தமிழரின் உணவு பழக்கங்கள்/பகுதி:11

[பண்டைய சிந்து சம வெளி உணவு பழக்கங்கள்]
[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
சிந்து சம வெளியில் வாழ்ந்த ஹரப்பான் தமது சமையல் குறிப்புகளை,அதாவது சேர்மானங்கள்,செய்முறைகளை பதிந்து வைக்கவில்லை.சிந்து வெளியில் இருந்து பல முத்திரைகள் கண்டு எடுத்தாலும்அவை மிகச் சிறிய குறிப்புகளையே கொண்டிருந்தன.சுமேரியர் போல எந்த இலக்கியமும் அல்லது பெரிய குறிப்புகளும் அங்கு இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை.அது மட்டும் அல்ல இன்னும் சிந்து சம வெளி மொழி சரியாக மொழி பெயர்க்கப்படவில்லை.எனினும் அவை திராவிட மொழி அல்லது பழைய தமிழ் என்பதில் ஆய்வாளர்கள் பலரும்,அதிகமாக எல்லோரும் உடன்படுகிறார்கள்.இங்கு எழுத்து மூலமான சான்றுகள் இல்லாத நிலையில்,சிந்து சம வெளி மக்களின் உணவு பழக்கங்கள் என்ன என்பதை அறிய எமக்கு அங்கு சமையல் பாத்திரங்கள்,கருகிய உணவின் எச்சங்கள்,விவசாய கருவிகள்,மற்றும் படங்களுடன் கூடிய முத்திரைகள் போன்றவை கண்டு பிடிக்கப்பட்டனவா போன்ற கேள்விகள் எழுவது இயற்கையே.அங்கு பல தரப்பட்ட அளவில்,வடிவங்களில் பானைகள் கண்டுபிடிக்கப்பட்டன.அவை அதிகமாக,பலதரப்பட்ட தானியங்களை அல்லது திரவங்களை சுமக்க,சேமிக்க பாவிக்கப்பட்டு இருக்கலாம்?மேலும் அங்கு கண்டு பிடிக்கப்பட்ட துளையிடப்பட்ட பானைகள் அதிகமாக பாற்கட்டி[சீஸ்] தயாரிக்க பாவிக்கப்பட்டு இருக்கலாம்?அத்துடன் அங்கு கண்டு எடுக்கப்பட்ட விளும்புடன் கூடிய செம்பு மற்றும் வெண்கல தட்டுகள்,அதிகமாக நகரத்தில் வாழும்,பணக்கார மேல் வகுப்பினர் தமது உணவை சாப்பிட பாவித்து இருக்கலாம்.ஹரப்பாவில் பொதுவாக மண்பாத்திரங்கள் சமைப்பதற்குப் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன.என்றாலும்,வசதியானவர்கள் உலோகப் பாத்திரங்களை பயன்படுத்தியிருக்கிறார்கள்.அங்கு கண்டு எடுக்கப்பட்டவைகளில் இருந்து மற்றும் ஆய்வுகளில் இருந்தும்,அவர்களின் முதன்மை உணவு கோதுமையையும் பார்லியையும் அடிப்படையாக கொண்டவையாக இருந்தன.இவைகள் வேகவைத்து ரோட்டியாகவும்,மேலும், ஒரு வேளை,அவை நீருடன் சேர்த்து கஞ்சி அல்லது கூழ் போன்றவையாகவும் சமைத்து இருக்கலாம்.குறிப்பாக,இன்றைய குஜராத் இருக்கும் பகுதிகளில்,அவர்கள் உள்நாட்டு சில வகை திணை பயிர்களை விவசாயம் செய்தார்கள் என அறிய முடிகிறது.இது அதிகமாக தென் மத்திய ஆசியாவில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்ட பனிவரகாக [broom  corn millet ] இருக்கலாம்.இவர்கள் காட்டு அரிசியை கால் நடைகளுக்கு உணவாக கொடுத்து இருந்தாலும்,அதன் பொருட்டு,அங்கு அரிசியை பயிரிடத் தொடங்கி இருந்தாலும்,அரிசி இவர்களின் முதன்மை உணவாக பிந்திய-ஹரப்பான் காலத்திலேயே பெரும்பாலும் வந்தன.அரிசி லோத்தல் மற்றும் குஜராத்தின் சில இடங்களில் விளைவிக்கப் பட்டிருப்பதைக் காணமுடிகிறது.பயறு,மற்றும் பட்டாணி,சுண்டல்,பாசிப்பயிறு,உளுந்து போன்ற பருப்பு வகைகளும் அங்கு ஹரப்பானால் வளர்க்கப்பட்டன.அது மட்டும் அல்ல,ஹரப்பான் மக்கள் பல தரப்பட்ட பழங்கள்,காய்கறிகள்,வாசனைத் திரவிய பொருள்கள் உட்கொண்டனர்.இவை கடுகு,கொத்தமல்லி, பேரீச்சம்பழம், இலந்தைப்பழம், வால்நட்ஸ்(WALNUTS) எனப்படும் அக்ரூட் பருப்புகள்,திராட்சை,அத்தி,மற்றும் மாம்பழம்,மாதுளம்பழம்,வெண்டைகாய்,ஊறுகாய் போட உதவும் துள்ளு எனப்படும் ஒரு முட்செடி வகையின் மலர்[caper],கரும்பு,உள்ளி,மஞ்சள்,இஞ்சி,சீரகம்,கறுவா
போன்றவையாகும்.இவை ஹரப்பான் மக்களால் வளர்க்கப்பட்டு இருக்கலாம் அல்லது தானாக வளர்ந்ததில் இருந்து பொருக்கி எடுக்கப்பட்டதாக இருக்கலாம்.என்றாலும் இவைகளுக்கான சான்றுகள் குறைவாகவே காணப்படுகின்றன.எப்படியாயினும்,பழங்கள்-காய்கறிகளின் எச்சங்கள் அங்கு கண்டு எடுக்கப்பட்ட பானை,மட்பாண்டங்களில் காணப்பட்டது அங்கு குறைந்தது வாழை,பேரீச்சை,பூசணி,மாதுளை,போன்றவை பாவிக்கப்பட்டது தெரிகிறது.எள்,அங்கு எண்ணெய் எடுப்பதற்கு வளர்க்கப்பட்டன.அதே நேரம் அவர்கள் ஆளி விதை[Flaxseed] எண்ணெயும், மிருகங்களின் கொழுப்பில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெய்களும் பாவித்தார்கள்.கிமு.3000 ஆண்டுகளின் துவக்கத்தில் பயிரிடப்பட்டு வந்த ஆளி விதை இதய நோய்,புற்றுநோய்,வலிப்பு மற்றும் நீரிழிவுக்கு அருமருந்து என்றும் சொல்கிறார்கள்.மொகஞ்சதாரோவில் நல்லெண்ணெய் மற்றும் கடுகு எண்ணெய்கள் பயன்படுத்தப்பட்டதாக உணவியல் அறிஞர் கே.டி. ஆசயா[Dr. K.T. Achaya] குறிப்பிடுகிறார்.சிந்து வெளி மக்கள்,தமது ஆபரணங்களை பல பழங்களின் வடிவங்களில் செய்தார்கள்.அப்படியான பல அங்கு தோண்டி எடுக்கப் பட்டுள்ளன.இவை அவர்கள் உண்ட பழங்களுக்கு சான்று பகிர்கின்றன.ஹரப்பா நகரில் காணப்பட்ட சில களஞ்சியங்கள்,அங்கு பெரும் அளவு தானியங்கள் உற்பத்தி செய்து இருக்கலாம் என்பதை பறை சாற்றுகிறது.சிந்து வெளியில் காட்டு இனங்களான காட்டுப் பன்றி,மான்,ஒரு வகை மீன் சாப்பிடும் பெரிய முதலை[gharial also known as the gavial] போன்றவற்றின் எலும்புகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன,மற்றும் ஒரு சுவாரசியமான கண்டுபிடிப்பு வாழை ஆகும்.என்றாலும் வாழை ஹரப்பாவில் வளர்க்கப்பட்டனவா அல்லது வர்த்தகம் மூலம் பெறப்பட்டனவா என்பது இன்னும் தெரியாது.மேலும் நியூ கினியாவின் குக் சகதிப்பகுதியில் (Kuk swamp) நடந்த அகழ்வாராய்ச்சிகளின் படி அங்கு வாழை குறைந்தது கி.மு 5000 முதலோ அல்லது கி.மு 8000 முதலோ பயிரிடப்பட்டிருக்கலாம் என அறியப்படுகிறது.மொகஞ்சதாரோ,ஹரப்பாவுக்கு அந்நிய நாடுகளுடன் வணிகரீதியான உறவு இருந்த காரணத்தால் கிரேக்கம் மற்றும் மத்தியகிழக்கு நாடுகளில் இருந்தும் உணவுப் பொருட்கள் அறிமுகமாகியிருக்கின்றன.சுமேரியாவுக்கு இந்தியாவில் இருந்து எள் கொண்டுபோகப்பட்டிருக்கிறது.‘ராகிஎனப்படும் கேழ்வரகின் தாயகம் உகாண்டா.ஆப்பிரிக்காவில் இருந்து மனித  இடப்பெயர்வின்போது ராகியை இந்தியாவுக்குக் கொண்டுவந்திருக்கக் கூடும் என்கிறார்கள்.கி.மு 1800-ல் ராகி இந்தியாவில் உணவு தானியமாக இருந்திருப்பதை அகழ்வாய்வுகள் நிரூபணம் செய்கின்றன.
சிந்து வெளி மக்கள்  காய்கறிகளும் பழங்களும் மட்டும் உண்ணவில்லை,அவர்கள்  காய்கறியுடன் இறைச்சியும் உண்டார்கள்,இறந்தவர்களுக்கு அவர்கள் காணிக்கை அல்லது படையல் படைக்கும் போது,அந்த படையலில் இறைச்சி சேர்த்து இருப்பது இதை உறுதிப்படுத்துகிறது.மேலும் அங்கு மாட்டிறைச்சி,குறைந்தது சிலராவது சாப்பிட்டதற்கு சான்றுகள் உண்டு.அங்கு தோண்டி எடுக்கப்பட்ட தொல்பொருள்களில்,ஒரு வேட்டையாடும் கருவியான,சுண்டுவில்லில்[slingshot] பாவிக்கும் களிமண் பந்துக்கள்,மற்றும்
செம்பு மீன் கொக்கிகள்,அம்புவின் நுனி,எறியும் கத்தி போன்றவை எடுக்கப் பட்டுள்ளது.அவை விலங்குகளை கொல்ல பாவிக்கப்பட்டு இருக்கலாம் என்பதை எடுத்துக் காட்டுவதுடன்,அவை மேலும் சிந்து வெளி மக்கள் விவசாயிகளாக மட்டும் இன்றி,அவர்கள் ஆற்றல் வாய்ந்த,மற்றும் திறமையான வேட்டைக் காரர்களாகவும் மீனவர்களாகவும் இருந்தனர் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.இதுபோலவே தானியங்களை அரைக்கும் கல்திருகைகள் மொகஞ்சதாரோவில் கண்டறியப்பட்டுள்ளன.லோத்தலில் தந்தூரி அடுப்பு போன்ற சுடு அடுப்புகள் காணப்படுகின்றன.இறைச்சி பொதுவாக கால்நடையில் இருந்து வந்தன.அவை ஆடு,மாடு,பன்றி, போன்ற கால்நடைகளுடன் மற்றும் கோழி,ஆமை,பறவையும் ஆகும்.மேலும் எருமைகள்,செம்மறியாடு,ஆடுகள்,மாடுகள் போன்றவை பால் எடுப்பதற்க்காக வளர்க்கப் பட்டன.அத்துடன் காட்டுக் கோழி,காட்டு விலங்குகளான,மான்,மறிமான் (Antelope),காட்டுப்பன்றி போன்றவை அங்கு வேட்டையாடப்பட்டன.ஆறு,குளம்,கடலில் இருந்து பெறப்படும் உடன் மீன்[fresh fish ],மட்டி போன்றவற்றையும் அவர்கள் உண்டார்கள். அத்துடன் பல மீன்கள் காயவிடப்பட்டன அல்லது உப்பு இடப்பட்டன.மீனுடன் அவர்கள் பழங்கள்,காய்கறிகள் முதலிய வற்றையும் காயவைத்து அங்கு நிலவிய கடுமையான குளிர்காலத்தில் பாவித்தார்கள்.பாறை மீன்,கெழுத்தி மீன் போன்ற கடல் மீன்களின் எலும்புகள் மற்றும் ஓடுகள்,சிந்து சம வெளி நாகரிகத்தை சேர்ந்த ஹரப்பா வீடுகளைச் சுற்றி கண்டு எடுக்கப்பட்டன.இவை எல்லாம் அங்கு மக்கள்,கடல் உணவு உட் கொண்டதை எடுத்து காட்டுகிறது.மொகஞ்சதாரோவில் கிடைத்துள்ள எலும்புக்கூடுகளின் பற்களைப் பரிசோதனை செய்த போது,அங்கு ஆண்களைவிடப் பெண்கள் மிகக் குறைவாகவே உணவு உட்கொண்டிருக்கிறார்கள் என தெரிய வந்துள்ளது.மேலும் உணவுப் பண்பாடு என்ற கட்டுரையில் தமிழ் அறிஞர் .கா.பெருமாள் ஹரப்பா நாகரிக காலகட்ட உணவு வகைகள் பற்றித் தெளிவாக விளக்கிக் கூறியிருக்கிறார்.
பகுதி :12 தொடரும்

0 comments:

Post a Comment