பிரியாணி சாப்பிட்டால் ஆண்மைக்குறைவு ஏற்படுமா?நிபுணர்கள் தரும் விளக்கம்

பிரியாணி என்றதும் பலருக்கும் நாவில் எச்சில் ஊறும். ஹைதராபாத் பிரியாணி, திண்டுக்கல் பிரியாணி, ஆம்பூர் பிரியாணி, மலபார் பிரியாணி, தலப்பா கட்டி பிரியாணி, மந்தி பிரியாணி, தொன்னை பிரியாணி என்று வகைகள் நீள்கின்றன. மண்பானை பிரியாணி, மூங்கில் பிரியாணி, இளநீர் கூடு பிரியாணி என்று அவ்வப்போது புதிய வகைகள் அறிமுகமாகியும் வருகின்றன.

 

பாரசீகத்தில் உருவான பிரியாணி இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, கனடா, ஆப்கானிஸ்தான், இரான், தாய்லாந்து, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் பிரியாணி கிடைக்கிறது.

 

இந்தியாவிலுள்ள ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்களான ஸ்விக்கி, சொமோட்டா உள்ளிட்ட நிறுவனங்களில் அதிக ஆர்டர் செய்த உணவுப் பட்டியலில் பிரியாணிக்குத்தான் முதலிடம் கிடைத்துள்ளதை தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. நகரங்கள் மட்டுமின்றி கிராமங்களிலும் பிரியாணிக்கு தனி வரவேற்பு உள்ளது.

 

விழாக்கள், கொண்டாட்டங்களில் பிரியாணியை முன்பதிவு செய்து விடும் நிலையும் உள்ளது. பிரியாணி கடையை மட்டும் திறந்து பணக்காரர்கள் ஆனவர்கள் பலர்.

 

பெரும்பாலும் ஆடு, கோழிக்கறி பிரியாணிதான் பலருக்கு விருப்பமாக இருந்தாலும் மீன், வெஜ், காளான், பன்னீர் பிரியாணிகளும் உள்ளன. சரி அதற்கென்ன இப்போது? என்று நீங்கள் கேட்கலாம்.

 

பிரியாணி சாப்பிட்டால் பாதிப்பா?

பிரியாணி அதிகம் சாப்பிட்டால், ஆண்மைக் குறைவு ஏற்படுமா? இல்லை அது தவறான அவதூறா? என்று சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக பெரிய விவாதவே நடந்து வருகிறது. இதுகுறித்து மருத்துவ நிபுணர்கள் கூறுவதை தற்போது விரிவாக பார்ப்போம்.

 

சமூக வலைதளங்களில் பேசப்படும் பிரியாணி குறித்த கருத்து பற்றி ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன் பிபிசி தமிழிடம் கூறுகையில், "பிரியாணியை வீட்டில் செய்யும் போது ஒரு கிலோ இறைச்சிக்கு ஒரு கிலோ அரிசி என்கிற சரியான விகிதத்தில் கலந்து செய்கிறார்கள். இதனால், ஒரு பிளேட் மட்டன் பிரியாணியில் 943 கலோரியும் சிக்கன் பிரியாணியில் 850 கலோரியும் கிடைக்கிறது. இறைச்சியில் உள்ள கொழுப்பைத் தவிர எண்ணெய் மற்றும் மசாலா பொருட்களால் மொத்தமாக இந்த அளவு கலோரி கிடைக்கிறது.

 

ஆனால், வெளியில், உணவகங்கள், கடைகள் உள்ளிட்டவற்றில் சாப்பிடும் போது இறைச்சி குறைவாகத்தான் இருக்கும். ஆனால், அரிசி, மசாலாப் பொருட்கள், சுவையூட்டிகள் அதிகம் பயன்படுத்துவார்கள்.

 

சுவைக்காக வெளியில் சாப்பிடுவதை வீட்டோடு ஒப்பிடும் போது அதிக கலோரி கிடைத்தாலும் புரதச் சத்து குறைவாக கிடைக்கிறது. சிக்கனை விட மட்டனில் கொழுப்பு அதிகம், புரதம் குறைவாக கிடைக்கும். இறைச்சி அதிகமாக சேர்க்கப்பட்டால், புரதச் சத்து குறைந்து விடும். ஆனால், பிரியாணியில் மாவுச்சத்தும், கொழுப்புச் சத்துமே அதிகம் உள்ளது.

 

நமக்கு ஒரு நாளைக்கு 1500 - 1800 கலோரி தேவைப்படும். ஆனால், பிரியாணி சாப்பிடும் போது எப்படி பார்த்தாலும் 900 கலோரி கிடைக்கும். பிரியாணி செரிமானத்திற்காக அருந்தும் பானங்கள் உள்ளிட்டவற்றால் கூடுதல் கலோரிகள் கிடைக்கும். இவைதான் பிரச்னையாகின்றன.

 

சாப்பிடும் அளவிற்கு ஏற்ப பெரும்பாலானோர் உடற்பயிற்சி செய்வதில்லை. நீச்சல், தொடர் ஓட்டம் செல்வோர் உள்ளிட்டோர் அதிகபட்சம் 300 கலோரியை எரிக்க முடியும். ஆனால், உடற்பயிற்சி இல்லாததால், உடல் பருமன் அதிகமாகி, இருதய நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்டவை இளவயதிலேயே ஏற்படுகிறது.

 

"இயல்பாகவே உயிரணு குறைந்து வருகிறது"

தற்போதைய உணவுப் பழக்கம், சரிவிகித உணவின்மை, காய்கறி, பழங்களை தவிர்ப்பது, உடற்பயிற்சியின்மை உள்ளிட்ட காரணங்களினால் உடல் பருமன் அதிகரித்து, உயிரணுக்கள் குறைவு உள்ளிட்ட பிரச்னைகள் இயல்பாகவே ஏற்படுகின்றன.

 

முன்னர் எப்போதாவது ஒரு நாள், திருமணம் உள்ளிட்ட விழாக்கால உணவாக இருந்த பிரியாணி, இப்போது எங்கும் கிடைக்கிறது. இதனால், சிலர் வாரத்திற்கு 2, 3 நாட்கள், சிலர் வாரம் முழுவதும் சாப்பிடும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

 

இதனால், தேவைக்கு மேல் அதிகரிக்கும் கலோரி எரிக்கப்படாதால், உடல் பருமன் ஏற்படும். இதைத் தொடர்ந்து உயிரணுக்கள் குறைவு ஏற்படலாம். பிரியாணியால் மட்டும் உயிரணு குறைவு ஏற்படும் என்பதில்லை.

 

அதேநேரத்தில், எப்போதாவது ஒரு நாள் பிரியாணி சாப்பிடுவதால் எந்த பாதிப்பும் இருக்காது. வாரத்திற்கு 2 முறைக்கு மேல் சாப்பிட்டால் வாய்ப்புள்ளது" என்கிறார்.

 

"அறிவியல்பூர்வ ஆதாரங்கள் இல்லை"

இதுகுறித்து இந்திய பாலியல் மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் டி.காமராஜ் பிபிசி தமிழிடம் கூறுகையில்,

 

பிரியாணி சாப்பிடுவதால் ஆண்மைக்குறைவு, உயிரணுக்கள் குறைவு ஏற்படும் என்பதற்கான அறிவியல், ஆராய்ச்சி அடிப்படையிலான தரவுகள் எதுவும் இல்லை. இதில் எந்தவிதமான உண்மையும் இல்லை. மற்ற உணவுப் பொருட்களில் உள்ளவைதான் பிரியாணியிலும் உள்ளது. இதனால் உயிரணு குறைவதற்கான வாய்ப்பும் இல்லை.

 

அதேநேரத்தில், உடல்பருமனால் உயிரணுக்கள் குறைவு ஏற்படுகிறது. இது பல்வேறு ஆய்வுகளில் நிருபிக்கப்பட்டுள்ளன. ஆகையால், பிரியாணி சாப்பிடுவதால்  ஏற்படும் உடல்பருமனால் உயிரணுக்கள் குறைவு  ஏற்படும் என்றுதான் கூற வேண்டும். சைவ உணவு மட்டும் சாப்பிடுவோருக்கும் உடல்பருமன் ஏற்படுகிறது" என்கிறார் அவர்.

 

"உடல் பருமனுக்கு வாய்ப்பு"

"உடல்பருமன் பெண்களுக்கு கருத்தரிப்பு வாய்ப்பை 3 மடங்கு குறைக்கும். ஆண்களுக்கு விந்தணுக்களை பாதிக்கும். ஆனால் உடல் பருமனுக்கு பல காரணங்கள் உள்ளன. பிரியாணி அதிகம் சாப்பிட்டால் உடல் பருமன் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. " என்று கூறுகிறார் மருத்துவர் டி.காமராஜ்.

 

அதேபோல், இட்லியே சிறந்த உணவு என்று உலக சுகாதார நிறுவனம் கூறுவதாக பரப்பப்படும் தகவலும் உண்மையில்லை. அவர்கள் எதையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. பொதுவாக மெடிட்டேரியன் டயட், காய்கறிகள், பழங்கள் சாப்பிட வேண்டும் என்றே பரிந்துரைக்கப்படுகிறது" என்று அவர் மேலும் கூறினார்.

ஜோ மகேஸ்வரன்/-பிபிசி தமிழ்

 

 

0 comments:

Post a Comment