நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?பகுதி: 11A

[சீரழியும் சமுதாயம்] 

7] வரலாறு அழிப்பு  [Erasure of History]

ஸ்பானிய அமெரிக்க மெய்யியலாளர், ஜார்ஜ் சண்டயானா (1863 - 1952) என்பவர் [George Santayana], "முன்னைய தவறுத்தல்கள் மீண்டும் வராமல் தவிர்ப்பதற்கு, கட்டாயம் வரலாறு படிக்கவேண்டும்" என்கிறார், என்றாலும் இன்றைய அரசியல் சூழலில், பல்வேறு காரணங்களால், அதில் இருந்து பாடங்களை படிக்காமல், அதை தமக்கு சார்பாக திரித்துக் கூறுவதற்காக, தமக்கு பிடிக்காத அல்லது மற்றவர்களின் வரலாறு சான்று கூறும் உயர்வை பொறுக்க முடியாமல்,  உண்மையான வரலாறுகளை, அரச துணையுடன் இன்று அழிப்பதை காண்கிறோம். அப்படியானவற்றில் ஒன்று தான், 97 ஆயிரம் அரிய நூல்களுடன் காணப்பட்ட யாழ் நூலக எரிப்பு ஆகும். மத்திய அமெரிக்கப் பகுதிகளை உள்ளடக்கிய, மாயன் இனத்தவரின் வரலாற்று நூல்களை, கண்டு பிடிப்புகளை, ஸ்பானிய ஏகாதிபத்தியத்துடன் வந்த அடிப்படைவாத கிருத்துவர்கள், அன்று எரித்து போல, இன்று இலங்கை அரச படை இதை செய்ததை காண்கிறோம். தமிழ்ப் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற வரலாற்றுப் புத்தகங்களில், சிங்களவர்கள், ஆரியர்களாக இலங்கைக்கு வருவதற்கு முன்னரே, தமிழர்கள் இரண்டு இனங்களாக இங்கு குடியிருந்தார்கள் என்ற போதிலும், அவையெல்லாம் மறைக்கப்பட்டு, தமிழர்களின் வரலாறுகள் அழிக்கப் பட்டுள்ளதுடன், தமிழ் மன்னர்கள் தொடர்பில் எதுவுமே குறிப்பிடப்பட வில்லை எனவும், ஆயிரம் வருடங்கள் வரலாற்றைக் கொண்ட தமிழ் பேசும் முஸ்லிம்களின் வரலாறு தொடர்பில், அந்த வரலாற்றுப் புத்தகங்களில் ஒரு வசனமேனும் இல்லை என்பதையும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர், வெவேறு காலங்களில் இலங்கை நாடாளுமன்றில் சுட்டிக்காட்டி யுள்ளார்கள். இவை எல்லாம், எமக்கு எதிராக ஏற்பட்ட, வரலாறு அழித்தலுக்கான சில உதாரணங்கள் மட்டுமே!! “இலங்கை சிங்களவர்களின் தேசம், இங்கு வாழும் தமிழர்கள் வந்தேறு குடிகளே’ என்ற பாணியில் அண்மைக் காலமாக பல அரசியல் வாதிகள் தொடக்கம், புத்த மதகுரு மார் வரை சொல்லுவதை எழுதுவதை காண்கிறோம். ஒன்றை மறைத்து இன்னொன்றாகச் செய்வதே இலங்கை இனவாத எழுத்தர்கள தமிழ் வரலாற்றுக்குச் இதுவரை செய்த தொண்டாகும்.

மகாவம்ச சிந்தனையில் ஊறிப் போன சிங்களவர்கள் தங்களை ஆரியர் என்றும் தாங்களே இலங்கையின் மூத்த குடியென்றும் தங்களுக்கே நாடு சொந்தம் என்றும் பவுத்த தர்மத்தைக் காப்பாற்றிப் பேணுவதற்குரிய இடமாக இலங்கைத் தீவு புத்தரால் ஆசிர்வதிக்கப்பட்டது என்றும் நம்புகிறார்கள். ஆனால் கௌதமபுத்தர் இலங்கை வருகைகளைப் பற்றி வரலாற்றுச் சான்றுகள் கிடையா, மற்றது  புத்தர் வட இந்திய ஆட்புலத்தை விட்டு வேறெங்கும் செல்லவில்லை. ஏன் தெற்கேயுள்ள தமிழகத்துக்கும் கூட வரவில்லை. மேலும் பவுத்த – சிங்கள அரசியல் மேலாண்மைக்கும் சிங்கள தேசத்தின் இருப்பிற்கும் தமிழரே பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறார்கள் எனவும் நினைக்கிறார்கள். இந்த மகாவம்ச சிந்தனையே இன்றைய இன முரண்பாட்டுக்கும் மற்றும் வரலாறு அழிப்ற்கும் அடிப்படைக் காரணம் ஆகும். மகாவம்சத்தை எழுதியதன் நோக்கத்தை ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவில் நுலாசிரியர் குறிப்பிடுகிறார். எடுத்துக்காட்டாக ஆறாம் அத்தியாயத்தின் முடிவில் “(பவுத்த) பக்தர்களின் அமைதியான ஆனந்தத்துக்கும் மனவெழுச்சிக்கும் தொகுக்கப்பட்ட மகாவம்சத்தின் விஜயனின் முடிசூடல் என்ற 6 ஆம் அத்தியாயம் இத்துடன் முடிவுற்றது” எனக் கூறுவார். இது ஒன்றே நூலின் நோக்கத்திற்கு எடுத்துக் காட்டு ஆகும். இருந்தும் மகாவம்சத்தை முற்று முழுதாக இலங்கை வரலாற்றைக் கூறும் நூல் எனக் கொள்ள முடியாவிட்டாலும் அதனை முற்று முழுதாகப் புறக்கணித்து விடவும் முடியாது. மகாவம்சம் புனைந்துள்ள கதையில் சில உண்மைகள் மறைந்து காணப்படுகின்றன. மகாவம்சம் இலங்கையின் ஆதிக்குடிகள் என இயக்கர், நாகர், இப்படி சிலரை குறிக்கிறது. உதாரணமாக, நாகர் என்பவர்கள் தமிழ் இலக்கியங்களிலும் இலங்கை இலக்கியங்களிலும் குறிப்பிடப்படும் பழங்குடி மக்களாவர். இலங்கையை மகாவம்சம் குறிப்பிடும் விசயன் (பொ.மு. 543 – 504) என்ற மன்னனுக்கு முன்பே முடிநாகர் என்னும் தமிழ் நாகர் இனத்தவர்கள் ஆண்டனர் என்பது ஆராய்ச்சியாளர்கள் கருத்து. இதற்கு ஆதாரமாக முரஞ்சியூர் முடிநாகராயர் என்னும் முடிநாகர் இனத்தைச் சேர்ந்தவர் சேர மன்னனான உதியஞ்சேரலை பாடியதை குறிப்பிடுகின்றனர். இவர்கள் நாகவுருவை தலையில் அணிந்ததால் இவர்கள் முடிநாகர் என்றும் சூட்டுநாகர் என்றும் அழைக்கப்பட்டனர். இலங்கையில் பண்டு தொட்டு தமிழர் எவரும் வாழவில்லை என்றும் சிங்கள அரசுகள் மீது படையெடுத்து வந்த சோழ, பாண்டியர் படைகளோடே தமிழ் மக்கள் ஈழத்தில் வந்து குடியேறினர் என சில சிங்கள வரலாற்று ஆசிரியர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள். ஆனால் துட்ட கைமுனு காலத்தில் மாகா கங்கைக்கு அப்பால் தமிழர்கள் வாழ்ந்தார்கள் எனச் சொல்லப்பட்டுள்ளது. பவுத்த மதத்தைத் தழுவிய முதல் அரசன் தேவநம்பிய தீசனே. இவனுக்கு முன்னர் அனுராதபுரத்தை ஆண்ட அரசர்கள் வைதீக மதத்தவரே. தேவநம்பிய தீசனின் தந்தை பெயர் மூத்த சிவன் (கிமு 307 – 247) ஆவான். இவர்கள் நாக வம்சத்தைச் சேர்ந்தவர்கள். மகாநாகன் இவனது உடன்பிறப்பு ஆவான். இவன் துட்ட கைமுனுவின் பாட்டனுக்குப் பாட்டன் (ஒட்டன்) ஆவன். எனவே தமிழர்கள் இலங்கையின் ஆதி குடிகள் என்பது மகாவம்சத்திலேயே கூறப்பட்டுள்ளதை காண்க. ஆனால் இவை சில உதாரணங்களே, இன்னும்பல வரலாற்று ரீதியான ஆதாரங்களும் உதாரணங்களும் உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.

உதாரணமாக, இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஆனைக்கோட்டை என்னும் இடத்தில், 1980 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், தொல்லியலாளர் கா. இந்திரபாலாவின் தலைமையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அகழ்வாராச்சிக் குழுவினர் நடாத்திய அகழ்வாய்வு ஒன்றின் போது, கி.மு 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த இறந்த மனிதன் ஒருவனுடைய கல்லறை கண்டு பிடிக்கப்பட்டது. அங்கு ஒரு முத்திரை ஒரு மோதிரத்தின் முன் பகுதியாக கண்டு எடுக்கப் பட்டது. அங்கு பதியப்பட்டிருந்த இரண்டு வரியிலமைந்த எழுத்துக்கள், தமிழ் பிராமிவகையைச் சார்ந்தாக இருந்தது. கோ வெ ர அல்லது "கோ" "வே" "த" (ko ve ta) என்ற அந்த எழுத்துக்கள் முதல் சங்ககால எழுத்துக்ளைச் சார்ந்தாகும் [யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை முத்திரை]. அதை வாசித்த பேராசிரியர் கா. இந்திரபாலா, மற்றும்  பொ. இரகுபதி, முனைவர் ஆர். மதிவாணன் போன்றோர்கள், அந்தக் கல்லறை ஒரு தமிழ் மன்னனுடையதாக இருக்கக்கூடும் என்கின்றார்கள். அது மட்டும் அல்ல  இந்தியாவின் கலிங்க நாட்டிலிருந்து துரத்திவிடப்பட்ட அந்நாட்டு இளவரசனான விஜயன் என்பவன் தனது தோழர்கள் எழுநூறு பேருடன் இலங்கையில் வந்து இறங்கி, அதன் பின், தொடக்கத்தில் தமிழர் [இயக்கர், நாகர்] பண்பாட்டை பின்பற்றி இருந்த இவர்களிடையே மகிந்ததேரரால் கிமு 3ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பௌத்தம் அறிமுகம் செய்யப்பட்டதும், பண்டைய சிங்கள எழுத்துக்கள், குறிப்பாக மட்பாண்டங்களில் கி பி 6 ஆம் நூற்றாண்டின் பின்னர்தான் காணப்படுவதும் அதிகார பூர்வமான வரலாற்று சான்றாகும். என்றாலும் பவுத்த – சிங்கள அரசியல் மேலாண்மை இன்னும் தொடர்கிறது. உதாரணமாக, அண்மையில், முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தை சுவீகரித்து அங்கு பௌத்த விகாரை அமைத்து குடிகொண்டுள்ள பௌத்த துறவியான கொலம்ப மேதாலங்க தேரர், பாரிய புத்தர் சிலை ஒன்றை நிறுவி முரண்பாடுகளை தோற்றுவித்திருந்தார். அங்கு மிக நீண்டகாலமாக ஒரு பிள்ளையார் ஆலயம் இருந்துள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது என்றாலும், அடாத்தாக பௌத்த பிக்குவால் 2019 ஆண்டு தொடக்கத்தில் விகாரை அமைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது. அதே போல் கன்னியா வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலய விவகாரமும் இன்னும்  2019 ஆண்டு நடுப்பகுதியை தாண்டியும் தொடர்கிறது.
  
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
பகுதி 01 லிருந்து வாசிக்க அழுத்துங்கள்→
Theebam.com: நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா? [சீரழியும் தமிழ் ச...01A

3 comments:

 1. கந்தையா தில்லைவிநாயகலிங்கம்Friday, March 13, 2020

  சக்கரவர்த்தி அசோகன் செய்த தவறா, இல்லை புத்தரின் போதனைகளை சரியாக கடைப்பிடிக்காத அல்லது பரப்பாத தலைவர்கள் செய்த தவறா நான் அறியேன் ? ஏன் என்றால் புத்தர் 'கடவுளை மையமாகக் கொண்ட சமயங்களில் எது சரியானது, எது தவறானது, என்பதை அறிய அச்சமயவாதிகள் சொல்வதை நாம் செய்ய வேண்டும். ஆனால் மனிதனை மையமாகக் கொண்ட பௌத்த சமயத்தில் எது சரி, எது தவறு என்பதை அறிய நம்மை முழுமையாகப் புரிந்து கொள்ளவும், உணர்ந்து கொள்ளவும் வேண்டும். இவ்வாறு நம்மை உணர்ந்து கொள்வதால் எழும் நன்னெறி ஒரு கட்டளையினால் உருவாக்கப்படும் நன்னெறியை விட உறுதியானவையாகவும், பலம் வாய்ந்தவையாகவும் இருக்கும்' என மிக தெளிவாக சொல்கிறார். அது மட்டும் அல்ல, மற்றவர்களுக்கு உதாரணமாக அவர் நான்கு அடிப்படை பேருண்மைகளையும் தானே கடைப்பிடித்து வாழ்ந்து காட்டினார். இன்று பர்மா, இலங்கை போன்ற நாடுகளில் குழப்பங்களுக்கும் அமைதியின்மைக்கும் என்ன காரணம் ?. கட்டாயம் புத்தரின் அந்த புனிதமான நான்கு பேருண்மைகளை சரியாக உணராமையும் கடைப் பிடிக்காததுமே ஆகும்.

  எனவே நாம் நற்கருத்து, நல்நோக்கம், நற்பேச்சு, நன்னடத்தை, நன்முயற்சிகள் போன்றவற்றை மனதில் பதித்து, மகாவம்சத்தில் புதைந்து, அறிவியல் ரீதியான வரலாற்று சான்றுகளுடனும் ஒத்துபோவனவற்றை, நடுநிலையாக, பக்கம் சாராமல், அலச வேண்டும்.

  உண்மை முதலில் ஒரு முள் போல வலிக்கும், ஆனால் முடிவில் அது ரோஜா போல பூக்கும் [The truth hurts like a thorn at first; but in the end it blossoms like a rose] என்ற பொன்மொழியை நாம் மறக்கக் கூடாது. திருவள்ளுவரும் குறள் 299 இல், "எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு" என்கிறார். அதாவது, புறத்தில் உள்ள இருளை நீக்கும் விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல, சான்றோர்க்கு அகத்து இருள் நீக்கும் பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும் என்கிறார். அந்த அவரின் வழியில் மகாவம்சத்தின் "சத்தியத்தை அறிய, சத்தியத்தை நேசிக்க, சத்தியத்தில் வாழ்வது மனிதனின் முழு கடமை" ["To know the Truth, to love the Truth, and to live the Truth is the whole duty of man."] என்பதை உணர்ந்து எமது இந்த பயணம் குறைந்தது பதினைந்து பகுதிகளாக விரைவில் தொடரவுள்ளோம்.

  மகாவம்சம் / விஜயனின் பட்டாபிஷேகம், பாடல் 46 - 50 இல். அங்கு பல குடியிருப்புகளை ஏற்படுத்திய பிறகு விஜயனுடைய மந்திரிகள் அவனிடம் ஒன்றாக வந்து ‘ஐயனே ! தாங்கள் முடி சூட்டிக் கொள்ள இசைய வேண்டும்" என்கிறார்கள். ஆனால், அவர்கள் வேண்டியும் அவன் மறுத்தான். 'உயர் குல மங்கை ஒருத்தியை', அதே சமயத்தில் அவளை ராணியாகக் கொண்ட பிறகே, பட்டாபிஷேகம் செய்து கொள்ள முடியும்’ என்று கூறி வேண்டுகோளை ஏற்க மறுத்தான். எனவே, ராணியையும் மற்றவர்களுக்கு மனைவிமார்களையும் பெற, விலையுயர்ந்த பரிசுப் பொருள்கள், ஆபரணங்கள், முத்துக்களுடன் சிலரை தென்னிந்தியாவிலுள்ள மதுரை மாநகருக்கு அனுப்பி வைத்தனர்' என்கிறது. இது அன்று, அதாவது கி மு 6ஆம், 5ஆம் நூறாண்டில், தமிழருக்கு உள்ள மதிப்பை பறைசாற்றுகிறது, சிங்கள இனத்தின் முதல் மூதாதையான விஜயன் வாயினூடாகவே 'உயர் குல மங்கை' என மதுரை தமிழ் இளவரிசையை கூற வைத்ததிற்கும், மற்றும் விஜயனுடன் சேர்ந்த சிங்கள இனத்தின் முதல் மூதாதையர்களான அவனது எழுநூறு கூட்டாளிகளும் தமிழ் மதுரை பெண்களையே மணந்து, அவர்களினூடாகவே சிங்கள வம்சத்தை விருத்திசெய்தனர் என உறுதியாக கூறிய மகாவம்ச கதையின் நூலாசிரியருக்கு கட்டாயம் நாம் நன்றி செலுத்த வேண்டும்.

  உடலை மறைக்கும் உடை ஒன்று இல்லாமல் எவராலும் ஒரு நாகரிக மனிதனை சிந்திக்க முடியாது. 2500 ஆண்டுகளுக்கு முன்பு, சிங்கள இனத்தின் முதல் குடிமகனாக கருதப்படும் விஜயன் நாடு கடத்தப்பட்டு இலங்கைக்கு வந்து இறங்கும் பொழுது, வட இலங்கையை நாகர் மன்னர்கள் ஆட்சி செய்கிறார்கள், குவேனி என்ற இலங்கை பெண் ஒருத்தி நூல் நூற்றுக்குக்கொண்டு அவனை வரவேற்கிறாள். இதையும் மஹாநாம தேரோவே சொல்கிறார்.

  ஒரு தேசத்தின் வரலாறு நிச்சயமற்ற நிலை ஏற்படும் போது இனங்களுக்குள் உண்டாகும் குரோதங்களும், பகைமைகளும் அதிகரிக்கும். இதனாலேயே ஒரு பெரும்பான்மை அல்லது வல்லமையுள்ள இனம் மற்ற இனத்தை அடக்கி ஆளவும் முற்படும். அத்தகைய வரலாற்றாய்வுகளை மேற்கொள்ளப் பக்கச்சார்பில்லாத நடுநிலையான ஆய்வாளர்களின் கடுமையான உழைப்புத் தேவைப்படு கின்றன. இதை மனதில் பதித்து, மிக விரைவில் 'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' [The truth in Mahavamsa and the historical evidences] என்ற ஒரு தொடர் கட்டுரையை உங்களுடன் பகிரலாம் என்று எண்ணுகிறேன்.

  ReplyDelete
 2. Nageswary UruthirasingamFriday, March 13, 2020

  கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ஐயா அவர்களுக்கு நன்றி. இலங்கையில் தமிழர்கள் தான் முதல் குடிகள் என்பது உண்மை. இந்த உண்மைக்கு சான்றுகள் பல இன்றும் உள்ளன.என்றாலும் அவை ஏற்றுக் கொள்ள முடியாத இடத்திற்குள் தள்ளப்பட்டு விட்டது என்று தான் எண்ணத் தோன்றுகிறது. இலங்கையின் வரலாறு நூல் என்று சொல்லப்படும் மகாவம்சம் இருட்டடிப்பு செய்ய பட்டு பொய் என்ற புழுதியி புதைத்து எழுத பட்டு அரங்கேறி அதிகாரம் பெற்று விட்டது.தமிழர்களின் பண்பாடு பழக்கவழக்கங்கள் இவை கூட இன்று தொலைந்து தானே விட்டது .இவ் உலகில் முதல் இடம் பெற வேண்டிய தமிழர்கள் சென்று கொண்டிருக்கும் பாதையின் ஆழம் தெரியவில்லை. 😢

  ReplyDelete
 3. அருண் ஆறுமுகம்Tuesday, March 17, 2020

  அமெரிக்கா ,கனடா, அவுஸ்திரேலியா போன்ற பல நாடுகளெல்லாம் வந்தேறு குடிகள் ஆண்டுகொண்டு பழங்குடிகளை மெல்ல மெல்ல அழித்து வருகிறார்கள். இப்படியான நாடுகள் எங்கள் அழிவினை எங்கே நிமிர்ந்து பார்க்கப் போகிறார்கள்

  ReplyDelete