தமிழரின் உணவு பழக்கங்கள்/பகுதி:15

[பண்டைய சங்க தமிழரின் உணவு பழக்கங்கள் தொடர்கிறது]
சங்கத்தமிழரின் உணவுமரபை ஒரு இளமனைவியின் கதையாகவே கொடுக்கிறது கி மு 200 ஆண்டை சேர்ந்த குறுந்தொகை 167.மேலும் அந்த இளம் குடும்பப்பெண் தித்திக்கும் புளிச்சுவை நிறைந்த மோர்க்குழம்பை அல்லது புளிக்குழம்பை ஆக்குவதில் கொண்டிருந்த ஆழமான ஈடுபாட்டை ஒவ்வொரு வரிகள் ஊடாகவும்,அதே நேரம் அந்த உணவு ஆக்கும் முறையையும் நாம் அதில் அறிய முடிகிறது.
தலைவனும் தலைவியும் பிறர் நன்கு அறியாதபடி மறைவாக கண்டு காதல் கொண்டு,பெற்றோரின் சம்மதம் இன்றி,களவு மணம் செய்து இருவரும் தனிக்குடித்தனம் சென்றனர்.துடித்துப் போனாள் மணப் பெண்ணின் தாய்.பொறுப்பேதுமின்றி,செல்வச் செழிப்புடன்,உலாவித் திரிந்தவளால் தனக்குடித்தனம் நடத்த முடியுமா? அடுப்பங்கரையே தெரியாதவள் எப்படி ஆக்கிப்போடுவாள்?அமைதி கொள்ள முடியாத தாய்,தன் தோழியை அழைத்து மகளின் தனிக்குடித்தனத்தின் சிறப்பை கண்டு வருமாறு கேட்டுக்கொண்டாள்.அதன் படி,எப்படி இல்லறம் நடத்துகிறாள் என்பதைப் பார்க்கப் போன செவிலிக்குக் கிடைத்த அருமையான காட்சி இங்கு கவிதையாகிறது.தலைவன் வெளியே சென்று விட்டான்,தன் தலைவனுக்காக உணவு ஆக்கும் பணியில் இறங்கினாள் அந்த இளம் தலைவி.முதல் காட்சியில் தலைவி சமையல் செய்கிறாள்.நன்கு முற்றிய கட்டியாகியிருந்த தயிரை உறியிலிருந்து இறக்கி எடுத்து,அந்த கெட்டித் தயிரை தன் மெல்லிய விரல்களால் பிசைகிறாள்;அவ்வேளை,அவள் திடுமென எழுகிறாள். அப்பொழுது,
அவள் அணிந்திருந்த சேலை நழுவி விட்டது.கை கழுவிப் பின் சேலையைச் செருகி மீண்டும் தயிரைத் தொட்டால் தயிரின் பதம் கெட்டுவிடும் என்பதால்,அது அழுக்காகி விடும் என்று தெரிந்தும்,உடனே தயிர் பிசைந்த கையால் பற்றி ஆடையை உடுத்துக் கொள்கிறாள். நெய்யோடு கடுகு மிளகு என்பன இட்டுத் தாளித்துப் பின் பிசைந்த தயிர் ஊற்றி மோர்க்குழம்பு செய்தாக வேண்டும்.அப்படி முறைப்படி  தாளிக்கும்போது,கடுகும் மிளகும் இன்ன பிறவும் நெய்யில் வதங்கிப் பொரிய,புகை பொங்கி எழுந்தது,கண்களில் புகை நிறைகிறது;எனினும் அதனை அவள் பொருட்­ப­டுத்­தாது கண்ணைக் கசக்கியபடி துழாவி  துழாவி இத­மாகச் சமைத்தாள்.தாளித்த[கறி] சட்டியை விட்டு அவள் விலகவேயில்லை.சற்றே விலகினாலும் சுவை மாறிவிடும் என்பதால்.இவ்வாறு புளிக்குழம்பு செய்து முடிக்கிறாள் தலைவி.அடுத்த காட்சியில் தலைவன் உண்டு கொண்டிருக்கிறான். ‘இனிது’ என்கிறான்.தலைவியின் முகத்தில் சொல்ல முடியாத மிக நுட்பமான மகிழ்ச்சி பரவுகிறது. செவிலி வருணிக்கும் காட்சியில் கேட்கும் ஒரே பேச்சுக்குரல் தலைவன் சொன்ன “இனிது” என்ற ஒற்றைச் சொல்தான்.மற்றபடி இது அன்பினால் இயக்கப்பட்ட ஒரு மௌன நாடகம் ஆகும்.

“முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்   
கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக் 
குவளை யுண்கண் குய்ப்புகை கமழத் 
தான் றுழந் தட்ட தீம்புளிப் பாகர் 
இனிதெனக் கணவ னுண்டலின் 
நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதன் முகனே.” -குறுந்தொகை 167

தமிழில் எழுதப்பட்ட சமையல் நூல் ஒன்று சங்க காலத்தில் இருந்ததாக சிறுபாணாற்றுப்படை,வரிகள் 238-241, குறிப்பிடுகிறது.அதில்,ஒய்மான் நாட்டு மன்னனான நல்லியக்கோடன் பாணர்களுக்கு விருந்து படைக்கும்போது இந்த நூலிலுள்ள முறைமை வழுவாமல் சமைக்கப்பட்ட உணவை இட்டானாம் என்கிறது. இந்த நூல் அருச்சுனனின் அண்ணன் வீமனால் எழுதப்பட்டதாம்.ஆகவே இது வடமொழி நூலைத் தழுவியதாக இருக்கலாம்.எனினும் இலக்கியத் தொகுப்பிற்கு முன்பாகவே இந்நூல் அழிந்துவிட்டது போலும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சமையல் தொடர்பாகத் தனித்துவமான ஒரு நூல் இருந்தது என்ற செய்தியால்,நாம் அக்கால தமிழரின் உணவு மரபின் சிறப்பைக் காணக்கூடியதாக இருக்கிறது.

“கா எரியூட்டிய கவர் கணைத் தூணிப்
பூ விரி கச்சைப் புகழோன் தன்முன்,
பனிவரை மார்பன், பயந்த நுண் பொருள்
பனுவலின் வழாஅப் பல் வேறு அடிசில்,"
-சிறுபாணாற்றுப்படை 238-241 

மேலும் அங்கு காணப்பட்ட உணவுமரபு வளர்ச்சியின் உன்னதமான
நிலை, வீடுகள் தோறும் தனியாக ‘சமையலறை’ என்று ஒன்று அமைய காரணமாக இருந்திருக்க கூடும்.அவற்றை அட்டில் என சங்க தமிழர் அழைத்தனர்.அது மட்டுமா,மிக நுணுக்கமாக உணவருந்தும் முறைகளை ஆய்வு செய்து,அதன் அடிப்படையில் பொருத்தமாக உணவு உண்ணும் பன்னிரெண்டு முறைகளை தந்துள்ளார்கள் என்பதும் அவர்களின் அக்கால உணவு மரபின் சிறப்பைக் காட்டுகின்றது.

அருந்துதல் - மிகச் சிறிய அளவு உட்கொள்ளல்.
உண்ணல் - தாராளமாக பசிதீர உட்கொள்ளல்.
உறிஞ்சல் - வாயைக் குவித்துக்கொண்டு திரவத்தை உறிஞ்சி உட்கொள்ளல்.
குடித்தல் - திரவ உணவை (கஞ்சி போன்றவை) மெல்ல மெல்ல பசி போக்க  உட்கொள்ளல்.
தின்றல் - தின்பண்டங்களை உட்கொள்ளல்.
துய்த்தல் - மகிழ்ந்து,சுவைத்து உட்கொள்ளுதல்.
நக்கல் - நாவினால் துலாவி உட்கொள்ளுதல்.
நுங்கல் - முழுவதையும் ஓர் வாயில் ஈர்த்துறிஞ்சி உட்கொள்ளுதல்.
பருகல் -திரவிய பண்டத்தை சிறுகக் குடிப்பது.
மாந்தல் - பெருவேட்கையுடன் மடமடவென்று உட்கொள்ளுதல்.
மெல்லல் - கடிய பண்டத்தைப் பல்லால் கடித்துத் துகைத்து உட்கொள்ளுதல்.
விழுங்கல் - பல்லுக்கும் நாக்குக்கும் இடையே தொண்டை வழி உட்கொள்ளுதல் ஆகும்.

பகுதி :16 தொடரும்.......... 0 comments:

Post a Comment