"மனைவியை காதலியாக்கக் கனிவு தேவை!"

"கற்றை ஈந்தின் முற்றுக் குலை அன்ன
ஆள் இல் அத்தத் தாள் அம் போந்தைக்
கோளுடை நெடுஞ் சினை ஆண் குரல் விளிப்பின்,
புலி எதிர் வழங்கும் வளி வழங்கு ஆர் இடைச்
சென்ற காதலர் வந்து, இனிது முயங்கி,
பிரியாது ஒரு வழி உறையினும், பெரிது அழிந்து
உயங்கினை, மடந்தை!’ என்றி-தோழி!-
அற்றும் ஆகும், அஃது அறியாதோர்க்கே;
வீழாக் கொள்கை வீழ்ந்த கொண்டி
மல்லல் மார்பு மடுத்தனன்
புல்லு மற்று எவனோ அன்பு இலங்கடையே?" [நற்றிணை 174]
ஆண்பறவை ஒன்று தன் பெண்பறவையை கூவி அழைக்கின்றது.அவ் வொலியைக் கேட்ட புலி எதிரோசை எழும்படி முழக்கமிடுகிறது. அப்படியான கோடைக்காற்று வீசுகின்ற கடினமான வீதியால் சென்ற உன் காதலர் மீண்டு வந்து உன்னை கட்டிப்பிடித்து இனிதாக நீங்களிருவரும் ஓரிடத்தே ஒன்றாக பிரிக்க முடியாதவாறு இருந்தீர்கள்.ஏன் இப்ப நீ பெரிதும் வருந்துகின்றாய்? என தோழி கேட்டாள். அதற்கு அவள் உண்மையை அறியாதவர்க்கு அத்தன்மை யாகவேதான் காணப்படும்;என் காதலன் முன்பு பிற மாதரை விரும்பாத கோட்பாட்டை யுடையனாயிருந்து இப்பொழுது தன்னை விரும்பிய பரத்தையினிடத்துத் தன் வளப்பம் பொருந்திய மார்பை கொடுத்து விட்டான்,இங்ஙனம் வேறு ஒருவளிடம் அன்பு வைத்தவனுக்கு என்மேல் எப்படி அன்பு,கனிவு தோன்றும்?; அன்பு இல்லாமல் காமத்தை தணிக்க என்னை அவன் தழுவிக் கொள்வதனாலும் நான் வேறு வழி இன்றி அவனைத் தழுவிக் கொள்வதனாலும் என்ன பயன்? இது காதல் கனிவு இல்லாத புணர்ச்சி அல்லவா? எப்படி அவனை நான் உண்மையாக காதலிக்க முடியும்?நான் மனைவி மட்டுமே ..காதலி அல்ல .. என்கிறாள்.
அப்படி என்றால்,யாரை,எப்படிப் பட்டவரை,அவள் உண்மையாக காதலிக்க முடியும் என்கிறாள்?அதற்கும் சங்க பாடல்,அகநானூறு விடை கூறுகிறது.இப்பாடல்கள் எல்லாம் கி.மு. காலத்துப் பாடல் என்பது குறிப்பிடத் தக்கது.இனி அகநானூறு 268 பார்ப்போம்.

"அறியாய் வாழி, தோழி! பொறி வரிப்
பூ நுதல் யானையொடு புலி பொரக் குழைந்த
குருதிச் செங் களம் புலவு அற, வேங்கை
உரு கெழு நாற்றம் குளவியொடு விலங்கும்
மா மலை நாடனொடு மறு இன்று ஆகிய 
காமம் கலந்த காதல் உண்டுஎனின்,
நன்றுமன்; அது நீ நாடாய், கூறுதி;
..............................................................."
இங்கு தலைவி தோழியை பார்த்து சொல்கிறாள்: "தோழி! நீ அறியாமல் பேசுகிறாய்.யானையும் புலியும் சண்டையிட்டுக்கொண்ட களத்தில் ஒடும் இரத்தம் புலால் நாற்றம் ஆடிக்கும்.அங்குப் பூக்கும் வேங்கை (Pterocarpus marsupium), குளவி (Patchouli) ஆகிய பூக்கள் அந்தப் புலால் நாற்றத்தைப் போக்கும்.அப்படிப்பட்ட மலைநாட்டின் தலைவன் அவன்.அவனுக்கும் எனக்கும் உள்ள உறவு ‘காமம் கலந்த காதல்’ என்றால் மிகவும் நல்லது.அதனை நீ தேடித் தருவதென்றால் அவனிடம் செல்லும்படிக் கூறு."வெறும் காமம் என்றால்,தயவு செய்து வேண்டாம் என்கிறாள்.அதாவது,காதல் மிகுந்த காமக் கூட்டம் ( புணர்ச்சி ) உளதாயின் அது மிக நன்றாகும் என்கிறாள்.
இன்னும் ஒரு தலைவி,அகநானூறு 332 இல், திருமணத்திற்குப் பின்னர் தோழியிடம் கூறுகிறாள் :

"...........................................................
நின் புரை தக்க சாயலன் என, நீ 
அன்பு உரைத்து அடங்கக் கூறிய இன் சொல்
வாய்த்தன வாழி, தோழி! வேட்டோர்க்கு
அமிழ்தத்து அன்ன கமழ் தார் மார்பின்
வண்டு இடைப் படாஅ முயக்கமும்,
தண்டாக் காதலும், தலை நாள் போன்மே! "
தோழி! “நாடன்[மன்னன்,தலைவன்] உன் புரைமைக்குத் [உயர்ச்சி, பெருமை] தக்க சாயலை உடையவன்” என்று நான் அடங்குமாறு நீ அன்போடு கூறிய இன்சொல் உண்மையாகவே வாய்க்கப் பெற்றுள்ளேன். விரும்பியவர்க்கு அமிழ்தம் கிடைத்தது போல, திருமண மாலையுடன் கூடிய மார்பினை வண்டொலியும் இடையில் புகமுடியாதபடி அவன் என்னைத் தழுவினான்.களவுக் காலத்தில் முதல்நாள் துய்த்த இன்பம் போல இன்றும் சிறந்து நிற்கின்றன." என்கிறாள்.
மற்றும் ஒரு சங்கத் தலைவி,அகநானூறு 361 இல்,
"வார்முலை முற்றத்து நூலிடை விலங்கினும்
கவவுப் புலந்து உறையும் கழிபெரும் காமத்து
இன்புறு நுகர்ச்சியின் சிறந்தது ஒன்று இல் ...",
அதாவது,"நெஞ்சே ! தலைவியின் மார்பில் தோய்ந்து முயங்கும் [தழுவுதல்; புணர்தல்] முயக்கத்தினை ஒரு நூல் இடையே தடுப்பினும் அதனை வெறுத்து உறையும் மிகப் பெரிய காதலோடு இன்பம் துய்க்கும் நுகர்ச்சியைக் [அனுபவம்] காட்டிலும் சிறந்தது ஒன்று இல்லை என்று அடித்து சொல்கிறாள்.
[ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

0 comments:

Post a Comment