திசை மாறும் தமிழர்

கலாச்சார சம்பிரதாயங்கள்.

நம் ஈழத்து தமிழர்கள் எங்குதான் வாழ்ந்தாலும், அவர்கள் இதுதான் எமது கலாச்சார சம்பிரதாயங்கள், வழக்கங்கள் என்று கூறிக்கொண்டு பலவிதமான புதுப்புது கொண்டாட்டங்களை மும்முரமாக, கோலாகலமாக, பெரும் சிறப்பாக நடத்திக்கொள்வது நாளாந்தம் காணக்கூடியதாக இருக்கின்றது.

கை நிறையப் பணத்தை வைத்துக்கொண்டு,அல்லது அடுத்தவரிடம் கடன் எடுத்தாவது [அது திருப்பி வழங்கத்தேவையில்லை] அதை எந்தவிதமாகவோ  செலவு செய்து  கொண்டாட  ஏதாவது ஒரு புதிய விழாவைக் கண்டு பிடிப்பார்கள். எவ்வளவுக்கு பெரிதாகச் செலவு செய்கிறார்களோ, அவ்வளவுக்கு அவர்களது அந்தஸ்து சமூகத்தில் உயர்வடையும் என்று நினைக்கின்றார்கள். அதற்காக, அவர்கள் வீட்டுப் பக்கமே வந்திருக்காத பல பேர்களையும் அழைத்து, வருவோரின் எண்ணிக்கையைக் கூட்டி, விழா நடத்துவார்கள். சில குடும்பத்தோடு செய்ய வேண்டியவற்றையும் பெரிது படுத்தி அமர்க்களப்படுத்தி விடுவார்கள்.

பிள்ளை ஒன்று பிறக்க முன்பிருந்து, கிழவராகி இறந்த பின் வரை பலவிதமான காரணங்களுக்கு விழா எடுப்பார்கள். எடுக்கும்போது, நாம் செய்துவந்த சில சம்பிரதாய விழாக்களை விட, மேலதிகமாக  தமிழ் நாடு, வட இந்தியா, ஐரோப்பா, அமெரிக்கா என்று அயல் நாட்டு முறைகளையும், நம் வழக்கம் என்று சொல்லிக்கொண்டு  செய்து கொள்வார்கள்.  

சிலர், வித்தியாசமாகச் செய்ய எண்ணி, பல்லக்கு, லிமோசின், ஹெலிஹாப்டர் , ஊர்வலம் என்றும, அப்பாலும் போவார்கள். 

திருமணம் அமைய, குழந்தை வரம் கிடட நேர்த்திக்கடன் வைக்கவும், கிடைத்ததால் கழிக்கவும் ஸ்தல யாத்திரைகள்; பின்னர் பேபி ஷவர், ஜெண்டர் ரிவீல், வளைகாப்பு, பிள்ளை பிறந்ததும் துடக்கு கழிக்க, பெயர் வைக்க, தொட்டிலில் இட,  பல் முளைக்க , முடி இறக்க  என்று எல்லாவற்றுக்கும்  விழாக்கள் தான்.  பின்பு ஒவ்வொரு வருடமும் பிள்ளையின் பிறந்த பெரு விழா, அம்மா அப்பாவின் பிறந்த நாள்கள், திருமண  நாள் விழா, பேரன்மார்களின் பிறந்த நாள் விழாக்கள் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும். 

பின்னர், பிள்ளைகள் வளர்ந்ததும் சாமத்திய சடங்கு, அரங்கேற்றம், பல நாள் தொடர் திருமண சடங்குகள், கை வர்ணம் பூசுதல்,, முக அலங்கார வழிமுறைகள், அவுட் டோர் - இன்டோர்  ஷூட்டிங்க்,  பாச்சுலர் பார்ட்டி, ஹென்ஸ் நைட்,  ஹனி மூன் என்று பலவும் இருக்கும்.

இறந்ததும், மரணச் சடங்கு, மரண ஊர்வலம், எட்டு, எட் டாம் எட்டு, அந்தியட்டி, மாசியம், ஆட்டத்திரி, அன்ன தானம், நினைவு தூபி, மோட்ஷ அருச்சனை, அபிஷேகம்  என்று தொடர் கதையாகப் போய்க்கொண்டிருக்கும்.

இவற்றில் அதிகமான விழாக்களிலும் சிறிதாகவோ, பெரிதாகவோ கேக் வெட்டி (கேக்குக்கு தமிழ் வார்த்தையே தெரியாது) மாறி, மாறி ஊட்டுவது இருக்கும். உடுப்பும் கோலாகலமாக இருக்கும். ஆண்கள் என்றால் கடடாயம் வெள்ளைக்காரன் போல கோர்ட், சூட், ரை இருக்கும். 

இந்தக் கோர்ட் விவகாரம் கலியாண வீட்டில் மிகவும் வேடிக்கையாக இருக்கும். ஒரு பெற்றோர் தம் மகன் ஒரு வெள்ளைக்காரப் பெண்ணை மணம் செய்வதை, தமது கலாச்சாரப்படி சைவக் கோவில் (கோவிலிலும்!) ஒன்றில் வைத்தால், மணப்பெண், ஆண், மற்றும் பெரும்பாலான வெள்ளைகள் எல்லோரும் நமது (தற்போதைய) கலாச்சார உடை அணிந்து வந்து ஓடி, ஆடித் திரிவார்கள். ஆனால், கோவிலுக்கு வழக்கமாக வரும் நம்மவர்களைப் பார்த்தால் வெள்ளைக்காரன் போல சூட் உடுத்துக்கொண்டு படு டீசன்ட்டாக (கோவிலில்) உட்க்கார்ந்து இருப்பார்கள். 

அதிலும் பெரும் கொசுத் தொல்லை என்னவென்றால், ஒரு கோர்ட் காரர், எதிரில் உள்ளவரின் ரையைப் பிடித்துச் சரிபண்ணி  உதவி செய்து, தான் இந்த உடுப்பு உடுப்பதில் எக்ஸ்பெர்ட் என்பதை நிறுவி நிலை நாட்டித் தன் லெவலை உயர்த்திக் கொள்வார்.

இப்படி உடுப்பதற்கு அவர்கள் சொல்லும் நியாயம், 'ஊரோடு ஒத்தோடு' என்பதே! இன்னும் சில காலத்தில் இதுதான் எங்கள் உடுப்பு என்று சொன்னாலும் சொல்ல்லாம். இவ்வாறு உடுக்காத வெள்ளைகளைப்  பார்த்து சிரித்தாலும் சிரிக்கலாம். அன்று, வெறும் மேலுடன் திரிந்த எங்களுக்கு மேலுடுப்பும் போடுங்கள் என்று சொல்லித்தந்த வெள்ளைக்காரர், சின்னதாக ஒரு அரை குறை உடையுடன் ஓரிருவர் வீதியில் போனால் நாம் பார்த்து முகம் சுழிப்பதில்லையா?

ஊரோடு ஒத்தோடுவதற்காக  வெள்ளைக் கிறிஸ்தவர்கள் கூடி செய்யாமல் இருக்கும் சேர்ச் போவது, முகடு  முட்ட  கிறிஸ்மஸ் லைட் போடுவது என்று எல்லாமே செய்வார்கள். அன்று ஊரில் வாழ்ந்தபோது  வெசாக் கொண்டாடியும் இருப்பார்களோ?? ஊரோடு ஒத்தோட!

ஊரோடு ஒத்தோடுவதற்காக, பிள்ளையார் /சிவன்/முருகனுக்குச் செய்யும் அபிஷேகத்தில் பால், தயிர், இளநீர், பழங்களுக்குப் பதிலாய் ஷாம்ப்பூ, கொண்டிஷனர், ஜெல், டியோடரண்ட்  என்றும், வேஷ்ட்டி, சால்வைக்குப் பதிலாக ஒரு 3 பீஸ் சூட்டும், பிரசாதங்களாக கேக் பிஸ்ஸா, பெர்கர், சிப்ஸும் வைத்து வழிபடும் காலம் நெடும் தூரத்தில் இல்லை எனலாம்!

இது எனது பணம்; நான் என்னமாதிரியும் செலவு செய்வேன்; நீ யார் அதைப்பற்றி பேச என்பது கேட்கின்றது!

நான் காணும் மாறிவரும் சம்பிரதாயம் பற்றி மட்டும்தான் எழுதினேன்!
சரியோ பிழையோ; செய்யுங்கோ, செய்யாதேங்கோ என்று ஓரிடமும் கூறவே இல்லையே!

நாம் என்ன தமிழரின் தொல்காப்பிய காலத்து கலாச்சாரத்தையா பின்பற்றிக்கொண்டு இருக்கின்றோம்? எவ்வளவு மாறிவிட்டோம்!

நேற்று எங்களுடையது என்று இருந்த சம்பிரதாயங்கள், கலாச்சாரங்கள்  இன்று எங்களுக்கு இல்லை; இன்று நமக்கென்று  இருப்பது நாளை எவருடையது ஆகுமோ யாரறிவார்!
---செல்வதுரை,சந்திரகாசன் 

3 comments:

 1. குமார்Sunday, December 18, 2016

  இன்னும் இருக்கு!

  நடுச்சாமத்தில் கடவுளை எழுப்பி ஆங்கில புது வருட பூசை, வாகன பூசை, படிப்பு தொடங்க பூசை, பரீட்சை நல்லாய் எழுதப் பூசை, நல்ல பரீடசை முடிவு வர பூசை, பிரயாண பூசை என்று எல்லாம் நிறைய இருக்கு!

  எல்லாத்தயும் விட முக்கியம், அந்தப் பார்ட்டிகள் வைக்கும்போது கடடாயம் சேர்ப்பிரைஸ் பார்ட்டியாய்த்தான் வைக்கவேணும்!
  எல்லாரும் ஒளிச்சு நிண்டு "சேர்ப்பிஸ்!!!" எண்டு கத்தவேணும்! அவர் ஏங்கவேணும்!!

  ReplyDelete
 2. சந்திரகாசன்Wednesday, December 21, 2016

  எல்லாப் புதுப் புதுப் பூசைகளுக்கும் தேவையான மந்திரங்களை அப்பவே எழுதி வைத்திருக்கின்றார்களே! அதுதான் சிறப்பு!

  அத்தோடு உந்த சேர்ப்பிரைஸ் என்ற வார்த்தைக்கு எத்தனை பேருக்கு சரியான ஸ்பெல்லிங் தெரியுமோ சந்தேகம்தான்!

  ReplyDelete
 3. எங்களை எளிதாகவே மதம்,மொழி,கலாச்சாரம் எதுவென்றாலும் மாற்றலாம் .எப்பொழுதும் எங்கள் பழக்கங்களை விட ஏனையோர் பழக்கங்களையே நாகரீகம் என கொள்வோம் பின்பற்றுவோம் நல்ல இனம்

  ReplyDelete