தமிழரின் உணவு பழக்கங்கள்/பகுதி:16

[பண்டைய சங்க தமிழரின் உணவு பழக்கங்கள் தொடர்கிறது]
[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
அசைவ உணவுகளான-மீன்,ஆட்டிறைச்சி,மாட்டிறைச்சி,மான் கறி,போன்ற உணவுகளின் குறிப்புகள் சங்க பாடல்களில் புதைந்து கிடைக்கின்றன.என்றாலும் நீரும் நிலமும் சேர்ந்து உண்டாக்கிய உணவுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருந்தன.அதாவது சைவ உணவுகளான-சோறும் மற்றும் காய்கறி உணவுக்கும் ஆகும்.எனினும் சைவ,அசைவ உணவுகளுக்கிடையில் வேறுபாடு ஒன்றும் பெரிதாக அங்கு எடுத்துகாட்டப்படவில்லை.அது மட்டும் அல்ல,பெரும்பாலான குறிப்புகளில் இரண்டும் ஒன்றாக கலந்து சாப்பிடுவதாகவே உள்ளன.இதை அங்கு கண்டு எடுக்கப்பட்ட புதிய கற்காலம்,பெருங்கற்காலம்[Neolithic and megalithic] சார்ந்த தொல்பொருள் சான்றுகள் மேலும் உறுதிப்படுத்துகின்றன.அது மட்டும் அல்ல,வேட்டையாடும் கருவிகள்,இறைச்சி வாட்டப்பட்டதை உறுதிப்படுத்தும் கருகிய எலும்புகள்,எலும்புகளிலுள்ள மச்சை[marrow] அகற்றப்பட்டதற்கான அடையாளமாக,வெட்டப்பட்ட காயங்கள் உள்ள எலும்புகள் போன்றவையும் அங்கு கண்டு எடுக்கப்பட்டன.இது சமயம் அவர்களின் உணவை கட்டுப்படுத்தவில்லை என்றும் அல்லது அவர்களின் உணவு பழக்கங்களில் சமயம் ஈடுபடவில்லை என்றும் காட்டுகிறது.தமிழர்கள் மாட்டிறைச்சியை ஒரு உணவாக சாப்பிட்டதில் இருந்து,மாட்டை [பசுவை] தெய்வமாக்கி அதன் இறைச்சியை சாப்பாட்டில் இருந்து தவிர்த்தது,பொதுவாக வரலாற்று இடைக்காலத்தில்,தமிழரின் சமயம்,இந்து சமயத்திற்குள் உள்வாங்கப்பட்டதை தொடர்ந்து மாறிய சூழ்நிலையில் ஏற்பட்டது ஆகும்.


கரிகால் பெருவளத்தான் என்னும் அரசனிடம் பொருநன்[கூத்தன்] ஒருவன் பரிசு பெற்று வந்தான்.அவன்,தன் எதிரில் வந்த வேறு ஒரு பொருநனிடம் கரிகால் பெருவளத்தானிடம் சென்று பரிசு பெறும் வகையில் தனது அனுபவத்தை பகிருகையில்,அந்த கவிஞன் வரைந்து காட்டுவது போல மிக நுணுக்கமாக ஒவ்வொரு விவரங்களையும் வரிசைக்கிரமமாக பாடினான்.அதில்,அவன் மாறுபட்ட இயற்கை வனப்புடைய நிலங்களுக் கூடாக காஞ்சிபுரத்தை நோக்கி போகையில்,அந்த ஒவ்வொரு நிலத்திலும் வாழும் பண்டைய தமிழரின் வாழ்வை பற்றியும் அவர்களின்  உணவு பழக்கங்கள் பற்றியும்,தான் பாடிய சிறப்பு மிக்க பெரும்பாணாற்றுப்படையில் கூறிவைத்துள்ளான்.இதில் சமையல் குறிப்புகளை அல்லது சேர்மனங்களைப்பற்றி விபரமாக கூறாவிட்டாலும்,அந்த பண்டைய கால சமையல் பண்பாடு[கலாச்சாரம்] பற்றிய ஏராளமான தகவல்களை அங்கு அறியக்கூடியதாக உள்ளது.விசாலமான காட்டு வழியினூடாக சங்க கால கவிஞன் போகும் போது அங்கு ஈந்தின்[ஈச்சஞ் செடி] இலையாலே வேயப்பட்ட கூரை குடிசைகளை காண்கிறான்.ஈந்தின் இலை முள் போன்று இருக்கும்.எனவே கூரையில் அணிலும் எலியும் ஓடாமல் இருக்க ஈந்துக் குரம்பை குடிசைகளை பாலை நிலத்தில் வாழும் வேடுவர் பயன் படுத்தினர்.[ஈத்து இலை வேய்ந்த எய்ப்புறக் குரம்பை-88].இப்படிப்பட்ட
குடிசையில் வாழும் வேட்டுவப் பெண்களின் அன்றாடச் செயல்களை அழகுற வருணிக்கும் கவிஞன்,அவர்களின் செயல்களை கண்ணாற் காண்பதுபோல,வரிகள் 92-94,இல் சித்திரிக்கிறான்.இரும்புப் பூண் பிடித்த வலிமையான பாரையால் நிலத்தை புழுதி பறக்கக் கிண்டி,அந்தக் கரம்பு நிலப்[பயிரிடப்படாத மேட்டு நிலப்] புழுதியை அளைந்து[ துழாவி] அதில் கிடைக்கும் மென்மையான புல்லரிசியை [Grain of cluster grass] எடுத்து,பின்னர்க் குடிசைக்குத் திரும்பி,குடிசை முன்றிலில் விளாமர நிழலில் நிலத்திலேயே உள்ள பாறை உரலில் அந்த அரிசியை இட்டு,உலக்கையால் குற்றிக் கொழித்தெடுப்பர் என்கிறார்.[உளிவாய்ச் சுரையின் மிளிர மிண்டி,இருநிலக் கரம்பைப் படு நீறு ஆடி,நுண் புல் அடக்கிய வெண் பல் எயிற்றியர்,பார்வை யாத்த பறைதாள் விளவின்,நீழல் முன்றில் நிலவுரல் பெய்து].பின்னர் பாலை நில மகளிர்,கிணற்றில் ஊறியிருக்கின்ற உவர்நீரை எடுத்து வந்து,பழைய விளிம்பு உடைந்துபோன வாயை உடைய பானையில் ஊற்றி,உடைந்த அடுப்பில் வைத்து,அரியாது சமைத்த சோற்றை,காய்ந்த மாமிசத்துடன் சேர்த்து உண்பர் என்கிறார்.[குறுங்காழ் உலக்கை ஓச்சி நெடுங்கிணற்று, வல் ஊற்று உவரி தோண்டி தொல்லை, முரவுவாய்க் குழிசி முரி அடுப்பு ஏற்றி,வாராது அட்ட வாடு ஊன் புழுக்கல்,97-100].நீங்கள் அரசனைப் போற்றிப் புகழ வேண்டியதில்லை. அவன் செந் நிழல் தந்து நாட்டைக் காக்கும் தலைவன்,நாங்கள் அவனை எண்ணித் தலைமேற் கொண்டு வந்துள்ளோம்.என்று சொன்னாலே போதுமானது.நீங்கள் தெய்வத்திற்குப் பலியிடுமாறுபோலத் தேக்கிலையிலே மேலே சொன்னவாறு
விருந்தினைப் பெறுவீர்கள் என்று மேலும் கவிஞன் அறிவுரை வழங்கினான்.[செவ்வரை நாடன் சென்னியம் எனினே,தெய்வ மடையின் தேக்கிலைக் குவைஇ நும்,பைதீர் கடும்பொடு பதம் மிகப் பெறுகுவிர்,103-105 ].கானவர் விருந்து பற்றி கூறுகையில்,வேட்டையாடும் காட்டுப் பகுதியைத் தாண்டிச் சென்றால் வீட்டுப்பகுதி வரும்.அங்கே,செந்நெல் அரிசி கொண்டு சமைத்த சோறு,முள்ளம்பன்றிக் கறிக்குழம்பு, உடும்புக்கறி வறுவல், இந்த விருந்தினை ஆங்காங்கே போகுமிடமெல்லாம்  நீங்கள் பெறுவீர்கள் என்கிறார்.[கொடு வில் எயினக் குறும்பில் சேப்பின்,களர் வளர் ஈந்தின் காழ் கண்டன்ன,சுவல் விளை நெல்லின் செவ்அவிழ்ச் சொன்றி,குமலி தந்த மனவுச்சூல் உடும்பின்,வறைகால் யாத்தது வயின் தொறும் பெருகுவிர்,129-133].குறுஞ்சி பகுதியில்,திருடர்கள்,தன் சொற் கேளாத பகை மன்னருடைய காவலமைந்த நிலத்தே சென்று,விடியற்காலத்தே அவர்கள் கால்நடைகளைப் பற்றிக் கொணர்ந்து அவற்றைக் கள்ளுக்களில்  இனிதாகிய நெல்லாற் செய்த கள்ளுக்கு விலையாகப் போக்கி, அதனுடன் கவர்ந்து கொண்டு வந்த ஒரு வலிமையான காளையை மன்றத்தில் அடித்துத் துண்டாக்கி தின்றதை வர்ணிக்கிறது வரிகள் 140-143.[கேளா மன்னர் கடிபுலம் புக்கு,நாள்ஆ தந்து நறவு நொடை தொலைச்சி, இல்அடு கள்இன் தோப்பி பருகி,மல்லல் மன்றத்து மதவிடை கெண்டி,]

சங்க காலத்திலே வாழ்ந்த தமிழர் அன்றாடத் தேவையான அரிசி, பருப்பு, உப்பு, பால், தயிர், மீன்,இறைச்சி முதலான பொருள்களைக் காசு கொடுத்து வாங்காமல் பொதுவாக பண்டமாற்று செய்துகொண்டார்கள். கொண்டு வந்த பொருளுக்கு மாற்றாக மற்றொரு பொருளை தரும் வணிக வழக்கம்தான் இந்த ஆரம்பகால வணிக வழக்கமாகும்.அங்கு நெல்லே பிரதான பரிமாற்ற ஊடகமாக இருந்தது,இதை தொடர்ந்து உப்பு இரண்டாவது இடத்தை வகுத்தது.உதாரணமாக தேன்,கிழங்குவகைகள் பொதுவாக மீன் எண்ணெய்க்கும் கள்ளுக்கும் பரிமாறப்பட்டன.அதேவேளை,கரும்பு,அவல் போன்றவை மான் இறைச்சி,கள்ளு போன்றவற்றிற்கு பரிமாறப்பட்டன.சங்க பாடல்கள், உதாரணமாக புறநானுறு பாடல் ஒன்று,பாண்டிய நாட்டில்,நெல்லை பருப்பு வகைக்கும் மீனுக்கும் பரிமாறப்பட்டதை
உறுதிப்படுத்துகிறது.மேலும் அகநானுறு 140,"காதல் மட மகள்,சில் கோல் எல்வளை தெளிர்ப்ப வீசி,நெல்லின் நேரே வெண் கல் உப்பு எனச்,சேரி விலைமாறு கூறலின்" என்ற அடிகள்- உப்பளத்தில் உழாமல் விளையும் உப்புக்கு ஒரு விலையிட்டு,வெண்ணிறக் கல் உப்பு நெல்லுக்கு ஒத்த அளவினதே எனச் சேரியின்கண் பண்ட மாற்றாக விலை கூறி, உப்பு வணிகரின் இளையமகள் உப்பை விற்றாள் என்று கூறுகிறது.அதி காலையில்,பறவைகள் எழும்போதே எழுந்து,புலிபோலும் முழக்கத்தையுடைய மத்தினை ஆரவாரிக்கும்படி கயிற்றை இழுத்து ஆயர் மகளிர் தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுத்து நெய் காய்ச்சினார்கள்.தயிரையும் மோரையும் பண்ட மாற்று செய்து தானியத்தைப் பெற்று உணவு சமைத்து உண்டதைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் முல்லை நிலத்தின் ஊடாக போகையில் காண்கிறார்.[புலிக்குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி,ஆம்பி வால்முகை அன்ன கூம்பு முகிழ்,உறை அமை தீம் தயிர் கலக்கி நுரை தெரிந்து,புகர்வாய்க் குழிசி பூஞ்சுமட்டு இரீஇ,நாள் மோர் மாறும்,155-160 ].இறுதியாக அவ்விடையர் குடியின் விருந்தோம்பற் சிறப்பை விளக்குகையில்,அவர்களின் குடியிருப்பை நீ சேரும்போது,நண்டின் சிறிய குஞ்சுகளைப் போன்ற
செவ்விய தினையரிசியால் சமைத்த சோற்றைப் பாலுடன் கலந்து தருவார்கள் என்கிறார்.[குடி வயிற் சேப்பின்,இருங்கிளை ஞெண்டின் சிறுபார்ப்பு அன்ன,பசுந்தினை மூரல் பாலொடும் பெறுகுவிர்,165-167].நீ மேலும் நடந்து போனால்,மருதநிலப் பகுதியை அடைவாய்.பசியையும் வறுமையையும் அறியாத-செல்வம் நிறைந்த-இந்த ஊரிலே தங்கினால்,சோம்பலின்றித் தூங்காமல் பாடுபடும் உழவுத் தொழிலாளர்கள் விளைவித்துத் தந்த வெண்மையான நெற்சோறும் அதனுடன் வீட்டிலே வளர்ந்த பெட்டைக்கோழியின் பொரியலும் கிடைக்கும் என அறிவுறுத்துகிறார்.[தொல்பசி அறியாத் துளங்கா இருக்கை,மல்லல் பேர்ஊர் மடியின் மடியா ,வினைஞர் தந்த வெண்ணெல் வல்சி,மனைவாழ் அளகின் வாட்டொடும் பெறுகுவிர்,253--256 ].

பகுதி :17 தொடரும்.........................................................................................

0 comments:

Post a Comment