கனடாவிலிருந்து ஒரு கடிதம்


                                                             07.03.2020
அன்புள்ள தங்கைக்கு ,                                 
நாம் நலம்.அதுபோல் உங்கள் சுபமும் ஆகுக.
தங்கைச்சி, உன்னுடைய கடிதம் கண்டு மகிழ்ந்தேன். உன்னுடைய குறைகளும், நிறைகளும் வாசித்து உன் உணர்வுகளையும் புரிந்துகொண்டேன்.
தங்கைச்சி, எமது சமுதாயத்தில் அடுத்தவர் முதுகில் இருக்கும்  ஊத்தைகள் தொடர்பாகச் சிந்திப்பவர்கள் தங்கள் முதுகினைப் பற்றிச் சிந்திப்பதில்லை. அவர்கள் முதுகும் அடுத்தவர்களுக்கு தெரியும் என்பதுவும் அவர்களுக்கு புரிவதில்லை. இதிலும் பெண்களைப்பற்றிக் கூடுதலாக கேலி பேசித் திரிபவர்கள் , அநேகமாகப் பெண்களாகவே காணப்படுவது கவலைக்குரிய விடயமாகும்.

தங்கைச்சி, அன்று வாய் மூலம் பறையடித்த வர்க்கம்  ,புதிய தொழிநுட்பத்தினுடாக இன்று கையில் எழுத வசதி கிடைத்ததினால் தங்கள் கெட்டித்தனம் என நினைத்து அநாகரீகமாகவெல்லாம் எழுத ஆரம்பித்துவிட்டார்கள். நீ புத்திசாலி .அதற்கு எந்த விதமான பதில் ,அவளைப்போல எழுத நினைக்கவில்லை. அவர்களுக்குப் போட்டியாக நீயும் பதில்கூற ஆரம்பித்திருந்தால் அவர்களுக்கும் உனக்கும் வித்தியாசம் இல்லாது நீயும் உலகின் ஏளனத்திற்கும், கேலிக்கும் உள்ளாகியிருக்க வேண்டி வந்திருக்கும்.

தங்கைச்சி, உனக்கு உள்ள பிரச்சனை உனக்குமட்டும் தான் கவலை.நீ உலகின் முன் எடுத்து சொல்வதால் உனக்கு எது விதமான நீதியோ, நியாயமோ கிடைக்கப்போவதில்லை. பதிலாகப் புதிய பிரச்சனைகளை உனக்கு அதிகரிக்கவே செய்யும். மேலும் நீ கவலையில் கூறும் கருத்துக்களை , உன்மேல் பழிசுமத்தக்கூடிய கருத்துக்களாகவே உலகம் பொறுக்கி ,திரிபுபடுத்தி , சேமித்து உன்மேல் ஏவத் தருணம் பார்த்துக் காத்திருக்கும்.

இந்த இடத்தில் நீ எப்படி நடந்து கொள்கிறாய் என்பதிலேயே உனது மதிப்பும் ,எதிர்காலமும் விருத்தியடையும். இந்த இடத்தில் அமைதியாக இருந்ததன் மூலம் நீ எனக்கு நல்லதொரு தங்கை என்பதனை நிரூபித்துள்ளாய்.

தங்கைச்சி, விவேகானந்தர்  ஒருமுறை சீடர்களுடன் கூடியிருந்த இடத்திற்கு வந்த சிலர் கடுமையான வார்த்தைகளினால்  ஏசிக்கொண்டு சென்றார்களாம். அதனை சகித்துக்கொள்ள இயலாத  சீடர்களில் ஒருவன் 'சுவாமி இவ்வளவு தூரம் ஏசுகிறார்களே, ஒன்றும் பேசாது அமைதியாக இருக்கிறீர்களே' என வினவினானாம் . அதற்கு 'அவர் காட்டில் யானை நடந்து செல்லும்போது , நரிகள் ஊளையிடும். இதையெல்லாம் யானை கண்டுகொள்வதில்லையே' என்று அவர் கூறினாராம். அதேபோல் நீயும் பொறுமையுடன் இருப்பதனைப் பெருமையுடன் உன்னை பாராட்டுகிறேன்.

தங்கைச்சி, நீ கடிதம் மூலம் மனந்திறந்து உன் கவலைகளை கொட்டியிருந்தாய். நன்று, தொடர்ந்து உன் கடிதங்களை எதிர்பார்க்கிறேன். உனக்கு ஆறுதல் தரும் வகையில் நல்ல ஒரு அண்ணனாக நான் இருப்பேன்.

           மீதி அடுத்த கடிதத்தில் .........
இப்படிக்கு
அன்புள்ள அண்ணன்
செ.மனுவேந்தன்


1 comments:

  1. இக்கடிதம் சமுதாயத்திற்கு நல்லவற்றினை எடுத்துச் சொல்வதற்காக ,கற்பனையாக வரையப்பட்டது. யாரையும் குறிப்பிடும் நோக்கம் இல்லை.

    ReplyDelete