குடும்பம் என்றால் குழப்பம்தானா ?


























அன்று, இறந்தோர்க்கு ஆண்டொருநாள் நினைவுதினம். இன்றோ அழிந்துபோன காதலுக்காக காதலர் தினம், அணைக்கப்படாத அன்னையரின் நினைவில் ஒரு  அன்னையர்தினம் , தனித்துவிடப்பட்ட தந்தையரின் நினைவில் ஒரு  தந்தையர்தினம், அவை விசாலமடைந்து இன்று குலைந்து சிதைந்துகொண்டிருக்கும் குடும்ப வாழ்வினை நினைந்து ஒரு குடும்பதினம் -அதுவும் வந்துவிட்டது.

தாத்தா,பாட்டி, அப்பா,அம்மா ,மாமா ,மாமி, அண்ணா ,அண்ணி , அக்கா,அத்தான் என்று கூடி அன்று வாழ்ந்த வாழ்க்கை முறை, இன்று அது சுதந்திரமில்லை என்று எண்ணிக்கொண்டு தனிக் குடித்தனம் என்ற பெயரில் குடி பெயர்த்து வாழ்ந்தாலும் அங்கே -கணவன் மனைவி வேலை, பிள்ளைகள் பாடசாலை ,வீட்டு வேலை -இயந்திர ஓட்டம்- விளைவு பதற்றம் ,அமைதியின்மை, விரக்தி, கணவன்-மனைவி-பிள்ளைகளிடையே பேசப் பழக நேரமின்மை  இந்நிலையில் எடுத்ததுக்கெல்லாம் ஒருவர்,ஒருவர்மேல் எரிந்து விழல்.  இங்குமட்டும் பிரச்சனைகள் குறைந்தா விட்டது ,இல்லை. விளைவு விவாகரத்து.

ஆனால் விவாகரத்திட்டு அது பிரச்சனைகளை முடிவுக்குக் கொண்டுவந்ததா என ஆராய்ந்தால் பெரும்பாலும் தனி வாழ்க்கையில் நிம்மதி இல்லை என்றே பதில் வருகிறது. ஓயாத பிரச்சனைகள் என்றால்  மனிதனின் வாழ்வில்  விடிவே இல்லையா?

இருக்கிறது, மனம் தான் வாழ்க்கையென்றும் கூறுவர். எதையும் திருப்தியுடன் அணுகும்போது பல பிரச்சனைகளுக்கு இடமில்லாது போகிறது. எந்த ஒரு அடுத்த மனிதனும் நமக்கு சமமான  உணர்வுகள் கொண்டிருக்கமுடியாது என்பதனை உணரும்போது பல பிரச்சனைகளுக்கு இடமில்லாது போகிறது. என்னைப்போலவே அவளுக்கோ அன்றி அவனுக்கென்று சில  விருப்பு, வெறுப்பு ,கனவு , பேச்சு சுதந்திரம் என்பதனைப் புரியும்போது பல பிரச்சனைகளுக்கு இடமில்லாது போகிறது.

மேலும் , சென்ற காலம் திரும்பி வரப்போவதில்லை. என்பதனை ஒவ்வொரு மனிதனும் மனதில் நிறுத்திக் கொள்ளல் அவசியம்.

கல்யாணத்தின் முன் பெற்றோர்களின் பணத்தில் பறந்து திரிந்த காலம் கல்யாணத்தின் பின் இருக்கப்போவதில்லை. அதற்காக கல்யாணம் செய்யாது இருந்தால் மட்டும் ,பெற்றோர்கள் உங்கள் காலம் வரையில் மண்ணில் இருக்கப்போவதில்லை. எனவே கல்யாணம் என்பது காலத்தின் கட்டாயம். ஆணோ, பெண்ணோ ஒரு துணையினை நாடவேண்டியது இயற்கையின் நியதி.

அதேபோலவே, கல்யாணத்தின் பின் இருக்கும் வாழ்வு ,குழந்தை பிறந்தபின் இருக்கப்போவதில்லை, குழந்தை பிறந்தபின் இருக்கும் வாழ்வு ,அவர்கள் வளர்ந்து திருமணமாகி உங்களை விட்டுப் பிரிந்தபின் இருக்கப் போவதில்லை.

மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு நிலைகளிலும் ,சந்தோசப்படவேண்டிய வெவ்வேறு தருணங்கள் மனிதனுக்கு கிடைக்கின்றன. ஆனால் ஒவ்வொரு நிலையினையும் அனுபவிக்கத்தெரியாமல் ,முன் இருந்தநிலையினை ஒப்பிட்டுப் பார்க்கையில் மனிதன் நிம்மதியினை இழக்கிறான். அதனால் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக குடும்பத்தினுள் பிரச்சனைகள் தொடர்கின்றன.

வாழ்க்கை என்பது வாழ்வதற்கே. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பர்.  உங்கள் வாழ்வின் ஒவ்வொரு அத்தியாயத்தினையும் உங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளுங்கள். சந்தோசமான வாழ்க்கை உங்கள் கையில் தான் இருக்கிறது. உங்கள் பிரச்சனைகளுக்கு இன்னொருவர்  காரணமாக இருந்திருக்க வாய்ப்பில்லை. எல்லாம் உங்கள் மனங்களிலேயே தங்கியுள்ளது.
வாழுங்கள் ,வாழ்ந்து காட்டுங்கள்.

செ.மனுவேந்தன்

0 comments:

Post a Comment