இருக்கும் இடத்தை விட்டு...


இருப்பதை விட்டு பறப்பதைப் பிடிக்க ஆசைப்படுபவர்கள் அதிகமாகி விட்டார்கள். ஆசை... ஆசை..ஆசை...ஆசை காரணமாக, எத்தனையோ பேர் போலி நிதி நிறுவனங்கள், ஏமாற்றுப்பேர் வழிகளிடம் சிக்கி வாழ்க்கையையே தொலைத்துக் கொள்கிறார்கள். நம்மிடம் என்ன இருக்கிறதோ, அதைக் கொண்டு வாழ்க்கை நடத்துவதே புத்திசாலித்தனம். கடைசி வரை அதுதான் நிலைக்கும்.
ஒரு சர்க்கஸ் கம்பெனியில் புலி, சிங்கம், கரடி என எல்லா மிருகங்களையும் கூண்டில் அடைத்திருந்தனர். அதில் ஒரு கரடி, பிறந்த புதிதிலேயே இந்த சர்க்கஸ் கம்பெனிக்கு எப்படியோ வந்து சேர்ந்து விட்டது. கம்பெனிக்காரர்கள் அன்றாடம் கொடுக்கும் உணவைச் சாப்பிட்டுக் கொண்டு, வித்தை காட்டியது. ஒருநாள், அதற்கு ஆசை வந்துவிட்டது.
""காட்டில் இருக்க வேண்டிய நாம், நாட்டில் இருக்கிறோம். அங்கேயே சென்று விட்டால் என்ன! '' என்று நினைத்தது. ஒருநாள், கூண்டில் இருந்து தப்பி காட்டுக்குப் போய் விட்டது. அங்கே, மற்ற கரடிகள் ஒரு புதுக்கரடி வந்திருப்பதைப் பார்த்து அதைத் தாக்க ஆரம்பித்தன. மேலும், அவை வேகமாக மரம் ஏறி கனி வகைகளைச் சாப்பிட்டன. இதற்கோ, பயிற்சி இல்லாததால் மரம் ஏற முடியவில்லை.
உணவும் கிடைக்கவில்லை.

பசியாலும், தாக்குதலால் வேதனையும் தாங்காத கரடி, ""அங்கேயாவது வேளா வேளைக்கு சாப்பாடு போட்டார்கள். இங்கே ஒன்றும் கிடைக்க வில்லையே,'' என கம்பெனிக்கே திரும்பி விட்டது. தப்பித்துப் போனதால், கோபத்தில் இருந்த கரடி மாஸ்டர் அதை அடிஅடியென அடித்ததையும் வாங்கிக் கொண்டது. அவரவர் தகுதிக்கேற்ப, இருக்கிற இடமே சொர்க்கம் என இருக்க வேண்டும். தகுதியை மீறி கால் வைத்தால் சிரமப்படுவது உறுதி.

0 comments:

Post a Comment