எது ஆன்மீகம்?


இன்று ஆன்மீகம் என்ற சொல்லுக்கு உண்மையான அர்த்தத்தைப் பலரும் மறந்து விட்டதாகவே தோன்றுகிறது. ஆன்மீகம் என்ற பெயரில் அக்கிரமங்களும், கேலிக்கூத்துகளும் தினம் தினம் அரங்கேறிய வண்ணம் இருக்கின்றன. மேஜிக் வித்தை காண்பிப்பவர்கள் சக்தி வாய்ந்த சாமியார்களாக வணங்கப்படுகிறார்கள். நான் தான் கடவுள் என்று யார் யாரோ பிரகடனம் செய்து கொள்கிறார்கள். அவர்களை ஓடிச் சென்று வணங்க மக்கள் கூட்டம் தயாராகவே இருக்கிறது.

இந்த தேசம் உண்மையான ஆன்மீகத்தின் பிரசவ பூமி. எத்தனையோ மதங்கள் இங்கு ஜனித்திருக்கின்றன. எத்தனையோ உண்மையான மகான்கள் இங்கு வாழ்ந்திருக்கிறார்கள். ஆன்மீகத் தேடல்களுடன் இங்கு வந்த எத்தனையோ மேலைநாட்டார் கூட தங்கள் தேடல்களுக்கு இங்கு விடை கண்டு இந்த தேசத்தின் சிறப்பை உலகுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட இந்த தேசத்தில் இன்று நடக்கும் கூத்துகள் மனம் நோகவே வைக்கின்றன.

தெய்வானுபவத்தை உணர்ந்த துறவிகளுக்கு இந்த உலகத்தின் பொன்னும், பொருளும், புகழும் வெறும் தூசியே. எல்லையில்லாத பரம்பொருளைக் கண்டவர்களை எல்லைகளை உடைய, அழிய முடிந்த இந்த விஷயங்கள் என்றுமே ஈர்ப்பதில்லை. (பொக்கிஷமே கிடைக்கப்பெற்றவன் கிளிஞ்சல்களையும் கூழாங்கற்களையும் சேகரிக்க முற்படுவானா?) இதுவே உண்மையான துறவிகள், மகான்களுடைய அளவுகோல். இந்த அளவுகோலுக்கு உயர முடியாதவர்கள் சாதாரணமானவர்களே.

ஆன்மீகவாதிகளே! இன்றைய பெரும்பாலான சாமியார்கள், கடவுள்களாக பிரகடனப்படுத்திக் கொள்பவர்களை எல்லாம் இந்த அளவுகோலால் அளந்து தெளியுங்கள். சென்று வணங்குபவர்களிடம் வசூல் செய்பவர்கள், விளம்பரம் தேடுபவர்கள் எல்லாம் இன்னும் பொருளாசையும், புகழாசையும் துறக்க முடியாதவர்கள் தானே? நம்மைப் போலவே பலவீனங்கள் உள்ளவர்களைப் பக்தியுடன் வணங்க என்ன இருக்கிறது?

இன்றைய சில சாமியார்கள் மேஜிக் செய்வதில் வல்லுனர்களாக இருக்கிறார்கள். மாயமாக என்னென்னவோ வரவழைத்துக் கொடுக்கிறார்கள். அவர்கள் எப்படி வரவழைக்கிறார்கள் என்பது ஆச்சரியமாக இருந்தால் கைதட்டி வாழ்த்தலாம். இதை எத்தனையோ மேஜிக் நிபுணர்களும் கூட செய்கிறார்களே. அவர்களை எல்லாம் வணங்கி பக்தகோடிகளாக மாறுகிறீர்களா? இல்லையே. இதையே கடவுள் பெயரைச் சொல்லி ஒருவர் செய்து காட்டும் போது புளங்காகிதம் அடைந்து அவர்கள் பக்தர்களாக மாறுவது எதற்காக? அவர் கொடுக்கிற பொருள் தான் உங்களைக் கவர்ந்தது என்றால் அதை மந்திரத்திலிருந்து வரவழைத்தால் என்ன, பக்கத்து கடையிலிருந்து உங்களுக்கு வாங்கிக் கொடுத்தால் என்ன? உண்மையான ஆன்மீகத்திற்கு சித்து வித்தைகள் தேவையில்லை.

சிலர் மதநூல்களைக் கரைத்துக் குடித்திருப்பார்கள். அதை சரளமாக மேற்கோள் காட்டுவார்கள். அதுவும் பாராட்டுக்குரியதே. ஆனால் அவர்களையும் வணங்கி வழிபடுவதற்கு முன் அவர்கள் காட்டுகிற மேற்கோள்கள் படி வாழ்கிறார்களா என்று கவனியுங்கள். மனப்பாடம் செய்வதெல்லாம் பெரிய விஷயமல்ல. இன்றைய பள்ளிக் குழந்தைகள் கூட அதில் அதிசமர்த்தர்கள். கஷ்டமான பகுதி வாழ்ந்து காட்டுவது தான். நீங்கள் சாமியார்களாக வணங்கும் மனிதர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று முதலில் கூர்ந்து கவனித்துப் பாருங்கள். பின் வணங்க முற்படுங்கள்.

உண்மையான ஆன்மீகம் என்ன என்பதில் மிகவும் தெளிவாக இருங்கள். படிப்படியாக ஆசைகளை அறுத்தல், சுயநலமொழித்தல், அன்பே வடிவமாதல், விருப்பு வெறுப்பில்லாத சமநோக்குடன் இருத்தல், எளிமையாகவும் பணிவாகவும் இருத்தல் இவையெல்லாம் தான் உண்மையான ஆன்மீகத்தின் அடையாளங்கள். இவைகள் உள்ளனவா என்று தெரியாமல் ஒருவரை மகானாகவும், கடவுளாகவும் ஆக்கி விடாதீர்கள். ஆராய்ந்து தெளியாத நம்பிக்கை ஆபத்தானது. எனவே ஆன்மீகம் என்ற பெயரில் ஏமாந்த சோணகிரியாக இருக்காதீர்கள். அப்படி இருந்தால் உங்களுக்கு ஆறறிவைத் தந்த ஆண்டவன் அதைப் பயன்படுத்தாத உங்களை மன்னிக்க மாட்டார்.
-என்.கணேசன்

2 comments:

 1. கந்தையா தில்லைவிநாயகலிங்கம்Friday, October 19, 2012

  நான் யார்? எங்கு இருந்து வந்தேன்? ஏன் வந்தேன்? எங்கே செல்வேன்? என்னை நகர்த்துவது எது? எனக்குள் உயிராய் இயங்கும் சக்தி எதனால் உருவானது? அது ஏன் உருவானது? எல்லோருக்குள்ளும் இப்படித்தான் இருக்குமா? என்னை அடித்தால் அழுகிறேன், வலிக்கிறது. நான் அடித்தால் இன்னொருவனுக்கும் வலிக்கும்தானே? அப்படி இருக்கையில் நான் அவனை அடிக்கலாமா? தேவையின் அடிப்படையில் இயங்கு என்கிறார்களே...? தேவை என்றால் என்ன? எனது தேவையா? அல்லது சுமூக வாழ்க்கை முறைக்கான ஒட்டு மொத்த மனிதர்களின் தேவையா? எனது தேவையை ஒட்டு மொத்த மானுட சுமூக இயங்கு நிலைக்கு ஏற்ற தேவையாய் மாற்றிக் கொள்ள நான் என்ன செய்யவேண்டும்...?

  என்றெல்லாம் தன்னுள் தானே கேட்டுக் கொள்ளும் உத்தம செயலுக்குப் பெயர்தான் ஆன்மீகம். இப்படியான தொடர்ச்சியான கேள்விகளின் விளைவால் ஏற்படும் மிகப்பெரிய புரிதலே ஆன்ம விழிப்பு.

  விவேகானந்தர் என்ன கூறினார் தெரியுமா ?

  "உங்கள் சாத்திரங்களைக் கங்கையில் எறிந்துவிட்டு பாமர ஏழை மக்களுக்கு உண்ண உணவும்,உடுக்க உடையும் சம்பாதிப்பது எப்படி என்று கற்றுக் கொடுங்கள்.அவர்களுடைய உலக வாழ்க்கைத் தேவைகள் தீர்க்கப் பட்டாலொழிய நீங்கள் கூறும் ஆன்மீகக் கருத்துக்களை அவர்கள் காது கொடுத்துக் கேட்க மாட்டார்கள்."

  ReplyDelete
 2. கடவுள் ஒருவரே! நாம் கடவுளின் பிள்ளைகள். வேறு எந்த பாகு பாடும் கூடாது. இதனால் தான் நாட்டில் இத்தனை பிரச்சனைகள். மனிதனாக ஒன்று படுவோம்.வேறு பாட்டை களைவோம். எத்தனை சொல்லி கொடுத்தாலும், எத்தனை பாடம் எடுத்தாலும் நடக்காது. ஒரு சில நாளில் மறந்து போகும். தவம் செய்து நம்மில் இருக்கும் பாவ மூட்டையை அழித்து வாழ்வில் சந்தோசமாக இருப்போம். மற்றவரை சந்தோஷ படுத்துவோம்.
  நான் சொல்ல போகும் தகவல் அணைத்தும் சித்தர்கள் ஞானிகள் சொன்ன ஞான விளக்கம் பற்றியது. எப்படி வாழ்க்கையை நல்ல படியாக வாழ்வது என்று சொன்னது

  ஞானம் என்பது பரிபூரண அறிவு. அது நம்மை அறிந்த பிறகே நடக்கும். நாம் என்பது இந்த உடலோ மனமோ கிடையாது. நான் என்பது உயிர். இதை அனுபமாக இல்லாமல் இருக்கிறது.இதை அநுபவம் ஆக்க வேண்டும். இதை எல்லா ஞானிகளும் சொல்லி சென்று உள்ளனர்.

  இதுவரை நாம் மற்றவரிடம் இருந்து தான் எல்லாவற்றையும் கற்று கொண்டோம். சாம்பார் அம்மாவிடம், .... இந்த புதிய பாடத்தை கற்று கொள்ள ஒருவர் தேவை. அவர் தான் குரு. ஞான சற்குரு.

  தவம் செய்ய வேண்டும்!!!

  தவம் செய்ய நாம் காட்டுக்கு போக வேண்டியதில்லை! குடும்பத்தை விட்டு ஓட வேண்டியதில்லை! காவி உடுத்து தாடி முடி வளர்த்து உருத்திராட்சம் அணிந்து உலகம் சுற்ற வேண்டியதில்லை! நமது உடலை வெறுத்து வருத்தாது துன்புருத்தாது இருக்க வேண்டும்! உணவை வெறுத்து இலை உணவாக வேண்டாம்! கடுமையான ஜப தாபங்கள் வேண்டாம்! சுருக்கமாக கூறுவதனால் ஒன்றும் செய்ய வேண்டாம்! சும்மா இருந்தாலே போதும்! திருமணம் ஞானம் பெற ஒரு தடையல்ல!

  தவம் எப்படி செய்ய வேண்டும்? தவம் என்றால் மந்திர ஜபமல்ல! தவம் என்றால் பூஜை செய்வதோ யாகம் வளர்ப்பதோ அல்ல! தவம் என்றால் பிராணாயாமமோ வாசி யோகமோ இன்னபிற யோகங்களோ அல்ல! தவம் என்றால் உடலை வருத்தி செய்யும் எந்த செயலுமல்ல! தவம் என்றால், நான் யார்? என அறிய உணர மெய்ஞ்ஞான சற்குருவிடம் ஞானதானம் பெற்று கேட்டதை உணர்ந்து அறிய சும்மா இருந்து செய்யும் பயிற்சியே! முயற்சியே!

  நான் உங்களுக்கு புத்தகம் கொடுக்க ஆவல். எப்படி அனுப்புவது என்று தெரியவில்லை.அதனால் இண்டநெட் இல் அனுப்புகிறேன்.

  இதை தான் ஞானிகளும் சித்தர்களும் செய்து வந்தனர். இது உங்களுக்கு புதிதாக இருக்கலாம். இதை ரகசியம் என்று நிறய பேர் சொல்லி தருவது இல்லை.

  திரு அருட்பிரகாஷ வள்ளலார் அவர்கள் அருளால் எல்லாம் வெளியே சொல்லி கொண்டு இருக்கிறோம்.

  உலகில் பிறந்து ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் நல்ல படியாக வாழவேண்டும். அதற்க்கு முதலில் நான் யார் என்பதை அனுபவமாக தெரிந்து கொள்ள வேண்டும்.

  அப்படி தெரிந்து கொள்ள தவம் செய்ய வேண்டும். தவம் என்பது சும்மா இருப்பது. மனதை பயன்படுத்தி செய்யும் எந்த செயலும் அல்ல.
  இறைவன் அருள் வேண்டும் என்றால் சுத்த சைவ உணவு கொண்டு வாழ வேண்டும்.

  அனைவருக்கும் சொல்லி கொடுங்க. நன்றி.

  லிங்க்ஐ படியுங்க.

  http://tamil.vallalyaar.com/?page_id=80


  blogs

  sagakalvi.blogspot.com
  kanmanimaalai.blogspot.in

  ReplyDelete