"இது காதலா ? காமமா ?"

  

வவுனியா காட்டின் ஒரு எல்லையில் அமைந்த ஒரு குக் கிராமம் அது. பொதுவாக அங்கு எல்லா வீடுகளும் மண் வீடாக இருக்கும் பொழுது ஒரு வீடு மட்டும் கல் வீடாக அங்கு தனித்து காணப்பட்டது. அந்த வீட்டின் இளவரசி தான் எம் கதாநாயகி. அழகிலும் அதே நேரத்தில் படிப்பிலும் சிறந்து விளங்கிய அவள், அருகில் உள்ள பாடசாலையில் உயர் வகுப்பில், விஞ்ஞான பிரிவில் கற்று வந்தாள். அவளின் அழகும் நளினமும் மற்றும் உடையும் கண்டு மயங்காத  ஆண் மாணவர்களோ  அல்லது ஆசிரியர்களோ இல்லை என்றே சொல்லலாம்.

 

அதே பாடசாலையில் குழப்படி பையன் என பெயர்பெற்ற, ஆனால் கம்பீரமான மிடுக்கான ஒரு பையன் இருந்தான். அவன் ஏற்கனவே உயர்தர பரீட்சை எடுத்து இரு முறையும் கோட்டை விட்டவன். என்றாலும் பாடசாலை அருகில் இருக்கும் மதவில் தன் கூட்டாளிகளுடன் இருந்து மாணவிகளை கிண்டல் செய்வான். அவனின் கடைக்கண் இப்ப எம் இளவரசியின் மேல். தான் எப்படியும் அவளை மடக்க வேண்டும். அது தான் இப்ப அவனின் எண்ணம். அவன் வலையில் ஏற்கனவே சிக்கி சில மாணவிகள் பட்ட துயரம் வேறு. அது எம் இளவரசிக்கும் நன்றாக தெரியும். எனவே அவன் லீலைகள் ஒன்றும் அவளிடம் பலிக்கவில்லை. ஆனால் அவன் விடுவதாக இல்லை. அவன் அவளின் அன்றாட நடவடிக்கைகளை நோட்டமிட தொடங்கினான். எங்கேயாவது ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமோ என்று. அது அவளுக்கு தெரியாது?

 

அவள் வழமைபோல, பாடசாலையின் பின், வீட்டிற்கு விறகு பொறுக்க  அன்றும் தன் தங்கையுடன் சென்றாள். அவள் என்ன நினைத்தாளோ தெரியாது, தங்கையை ஒரு பக்கமும், தான் மறுபக்கமுமாக சென்று விறகு பொறுக்க தொடங்கினாள். அவளையே, அவளுக்கு தெரியாமல் கவனித்துக்கொண்டு வந்த அந்த வாலிபன், தன் துவிச்சக்கர வண்டியை ஒரு மரத்துடன் சாத்திவிட்டு, திடீரென பின்னல் வந்து கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து விட்டான். எம் இளவரசி அப்படியே திகைத்து என்ன செய்வது என்று தெரியாமல் நின்றுவிட்டாள்.

 

தங்கை பக்கத்தில் தான் விறகு பொறுக்கிறாள். சத்தம் போட்டால் உடனே வந்திருப்பாள். ஆனால் அவள் செய்யவில்லைஅவள் "இன்னோவா" உண்டாக்கிய மலைப்பில் அப்படியே சிலையாட்டம் நின்றுவிட்டாள். அவனுக்கு அது இலகுவாக போய்விட்டது. தடுக்கவும் இல்லை அணைக்கவும் இல்லை .

 

எனக்கு  அகலிகை - இந்திரன் கதை ஞாபகம் வருகிறது. பிரம்மச்சரிய விரதத்தை  கடைப்பிடித்ததால் அகலிகையுடன் கௌதமர்  உடல் சேர்க்கையில் ஈடுபடுவதில்லை. கணவருக்கு பணிவிடை செய்வதிலேயே அகலிகை பொழுதை கழித்தாள். ஆனாலும் அவ்வப்போது காம உணர்ச்சி அகலிகைக்கு எழும். அகலிகை மேல் காமம் கொண்ட இந்திரன், ஒரு நாள் பின்னிரவில் சேவல் போல் கூவ, கௌதமரும் விடிந்து விட்டது என எண்ணி நீராட செல்ல, இந்திரன் கௌதமர் உருவில் அங்கு வந்து அவளுடன் உடல்சேர்க்கையில் ஈடுபட்டார். என்றாலும் பிற்பாடு அது இந்திரன் என்று அவள் உணர்ந்தாலும், அமைதியாய் இருந்ததாக  ராமாயணத்தில் உண்டு. அப்படித்தான் எம் கதாநாயகியும் இருந்தார்?

 

எம் கதாநாயகி அதை வன்முறை என்று எடுக்கவில்லை. அவள் மனதில் எதோ சந்தோசம். அதற்கு நியாயம் கற்பிப்பது போல

 

"எனக்கு காதலும் வரவில்லை காமமும் வரவில்லை. ஆடவன் ஒருவன் என் உடலை தீண்டிவிட்டான் என்று விருப்பமோ விருப்பம் இல்லையோ இவன் என் கணவன் என்று பட்டிக்காடு நான் முடிவு எடுத்து அமைதியாக நின்றேன்" என தனக்கு தானே சொல்லிக்கொண்டாள். என் தந்தையார் கண்ணகி. சீதை .... இப்படியான சரித்திர கதைப் புத்தகங்களை வாங்கித் தருவார் அவற்றை வாசித்து, நானும் என்னை அவர்களைப் போல் எண்ணிய பட்டிக்காடு என்பது அவரின் பிந்திய வாதம்.


எத்தனையோ போராட்டத்தின் பின், ஏறத்தாழ ஐந்து வருடத்தின் பின், அவன் அரேபியாவில் இருந்து நாடு வந்ததும், அவள் அவனையே திருமணம் செய்தாலும். அது தொடக்கத்தில் இருந்தே தடுமாறிக்கொண்டே இருந்தது. அதிலும் ஆச்சரியம் என்னவென்றால் முதல் இரவே அவளுக்கு அதிர்ச்சி கொடுத்த சம்பவம் தான். அரேபியாவில் அவனின் பெண் நண்பியான, யாரோ ஒரு யயந்தி பற்றியே அவனின் கதை முழுக்க முழுக்க இருந்தது. அவள் இத்தனைக்கும் இடையிலும், தன் கோபம், உணர்ச்சி எல்லாவற்றையும் கட்டுப் படுத்திக்கொண்டு, 'நீங்கள் அழகாக இருக்கின்றீர்கள்' என்று அவனை திசை திருப்ப சொல்லி பார்த்தாள்.  'எல்லாம் யயந்தி வளர்த்து விட்டது' என்றவன் கூறி, குறட்டை விட்டுத் தூங்கியும் விட்டான்!. இப்படித்தான் அவளின் வாழ்க்கை ஆரம்பித்தது.   

 

பெற்றோர்கள் சூழ்ந்து இருந்ததால், எப்படியோ ஒருவாறு, பல இழுபாடுகளுக்கு இடையில், ஓரளவு சுமுகமாக குடும்ப வாழ்வு நகர்ந்தது. எனினும் அன்றைய நாட்டுப் பிரச்சனை காரணமாக இரண்டு குழந்தை பிள்ளைகளுடன் அவனையும் அவளையும் பெற்றோர்கள் வெளிநாடு அனுப்பி வைத்தனர். இது அவர்களின் பெற்றோர்கள் செய்த பெரும் தப்பு!


அந்த கதாநாயகன், இப்ப மீண்டும் சுதந்திர பறவையாகி, வெளிநாட்டு கலாச்சாரமும் துணை புரிய, அவளை விட்டு விட்டு இப்ப ஆறாவது பெண்ணுடன் வாழ்கிறான்!


எம் கதாநாயகி காதலும் இல்லாமல் காமமும் இல்லாமல் பிள்ளைகளுடன் போராடிக் கொண்டு உலகின் ஒரு மூலையில் அமைதியாக கண்ணீருடன், அவனின் புது மனைவியையும், அவள் யாருக்கோ பெற்ற பிள்ளைகளை சுமந்து செல்லும் தன் கணவனையும்   பார்த்துக்கொண்டு, இன்னும் காத்து நிற்கிறாள்!!

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]0 comments:

Post a Comment