உலகைக் கலக்கும் மூட நம்பிக்கைகள்

துருதுருவென்று அழகாக சிரித்துக் கொண்டிருந்த தன்னுடைய பத்து மா
 மகளுக்கு தாயே விஷம் கொடுத்துக் கொன்றாள் .காரணம் அந்தக் குழந்தை சித்திரை மாதத்தில் பிறந்ததனால் அதற்கு எதிர்காலத்தில் நல்ல வாழ்க்கை அமையாது என்று மந்திரவாதி ஒருவர் கணித்துச் சொன்னது தான்.
பதை பதைக்க வைக்கும் இந்த நிகழ்வு கலாச்சாரங்களிலும், இலக்கியத்திலும் செழித்து விளங்கும் நமது தமிழகத்திலேயே
 நிகழ்ந்துள்ளது என்பது மூட நம்பிக்கை எந்த அளவுக்கு நம்முடைய சமுதாயத்தின் வேர்களை அரித்திருக்கிறது என்பதற்கு ஒரு சான்று.

இது மட்டுமல்ல, தலைச்சன் பிள்ளையை நரபலியிடுதல், குழந்தையைக் கீறி இரத்தம் எடுத்தல் என்றெல்லாம் தினசரி ஏடுகளில் வரும் செய்திகள் நம்முடைய விழிப்புணர்வு எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதை கேள்விக்குள்ளாக்குகிறது.

மக்களை இயல்பாகச் சிந்திக்க விடாமல் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயலும் மதங்களும், மந்திரவாதிகளும் இந்த மூட நம்பிக்கைகளை பெருமளவுக்கு வளர்த்து விடுகின்றனர். எதேச்சையாய் நடக்கும் செயல்களுக்குக் கூட காரணங்களை இட்டுக்கட்டி பணம் கறக்கும் மனிதர்களால் இந்த மூடப் பழக்கவழக்கங்கள் அழியாமல் நிலைபெறுகின்றன.

சிலை பால் குடிக்கிறது என்றோ, கடல் நீர் கடவுள் கருணையால் இனிக்கிறது என்றோ ஏதேனும் ஒரு பரபரப்புப் பிரச்சாரத்தை அவிழ்த்து விட்டுக்கொண்டே இருக்கிறது மதம். காரணம் அதற்குத் தேவை சிந்திக்காமல் தலையாட்டியபடியே ஆட்டுமந்தைகளைப் போல கூடும் கூட்டம். எல்லாம் வியாபார மயமாகிவிட்ட சூழலில் மதம் மட்டும் விதிவிலக்கா 
என்ன ?


வாயிலிருந்து உருவங்களை எடுப்பதும், கண்களிலிருந்து பூக்களை எடுப்பதும் என மூட நம்பிக்கைகளைப் பார்த்து கன்னத்தில் போட்டுக்கொள்ளும் மக்களுக்காகவே நடைபெறுகின்றன நாடகங்கள்.

நமது நாடு இப்படி மூட நம்பிக்கைகளின் கூடாரமாகிக் கிடக்கிறதே என்னும் கவலையில் உலகில் என்னென்ன மூட நம்பிக்கைகள் இருக்கின்றன என்று அலசியதில் கிடைத்த செய்திகள் அதிர்ச்சியடைய வைக்கின்றன.
 தூணிலும் துரும்பிலும் இருப்பான் இறைவன் என்பதை தூணிலும் துரும்பிலும் இருக்கும் மூடநம்பிக்கை என்று மாற்ற வேண்டிய அளவுக்கு இந்த மூட நம்பிக்கைகள் உலகெங்கும் பரந்து கிடக்கின்றன.

எட்டு என்பது இந்தியாவில் கெட்ட எண் என்றால் பதிமூன்று மேல்நாட்டினருக்கு அலர்ஜிக்குரிய எண். பதிமூன்று என்னும் எண் இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாஸைக் குறிப்பதாகவும் எனவே பதிமூன்று 
என்பது கெட்ட எண் என்பதும் மேல் நாட்டினரின் கருத்து. அதுவும் பதிமூன்றாம் தியதி 
வெள்ளிக்கிழமையாகி விட்டால் அது படு பயங்கரமான மோசமான நாளாம். காரணம் இயேசு சிலுவையில் அறையப்பட்டது ஒரு வெள்ளிக்கிழமை, நோவா காலத்தின் தண்ணீர் பெருக்கு ஆரம்பமானது ஒரு வெள்ளிக்கிழமை, ஆதாம் ஏவாள் ஏதேன் தோட்டத்திலிருந்து துரத்தப்பட்டது ஒரு வெள்ளிக்கிழமை என்று காரணங்கள் அடுக்கப்படுகின்றன.

ஸ்பெயின் நாட்டில் பதிமூன்றாம் தியதி செவ்வாய்க்கிழமை வந்து விட்டால் அன்று எந்த நல்ல செயல்களையும் செய்ய மாட்டார்கள். இத்தாலியில் பதின்மூன்றாம் எண்ணைப்போல பதினேழும் கெட்ட எண்ணாகக் கருதப்படுகிறது. அது மரணத்தைக் குறிப்பதாக அவர்கள் கருதுகிறார்கள்.

அமெரிக்கா உட்பட பல நாடுகளில் பெரும்பாலான கட்டிடங்கள் பதிமூன்றாவது மாடி இல்லாமலேயே கட்டப்படுகின்றன. ஏராளமான குடியிருப்புகளில் பதிமூன்றாம் எண் வீடுகளே இருக்காது. விமான 
நிலையங்களில் கூட பதிமூன்றாவது எண்ணுள்ள வாசல் பல விமான நிலையங்களில் இருப்பதில்லை


மரத்தில் பேய் வசிக்கிறது என்பது ஏறக்குறைய எல்லா நாடுகளிலும் நம்பிக்கையாக இருந்திருக்கிறது. மரங்களைத் தட்டினால் அதனுள் இருக்கும் பேய் வெளியே வராது என்பது மேல்நாட்டு நம்பிக்கையாக 
இன்றும் நிலவுகிறது. இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் காடுகளிலிருந்து வெட்டி வரும் மரங்களை வீடுகளில் உபயோகப் பொருட்களாக்குவதற்கு முன் பேய் விரட்டும் பூஜை நடக்கிறது !

அமெரிக்கர்கள், அருகிலிருக்கும் யாராவது தும்மி விட்டால் ‘கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக’ என்பார்கள். 
தும்மும்போது ஆன்மா வெளியேற முயல்வதாகவும், கடவுள் உன்னை ஆசீர்வதிப்பாராக என்று சொல்லும்போது ஆன்மா மீண்டும் உடலுக்குள் செல்வதாகவும் அவர்கள் நம்பினார்கள்.


இங்கிலாந்தைப் பொறுத்தவ்ரை தும்மும் போதெல்லாம் அசுத்த ஆவி வெளியேறுவதாக ஆறாவது நூற்றாண்டு வரைநம்பப்பட்டது. பின் பிளேக் நோய் தாக்கிய காலத்தில் வலியுடம் தும்முபவர்கள் மரணத்தை
 நோக்கியிருப்பதாகக் கருதப்பட்டு அவர்களுக்காய் ‘கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக’ என்று வாழ்த்தத் துவங்கினர். இதன் மூலம் அவன் இறக்க நேரிட்டால் அவனுக்கு கடவுளின் ஆசீர்வாதம் கிடைத்து சுவர்க்கத்துக்குச் செல்வான் என்று நம்பப்பட்டது. தும்மும்போது வாழ்த்தும் வழக்கம் எகிப்தில் திபேரியுஸ் சீசரின் காலத்திலேயே வழக்கத்தில் இருந்ததாகவும் சில கதைகள் சொல்கின்றன.

என்னுடைய அமெரிக்க நண்பர் ஒருவரிடம் இதுகுறித்துக் கேட்டபோது தும்மும்போது இதயம் ஒரு வினாடிதுடிப்பதை நிறுத்துவதாகவும், அது மீண்டும் துடிக்க வேண்டும் என்பதற்காகத் தான் ‘கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக’ என்று கூறுவதாகவும் சொன்னார்.
வீட்டுக்குள் குடையை விரித்தால் மரணம் வரும் என்பது அமெரிக்கா உட்பட பல மேல்நாடுகளின் இன்றும் நிலவி வரும் ஒரு மூட நம்பிக்கை. தொப்பியைப் படுக்கையில் வைத்திருப்பது நல்லதல்ல என்னும் 
பழக்கம் இன்னும் அமெரிக்கப் பூர்வீகத்தினரிடம் வழக்கத்தில் உள்ளது. அப்படி வைத்தால் மரணம் உட்பட ஏதேனும் தீயது நிகழும் என்பது அவர்களுடைய நம்பிக்கை.

கொட்டாவி விடும்போது கையால் வாயை மூடுவது நாகரீகம் கருதி என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். 
ஆனால் துவக்க காலத்தில் வாயைத் திறந்தால் சாத்தான் உள்ளே நுழைந்துவிடுவான் என்று பயந்து கொட்டாவி விடும்போது வாயை மூடியிருக்கிறார்கள்.

நம்மூரில் இரவில் வேப்பமர அடியில் படுத்திருப்பவர்கள் மூச்சுத் திணறி இறக்க நேரிட்டால் முனி அடித்துக் கொன்றதாகச் சொல்வதைப் போல ஒரு நம்பிக்கை முன்பு அமெரிக்காவிலும் இருந்திருக்கிறது.


மின்சாரம் கண்டுபிடிப்பதற்கு முன்பெல்லாம் மின்னல் என்பதும் இடி என்பதும் வானத்திலிருந்து சாத்தான் எறிபவை என்பவை தான் தான் கிறிஸ்தவர்களின் நம்பிக்கையாய் இருந்தது. எனவே மழைக்காலங்களில் அவர்கள் சாத்தானைப் பயமுறுத்துவதற்காக ஆலயத்துக்கு ஓடிச்சென்று ஆலய மணியை அடித்துக் கொண்டே இருப்பது வழக்கம். ஆலயம் மற்ற கட்டிடங்களை விட அதிக உயரமுடைய கோபுரத்தைக் கொண்டிருப்பதால் அடிக்கடி ஆலயங்களில் மின்னல் தாக்கி மணி அடிப்பவர்களை மரணம் அடித்துச் செல்வதும் உண்டு. அதையெல்லாம் சாத்தான் அடித்துச் செத்ததாகவே மக்கள் நம்பினார்கள்.


சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் ஏணியின் கீழாக நடப்பது கெட்ட நிகழ்வுகளுக்கு வழிவகுக்கும் என்பது எகிப்தியர்களின் நம்பிக்கை. சுவரில் ஏணி சாய்த்து வைக்கும்போது முக்கோணம் உருவாகிறது.
 பிரமிடுகளையும், முக்கோணத்தையும் தங்கள் நம்பிக்கைப் பின்னணியாகக் கொண்டுள்ள எகிப்தியர்கள் ஏணியின் கீழே நடப்பது அந்த முக்கோணத்தின் புனிதத்துவத்தைப் பாழ்படுத்துவதாக நம்புகிறார்கள்.


கல்லறைத் தோட்டத்தைக் கடக்கும்போது மூச்சைப் பிடித்துக் கொண்டு வேகமாகக் கடக்கவேண்டும் என்பது அமெரிக்காவில் உலவி வந்த, இன்னும் கூட பல இடங்களில் உலவி வருகின்ற, ஒரு நம்பிக்கை. சிரிக்காதீர்கள், செத்துப் போனவர்கள் நமக்கு மூச்சு இருக்கிறதே என்று பொறாமைப் படக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடாம் !
 சாப்பிடும்போது தும்மினால் யாரோ உங்களை நினைக்கிறார்கள் என்று நாம் சொல்வது போல, மூக்கு அரித்தால் யாரோ நம்மை நினைக்கிறார்கள் என்பது அமெரிக்கர்களின் வழக்கமாக இருக்கிறது. 
அதேபோல உள்ளங்கை அரித்தால் பணம் வரும் என்று இந்தியர்கள் சொல்வது போல அமெரிக்கர்களும் சொல்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் இடது உள்ளங்கை அரித்தால் பணம் வரும், வலது உள்ளங்கை அரித்தால் பணம் போகும்.

ஒரே தீக் குச்சியில் மூன்றுபேர் சிகரெட் பற்றவைப்பது கெடுதல் என்று நம்பப்படுகிறது. முதலாம் உலகப் போர் நிகழ்ந்த கால கட்டத்தில் மறைவிடங்களில் இருக்கும் எதிரி வீரர்களின் கவனத்தைக் கவர அந்த நேரம் போதுமானதாக இருக்கும் என்பதற்காக சொல்லப்பட்ட இந்த வாசகம் உலகெங்கும் மூட நம்பிக்கையாய் இன்று உலவுகிறது.

காதலர்களைப் பொறுத்தவரையில் பேனா பரிசளித்தால் அந்தக் காதல் முறிந்து போகும் என்று நண்பர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதேபோல கத்தியைப் பரிசாகப் பெற்றால் நட்பு முறிந்து 
விடும் என்பது மேல் நாட்டவரின் நம்பிக்கையாய் இருக்கிறது.


எதிர்வரும் நபரைப் பொறுத்து நமது பயணத்தின் வெற்றியும் தோல்வியும் அமையும் என்று நமது பாட்டிகள் கதை சொல்வதுண்டு. அதிலும் பூனை குறுக்கே வந்தால் போன காரியம் வெளங்காது என்றும் சொல்வார்கள். இது இங்குமட்டுமல்ல, அமெரிக்காவிலும் பூனை குறுக்கே வந்தால் வந்த காரியம் வெற்றியடையாது என்னும் நம்பிக்கை இருந்திருக்கிறது. மேல் நாட்டுத் திரைப்படங்களைப் பார்த்தோமென்றால் சாத்தானைக் குறிப்பதற்காக ஒரு கருப்பு நிற பூனையைக் காட்டுவார்கள். ஆதிகால எகிப்திய கலாச்சாரத்தில் கருப்பு நிற பெண் பூனை ஒன்று கடவுளாக வழிபடப்பட்டு வந்தது. பின் அது மற்ற மதத்தினரால் சாத்தானாக சித்தரிக்கப்பட்டது. சாத்தான் என்பவன் கெட்ட சகுனத்தின் சின்னம் தானே !
 வீடுகளில் கதவருகே கத்தியை வைத்திருந்தால் கெட்ட ஆவியை வீட்டுக்குள் நுழைய விடாமல் தடுக்கலாம் என்பது ஸ்பெயின் நாட்டு மக்களின் நம்பிக்கைகளில் ஒன்று.
 பணப்பையை பணம் ஏதுமில்லாமல் யாருக்கும் கொடுக்கக் கூடாது என்றும், அப்படிக் கொடுத்தால் அந்த பையில் பணம் தங்காது என்பதும் ஹவாய் தீவு மக்களின் நம்பிக்கை.

காலணிகளை வீட்டில் அணிந்து நடந்தால் வீட்டிற்குள் பேய் உலவும் என்பதும், கால்களை கதவுக்கு நேராக நீட்டி வைத்துப் படுத்தால் இரவில் உயிர்பிரியும் என்பதும் ஹவாய் தீவு மக்களிடமுள்ள நம்பிக்கைகளில் மேலும் சில.கத்தியையோ, தாவரங்களையோ பெற்றுக் கொள்ளும் போது நன்றி சொல்லக்கூடாது. அப்படிச் சொன்னால் 
கத்தியினால் ஏதேனும் காயம் படுதலும், தாவரம் பட்டுப்போவதும் தவிர்க்க முடியாது என்பதும் அமெரிக்கர்களின் நம்பிக்கைகளில் ஒன்று. அப்படி கத்திக் காயத்திலிருந்து தப்ப வேண்டுமானால் நீங்கள் கத்தியைப் பெற்றுக் கொள்ளும்போது கொஞ்சம் பணத்தையும் கூடவே கொடுக்க வேண்டும்.

ஒரு மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் கண்ணாடியை உற்றுப் பார்த்தால் இறந்துபோனவர்களின் ஆவியை காணமுடியும் என்பதும், வலது கால் காலணியை முதலில் போடுவது நீண்ட ஆயுளைத் தரும் என்பதும் 
இங்கிலாந்து உட்பட பல மேல் நாடுகளில் உலவி வரும் மூட நம்பிக்கைகளில் சில.

வலது என்பது எப்போதுமே நல்லது என்பது பல நம்பிக்கைகளில் பளிச்சிடுகின்றன. வலது புறமாக எழும்புதல், வலதுகாலை முதலில் வைத்தல் என்பன அவற்றில் சில. பைபிளிலும் இயேசு நல்லவர்களை 
வலப்பக்கமாகப் பிரிப்பதாக வரும் செய்தியால் கிறிஸ்தவர்களிடையேயும் வலது என்பது நன்மையின் சின்னமாக மதிக்கப்படுகிறது.

கழிவறைக்குச் செல்லும்போது இடதுகாலை முன்வைப்பதும், கழிவறையிலிருந்து வெளியே வரும்போது வலதுகாலைமுன்வைப்பதும் நன்மை பயக்கும் என்னும் நம்பிக்கை பல இஸ்லாமிய நாடுகளில் நிலவுகின்றன.

இரவில் தூங்கும்போது எந்தப் பக்கமாகப் படுத்தோமோ அந்தப் பக்கமாகவே எழும்புதல் நன்மை பயக்கும் என்பது மேல் நாட்டவரின் நம்பிக்கை. படுத்திருக்கும் யாரையும் தாண்டிப்போகாதே அப்படித் 
தாண்டிப்போனால் அவர்களுடைய வளர்ச்சி பாதிக்கும் என்பது பாட்டி சொன்ன கதை மட்டுமல்ல, அமெரிக்காவில் உலவும் கதையும் கூட.

மின்னல் தாக்கி உயிர் பிழைப்பவர்கள் பிரபலமாவார்கள் என்னும் நம்பிக்கை சீனாவிற்குச் சொந்தமானது. கால் நகத்தை வெட்டி பழச்சாறுடன் போட்டு யாருக்கேனும் கொடுத்தால் அவர்கள் உங்களோடு காதல் 
வயப்படுவார்கள் என்பது திடுக்கிட வைக்கும் மேல் நாட்டு நம்பிக்கைகளில் ஒன்று.

அதிகாலையில் காணும் கனவு பலிக்கும் என்று இந்தியர்கள் பலர் நம்புவதைப் போல, காணும் கனவை காலை உணவுக்கு முன் சொல்லி விட்டால் அந்தக் கனவு பலிக்கும் என்பது மேல்நாட்டினரின் நம்பிக்கை.

நிறைய பணத்தை வைத்து முதலீடு செய்பவர்களிடம் இந்த மூட நம்பிக்கைகள் அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது என்பது ஒரு வியப்பூட்டும் செய்தி. அவர்கள் எப்படியேனும் எது செய்தேனும் தங்கள் பணத்தை
 இழக்கக் கூடாது என்பதற்காக அனைத்திற்கும் தலையாட்டுகிறார்கள். நடிகள் நடிகைகள் சினிமா துறை பற்றிக் கேட்கவே வேண்டாம். அவர்களிடம் இருக்கும் ஒரே நம்பிக்கை மூட நம்பிக்கை தான்.

அறிவியல் யுகம் இன்று உலகைக் கணினியில் சுருக்கிவிட்டது. அறிவியலின் விஸ்வரூப வளர்ச்சி மனிதனின் சிந்தனையை முழுமையாக மாற்றவில்லை என்பது வருத்தத்துக்குரிய செய்தி. கணினியில் ஜோசியம், ஜாதகம், திருமண பொருத்தம், ராசிக்கல் வியாபாரம் துவங்கி எல்லா விதமான நுழைந்து விட்டன. பகுத்து அறியும் தன்மையை மனிதன் வாழ்க்கை நெறியாக இன்னும் வகுத்துக் கொள்ளவில்லை என்றே கருதவேண்டியிருக்கிறது.

பெரும்பாலும் மூடநம்பிக்கைகளின் பூர்வீகம் ஏதேனும் ஒரு அறிவுரை சொல்வதற்காக ஆரம்பிக்கப்பட்டதாக சொல்லப்பட்டாலும், சில அந்த வகைகளில் அடங்காது என்பதும் கண்கூடு. சொல்லப்பட்ட சமூக, கலாச்சார, நிகழ்வுப் பின்னணியில் சொல்லப்பட்டவற்றைப் பார்க்காமல் அதற்கு ஒரு பிரபஞ்ச அங்கீகாரம் கொடுக்கும்போது மூட நம்பிக்கைகள் விஷ விதைகளாகி விடுகின்றன.கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரித்து அறிவதே மெய்யென வாழ்தலே

 ஆறறிவுக்கு நாம் செய்யும் மரியாதையாக அமையும்.

2 comments:

 1. கந்தையா தில்லைவிநாயகலிங்கம்Wednesday, September 19, 2012

  ""எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு." "-குறள் 423

  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே "தும்மலை"ப்பற்றி வள்ளுவர் கூறுவதை கேளுங்கள் :

  "நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
  சினைப்பது போன்று கெடும்"- குறள் 1203

  தும்மல் வருவது போலிருந்து வாராமல் அடங்குகின்றதே! என் காதலர் என்னை நினைப்பவர் போலிருந்து நினையாமல் விடுகின்றாரோ?.

  விக்கலும் அப்படியே. அவரைப்பற்றி யாரோ கதைக்கிறார்கள் அல்லது நினைக்கிறார்கள் என்பார்கள்.இப்படி சொல்வதன் மூலம் தூர வசிப்பவர் ஒருவரின் அல்லது தூர பயணம் செய்துகொண்டு இருப்பவர் ஒருவரின் ஞாபகத்தை வைத்திருப்பதற்கு உதவும் என்பதாலே.ஆனால் நாளடைவில் அது மூட நம்பிக்கையாக மாறிவிட்டது.

  "சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் ஏணியின் கீழாக நடப்பது கெட்டநிகழ்வுகளுக்கு வழிவகுக்கும் என்பது"ம் அப்படியே .அதாவது ஏணியின் கீழாக நடக்கும் போது தவறுதலாக ஏணியை தட்டிவிட்டால் மேல் இருப்பவர் அல்லது அவர் வைத்திருக்கும் ஆயுதங்கள் கை நழுவி,கீழால் நடப்பவரின் மேல் விழலாம் என்பதால் ஆகும்.இது ஒரு பகுத்தறிவு சிந்தனையே.ஆனால் நாளடைவில் அதுவும் மூட நம்பிக்கையாக மாறிவிட்டது. அவ்வளவுதான்.

  "மரத்தில் பேய் வசிக்கிறது என்பது ஏறக்குறைய எல்லா நாடுகளிலும்நம்பிக்கையாக இருந்திருக்கிறது."

  பேய் பற்றிய நம்பிக்கைகள் ஈராயிரம் ஆண்டுகளாக இருந்து வருகின்றன.
  சுடுகாட்டில் பேய் மகள் இருப்பாள் என்றும் சுடுகாட்டிற்குப் போனால்,
  அதைத் திரும்பிப் பார்க்காமல் வர வேண்டும் என்றும், போர்க்களத்தில்
  காயமடைந்து உயிர் நீக்கப் போகும் வீரர்களைச் சுற்றிப் பேய்கள் நிற்கும்
  என்றும் தமிழர்கள் நம்பினார்கள். கலிங்கத்துப்பரணி முதலிய பரணி வகை
  இலக்கியங்களில் இவை பற்றிய செய்திகள் நிறைய உள்ளன. சங்ககால நூல்களில்
  புறம் 356, 363 குறுந்தொகை 231 முதலிய பாடல்கள் இக்கருத்தை வலியுறுத்துகின்றன.
  பேயும் தீய சக்திகளும் தாக்காமல் தடுக்க ஐயவி எனப்படும் வெண்கடுகை
  நெருப்பில் இட வேண்டும், மணி அடிக்க வேண்டும், வேப்பிலையைப் பயன்படுத்த
  வேண்டும் என்பன போன்ற தகவல்களை அரிசில் கிழாரும் (புறம் 281), வெள்ளி
  மாறனாரும் (புறம் 296) தருகின்றனர்

  "வேப்பமர உச்சியில் நின்னு
  பேயொண்ணு ஆடுதுன்னு
  விளையாடப் போகும் போது
  சொல்லி வைப்பாங்க - உன்
  வீரத்தைக் கொழுந்திலேயே
  கிள்ளி வைப்பாங்க
  வேலையற்ற வீணர்களின்
  மூளையற்ற வார்த்தைகளை
  வேடிக்கையாகக் கூட
  நம்பி விடாதே - நீ
  வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து
  வெம்பி விடாதே - நீ
  வெம்பி விடாதே"

  [பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்
  படம்: அரசிளங்குமரி, 1957]

  "ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உறுப்படாது"

  என்பார்கள்.[ அமீனா என்பவர் நீதிமன்றத்தில் பணிபுரியும் சிப்பந்தி. ]இது எனக்கு நெடு நாள் புரியவில்லை.பாவம் அப்பாவி பிராணி வீட்டினுள் நுழைந்தால் என்ன கேடு என்று நினைப்பேன்.பிறகுதான் அறிந்து கொண்டேன்.ஆமை என்று அப்பாவி உயிரினமான ஆமையைக்குறிப்பிடவில்லை என்று.

  ஒரு வீட்டில் இல்லாமை,பொறாமை,முயலாமை,கல்லாமை,உண்மை பேசாமை,முதியோர் பேணாமை,சுற்றம் சேர்க்காமை,அன்பு செலுத்தாமை,சிக்கனம் கொள்ளாமை,சீர்திருத்தம் இல்லாமை ,நிதானம் இல்லாமை ,பெரியோர் சொல் கேளாமைபோன்ற ஆமைகள் புகுந்து விட்டால் அந்த வீடு உறுப்படாது.சரிதானே?

  இவை எல்லாத்தையும் விட ,"பன்றியே" சகுனம் பார்த்ததாக ஒரு போடு போட்டுவிட்டார் பாண்டிய மன்னர் ஒருவர் .எப்படி இருக்குது மூட நம்பிக்கை.இதோ அந்த சங்க கால பாடல்:

  [புலவர் -உக்கிரப் பெருவழுதி]/( நற்றிணை - 98. (குறிஞ்சி)]:
  எய்ம் முள் அன்ன பரூஉ மயிர்எருத்தின்
  செய்ம்மம் மேவல் சிறு கட் பன்றி
  ஓங்கு மலை வியன் புனம் படீஇயர் வீங்கு பொறி
  நூழை நுழையும் பொழுதில் தாழாது
  பாங்கர்ப் பக்கத்துப் பல்லி பட்டென
  மெல்லமெல்லப் பிறக்கே பெயர்ந்து தன்
  கல் அளைப் பள்ளி வதியும் நாடன் ......
  [பொறி அமைக்கப்பட்ட புனத்தில் மேய்வதற்காகச் சிறிய கண்களைக் கொண்ட பன்றி
  ஒன்று வருகிறது. அது முள் போன்ற பிடரி மயிரைக் கொண்டிருந்தது. அது
  நுழையும் போது ஒரு குறித்த திசையிலிருந்து பல்லி கத்தியது. உடனே பன்றி
  நின்றது. ஏதோ ஒரு நுண் உணர்வு. அது திரும்பாமலேயே அப்படியே பின்னோக்கி
  மெதுவாக நகர்ந்து சென்று அதன் பின்னர் தப்பிச்சென்று விட்டது.]
  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

  ReplyDelete
 2. பரந்தாமன்Wednesday, September 19, 2012


  ஒரு வீட்டில் இல்லாமை,பொறாமை,முயலாமை,கல்லாமை,உண்மை பேசாமை,முதியோர் பேணாமை,சுற்றம் சேர்க்காமை,அன்பு செலுத்தாமை,சிக்கனம் கொள்ளாமை,சீர்திருத்தம் இல்லாமை ,நிதானம் இல்லாமை ,பெரியோர் சொல் கேளாமைபோன்ற ஆமைகள் புகுந்து விட்டால் அந்த வீடு உறுப்படாது.சரிதானே?

  ...கொன்னுட்டிங்க!

  ReplyDelete