நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?பகுதி: 10 B



 [சீரழியும் சமுதாயம்] 

பல நாடுகளில், பிரபலமடைந்தவர்கள் ஒருவர் மேல் ஏற்படுத்தும் ஆட்டிப் படைப்பும் அதனால் ஏற்படும் அந்த ஒருவரின் மனப் போக்கும் மற்றும் பிரபலமடைந்தவர்கள் மேல் வைக்கும் கண் மூடித்தனமான அன்பும் அல்லது மையலும், ஒரு பெரிய சமூக மற்றும் உளவியல் பிரச்சனையாக இன்று குறிப்பாக இளைஞர்களிடம் காணப்படுகிறது. இந்தியாவும் இலங்கையும் கூட இன்று இந்த பிரச்னைக்கு உள்ளாகி இருப்பதுடன், இது பலரின், நல்ல நோக்கங்களுக்காக பயன்படுத்தக் கூடிய, ஆற்றல் மற்றும் வளங்களை, திசை திருப்பி  வீணடிக்கிறது. இந்த பிரபல வழிபாடு, கைக்கிளை போல் ஒரு ஒருதலைப்பட்ச உறவு மட்டுமே, ஆனால், அவர்கள் மேல் ரசிகர்கள் வைத்திருக்கும் கண்மூடித்தனமான மெச்சுதல் இதை அவர்களுக்கு மறைத்து விடுகிறது. இதை எவ்வளவு நேரத்துடன் அவர்கள் உணர்கிறார்களோ, அது அவர்களின் வருங்காலத்திற்கு நல்லது. ஏன் மக்கள் பிரபலங்களை பாராட்டு கிறார்கள், அன்பு செலுத்துகிறார்கள், வழிபடுகிறார்கள் அல்லது அவர்கள் மேல் வெறி பிடித்து அலைகிறார்கள் என்பதற்கு பல காரணங்கள் உண்டு. அவர்களின் வெற்றி வாழ்வும் அவர்களின் ஆட்கவர்ச்சியும் அதிகமாக ரசிகர்களிடம் உந்துகிறது எனலாம். தங்களது வாழ்வின் தோல்விகளை, பிரச்சனைகளை மற்றும் ஏக்கங்களை மறக்கவும் மற்றும் தங்களுக்கு பிடித்த நட்சத்திரங்களின் வெற்றி மற்றும் புகழில் இருந்து ஒரு இன்பத்தை தமக்கு ஈர்க்கவும் இது அவர்களுக்கு உதவுகிறது. பிரபலங்கள் மற்றும் வெற்றிகரமானவர்களில் மேல் ஒரு விருப்பம் அல்லது பாராட்டைக் கொண்டிருப்பது ஒன்றும் புதிதல்ல, இது ஒரு இயற்கையான, சாதாரண மனித நடத்தையே ! என்றாலும், பிரபலங்களுடன் அளவுக்கு அதிகமாக அன்பு கொள்ளுவதும், மன சார்பு [mental dependence] ஒன்றை அவர்கள் மேல் வளர்ப்பதும் ஒரு உளவியல் சிக்கலாகிறது இன்று.

நாம் எம்மையும் எமது முயற்சிகளையும் முன்னேற்றி, சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் அடைவதற்கு அவர்களிடம் இருந்து பாடங்கள் படிக்கலாம். அதைத்தான் எம் முன்னோர்கள் அன்று செய்தனர். ஆனால் இன்று அதற்கு எதிராக அதிகமாக இருக்கிறது. சில மதம் மற்றும் இன குழுக்கள் போல, வெறித்தனமும் [fanaticism] அத்தகைய பிரபலங்கள் வழிபாட்டில் இன்று பரவி இருப்பதை, உதாரணமாக தமிழ் நாட்டிலும் காண்கிறோம். தமிழ் நாட்டில் நடிகர்களுக்கு கட் அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்வது ஒரு சாதாரண நிகழ்வாக இன்று வளர்ந்து விட்டது. ஆனால் அவர்களிடம் இருந்து என்ன நல்லவற்றை அவர்கள் பெறுவார்கள் பெறறார்கள் என்பது பெரும்பாலும் ஒரு கேள்விக் குறியாக இருக்கிறது. இப்படித்தான் ஹீரோ வழிபாடுகள் இன்று இருக்கின்றன. ஒரு பிரமுகர் மற்றும் ரசிகர் உறவில் [a celebrity vs. fan relationship], ரசிகர்கள் தான் வழக்கமாக தோல்விகளைப் பெறுகிறார்கள். ஏனென்றால், ரசிகர்கள் ஓர் சில பாடங்களை மட்டுமே அந்த பிரமுகரிடம் இருந்து பெற்றிருந்தாலும், அந்த பிரமுகர் தமது வெற்றியினை பணமாகவும், புகழாகவும் ரசிகர்கள் மூலம் பெறுவதுடன் தமது ரசிகர் தளத்தின் மீது செல்வாக்கும் செலுத்துகின்றனர்.

எங்கள் நேரத்தையும் வளத்தையும் தனிப்பட்ட பிரபலங்களில் வீணடிக்காமல், எமது வாழ்வில் முக்கியமான நபர்களில் எம் பார்வையை திருப்பி, அவர்களுக்கு அன்பு செலுத்தி, அவர்களை  கவனித்து, அவர்களுடனான எமது உறவை பலப் படுத்துவது எவ்வளவோ மேல். எவரும் பூரணமானவர் என்று இல்லை. எம்மிடம் பலமும் உண்டு, தளர்வும் உண்டு. எமது பலவீனத்தை எமது விருப்பமான சிந்தனை மூலமோ அல்லது ஒரு பிரபலமான நபரை போற்றுவது மூலமோ போக்கடிக்க முடியாது. நாம், எம்மை முதலில் அறிய வேண்டும். மற்றவர்களுடைய நற்பண்புகளைக் கண்டு மனம் குழைய வேண்டும். ஆனால் நாம் எம்முடைய  தேவையை நிறை வேற்றுதலுடன், எமக்கான சமாதானம் மற்றும் மகிழ்ச்சி தேடலில் ஈடுபடவேண்டும். வாழ்க்கையில் ஒருவருக்கு முக்கியம் தேவையானது பகுத்தறிதல் அல்லது அறிவுக்கூர்மை, அதாவது புத்தி வேண்டும். அது உங்களிடம் இருக்குமாயின் , நீங்கள் கட்டாயம் மிக இலகுவாக ஒரு மாயத்தோற்றத்திற்கு பலியாக மாட்டீர்கள்

பிரபலங்கள் வழிபாடு, ஒரு மனதை துன்புறுத்தும் -பழக்க அடிமைக் கோளாறு [“an obsessive-addictive disorder] என்று கூறலாம், ஏனென்றால்  அங்கு தனிப்பட்ட  நபர் அதிக ஈடுபாடும் மற்றும் அக்கறையுடன், தான் போற்றும் பிரபலங்களின் தனிப் பட்ட வாழ்க்கையின் ஒவ்வொரு விபரத்தையும் காண முயல்கிறார். ஆனால் முக்கியமான பிரச்சனை, இது இன்று மிகவும் ஆபத்தான பாதிப்பை சிறுவர்களிடம் ஏற்படுத்துவது ஆகும். அது மட்டும் அல்ல, பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் காட்டும் பிரபலங்களின், பொதுவாக பெண்களின் அழகு எப்படி இருக்க வேண்டும் என்ற, அவர்களின் உருவ சித்தரிப்பு [celebrity image], இளம் பெண்களில் பெரும் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. ஆனால் இந்த உடல் வடிவம் உண்மையில் யதார்த்தமல்ல, ஏனென்றால் பெரும்பாலான புகைப்படங்கள் டிஜிட்டலில் திருத்திய அல்லது மாற்றப்பட்ட  [digitally edited or altered photograph] படங்கள் [Photoshoped போட்டோஷாப்] அல்லது அறுவை சிகிச்சை மூலம் பெறப்பட்ட உடல் அமைப்பாகும். எனவே இப்படி எம் உடலும் மாறவேண்டும் அழகு பொழியவேண்டும் என்ற அவா, நாளடைவில் அப்படி அடைய முடியாமல் அவர்கள் மேல் பெரும்பாலும் மன அழுத்தங்களை [depression] ஏற்படுத்திவிடுகிறது. எனவே நாம் புத்திசாலித்தனமாக இவைகளில் இருந்து விளக்குவதே ஒரு நன்மை  பயக்கும் செயலாகும்.

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
பகுதி: 11  தொடரும்
  பகுதி: 11A வாசிக்க அழுத்துங்கள்
 Theebam.com: நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?பகுதி: 11A:

பகுதி 01 லிருந்து வாசிக்க அழுத்துங்கள்
Theebam.com: நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா? [சீரழியும் தமிழ் ச...01A

0 comments:

Post a Comment