ஆஸ்துமா பரம்பரை நோயா? தடுக்கும் வழிமுறைகள் என்ன ? -

 மருத்துவ நிபுணர் தரும் விளக்கம்


நீண்டகால ஒவ்வாமையினால் நுரையீரல் மற்றும் சுவாசக் குழாய்களில் ஏற்படும் மாற்றங்களின் விளைவாக ஏற்படும் இளைப்பு நோயே ஆஸ்துமா எனப்படுகிறது.


அதிகப்படியான மூச்சுத் திணறல் அல்லது இளைப்பு, அதிகப்படியான இருமலால் ஏற்படும் தூக்கமின்மை, நெஞ்சில் ஏற்படும் வலி, இறுக்கம் ஆகியவற்றை ஆஸ்துமாவின் அறிகுறிகளாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

உலக சுகாதார அமைப்பின் 2019ஆம் ஆண்டு அறிக்கையின்படி, உலகளவில் சுமார் 262 மில்லியன் ஆஸ்துமா நோயாளிகள் உள்ளனர். அந்த ஆண்டு மட்டும் 4.60 லட்சம் இறப்புகள் ஏற்பட்டதாக கணக்கிடப்பட்டது.

 

குழந்தைகளுக்கு 4 % - 20 % வரை ஆஸ்துமா தாக்கம் காணப்படுவதாகவும் உலக சுகாதார அமைப்பின் (WHO) ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆஸ்துமா இறப்புகள் பொருளாதார வளர்ச்சி குறைந்த மற்றும் நடுத்தர பொருளாதார வளர்ச்சி நாடுகளிலேயே அதிகமாக காணப்படுகிறது.

 

உலக ஆஸ்துமா தினம் ஏன் ?

ஆஸ்துமா நோயை தடுத்தல், சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆஸ்துமாவிற்கான உலகளாவிய அமைப்பு (The Global Inititive for Asthma - GINA) கடந்த 1993ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.

 

இது, அமெரிக்காவின் தேசிய இதயம், நுரையீரல் மற்றும் ரத்த நிறுவனம், தேசிய சுகாதார நிறுவனம், மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

 

ஆஸ்துமா பாதிப்பு மற்றும் இறப்பு ஆகியவற்றைக் குறைக்க உலகம் முழுவதும் உள்ள மருத்துவ நிபுணர்கள், பொது சுகாதாரத்துறை அதிகாரிகளை ஒருங்கிணைத்து பணியாற்றி வருகின்றனர்.

 

ஜினா அமைப்பு தொடங்கி, முதல் சந்திப்பு மே மாதம் முதல் செவ்வாய் கிழமை நடைபெற்றதையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் முதல் செவ்வாய்க் கிழமை உலக ஆஸ்துமா தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

 

இதன்படி, ஆஸ்துமா ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஒரு மையக் கருத்தை அறிவித்து வருகிறார்கள். இதன்படி, உலக ஆஸ்துமா தினம் 2022ம் ஆண்டிற்கு "ஆஸ்துமாவிற்கான சிகிச்சையில் இடைவெளியை நீக்குதல்'' என்கிற மையக் கருத்தை வெளியிட்டுள்ளது.

 

யாருக்கெல்லாம் ஆஸ்துமா ஏற்படும்?

ஆஸ்துமா நோய் யாருக்கெல்லாம் ஏற்படும் வாய்ப்புள்ளது. அதைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து ஆஸ்துமா, அலர்ஜி மருத்துவ நிபுணர் டாக்டர் ஜி.கமல் பிபிசி தமிழிடம் பேசினார்.

 

ஆஸ்துமா ஏற்பட ஒவ்வாமை ஒரு காரணமாகிறது. சுற்றுச் சூழலில் ஏற்படும் மாசு, தொழிற்சாலை கழிவுகள் நுரையீரல் மற்றும் சுவாசக் குழாய்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது.

 

செய்யும் வேலை, அதாவது ஒவ்வாமை காரணிகள் உள்ளடக்கிய சூழலில் நீண்ட நாட்கள் இருப்பது, குறிப்பாக பஞ்சாலை, அதிக புகை வெளியேறும் தொழிற்சாலைகள், சிமெண்ட், கல் உடைக்கும் தொழிற்சாலைகளில் தகுந்த பாதுகாப்பின்றி தொடர்ந்து பணியாற்றுவது ஆகியவற்றால் ஆஸ்துமா ஏற்படும்.'' என்கிறார்.

 

பரம்பரையும் காரணமாகுமா ?

ஆஸ்துமாவிற்கு பரம்பரையும் ஒரு காரணமாகிறது. அதாவது பெற்றோர் அல்லது மூதாதையர் அல்லது குடும்பத்தில் ரத்த உறவினர்களில் யாருக்கேனும் இந்த நோய் தாக்கியிருந்தால், அந்த குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஏற்படும் வாய்ப்புள்ளது.'' என்கிறார் டாக்டர் கமல்.

 

தவிர்க்கும் வழிமுறைகள்

தொடர்ந்து அவர் கூறுகையில், இந்த நோய் பாதிக்கப்பட்டவர்கள், தூசியடைந்த சூழலை கட்டாயம் தவிர்க்க வேண்டும். படுக்கை, தலையணை உறைகளை பயன்படுத்த வேண்டும். அவற்றை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். பஞ்சு தலையணைகளைத் தவிர்க்க வேண்டும்.

 

தரை விரிப்புகளை சுத்தம் செய்ய வேண்டும். செல்லப்பிராணிகளை படுக்கை, படுக்கையறைகளில் அனுமதிக்க கூடாது. அவற்றை வாரம் ஒருமுறை கட்டாயம் குளிப்பாட்ட வேண்டும். ஒவ்வாமை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் நோய்க்கான ஒவ்வாமை காரணியை கண்டறிந்து, அதற்கேற்ற தடுப்பு மற்றும் சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும்.

 

புகைப்பதைத் தவிர்க்க வேண்டும்

ஆஸ்துமா பாதிக்கப்பட்டவர்கள் புகைப்பிடிப்பதையும் அவர்களுக்கு அருகில் புகைபிடிப்பது மற்றும் புகை சூழலை தவிர்க்க வேண்டும். மகரந்தபாசிகள், பூஞ்சைகள் இருக்கும் இடங்களை தவிர்க்க வேண்டும். சரியான இடைவெளியில் இந்த நோய்க்கான சிறப்பு மருத்துவரை அணுகி, சோதனை மற்றும் சிகிச்சை பெற வேண்டும்.

 

குறிப்பாக, ஆஸ்துமா சிகிச்சையில் முதன்மையானது இன்ஹேலர் வகை சிகிச்சை. பிரிவண்டார் (தடுப்பு) வகை, மற்றொன்று ரிலீவர் வகை என்று இரண்டு வகை இன்ஹேலர் வகை சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால், இது அனைவருக்கும் கட்டாமில்லை. நோய் தாக்கத்தின் அடிப்படையில் இந்த சிகிச்சை முறையை மேற்கொள்ள வேண்டும். நுரையீரல் செயல்திறன் பரிசோதனை அடிப்படையில் இதன் தேவையை கண்டறிய முடியும். இம்மினோதெரபி சிகிச்சையில் இன்ஹேலர் தேவைப்படுவதில்லை.

 

கவனத்தில் கொள்ள வேண்டியவை

ஆஸ்துமா பாதித்தவர்களை, குறிப்பாக குழந்தைகளுக்கு பயத்தை ஏற்படுத்தக் கூடாது. குழந்தைகளை அந்தந்த வயதிற்கேற்ற இயல்பான நடவடிக்கைளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். ஆஸ்துமா பற்றிய சுய விழிப்புணர்வு, குழந்தைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். நோய் பாதிக்கப்பட்டால் அச்சப்படத் தேவையில்லை. ஆரம்ப நிலையில் கண்டறிந்து, தொடர் சிகிச்சை எடுத்தால், கட்டுப்படுத்தலாம். என்கிறார் டாக்டர் ஜி.கமல்.

 

மேலும், "ஆஸ்துமாவிற்கான சிகிச்சையில் இடைவெளியை நீக்குதல்'' என்கிற உலக ஆஸ்துமா அமைப்பான ஜினாவின் மையக் கருத்தை மனதில் கொள்வோம். ஆஸ்துமாவை கட்டுப்படுத்துவோம்.'' என்கிறார் அவர்.

நன்றி:-ஜோ. மகேஸ்வரன் -/-பிபிசி தமிழ்

0 comments:

Post a Comment