முகவுரை -11-உரைகளும் மொழிபெயர்ப்புகளும்
11A:உரைகள்
தமிழ் இலக்கிய
வரலாற்றில் அதிகமாக அலசப்பட்ட நூலான திருக்குறள், கிட்டத்தட்டத் தமிழின் அனைத்து தலைசிறந்த அறிஞர்களாலும் கையாளப்பட்டு
இவர்களுள் பலரால் ஏதோ ஒரு வகையில் உரையெழுதப்பட்ட நூல் என்ற பெருமையும் உடையது. குறட்பாக்களைக் தங்கள் பாக்களில் எடுத்தாண்ட சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம், பெரியபுராணம் உள்ளிட்ட பண்டைய தமிழிலக்கியங்கள் யாவும் குறளுக்குச் செய்யுள்
வடிவில் எழுந்த முதல் உரைகள் என்று அறிஞர்களால் கருதப்படுகின்றன.
உரைநடையில்
குறளுக்கான பிரத்தியேக உரைகள் எழத் தொடங்கியது சுமார் 10-ம் நூற்றாண்டு வாக்கில்தான். 10-ம் நூற்றாண்டு தொடங்கி 13-ம் நூற்றாண்டு வரை இருந்த காலகட்டத்தில் குறைந்தபட்சம் பத்து அறிஞர்கள்
குறளுக்கு முதன்முறையாக உரைநடை பாணியில் உரை வரைந்தனர். பதின்மர் என்றழைக்கப்படும்
இவர்கள் மணக்குடவர், தருமர், தாமத்தர், நச்சர், பரிதியார், திருமலையர், மல்லர், பரிப்பெருமாள், காலிங்கர், மற்றும் பரிமேலழகர் முதலானோர் ஆவர்.
இவர்களில் மணக்குடவர், பரிதியார், காலிங்கர், பரிபெருமாள், பரிமேலழகர் ஆகியோரது உரைகள் மட்டுமே முழுமையாகக் கிடைத்துள்ளன. தருமர், தாமத்தர், நச்சர் ஆகியோரது உரைகளின் ஒரு சில
பகுதிகள் மட்டுமே கிடைத்துள்ளன. திருமலையரது உரையும் மல்லரது உரையும் இதுவரை
கிடைக்கப்பெறவில்லை. பதின்மரது உரைகளின் வாயிலாகவே திருக்குறள் இன்று நமக்கு
முழுமையாகக் கிடைத்திருக்கிறது. பதின்மர் உரைகளில் சிறப்பாகக் கருதப்படுவது
பரிமேலழகர், மணக்குடவர், மற்றும் காலிங்கர் ஆகியோரது உரைகள்தான். பதின்மருரைகளில் 900 குறட்பாக்களில் அறிஞர்கள்
பாடபேதங்களைக் கண்டறிந்துள்ளனர். இவற்றுள் 217
இடங்கள் அறத்துப்பாலிலும், 487 இடங்கள் பொருட்பாலிலும், 196 இடங்கள் காமத்துப்பாலிலும் இடம்பெற்றிருக்கின்றன.
குறளுரைகளில்
வரலாற்றில் தனிச்சிறப்பு வாய்ந்ததும் அறிஞர்களால் போற்றப்படுவதும் பரிமேலழகர்
விருத்தியுரை ஆகும். இது பொ.ஊ. 1272-ம் ஆண்டு வாக்கில் காஞ்சிபுரத்தில்
வாழ்ந்த வைணவ குலத்தைச் சேர்ந்த அறிஞரும் உரையாசிரியர்கள் பதின்மரில் கடையாக
வாழ்ந்தவருமான பரிமேலழகரால் இயற்றப்பட்டது. குறளின் மூலத்திற்கு இணையாகப் பரவலாகப் பதிப்பிக்கப்பட்டு பயிலப்படும் இவ்வுரை
தமிழிலக்கிய வரலாற்றில் தனிச்சிறப்பு வாய்ந்த நூல்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இவ்வுரை பல நூற்றாண்டுகளாக அறிஞர் முதல் பாமரர் வரை அனைத்து நிலைகளிலும்
ஆக்கம் பெற்று வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அறிஞர்களுக்கான இதன் ஆராய்ச்சித்
தொகுப்பு ஒன்று 1965-ம் ஆண்டு வை. மு.
கோபாலகிருஷ்ணமாச்சாரியார் என்பவரால் பதிப்பிக்கப்பட்டது. பரிமேலழகர் தனது வைணவ இந்து சமய நெறிகளின் பார்வையின் அடிப்படையில் உரையினைக்
கொண்டு சென்றுள்ளார் என்று நார்மன் கட்லர் கூறுகிறார். தாம் வாழ்ந்த 13-ம் மற்றும் 14-ம் நூற்றாண்டின் தமிழகத்து இலக்கிய, சமய, கலாச்சாரக் கட்டமைப்புகளைத் தழுவியவாறு
குறள் கூறும் அறங்களை வழுவாது தனது உரையில் பரிமேலழகர் வெளிப்படுத்தியுள்ளார்
என்றும் பல்வேறு கோணங்களில் ஆராயவும் விளங்கிக்கொள்ளவும் ஏதுவான ஓர் உரையாக அவரது
உரை உள்ளது என்றும் கட்லர் கருதுகிறார்.
பதின்மர்களின்
உரைகளைத் தவிர மேலும் மூன்று உரைகளேனும் இடைக்காலத்தில் இயற்றப்பட்டுள்ளன. ஆயின் இவற்றின் ஆசிரியர்கள் யார் என்ற விவரம் தெரியவில்லை. இவற்றில் ஒன்று "பழைய உரை" என்ற பெயரிலும் மற்றொன்று பரிதியாரின்
உரையைத் தழுவியும் இயற்றப்பட்டுள்ளன. மூன்றாவது "ஜைன உரை" என்ற பெயரில்
தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தால் 1991-ம் ஆண்டு பதிப்பிக்கப்பெற்றது. இவ்வுரைகளைத் தொடர்ந்து வந்த நூற்றாண்டுகளின் காலகட்டத்தில் சோமேசர் முதுமொழி
வெண்பா, முருகேசர் முதுநெறி வெண்பா, சிவசிவ வெண்பா, இரங்கேச வெண்பா, வடமாலை வெண்பா, தினகர வெண்பா, ஜினேந்திர வெண்பா உள்ளிட்ட சுமார் 21 வெண்பா உரைகள் இயற்றப்பட்டன. இவையாவும்
குறளுக்கான செய்யுள் வடிவ உரைகளாகும். திருமேனி இரத்தினக் கவிராயர் (16-ஆம் நூற்றாண்டு), இராமானுஜ கவிராயர் (19-ஆம் நூற்றாண்டு), ஆகியோரது உரைகள் இருபதாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட சிறந்த உரைகளில் அடக்கம்.
பத்தொன்பதாம்
நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டிலும் பல புதிய உரைகள் குறளுக்கு இயற்றப்பட்டன.
இவற்றுள் கவிராச பண்டிதர், உ. வே. சுவாமிநாத ஐயர் ஆகியோரது உரைகள்
அறிஞர்களால் நவீனகால சிறப்புறு உரைகளாகக் கருதப்படுகின்றன. இருபதாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட நூற்றுக்கணக்கான உரைகளில் கோ. வடிவேலு
செட்டியார், கிருஷ்ணாம்பேட்டை கி. குப்புசாமி
முதலியார், அயோத்தி தாசர், வ. உ. சிதம்பரம் பிள்ளை, திரு. வி. கா., பாரதிதாசன், மு. வரதராசன், நாமக்கல் கவிஞர், திருக்குறளார் வே. முனுசாமி, தேவநேயப் பாவாணர், மு. கருணாநிதி, சாலமன் பாப்பையா ஆகியோரது உரைகள் குறிப்பிடத்தக்கவையாகும். மு. வரதராசனின் 1949-ம் ஆண்டு முதன்முதலில் அச்சிடப்பட்ட "திருக்குறள் தெளிவுரை" என்ற
உரை ஒரே பதிப்பகத்தாரால் 200-க்கும் அதிகமான பதிப்புகளில் வெளிவந்து
மிக அதிகமாக அச்சிடப்பெற்ற நவீன உரையாகத் திகழ்கிறது.
பத்தாம்
நூற்றாண்டில் மணக்குடவர் உரையில் தொடங்கி 2013-ம்
ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 382 அறிஞர்களால் இயற்றப்பட்ட சுமார் 497 குறளுரைகள் தமிழில் வெளிவந்துள்ளன என்றும் இவற்றில் 277 அறிஞர்களேனும் குறளுக்கு முழுமையாக உரையெழுதியுள்ளனர் என்றும் கு. மோகனராசு
கணக்கிடுகிறார்.
[திருக்குறள்
- முகவுரை-11B அடுத்தவாரம்
தொடரும்]
திருக்குறள் தொடர்கிறது….
11-செய்ந்நன்றியறிதல்
👉குறள் 101:
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.
மு.வ உரை:
தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த
உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக
முடியாது.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவருக்கு ஒரு நன்மையும் நாம் செய்யாத போதும், அவர் நமக்கு உதவினால், அதற்குக் கைம்மாறாக
மண்ணுலகையும் விண்ணுலகயும் கொடுத்தாலும் சமம் ஆகாது.
கலைஞர் உரை:
``வாராது வந்த
மாமணி'' என்பதுபோல், ``செய்யாமற் செய்த உதவி'' என்று புகழத்தக்க அரிய
உதவி வழங்கப்பட்டால், அதற்கு இந்த வானமும் பூமியும் கூட ஈடாக மாட்டா.
👉குறள் 102:
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
மு.வ உரை:
உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால்
உலகைவிட மிகப் பெரிதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
நமக்கு நெருக்கடியான நேரத்தில் ஒருவர் செய்த உதவி, அளவில் சிறியது என்றாலும், உதவிய நேரத்தை எண்ண அது
இந்தப் பூமியை விட மிகப் பெரியதாகும்
கலைஞர் உரை:
தேவைப்படும் காலத்தில் செய்யப்படும் உதவி சிறிதளவாக
இருந்தாலும், அது உலகத்தைவிடப்
பெரிதாக மதிக்கப்படும்.
👉குறள் 103:
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.
மு.வ உரை:
இன்ன பயன் கிடைக்கும் என்றுஆராயாமல் ஒருவன் செய்த உதவியின்
அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிட பெரியதாகும் .
சாலமன் பாப்பையா உரை:
இவருக்கு உதவினால் பிறகு நமக்கு இது கிடைக்கும் என்று
எண்ணாதவராய் ஒருவர் செய்த உதவியின் அன்பை ஆய்ந்து பார்த்தால், அவ்வுதவியின் நன்மை
கடலைவிடப் பெரியது ஆகும்.
கலைஞர் உரை:
என்ன பயன் கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்காமலே, அன்பின் காரணமாக ஒருவர்
செய்த உதவியின் சிறப்பு கடலை விடப் பெரிது.
👉குறள் 104:
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.
மு.வ உரை:
ஒருவன் தினையளவாகிய உதவியைச் செய்த போதிலும் அதன் பயனை
ஆராய்கின்றவர், அதனையே
பனையளவாகக் கொண்டு போற்றுவர்.
சாலமன் பாப்பையா உரை:
தினை அளவாக மிகச் சிறிய உதவியே செய்யப்பெற்றிருந்தாலும்
உதவியின் பயனை நன்கு அறிந்தவர் அதைப் பனை அளவு மிகப் பெரிய உதவியாய்க் கருதுவர்.
கலைஞர் உரை:
ஒருவர் செய்யும் தினையளவு நன்மையைக்கூட அதனால் பயன்பெறும்
நன்றியுள்ளவர் பல்வேறு வகையில் பயன்படக்கூடிய பனையின் அளவாகக் கருதுவார்.
👉குறள் 105:
உதவி வரைத்தன் றுதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.
மு.வ உரை:
கைமாறாகச் செய்யும் உதவி முன் செய்த உதவியின் அளவை உடையது
அன்று, உதவி
செய்யப்பட்டவற்றின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவர் நமக்குச் செய்த உதவிக்குத் திரும்ப நாம் செய்வது, அவர் செய்த உதவியின்
காரணம், பொருள், காலம் பார்த்து அன்று; உதவியைப் பெற்ற நம்
பண்பாட்டுத் தகுதியே அதற்கு அளவாகும்.
கலைஞர் உரை:
உதவி என்பது, செய்யப்படும் அளவைப் பொருத்துச்
சிறப்படைவதில்லை; அந்த உதவியைப் பெறுபவரின்
பண்பைப் பொருத்தே அதன் அளவு மதிப்பிடப்படும்.
👉குறள் 106:
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.
மு.வ உரை:
குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்கலாகாது: துன்பம் வந்த
காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடாலாகாது .
சாலமன் பாப்பையா உரை:
உன் துன்பத்துள் துணையாக நின்றவரின் நட்பை விடாதே; அறிவு ஒழுக்கங்களில்
குற்றம் இல்லாதவரின் நட்பை மறந்து விடாதே.
கலைஞர் உரை:
மாசற்றவர்களின் உறவை மறக்கவும் கூடாது; துன்பத்தில் துணை
நின்றவர் நட்பைத் துறக்கவும் கூடாது.
👉குறள் 107:
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு.
மு.வ உரை:
தம்முடைய துன்பத்தைப் போக்கி உதவியவரின் நட்பைப் பல்வேறு
வகையான பிறவியிலும் மறவாமல் போற்றுவர் பெரியோர்.
சாலமன் பாப்பையா உரை:
தம் துன்பத்தைப் போக்கியவரின் நட்பை ஏழேழு பிறப்பிலும்
நல்லவர் எண்ணுவர்.
கலைஞர் உரை:
ஏழேழு தலைமுறைக்கு என்றும் ஏழேழு பிறவிக்கு என்றும்
மிகைப்படுத்திச் சொல்வதுபோல, ஒருவருடைய துன்பத்தைப் போக்கியவரின் தூய்மையான
நட்பை நினைத்துப் போற்றுவதற்குக் கால எல்லையே கிடையாது.
👉குறள் 108:
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.
மு.வ உரை:
ஒருவரர்முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச்
செய்த அப்பொழுதே மறந்து விடுவது அறம்.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் நமக்குச் செய்த உதவியை மறப்பது அறம் அன்று; அவன் செய்த தீமையை
அப்போதே மறப்பது அறம்.
கலைஞர் உரை:
ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல; அவர் தீமை செய்திருந்தால்
அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது.
👉குறள் 109:
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன் றுள்ளக் கெடும்.
மு.வ உரை:
முன் உதவி செய்தவர் பின்பு கொன்றார் போன்ற துன்பத்தைச்
செய்தாரானாலும், அவர் முன் செய்த
ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத் துன்பம் கெடும்.
சாலமன் பாப்பையா உரை:
முன்பு நன்மை செய்தவரே பின்பு நம்மைக் கொலை செய்வது போன்ற
தீமையைச் செய்தாலும் அவர் முன்பு செய்த ஒப்பற்ற நன்மையை நினைத்த அளவில் அத்தீமை
மறையும்.
கலைஞர் உரை:
ஒருவர் செய்யும் மிகக் கொடுமையான தீமைகூட நமது உள்ளத்தைப்
புண்படுத்தாமல் அகன்றுவிட வேண்டுமானால், அந்த ஒருவர் முன்னர் நமக்குச் செய்த நன்மையை
மட்டும் நினைத்துப் பார்த்தாலே போதுமானது.
👉குறள் 110:
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
மு.வ உரை:
எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை
மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
எத்தனை பெரிய அறங்களை அழித்தவர்க்கும் பாவத்தைக் கழுவ
வழிகள் உண்டு. ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்து தீமை செய்பவனுக்கு வழியே இல்லை
கலைஞர் உரை:
எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த
உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை.
👉 திருக்குறள் அடுத்த வாரம் தொடரும்....
0 comments:
Post a Comment