சமூக வலைத் தளங்களில் ஊதிக் கெடுக்கப்பபடும் ஒழுக்கம்



இன்றய நவீன உலகில் முகநூல் [facebook ], புலனம் [whatsup ] , வலையொளி  [youtupe ], படவரி [instagram ], அளாவி [wechat ], பற்றியம் [messanger ], கீச்சகம் [twitter ] எனப்பல வகை சமூக வலைத் தளங்கள்   ஊடகத்துறையுள் நுழைந்துவிட்டது  மட்டுமல்ல  எல்லோர் கையிலும் கையாளக்கூடிய முறையில் அவை நெருங்கியும் வந்துவிட்டன.
ஆனால் அவை ஒரு பொழுதுபோக்காக பயன்படுத்தும் அதே வேளையில் அவை  உலகம் முழுவதும் பார்க்கப்படுபவை என்பதனை சிலர் உணரத் தவறிவிடுகிறார்கள்.
பார்ப்பவர் முகம்  காட்டும் கண்ணாடி போல் ,அவை தங்களை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் என்பதனை மறந்துவிடுகிறார்கள். அதனால் வார்த்தைகளை வரம்புகள் ஏதுமின்றி கொட்டிவிடுகிறார்கள்.
ஆத்திரம் கண்களை மறைக்கும் என்பதுபோல் ஊர்ச்சண்டை ,ஜாதி சண்டை, அரசியல் பிணக்கு ,மத வாதம் மட்டுமல்ல குடும்ப சண்டைகளையும், உடனே எந்தவித முன்பின் யோசனையுமின்றி தங்கள் ஆத்திரத்தை தீர்ப்பதாக எண்ணி இப் பெருவெளிகளில் அக் குப்பைகளைக்  கொட்டித் தங்கள்  பற்களை தாங்களே கிளறி தங்களை மற்றவர்களுக்கு முன் தங்களை நாறச்செய்கிறார்கள் .
அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு.அதை நாம் என்றும் மதித்திருக்கிறோம். ஆனால் அவற்றினைத் தெரியப்படுத்துவதற்கும் நாகரிகமான மொழி ஒன்று உள்ளது. அதனை நாம் முதலில் கற்றுக்கொள்ளவேண்டும்.  நாம் உபயோகிக்கும் ஒவ்வொரு அநாகரிகமான சொற்களும் ,கூறுபவரின்  அல்லது எழுதுபவரின் ஒழுக்கத்தையே  அது உலகிற்கு உணர்த்தும் என்பதனை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் உங்கள் சொற்களைப் பலரும் படிக்கிறார்கள். படிக்கும்போது அவர்கள் அதில் நீங்கள் உபயோகப்படுத்தும் சொற்களை வைத்து உங்களைப் பற்றி  உணர்ந்து கொள்கிறார்கள். விளங்கிக் கொள்கிறார்கள். அதனை நாம் முதலில் புரிந்துகொள்ளல் அவசியம்.
குடும்ப பிரச்சனைகளை நீதிமன்றம் கொண்டு சென்றாலே அவமானம் என்று கருதிய  காலம் ஒன்று முன்பு  இருந்தது. அன்று வளவினுள் நின்று கணவன் மனைவி சண்டையிட்டாலும் பக்கத்திலுள்ள ஓரிரு வீட்டிற்கே தெரியவரும். ஆனால் இன்று ஒரு கணவன் மனைவிக்கிடையில் சிறு  பிரச்சனை வந்துவிட்டாலே  அதை கணவன் பக்க உறவினர்கள் ,மனைவி பக்க உறவினர்கள் முகநூல் வாயிலாக தாக்குதல் நடாத்த ஆரம்பித்துவிடுகிறார்கள். அதிலும் அநாகரிகமான, கேவலமான வார்த்தைகள் பிரயோகிக்கப்படுகின்றன. மாறி ,மாறி ஒருவரை மற்றவர்  தாக்குவதாக  எண்ணி தங்களை தாங்களே கேவலப்படுத்தி சம்பத்தப்படட இருபகுதியினரையும் பார்த்து உலகம் சிரிக்கச் செய்கிறார்கள். இந்த சந்தர்ப்பத்தில் உங்கள் பிரச்சனை உலகத்தினைப் பொறுத்தவரையில் இன்னொரு தொலைக்காடசி நாடகமே அல்லாமல், அவை உங்களுக்கு  நீதி வழங்கும் நீதி மன்றமல்ல. அவற்றினை வாசிப்போர் அல்லது கேட்போர்  உங்கள் மேல் கருணை கொள்வதனைவிட உங்கள் எண்ணத்திலிருந்து நீங்கள் உங்கள் உறவினை தாக்கி எறிந்த ஏவுகணைகள்   மட்டும் ஏனையோரால்  பொறுக்கி சேகரிக்கப்பட்டு அதனை உங்கள் மேல் ஏறிய தருணம் பார்த்து வைத்திருப்பர் என்பது உலகறிந்த உண்மை. 

இச் சந்தர்ப்பத்தில் இவர்கள் தமக்குள் தனக்குள் தங்கள்  அடையாளங்களை அழுக்காக்கிக் கொள்வதுடன் கேவலப் படுத்துத்தி   வாழவேண்டிய தம்பதிகளையும்   நிரந்தரமாகப் பிரித்து விடுகிறார்கள். 


 இதுமட்டுமல்ல பொதுவான தகவல்கூட தவறான கருத்துக்களில் உதாரணமாக  கனடா,அவுஸ்திரேலிய தமிழினை தேசிய மொழியாக அறிவித்து  போன்ற உண்மைக்குப் புறம்பான பல்லாயிரக்கணக்கான தகவல்கள் இவ்வூடகங்களூடு பகிரப்பட்டு தமிழ் வாசகர்களின் பொதுஅறிவு  மழுங்கடிக்கப்பட்டு வருவதுடன் , அவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதுவும்  கவலைக்குரிய விடயமாகும்.


மேலும் கனடாவில் கியூபெக் நகரத்தில் சில மாதங்களுக்குமுன் பல நாடுகள் பங்குகொண்ட பல்கலாச்சார நடைபவனியில் தமிழர் திருமண ஊர்வலம் ஒன்றினை  அங்குள்ள ஒரு தமிழ் அமைப்பு இணைத்துச்  சிறப்பித்திருந்தது. இதன் காணொளியினை ஒரு வலைத் தளம் செய்தியாக அதனை விளக்கமாகவே  வெளியிட்டிருந்தது. ஆனால் ஊர்வலத்தின் முன்னே தாங்கிவரப்பட அவ்வமைப்பின் பெயர்தாங்கிய கொடியினை காணொளியிலிருந்து மறைத்து  உண்மைக்குப் புறம்பாக அதனை ஐரோப்பிய ,இலங்கை வாழ் தமிழர்களால்  ஏனைய வலைத் தளங்களில்   தலைப்புக்களை மாற்றி,மாற்றி 'கனடாவில் திருமணங்கள் இப்படித்தான் ஆடம்பரமாக இடம்பெறுகின்றன' என புலனம் [whatsup ] இலும் ,முகநூல்[facebook ]இலும்   பல்லாயிரக்கணக்கானோர் பகிர்ந்து பரிகாசித்துக் கொண்டனர்.

பொய்மையான  பதிவு 
அண்மையில் கொழும்பில் நடந்த குண்டுத்தாக்குதல்களை அடுத்து மேற்படி ஊடகங்கள் அரசினால் முடக்கிவைக்கப்பட்டன என்பதிலிருந்து  அவை எவ்வாறு கையாளப் படுகிறது என்பது புலனாகிறது. ஏனெனில் அவை நல்ல பதிவுகளை மட்டுமல்ல பொய்யும், புழுகும் பகிர்ந்துகொள்ளுவதுடன்  ,இனங்களுக்கிடையே, குடிகளுக்கிடையே பேதங்களை வளர்க்கும்  ஊடகங்களாகவும் அவை உலகினை வலம் வருபவை என்பதே  உண்மை.
இப்படியான உண்மைக்குப் புறம்பான தகவல்களை இடுவோரும் மக்கள் மத்தியில் சந்தேகக் கண்கொண்டே கண்காணிக்கப்படுவார்கள்.ஏனெனில் உண்மைகள் உறங்கிக் கிடைப்பதில்லை. 
விஞ்ஞானம் இதுவரையில் சாதித்தவைகள் நன்மைகள் மட்டுமல்ல,தீமைகளும் தான் 
எனவே உங்கள் முகவரி, உங்கள் பெயரினை க்  காப்பாற்றும் பொறுப்பு இன்று உங்கள் கைகளிலேயே தங்கியுள்ளது.

✍↠↠↠↠↠↠↠↠↠↠↠↠↠↠↠↠↠செ .மனுவேந்தன் 

1 comments:

  1. இது விளம்பரம் [டொரோண்டோ] பத்திரிகையில் ஏற்கனவே வெளியானது

    ReplyDelete