பண்டைய தமிழ் பாடல்களில் "விஞ்ஞானம் [01/06]ஒரு சிறு தொகுப்பு :
 [Science in the Ancient Tamil Poetries  ]
[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
Compiled by: Kandiah Thillaivinayagalingam]

பகுதி:01"முன்னுரை "

நாம் இப் பொழுது பாடசாலையில் பயிலும் போது ஆங் ஆங்கே  சில விஞ்ஞான ,கணித உண்மைகளை,சான்றுகளை   படிக்கிறோம். பொதுவாக  நாம் நம்புவது ,விளங்கிக்கொள்வது ,இந்த உண்மைகளை, சான்றுகளை  கண்டு பிடித்தவர்கள் எல்லோரும் மேல் நாட்டவர்கள் என்று.ஆனால் பல உண்மைகள்நிறுவல்கள்  எமது பண்டைய தமிழ் பாடல்களில் புதைந்து உள்ளது. அவர்கள் விட்ட தவறு ,அந்த உண்மைகளை மேலும் ஆராய்ச்சி செய்யாததும்,அவைகளை ஆதாரத்துடன் சான்று பகராததும் ஆகும்.

 

அவர்கள் ஒரு அனுபவ ,உணர்வு வழியில் அவைகளை மேலோட்டமாக அறிந்து வைத்துள்ளார்கள்அவைகளை  ஆங்  ஆங்கே பாடல்களில் உவமையாகவும் ,எடுத்துக்காட்டாகவும்  கூறியுள்ளார்கள். அவ்வளவுதான். அதற்குமேல் முயற்சி செய்யவில்லை. இப்போது நாம் அவர்களின் அந்த பாடல்களை நுணுக்கமாக அணுகும்போது ,எமக்கு தெரிந்த ,நாம் கற்ற அந்த உண்மைகள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே  தமிழர்களுக்கு ,எமது மூதையர்களுக்கு தெரிந்து இருப்பதையிட்டு ஆச்சரியமாகவும், அதே நேரம் அந்த பெரும் விஞ்ஞான உண்மைகளை வெறும்  உவைமைகளாக  மட்டுமே பாவித்தார்கள் என்று அறியும் போது கோபமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது ,

உதாரணமாக கணிதத்தில் ,மிகச் சிறிய  பின்னம்:

[ இம்மி,அணு,வெள்ளம்,நுண்மணல், தேர்த்துகள்] முதல்   மிகப் பெரிய எண் [சங்கம்,வெள்ளம்.ஆம்பல், மத்தியம்,பரார்த்தம்,பூரியம்.....,கோடிக்கு மேல் உள்ள எண்களைத் தொல்காப்பியர் அல்பெயர் எண் என்று குறிப்பிடுகிறார். தாமரை, வெள்ளம், ஆம்பல்,..... என்பவை அந்த எண்கள்.] வரை கூறியிருப்பதுடன் வட்டம், செங்கோண முக்கோணம் போன்றவற்றின் சில இயல்புகளையும் கூறியுள்ளார்கள்.அதே போல அணுவைப்பற்றி ["சாணிலும் உளன் ; ஓர் தன்மை அணுவினைச் சத கூறு இட்ட கோணினும் உளன்"-கம்பமராமாயணம் - இரணியன் வதைப் படலம்- ], தாவரங்களின் உணர்வைப்பற்றி,சூரியனை கிரகங்கள் சுற்றுவதைப்பற்றி ,வானவில்லின் தோற்றத்தைப்பற்றி, மழையின்  தோற்றத்தைப் பற்றி, உலோக வார்ப்பு  பற்றி  ["முதைப்புனங் கொன்ற ஆர்கலி உழவர் விதைக்குறு வட்டி போதொடு பொதுளப் பொழுதோ தான் வந்தன்றே  மெழுகு ஆன்று ஊது உலைப் பெய்த பகுவாய்த் தெண்மணி..."-குறுந்தொகை 155] கல்லணை பற்றி ["... கொடும் சிறை  மீது அழி கடுநீர் நோக்கிப் பைப்பயப் பார்வல் இருக்கும் பயம் கேழ் ஊர"-அகநானூறு 346], கட்டிட கலை பற்றி ["நூல்அறி புலவர் நுண்ணிதின் கயிறுஇட்டு தேஎம் கொண்டு, தெய்வம் நோக்கிபெரும்பெயர் மன்னர்க்கு ஒப்ப மனைவகுத்து"  -நெடுநல்வாடை(72- 78)],வானில் செல்லும் இயந்திரம் பற்றி [“வலவன் ஏவா வான ஊர்தி“-புறநானூறு 27],கடற்கோள் பற்றி [பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடும்  கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும்  இமயமும் கொண்டு தென்திசை ஆண்ட தென்னவன் வாழி’-சிலப்பதிகாரத்தின் மதுரைக் காண்டம்]

-இப்படி கூறியது மட்டுமல்ல ,இன்றைய நாகரிக உலகில் நம் பெண்கள் தம்மை அழகு இராணியாக்க கையாளும் "பூச்சிய உடல் பருமன் அளவை"க்கூட  சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் காதலன்,காதலியை வர்ணிக்கும் உவமை மூலம் கூறிவிட்டார் என்றால் பாருங்களேன்!

இதோ அந்த பாடல்:

[சிலப்பதிகாரம்:கி. பி.முதலாம் /இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது ]

வேறு (திணை நிலைவரி)/சிலப்பதிகாரம்:

"கடல்புக்கு உயிர்க்கொன்று வாழ்வர்நின் ஐயர்

உடல்புக்கு உயிர்க்கொன்று வாழ்வைமன் நீயும்

மிடல்புக்கு அடங்காத வெம்முலையோ பாரம்

இடர்புக்கு இடுகும் இடைஇழவல் கண்டாய்.  [17]

 

கொடுங்கண் வலையால் உயிர்க்கொல்வான் நுந்தை

நெடுங்கண் வலையால் உயிர்க்கொல்வை மன்நீயும்

வடம்கொள் முலையால் மழைமின்னுப் போல

நுடங்கி உகுமென் நுசுப்புஇழவல் காண்டாய்.  [18]

 

ஓடும் திமில்கொண்டு உயிர்க்கொள்வர் நின்ஐயர்

கோடும் புருவத்து உயிர்க்கொல்வை மன்நீயும்

பீடும் பிறர்எவ்வம் பாராய் முலைசுமந்து

வாடும் சிறுமென் மருங்குஇழவல் கண்டாய்." [19]

 

இதன் பொருள்:

 

:உன்  தமையன்மார் கடலில்  அங்குள்ள உயிரினங்களைக் கொன்று தமது வாழ்க்கையை நடத்துகின்றனர். நீயோ அவரினும் காட்டிற் கொடுந் தொழில் செய்கின்றாய்! என் கண் வழியே புகுந்து அங்கு வாழும் என்னுயிரைக் கொன்று வாழ்கின்றாய் .உன்னுடைய வெவ்விய முலைகலின் சுமை பொறாது உன்னிடையானது இப்பொழுதே மெலிகின்றது. நீ இயங்கின் அது முறியும்.இனி இயங்கி அவ்விடையை இழந்துவிடாதே

 

:உன் தந்தையோ வலையினாலே உயிர்களைக் கொல்லும் கொடுந்தொழிலுடையான்; நீ  அவனினும் காட்டில் உன்னுடைய நெடிய கண் வலையாலே உயிர் கொல்கின்றாய் நீ இனி இயங்காதே இயங்கின், தாமே பெருஞ்சுமையாகவும் அச்சுமையின் மேற் சுமையாய் முத்துவடத்தையும் ஏற்றியிருக்கின்ற கொடிய முலையால் உன் இடை  வளைந்து முரியும் அவ்விடையை நீ இழந்துவிடாதே

 

:உன்தமையன்மார் கடலிற் சென்று அங்கு வாழும் உயிர்களைக் கொல்வார்நீ அத்தொழிலில் அவர்களினுங் காட்டில் திறன் மிகவுடையாய் பிறருடைய பெருமையையும் துன்பத்தையும் பாராமல்; நீயும்  உன் புருவத்தால் கொல்வாய். இப்பொழுதே உனது பாரிய முலைகளைச் சுமத்தலாலே உன்னுடைய சிறிய மெல்லிய இடை வருந்தி வாட்டமுடையதாகின்றது. அதனையும் இழந்துவிடாதே

 

எவ்வளவு கற்பனை நயத்துடன் பாடியிருக்கிறார்  என்று பாருங்கள். மேலும் இடை முறிந்து[ஒடிந்து] விடும் என்பதில் இருந்து எவ்வளவு சிறிய மெல்லிய இடை  என்பதை அறியலாம். இடை பருமன்  பூச்சியத்தை  அடைந்தத பின் தானே முறியலாம் ?

நாம் இனி மேற்கூறிய சிலவற்றை அடுத்த இதழில் பார்ப்போம்.

பகுதி:02  தொடரும்.. வாசிக்க அழுத்துங்கள்👉Theebam.com: பண்டைய தமிழ் பாடல்களில் "விஞ்ஞானம்"[பகுதி:02.OF.06]:4 comments:

 1. பண்டைய தமிழ் பாடல்களில் "விஞ்ஞானம்"
  ஆரம்பமே மேலும் அறியவேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது.தொடரட்டும்......

  ReplyDelete
 2. தமிழர் அறிவு வளர்ச்சியில் எப்படி வாழ்ந்தார்கள் என்பது ஆரியரின் இராமாயணத்திலும் புரிகிறது.இராவணனால்,சூர்ப்பனகையால் இந்தியா பலமுறையும் போய் வர முடிந்தது.தமிழன் (என்பதால் குரங்க்காகக் குறிப்பிடப்பட்டான்)அனுமாரால் இலங்கை போய் வரமுடிந்தது.ஆனால் ஆரியன் என்பதால் கடவுளாக்கப்பட்ட இராமனுக்கு மட்டும் பாலம் தேவைப் பட்டது.அதற்கும் தமிழர் உதவியே தேவைப்பட்டது.

  ReplyDelete
 3. கந்தையா தில்லைவிநாயகலிங்கம்Saturday, January 19, 2013

  பறவை வாணில் பறப்பதை பார்த்து நாம் ஏன் அது போல் ஒரு சாதனத்தை உருவாக்க முடியாது என்ற கேள்வி எழுந்ததன் விளைவாக 17 டிசம்பர் 1903 ஆம் ஆண்டு ஓர்வில் ரைட் மற்றும் வில்பர் ரைட் என்ற இரட்டை சகோரதர்கள் விமானத்தை உருவாக்கி உலகையே வியக்க செய்தனர்....

  இராமாயணத்தில் விமானங்கள் பற்றி பல சந்தர்ப்பங்களில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இராவணன் என்ற தமிழன் பயண்படுத்திய புட்பக/புஷ்பக விமானத்தை கருதலாம். ...

  இந்த விமானத்திலே தான் , சீதையை மண்ணோடு பெயர்த்து இராவணன் கவர்ந்து சென்றான்.

  இராமாயணத்தை கதையாகவே வைத்துக் கொண்டாலும், விமானம் என்ற ஒரு கருதுகோளை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே முன் வைத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

  அது போலவே இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே தமிழ் புலவரான கடியலூர் உருத்திரங்கண்ணனார் பட்டினப்பாலையில் சூரியனையே ஏனைய கோள்கள் சுற்றி வருகின்றன என்று தெளிவாக கூறியள்ளார்

  "நீனிற விசும்பின் வலனேர்பு திரிதரு
  நாண்மீன் விராய கோண்மீன் போல,
  மலர் தலை மன்றத்தும் பலருடன் குழீகிக்,
  கையினும் கலத்தினும் மெய்யுறத் தீண்டிப்,
  பெருஞ்சினத்தாற் புறக்கொடாஅ,
  திருஞ்செருவின் இகன்மொய்ம்பினோர்."

  சூரியனை சுற்றி வரும் கோள்களை போன்றே இந்த வீரனை அனைவரும் சூழ்ந்து கொண்டு தாக்குகின்றனர். ஆனால் இந்த வீரன் ஒருவனே அனைவரையும் சமாளிக்கின்றான் இப்பாடலில் மாவீரமும், “மாவிஞ்ஞானமும்” வெளிப்படுகிறது….??!!

  அதுமட்டும் அல்ல ,இந்த "E-Mail"யை இப்ப நான் அனுப்புவதற்கு ,அதை கண்டு பிடித்தவனே ஒரு தமிழன் என்னும் பொழுது "என்ன தவம் நான் செய்தேன் தமிழனாய் பிறப்பதற்கு" என்று பெருமை பட வேண்டி உள்ளது .

  இன்று உலகையே ஒருவலைக்குள் இணைத்த பெருமைக்குரிய இ மெயில் வசதியை தமிழர் ஒருவர் தான் கண்டு பிடித்தார். அதற்கான காப்புரிமையையும் பெற்றுள்ளார். அவர் பெயர் வி ஏ சிவா அய்யாத்துரை. இன்றைக்கு 49 வயது நிர ம்பிய இவர், தனது 14வது வயதிலேயே இந்த மின்னஞ்சல் தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்து அறிமுகப்படுத்தி விட்டார். இமெயில் என்ற பெயரையும், Inbox, Outbox, Drafts, the Memo (“To:”, “From: ”, “Subject:”, “Bcc:”, “Cc:”, “Date:”, “Body:”), and processes such as Forwarding, Broadcasting, Attachments, Registered Mail, and others அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய தகவல் பரிமாற்றத்தை இவர்தான் கண்டுபிடித்தார்.அவருக்கு முதலில் அந்த அங்கீகாரத்தை கொடுக்கவில்லை அமெரிக்கா. அதனால் இமெயில் காப்புரிமைக்கு பலரும் சொந்தம் கொண்டாடினர். நான்கு ஆண்டுகள் கழித்து அமெரிக்க அரசாங்கம், 1982 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் நாள் முறையாக வி.ஏ.சிவா அய்யாதுரையின் புதிய கண்டுபிடிப்பான ‘இ மெயில்’ ஐ அங்கீகரித்து காப்பி ரைட் வழங்கியது.

  ReplyDelete
 4. சந்திராThursday, October 20, 2016

  என்னவோ எதோ பழைய பெருமை பெரிதுதான். பெருமைப்படவேண்டியதுதான். இருந்தும் என்ன பயன்?
  தற்போது தமிழனுக்கு என்று சொல்ல ஒரு நாடு உள்ளதா?
  அல்லது தமிழன் வாழும் இடங்கள்தானும் என்னவோ செழிப்பான பிரதேசங்களா?
  மற்றையவர்கள் வேண்டாம் என்று கழித்து விடட, வறண்ட, செழிப்பற்ற, பிரயோசனமற்ற நிலங்களில்தானே இப்போது தமிழன் வாழ்கின்றான்!
  நீருக்கும், உணவுக்கும் மற்றயவர்களை சார்ந்து நிற்கும் நிலைமைதானே உலகில் உள்ள தமிழர் அனைவருக்கும்!

  ReplyDelete