நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?பகுதி: 09B

 [சீரழியும் சமுதாயம்] 
இன்பம் என்றால் என்ன ? உண்மையில் இன்பம் என்பது நம் இயல்பே ஆகும். உதாரணமாக சர்க்கரை இனிப்பானது என்றாலும், அதன் இனிப்பை ஒருவன் நுகர ஆயத்தமாக உள்ள அளவே அது ஆனந்தம் தருகிறது. எனவே  இன்பதுன்ப நுகர்ச்சிக்கு மனப்பான்மையே பொதுவாக காரணமாகிறது. பொதுவாக எல்லா உயிர்களும் சுவையான பண்டங்களைப் புசித்து வாழ்வதுதான் இயல்பு. அப்பொருளில் உள்ள சுவையை ரசித்து உண்ணும் பொழுது ஆனந்தம் அடைவதையே இன்பம் என்கிறோம். இப்படி சுவைத்துப் பழகியவர்களுக்கு அது கிடைகாகாத பொழுது துன்பம் என்கிற உணர்வு ஏற்படுகின்றது. எனவே இந்த இன்ப துன்ப நுகர்வுகளில் இருந்து ஒருவன் விடுபட வேண்டும் அல்லது அதை கட்டுப்படுத்த வேண்டும் என்றால், பொறிவாயில் ஐந்தையும் கையாளவும் கட்டுப்படுத்தவும் பழக வேண்டும். சுவை என்கிற பொழுது நாவடக்கம் என்கிற புலனடக்கம் தேவைப்படுகிறது. இப்படி ஒவ்வொரு புலன்கள் மூலம் நுகரும் இன்ப நுகர்வுகளைப் பழக்கப்படுத்திக் கொண்டு, அதற்கு அடிமையாகி விடுவதைத் தவிர்ப்பதற்கே புலனடக்கம் தேவைப்படுகிறது. இயல்பாய் ஒருவரை இரு என்றால், அது புலனடக்கம் என்பதையும் சேர்த்தே குறிக்கிறது. புலன் இச்சை வழி சென்று, அளவு முறையின்றி ,இயங்குவது உங்கள் இயல்பல்ல. அதை நீங்கள் புரிய வேண்டும் . பொதுவாக தன் மனதை வென்றுவன் உலகையே வென்றவனாவான் என்பது கோட்பாடு.

இச்சை அல்லது ஆசை என்பது ஒரு பொருளை அடைவதற்கான  அல்லது ஒரு உணர்வைத் தீர்ப்பதற்கான, ஆழ்ந்த ஆர்வத்தை அல்லது ஏக்கத்தை உருவாக்குகின்ற ஒரு உளவியல் சக்தியாகும். [Lust is a psychological force producing intense wanting or longing for an object, or circumstance fulfilling the emotion] இச்சை என்பது பாலியல், போதை, பணம் அல்லது சக்தி போன்ற எந்த வடிவத்தையும் எடுக்க முடியும். சாதாரணமாக உணவின் மீதான இச்சை என்பது தேவைக்கான உணவைத் தேடுவதிலிருந்து வேறுபட்டதாகும். உதாரணமாக தொல்காப்பியத்தில் இன்பவியல் கோட்பாட்டில்,  'தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணா னுலகு' [காமத்துப்பால், 1103] என்ற பாடல்  “தாம் விரும்பும் காதலியரின் மெல்லிய தோள்களில் துயிலும் தூக்கத்திற்குத் தாமரைக்கண்ணனான திருமாலின் உலகம் ஈடாகுமா?” எனக் கடவுளின் உலகத்தை விட காதலியின் மெல்லிய தோள்களில் தூங்கும் இன்பம் உயர்ந்தது என கூறுகிறது, இங்கு ஒரு அன்புக்கான ஒரு துணையின் தேடுதலை காண்கிறோம், இது கட்டாயம் "தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன், தெருவில் பெண்களுக்கு ஓயாத தொல்லை" என்றும்  "பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னம் வைத்து மன்மதன் போல் லீலை செய்தான் தாலேலோ" என்பதில் இருந்தும் வேறுபட்டது. வாழ்வது ஒரு முறை  வாழுங்கள் கவர்ச்சியாய் என்று சிலவேளை விளம்பரங்களை, குறிப்பாக ஆடை விளம்பரங்களை காண்கிறோம். அதே போலத்தான் இதுவும், வாழ்வது ஒருமுறை , எனவே எமக்கு பிடித்ததில் விடாமல் தொடர்ந்து இன்பமாக களிப்போம் என்கிறது. ஆனால் அதனால் வரும் கேடுகளை அது கவனிப்பதில்லை.

ஐந்து புலன்கள் வழியாகப் பெறும் இன்பங்களில் மயங்கி, மூழ்கி அறிவு துன்பத்துக்குள்ளாகின்றது. புலன்கள் இருப்பதே இன்பத்தை அனுபவிக்கும் கருவிகள் தானே என ஐயம் எழலாம். புறப்பொருட்களிலோ அல்லது புறநிகழ்ச்சிகளிலோ இருந்து வரும் இன்பத்தை அனுபவிக்கத்தான் புலன்கள் உள்ளன என்பதில் ஐயமில்லை. ஆனால் புலன்கள் வழியாக அனுபவிக்கும் இன்பம் அளவு மீறும்போதும், முறை மாறும் போதும் அவை துன்பத்தில் முடிவடைகின்றன. அதனைக் கவனியாமல், அதில் பழக்கமாகி, ஒரு காலகட்டத்தில் புலன்களுக்கு அடிமையாகி விடுகிறான் மனிதன். எனவே அளவு மீறியும் முறை மாறியும் புலன் இன்பம் துய்க்கும் மனிதனை புலன் மயக்கத்தில் இருக்கிறான் என்கின்றனர் பொதுவாக. மேலும் ஏன் அவர்கள் இந்த நிலைக்கு வந்தார்கள் என்பதற்கான சரியான காரணத்தை அல்லது விளக்கத்தை கொடுத்து, அதற்கான பயிற்சிகளை கொடுத்தாலும், அவர்கள் தமது  பழையப் பழக்கத்திலிருந்து விடுபட கடுமையான தளரா விடாமுயற்சி (பிரம்ம பிரயத்தனம்) செய்ய வேண்டியிருக்கும். அதில் எல்லோராலும் வெற்றி பெறவும்  முடிவதில்லை. இது தான் இன்று கவலைக்குரிய விடயமாகும். எனினும் நேரத்துடன் இவையை  உணர்ந்து செயல் பட்டால், அவை சாத்தியமாகும்.

கிரேக்கத்தின் முக்கிய மெய்யிலாளர்களில் ஒருவரான எபிகியூரசு [ Epicurus /341 கிமு –  270 கிமு], "சாப்பிடுகையில், மிகுதியாக ஒருவர் சாப்பிடக்கூடாது, ஏனென்றால் அது பின்னர் அதிருப்திக்கு வழிவகுக்கும், இதனால் அவர், எதிர்காலத்தில் இதுபோன்ற சுவையான உணவை வாங்க விருப்பம் இல்லாத ஒரு கடுமையான உணர்வை பெறுகிறார்" என்று வாதிடுகிறார். எனவே அவர் "புத்திசாலித்தனமாகவும் நேர்மையாகவும் நியாயமானதாகவும் வாழாமல், ஒருவர் ஒரு இனிமையான வாழ்க்கையை வாழ முடியாது, அதேபோல, ஒருவர் ஒரு இனிமையான வாழ்க்கையை வாழாமல், அவர் புத்திசாலித்தனமாகவும் நேர்மையாகவும்  நியாயமானதாகவும் வாழமுடியாது" [“It is impossible to live a pleasant life without living wisely, honorably, and justly, and it is impossible to live wisely, honorably and justly without living pleasantly.”] என்று ஆணித்தரமாக சொல்லுகிறார். அவரை  அடிக்கடி இன்பவுணர்ச்சி அனுபவிப்போன் அல்லது சுகக்காரன் அல்லது ஸுகி [hedonist] என்று குற்றஞ்சாட்டினாலும், இது உண்மையில் அப்படி இல்லை என்பதை காட்டுகிறது. இவ்வுலகில் தோன்றிய உயிரினங்கள் யாவற்றிற்கும் இன்பம் தோன்றுவது இயற்கையே எனினும் அது மனம் பொருந்தியவழி மட்டும் இன்பமுள தாகும் என 2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்காப்பியரும் “எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது தான் அமர்ந்து வரூஉம் மேவற்று ஆகும்.”[தொல்.பொருளதிகாரம்-219] என கூறுகிறார். இந்தியாவில் கி மு 600 இல் தோன்றிய சாவகம் [Charvaka / சார்வாகம்] என அழைக்கப்படும் உலகாயதம், வாழ்வில் வீடு காண்பதை விட இன்பத்தை முதன்மைப்படுத்துகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும் இதை தாழ்மையுறச் செய்ய, மகாபாரதத்தில் தீயவன் ஒருவனுக்கு சார்வாகன் எனப் பெயரிடப்பட்டது என சில அறிஞர் கூறுவார்.

இன்பம் எல்லாவற்றிற்கும் மேல் என கருதும் கலாச்சாரம் இன்று நேற்று தோன்றியது அல்ல, உதாரணமாக, கி.பி. 37லிருந்து கி.பி. 41 வரை ரோமப் பேரரசராக இருந்த, மிகப் பெரிய சுக போஜன சிற்றின்பப்பிரியரான காலிகுலா [Caligula] ஒரு பித்துப்பிடித்த அரசராக வரலாறு சித்தரிப்பதுடன், கி.பி.41 இல் இவரது மெய்க்காவல் படை, அமைச்சர்கள் மற்றும் அரசவையினர் சேர்ந்து செய்த கூட்டுச்சதியில் இவர் தனது 29 ஆவது வயதில் படுகொலை செய்யப்பட்டார். அதே போல இன்றைய நவீன உலகில், எர்ரோல் பிளின் [Errol Flynn] என்ற ஒரு ஹாலிவுட் நட்சத்திர நடிகர், அவருடைய "அனைத்தையும் முயற்சி செய்" தத்துவம் அவரை ஹெராயின் மற்றும் கோகோயின் [heroin and cocaine] உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு அடிமையாக்கி, அவரை 50 வயதில் இவ்வுலகத்தை விட்டு மறையச் செய்துவிட்டது. அவரின் வாழ்வு மகிழ்ச்சியின் போலித்தனத்தை எடுத்துரைக்கிறது. எல்விஸ் பிரெஸ்லி, மைக்கேல் ஜாக்சன், விட்னி ஹூஸ்டன் [Elvis Presley, Michael Jackson, Whitney Houston] மற்றும் பல பிரபலங்கள் இப்படித்தான் வாழ்வை முடித்தார்கள். தற்போதைய நேரத்தில் ஒரு "நல்ல இன்ப நேரம்" முழுக்க முழுக்க இருக்க வேண்டும் என்று அனுபவிப்பது உண்மையில்  நல்வாழ்வின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டது அல்ல என்று உளவியலாளர்கள் இன்று நிறுவியுள்ளனர்.

ஒருவர் தனக்கு வேண்டிய மகிழ்ச்சியை, முழுக்க முழுக்க இன்பவியல் [Hedonism] மூலம் மட்டுமே கண்டு எடுக்க முயல்வது, ஒரு  நீண்ட காலத்திற்கு நின்று பிடிக்காது, அது உங்களை ஒரு அர்த்தமற்ற தன்மைக்கும். வெறுமைக்கும் [sense of meaninglessness and emptiness] இட்டு செல்ல வழிவகுக்கிறது எனலாம். மறுதலையாக, வாழ்வில் முழு ஈடுபாடும், பொது நலப்பண்பும் மற்றும் சுய-வளர்ச்சியும் இருப்பின், அல்லது அவையின் அடிப்படையில் அமைத்தால், கவனமாக பயிரிடப்பட்ட ஒரு தோட்டம், எப்படி வளமான மற்றும் ஏராளமானதாக மாறுமோ அப்படியே இதுவும் வாழ்விற்கு உயர்ந்த கருத்தை, மகிழ்வை கொடுத்து நிறைவேற்றுகிறது எனலாம்.

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
பகுதி: 10A  வாசிக்க அழுத்துங்கள் →
Theebam.com: நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?பகுதி: 10A
பகுதி 01 லிருந்து வாசிக்க அழுத்துங்கள்  
Theebam.com: நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா? [சீரழியும் தமிழ் ச...01A

←←←←←→→→→→   ←←←←←→→→→→   ←←←←←→→→→→

0 comments:

Post a Comment