நான்மணிக்கடிகை/17/வாழ்க்கை உண்மைகளை வெளிக்காட்டும்..

சங்ககால இலக்கியங்களில், பதினெண் கீழ் கணக்கு நூல்களில் ஒன்றான 'நான்மணிக்கடிகை' என்பது நான்கு இரத்தினத் துண்டங்கள் என்னும் பொருளைத் தரும். ஒவ்வொரு பாடலிலும் நான்கு சிறந்த கருத்துக்களைக் கூறுவதால் 'நான்மணிக்கடிகை' எனப் பெயர் பெற்றது. இதனை இயற்றியவர் விளம்பி நாகனார்.இவரின் காலம் கி.பி. 200 க்கு முன்னர் ஆகும்.

 


தொடர்ச்சி

 

81. 👉

நல்லார்க்கும் தம் ஊர் என்று ஊர் இல்லை; நன்னெறிச்

செல்வார்க்கும் தம் ஊர் என்று ஊர் இல்லை; அல்லாக்

கடைகட்கும் தம் ஊர் என்று ஊர் இல்லை; தம் கைத்து

உடையார்க்கும் எவ் ஊரும் ஊர்.   

:-கற்றார்க்கு எவ்வூரும் தம்மூர்; தவத்தோருக்கும் எவ்வூரும் தம்மூர்; கீழ்மக்கட்கும் எவ்வூரும் தம்மூர்; தம் கையிற் பொருளுடையாருக்கும் எவ்வூரும் தம்மூர்.

 

82. 👉

கல்லா ஒருவர்க்குத் தம் வாயில் சொல் கூற்றம்;

மெல் இலை வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம்;

அல்லவை செய்வார்க்கு அறம் கூற்றம்; கூற்றமே,

இல் இருந்து தீங்கு ஒழுகுவாள்.    

:-கல்வியறிவு இல்லாதவர்களுக்கு அவர் வாயில் பிறக்கும் சொல்லே அவர்களுக்குக் கூற்றுவனாம்; வாழை மரத்துக்கு அஃது ஈனும் குலையே கூற்றுவனாம்; தீயவை செய்வார்க்கு அறக்கடவுளே கூற்றுவனாம்; இல்லத்திலிருந்து கொண்டு கணவனறியாது கற்புக்கேடாக ஒழுகுபவள் கணவனுக்குக் கூற்றுவனாவாள்.

 

83. 👉

நீரான் வீறு எய்தும், விளை நிலம்; நீர் வழங்கும்

பண்டத்தால் பாடு எய்தும், பட்டினம்; கொண்டு ஆளும்

நாட்டான் வீறு எய்துவர், மன்னவர்; கூத்து ஒருவன்

பாடலான் பாடு பெறும்.      

:-விளைநிலம் நீர்ப்பாய்ச்சலாற் செழிப்படையும். துறைமுகப் பட்டினங்கள் கடல் வளத்தால் பெருமையடையும். மன்னர் தாம் ஆளும் நாட்டினாற் சிறப்படைவர். கூத்து வல்லவனால் நாடகம் சிறப்படையும்.

 

84. 👉

ஒன்று ஊக்கல், பெண்டிர் தொழில் நலம்; என்றும்

அறன் ஊக்கல், அந்தணர் உள்ளம்; பிறன் ஆளும்

நாடு ஊக்கல், மன்னர் தொழில் நலம்; கேடு ஊக்கல்,

கேளிர் ஒரீஇவிடல்.     

:-கணவரோடு ஒருமைப்பட்டு நிற்க முயலுதலே பெண்டிர்க்கு நல்ல செயல் ஆகும். அற நினைவுகளை எழுப்பிக் கொண்டிருத்தலே அந்தணருள்ளத்திற்குச் சிறப்பு செயல் ஆகும். பிறர் ஆளும் நாட்டைப் பெற முயலுதலே மன்னருக்கு உரிய செயலாகும். சுற்றத்தாரை நீக்கி வாழ்தல் கேட்டிற்கு முயலுதலாகும்.

 

85. 👉

கள்ளாமை வேண்டும், கடிய வருதலான்;

தள்ளாமை வேண்டும், தகுதி உடையன;

நள்ளாமை வேண்டும், சிறியாரோடு; யார்மாட்டும்

கொள்ளாமை வேண்டும், பகை.   

:-கொடுந்துன்பங்கள் பின்பு உண்டாவதால் என்றும் திருடாமை வேண்டும். ஒழுக்கம் தவறாமை வேண்டும். சிற்றினத்தாரோடு சேராமை வேண்டும். பகைமை பாராட்டாமை வேண்டும்.

 

நான்மணிக்கடிகை தொடரும்..பகுதி:18 வாசிக்க அழுத்துக... Theebam.com: நான்மணிக்கடிகை/18/வாழ்க்கை உண்மைகளை வெளிக்காட்டும்….:


ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக👉

Theebam.com: 'நான்மணிக்கடிகை' /01/வாழ்க்கை உண்மைகளை வெளிப்படு...

 

தேடல் தொடர்பான தகவல்கள்:

நான்மணிக்கடிகை - பதினெண் கீழ்க்கணக்கு, வேண்டும், ஊக்கல், ஆளும், தம்மூர், எவ்வூரும், இலக்கியங்கள், பதினெண், நான்மணிக்கடிகை, கூற்றுவனாம், கூற்றம், கீழ்க்கணக்கு, இல்லை, நலம், தொழில், ஆகும், செயல், முயலுதலே, என்றும், வீறு, செய்வார்க்கு, வாயில், சங்க, கொண்டு, எய்தும், கூத்து, பாடு, மன்னர்

0 comments:

Post a Comment