தமிழரின் உணவு பழக்கங்கள்-பகுதி: 14

[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
-[பண்டைய சங்க தமிழரின் உணவு பழக்கங்கள் தொடர்கிறது]
சங்க காலத்தில்,தமிழ்க்குடி என்று அனைவராலும் போற்றப்படும் தமிழ் மக்களின் பண்பாட்டில் விருந்தோம்பல் சிறப்புமிக்கதாகும்.அங்கு பணக்கார மற்றும் ஏழை மக்கள், இருவரும் விருந்தினர்களை புன்முறுவலுடன் உபசரித்தனர். ஆனால் இப்போது அதன் சிறப்பு குறைந்துகொண்டே வருகின்றது."விருந்தினரைக் கண்டால் அவர்களுக்கு ஒன்றும் அளிக்க முடியாததால் ஒளிந்து கொள்கிறேன்.என் அறிவும் தடுமாற்றம் அடைகிறது என புறநானுறு 266,வரிகள்,11-13, "விருந்துகண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கைப்,பொறிப்புணர் உடம்பில் தோன்றிஎன்,அறிவுகெட நின்ற நல்கூர் மையே." என்று கூறுவதில் இருந்து அதன் சிறப்பை அறியமுடிகிறது.மகிழ்ச்சி நிரம்பிய விழாக்களில்,அரசனும் செல்வந்தரும்,பொதுமக்களுக்கு பல வகை இனிக்கும் ஆகாரம் வழங்கினர்.இப்படி இவர்கள் கொடுத்த உணவு வகைகளைப் பற்றி,2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க பாடல்கள் வர்ணிக்கின்றன.இந்த பாடல்கள்,பொது மக்களின் உணவையும் மற்றும் அரண்மனை விழாக்களில்,கொண்டாடங்களில்,திருமண விழாக்களில் சமைக்கப்பட்ட உணவையும் எடுத்து கூறுகின்றன.பண்டைய தமிழ் இலக்கியம்,கி மு 700 இல் இருந்து அறியப்பட்டு இருந்தாலும்,கி மு 300-கி பி 300 இடைப்பட்ட ஆண்டிலேயே தமிழரின் உணவு பண்பாடு பற்றி சங்க இலக்கியத்தில் அறியமுடிகிறது.

Image result for பட்டினப்பாலை"கடல் இறவின் சூடு தின்றும் வயல் ஆமைப் புழுக்கு உண்டும்"[63-64] மற்றும்“மீன் தடிந்து விடக்கு அறுத்து ஊன் பொரிக்கும் ஒலி முன்றில்” [177-178]
Image result for foods in sangam poemsInline imageபோன்ற பட்டினப்பாலை அடிகள்,அங்கு வறுத்த இறாலையும் வேகவைத்த ஆமையையும் உண்டார்கள் என்பதையும்,பூம்புகாரின் அங்காடித் தெருவில் அமைந்து உள்ள மதுபானக் கடை முற்றத்தில், மீனையறுத்துப் பின் இறைச்சியையுமறுத்து அவ்விரண்டு தசையினையும் பொரிக்கும் ஆரவாரத்தையும் தெட்டத் தெளிவாக அது எடுத்து கூறுகிறது.மேலும் விளைந்த நெல்லை-மழலைக்குக் கஞ்சி,வளரும் பிள்ளைக்கு பச்சரிசி,பெரியவருக்கு கைக்குத்தல் புழுங்கல்,பாட்டிக்கு அவல்,மாலை சிற்றுண்டியாக பொரி,என நெல்லை தேவைக்கேற்றபடி தயாரிக்கவும் அறிந்து இருந்தது.இனிப்பு கலந்த பாலில் நனைத்த அரிசி அப்பமும், நீண்ட வெள்ளை சரங்களை போன்று அவிக்கப்பட்ட இடி அப்பமும் பெரும்பாணாற்றுப்படை,மதுரைக் காஞ்சி,சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது.என்றாலும் இன்று அவிப்பது போன்ற நீராவியில் சமைத்த வட்ட வடிவ இடியப்பம் அன்று இருக்கவில்லை.உதாரணமாக,கரியசட்டியில் இனிப்புப் பாகொடு பால் கலந்து பிடித்து அழகான வட்டமாக அப்பம் சுடப்பட்ட நிகழ்வை பெரும்பாணாற்றுப்படை,வரிகள் ,377-378 "கூவியர் பாகொடு பிடித்த,இழை சூழ் வட்டம் பால் கலந்தவை போல்"என்ற வரிகள் விளக்குகின்றன.உணவியல் அறிஞர் கே.டி.ஆசயா[Dr. K.T. Achaya] தனது  "Indian Food, A Historical Companion, The Food Industries of British India, and A Historical Dictionary of Indian Food(all published by Oxford University Press, India)" என்ற புத்தகங்களில் தோசை,வடை போன்றவை 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று ஆணித்தரமாக குறிப்பிடுகிறார்.எனினும் இட்டலி அப்படியில்லை என்கிறார். அது ஒரு வெளி நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டது என்கிறார்.கி பி 920 ஆண்டை சேர்ந்த சிவகோட்டியாச்சார்யர் எழுதிய வட்டராதனே என்னும் பழமையான சமஸ்கிருத, கன்னட நூலில்,இட்டலியை ‘இட்டலிகே ’ என குறிக்கப்பட்டுள்ளது.அதில் இருந்தே இட்டலி என்ற சொல் பிறந்தது என்கிறார்.ஆனால்,இந்த  இட்டலிகே,உளுத்தம் பருப்பு மாவினால் மட்டுமே செய்யப்பட்டவை ஆகும்.இது புளிக்க வைக்கப்படவில்லை.மேலும் ஒரு பெண்ணின் வீட்டிற்கு விருந்தாளியாக சென்ற ஒரு பிரமச்சாரிக்கு உபசாரம் செய்த 18 உணவுகளில் ஒன்றாக இது குறிக்கப்பட்டுள்ளது.இதை தொடர்ந்து கி பி 1130 இல் எழுதப்பட்ட மற்றொரு சமஸ்கிருத, கன்னட நூலான, மனசொல்லசாவில் (Manasollasa)  'இட்டரிக்க' என குறிக்கப்பட்டுள்ளது. இதுவும் உளுத்தம் பருப்பு மாவினால் மட்டுமே செய்யப்பட்டவை ஆகும்  இது சிறு உருண்டைகளாக,மிளகு தூள்,சீரகத் தூள்,பெருங்காயம் போன்றவற்றால் வாசனைப்படுத்தப்பட்டன என்கிறது.என்றாலும் இன்று இட்டலி செய்யும் முறைகளான உளுந்துடன் தீட்டப்படாத அரிசி,நீண்ட நேரத்திற்கு கலவையை புளிக்க வைத்தல்,நீராவியில் முழுமையாக அவித்தல் ஆகிய இந்த மூன்று முறையும் அங்கு காணப்படவில்லை.கி பி 1250 இற்கு பின்புதான் இப்ப நாம் செய்வது போன்ற இட்டலி நடைமுறைக்கு வந்ததாக கே.டி.ஆசயா கூறுகிறார்.அது மட்டும் அல்ல சீன காலவரிசையாளர் Xuang Zang ,கி பி 700 ஆண்டு வரை,இந்தியர்  நீராவி சமையலை அறிந்து இருக்கவில்லை என்று மிக அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டுள்ளார்.இட்டலி இந்தோனேஷியாவில் முதலில் சமைக்கப்பட்டது என்றும்,அதன் ஒரு பகுதியை ஆட்சி செய்த தென் இந்தியா அரசனின் சமையல்காரன் கி பி 800-1200 ஆண்டுகளில் நாடு திரும்பும் போது,இந்த உணவை தென் இந்தியாவிற்கு கொண்டுவந்து இருக்கலாம் என்ற ஒரு பரிந்துரையையும் அவர் முன் வைக்கிறார்.மேலும் இது இந்தோனேஷியாவில் கேட்லி[Kedli ] என அப்போது அழைக்கப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் அவர் சங்க காலத்தில் செய்யப்பட்ட தோசை அதிகமாக அரிசியை மட்டுமே பாவிக்கப்பட்டதாக இருந்ததாகவும்,அது கள்ளு முதலியவற்றால் புளிக்க வைக்கப்பட்டது என்றும், கட்டாயம் உளுந்து பாவிக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டுகிறார்.மேலும் சுவாரசியமான விடயம் என்னவென்றால், மனசொல்லசாவில் குறிக்கப்பட்ட தோசக[“dhosaka  ”],முற்றிலும் உளுந்தில் செய்யப்பட்டது.அரிசி அங்கு பாவிக்கப்படவே இல்லை.இந்த தோசை தோன்றிய இடம் தோராயமாக  கர்நாடக மாநிலம் மைசூர் என்றும் அதுவும் உடுப்பியில் என்றும்  கருதப்படுகிறது.இடியப்பமும் அப்பமும் காழியர்,கூவியர்களால் கடற்கரை வீதிகளில் விற்கப்பட்டதாக கூறுகிறார்.இது பிந்திய சங்க இலக்கியமான சிலப்பதிகாரம்,மணிமேகலையில் விவரிக்கப்பட்டுள்ளது."பன்மீன் விலைஞர் வெள்ளுப்புப் பகருநர் கள் நொடையாட்டியர் காழியர் கூவியர் ",என்ற கச்சிமாநகர் புக்க காதை,மணிமேகலை 31,32 ஆவது வரி-பல மீன்களை விற்கும் பரதவரும் வெள்ளிய உப்பு விற்போரும் கள்ளை விற்கும் வலைச்சியரும் பிட்டு வாணிகரும் அப்ப வாணிகரும்-என கூறுகிறது.புளியோதரை எனப்படும் ஒரு புளி சாதம் பற்றியும் புளி,நெல்லிக்காய் சேர்ந்த ஒரு வகை பானம் பற்றியும் அங்கு விரிவாக சொல்லப் பட்டுள்ளது.கீரை,பூசனிக்காய்,முருங்கைக்காய்,மற்றும் மூன்று பருப்பு வகைகள்-உளுந்து, பயத்தம் பருப்பு,துவரம் பருப்பு-அங்கு பரவலாக பயன்படுத்தப்பட்டுள்ளது.அதே போல அரிசி,தயிர், தயிரில் நனைத்த வடை போன்றவையும் ஆகும்.மற்றும் முக்கனிகளான மா,பலா,வாழையும் அவர்களின் உணவில் தாராளமாக இருந்தன.அரசியல் சூழல் காரணமாக ஒரே இடத்தில் பெருந்தொகையினர் பல்லாண்டுகள் வாழ நேரிட்ட போது ‘நகரம்’ ஏற்பட்டது.இத்தகைய நகரங்களில் பல,காலப்போக்கில் அழிந்துவிட்டன. என்றாலும் சங்க இலக்கியமான ‘மதுரைக் காஞ்சி’ சித்தரிக்கும் மதுரை நகரம் இரண்டாயிரமாண்டுகளைக் கடந்த பின்னரும் தனக்கான அடையாளத்துடன் இன்றும் உயிர்த்துடிப்புடன் விளங்குகிறது.இரவு வேளையில்,இரண்டாம் சாமத்தில்,மதுரை நகரின் காட்சி ஒன்றை, வரிகள்,624-627:"நல்வரி இறாஅல் புரையும் மெல் அடை,அயிர் உருப்பு உற்ற ஆடு அமை விசயம்,கவவொடு பிடித்த வகை அமை மோதகம், தீஞ் சேற்றுக் கூவியர்" என்று சுட்டிக்காட்டுகிறது.இந்த விவரிப்பில் ‘உணவு வணிகர்’ குறித்த குறிப்புகள் முக்கியமானவை.சங்க காலத்தில் நல்ல வரிகளை யுடைய தேனிறாலை ஒக்கும் மெல்லிய இனிப்பு அடை,காய்ச்சின பாகோடே பருப்பும் தேங்காய் கூட்டி உள்ளீடாக வைத்துப் பிடித்த மோதகம்[கொழுக்கட்டை] விற்கும் வணிகர் பற்றிய தகவலுடன், இரவு நேரத்தில் மதுரை நகரில் உண்பதற்குப் பல சிற்றுண்டிக் கடைகள் இருந்தன என்று இந்த பாடல் வரிகள் மூலம் அறிய முடிகின்றது.
பகுதி/PART :15 தொடரும்/WILL FOLLOW 

0 comments:

Post a Comment