சிறுகதை:-அநீதி அழியும்

பிரம்மதத்தன் காசியை ஆண்டபோது போதிசத்வர் காசிக்கு அருகே இருந்த ஒரு கிராமத்தில் ஒரு பணக்காரனின் மகனாகப் பிறந்தார். அவர் நன்கு படித்துப் பெரியவரானதும் அவரது பெற்றோர் காசி நகரத்தில்உள்ள ஒருவரது மகளான சுஜாதாவைக் கல்யாணம் செய்து வைத்தார்கள். சுஜாதா மிக மிக அழகானவள். நல்ல புத்திசாலியும் கூட. நற்குணங்கள் படைத்தவள். அவள் தன் கணவன் வீட்டிற்கு வந்து இல்வாழ்க்கை நடத்தி யாவருக்கும் பணிபுரிந்து வந்தாள்.
ஒரு நாள் சுஜாதா தன் கணவரிடம் "நானும் இங்கு வந்து வெகு காலம் ஆகிவிட்டது. ஒருமுறை காசிக்குப் போய் என் தாய் தந்தையரைப் பார்த்து விட்டு வர எண்ணுகிறேன். நீங்களும் என்னோடு வந்தால் நன்றாக இருக்கும்" எனக் கூறினாள்.
போதிசத்வரும் "ஆகா, அப்படியே செய்யலாம். உன் தாய் தந்தையரை நானும் ஒரு முறை பார்த்தது போலவும் இருக்கும்" எனக் கூறித் தன் மனைவியோடு மறுநாள் வண்டி கட்டிக் கொண்டு காசிக்குக் கிளம்பினார். போதிசத்வர் முன் அமர்ந்து வண்டியை ஓட்ட சுஜாதா வண்டிக்குள் உட்கார்ந்து கொண்டு காட்சிகளை ரசித்தவாறே இருந்தாள்.
வண்டியும் காசி நகர எல்லையை வந்தடைந்தது. அங்கே ஒரு குளத்தருகே போதிசத்வர் வண்டியை நிறுத்தினார். சுஜாதாவும் கீழே இறங்கி தான் கட்டி எடுத்து வந்த கட்டு சாத மூட்டையை எடுத்துக் கொண்டு போதிசத்வருடன் குளக்கரைக்குப் போய் அமர்ந்தாள். இருவரும் உணவை உண்டு நீர் பருகிச் சற்று இளைப்பாறி விட்டு பிறகு வண்டியில் அமர்ந்து காசி நகருக்குள் செல்லலாயினர். அப்போது காசி மன்னன் யானை மீது அமர்ந்து பவனி வந்து கொண்டிருந்தான்.
மக்கள் கூட்டமாகக் கூடி வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். சுஜாதாவும் தானும் சற்று வேடிக்கை பார்த்து விட்டு வருவதாக தன் கணவரிடம் கூறி அவரது அனுமதி பெற்று கீழே இறங்கி ஒரு ஓரமாக நின்றாள். வண்டியிலுள்ள போதே காசி மன்னன் சுஜாதாவைப் பார்த்து அவளது அழகில் மயங்கி விட்டான். அவளை அடைந்து விடுவது என எண்ணிய போது அவள் விவாகமானவள் என்றும் அவளது கணவன் வண்டியிலுள்ள போதிசத்வர் என்பதும் அவனுக்குத் தெரிந்து விட்டது.
போதிசத்வரை எப்படியாவது ஒழித்து விட்டால் அந்த அழகிய பெண் தன்னோடு இருந்து விடுவாள் என அவன் எண்ணி அதற்கு என்ன வழி என்று யோசிக்கலானான். சட்டென ஒரு வழி அவனுக்குப் புலப்பட்டது. அவன் தன் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒரு வேலையாளை அழைத்து தன் தலையிலிருந்து கிரீடத்தை எடுத்து அவனிடம் கொடுத்து "நீ இதை அதோ தெரியும் வண்டியில் யாருக்கும் தெரியாமல் வைத்து விட்டு வா" எனக் கூறி போதிசத்வரின் வண்டியைக் காட்டி அனுப்பினான்.
அந்த வேலையாளும் போதிசத்வர் பாராது இருந்த சமயத்தில் அரசனது கிரீடத்தை அவரது வண்டிக்குள் வைத்து விட்டான். இதற்குள் சுஜாதா அரசன் தன்னையே உற்று உற்றுப் பார்ப்பதைக் கண்டு வெட்கப்பட்டு தலையைத் திருப்பிக் கொண்டாள்.
சற்று நேரத்திற்கெல்லாம் அரசாங்க வீரன் ஒருவன் "யாரும் இருந்த இடத்தை விட்டு நகராதீர்கள் நம் அரசரின் கிரீடம் திருடுபோய் விட்டது. எல்லாரையும் சோதனை போடப் போகிறோம்" என அறிவித்தான். வீரர்கள் பலர் சோதனையைப் போட்டனர். ஒரு வீரன் போதிசத்வரின் வண்டியைச் சோதனை போட்டு அதில் முன்பே ஒளித்து வைக்கப்பட்டிருந்த கிரீடத்தை எடுத்து "இதோ திருடன். கிரீடம் அகப்பட்டு விட்டது" எனக் கத்தினான். அரசனும் போதிசத்வர்தான் திருடன் எனக் கூறி அவரது தலையை வெட்டி எறியுமாறு தண்டனை அளித்தான். வீரர்கள் போதிசத்வரைப் பிடித்து சவுக்கால் அடித்து பல தெருக்கள் வழியாக அழைத்துக் கொண்டு கொலைக்களத்திற்குக் கொண்டு போகலாயினர்.
இதைக் கண்ட சுஜாதா அவர் பின்னாலேயே ஓடிக் கண்ணீர் வடித்தவாறே "ஐயோ! நீங்கள் இப்படி அவமானப்பட நான்தான் காரணம். இது எனக்குத் தெரிந்து விட்டது. இந்த அநீதி அடுக்குமா? கடவுளே! என் முறையீட்டைக் கேளாயோ" எனக் கதறினாள். சுஜாதாவின் இந்தப் புலம்பல் தேவலோகத்தையே ஆட்டி உலுக்கியது. தேவேந்திரனும் அதன் காரணத்தைப் புரிந்து கொண்டு தன் சக்தியால் போதிசத்வரை அரசன் இருந்த இடத்தில் அவனது ஆடையிலும் காசி மன்னனை போதிசத்வர் இருந்த இடத்தில் அவரது ஆடைகளைஅணிந்து இருக்கும்படியும் மாற்றம் செய்து விட்டான்.
வீரர்களுக்குத் தாம் பிடித்துச் செல்வது தம் மன்னனைத்தான் என்பது தெரியவில்லை. கொலைக்களத்தில் அரசனின் தலை துண்டிக்கப்பட்ட போதுதான் உண்மை தெரிந்தது. மன்னனின் ஆடைகள் திரும்ப அவனது உடலுக்கு வந்தன. போதிசத்வரின் ஆடைகள் அவரிடமே போய் விட்டன. தம் கொடுங்கோல் மன்னன் ஒழிந்தான் என்பது கண்டு காசி மக்கள் மகிழ்ந்து போய் ஆரவாரம் செய்தனர். இதற்குக் காரணமான போதிசத்வரைக் காண எல்லாரும் கூடி விட்டனர்.
அப்போது தேவேந்திரன் அவர்கள் முன் தோன்றி நடந்ததை எல்லாம் கூறி காசி மன்னன் தன் கெட்ட எண்ணத்தாலேயே அழிந்தான் என்றும் இனி காசியை போதிசத்வரே ஆண்டு வருவார் என்றும் சுஜாதா அவரது பட்டத்து ராணியாக இருப்பாள் எனவும் கூறி எல்லாரையும் ஆசீர்வதித்து விட்டு மறைந்தான். மக்களும் போதிசத்வரைத் தம் மன்னராக ஏற்று அவரது ஆட்சியில் சுக வாழ்வு வாழ்ந்தனர். போதிசத்வரும் சுஜாதாவுடன் சிம்மாசனத்தில் அமர்ந்து நேடுங்காலம் ஆட்சி புரிந்து மக்களை சுகமாக இருக்கச் செய்தார்.
------------------மதி அங்கிள்(சென்னை)

0 comments:

Post a Comment