட்டிய பழிச்சொல் வாழ்க!"

 

"வரைவின் மகளிர் நான் அல்ல

வருணன் அருள் எமக்கு உண்டு

வந்தனம் கூறி தம்பதியாய் போவோம்

வயிறு ஆற சாப்பிட்டு போங்கள்!"

 

[வசவி - தேவதாசி, வதுகை - மனைவி, வரைவின் மகளிர் - பொது மகளிர், வரைவு - திருமணம், வங்கணத்தி - உற்ற தோழி]

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

0 comments:

Post a Comment