"சோதிடம் பற்றி ஒரு அலசல்" / பகுதி: 08

 


தமிழரின் மிக பழைய நூலான, தொல்காப்பியம் திருமண பொருத்தங்களை கூறும் பொழுது, அதுவும் பத்து பொருத்தங்களை

 

"பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டொடு

உருவு, நிறுத்த, காம வாயில்

நிறையே, அருளே, உணர்வொடு திருவென

முறையுறக் கிளத்த ஒப்பினது வகையே"

[தொல்காப்பியப் பொருள் அதிகாரம் பாடல் 273]

 

என பட்டியலிடுகிறது. குடிப் பெருமை, குடி ஒழுக்கம் வழுவாமை, ஊக்கம், ஆணின் வயது கூடியிருத்தல், உருவப் பொருத்தம், இன்ப நுகர்ச்சி உணர்வு சமமாக அமைந்திருத்தல், குடும்பச் செய்தி காத்தல், அருளும், உணர்வும் ஒத்திருத்தல், செல்வச் சமநிலை ஆகிய பத்தைக் குறிக்கின்றது. அதே போல இல்வாழ்க்கைக்குப் பொருந்தாத பத்துத் தன்மைகளையும் தொல்காப்பியம் மேலும் கூறுகிறது.

 

"நிம்புரி, கொடுமை வியப்பொடு புறமொழி

வன்சொல், பொச்சாப்பு மடிமையொடு குடிமை

இன்புறல் ஏழைமை மறப்போடொப்புமை

என்றிவை இன்மை என்மனார் புலவர்."

 

தற்பெருமை, கொடுமை, (தன்னை)வியத்தல் புறங்கூறாமை, வன்சொல், உறுதியிலிருந்து பின் வாங்குதல், குடிப்பிறப்பை உயர்த்திப் பேசுதல், வறுமை குறித்து வாடக்கூடாது, மறதி, ஒருவரையொருவர் ஒப்பிட்டுப் பார்த்தல், பேசுதல் ஆகிய பத்துத் தன்மைகளும் இருக்கக் கூடாதவை என்கிறது. ஒத்த அன்பு, ஒன்றிய உள்ளங்களின் உயர் நோக்கு ஆகியவை இங்கு காணக்கிடைக்கிறது குறிப்பிடத்தக்கது. திருமணம் என்று சொல்லப்படுவதெல்லாம் ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒருவர்க்கொருவர் கட்டுப்பட்டு அவர்களது வாழ்க்கையைக் கூட்டுப் பொறுப்பில் நடத்துவதற்குப் பலர் அறியச் செய்து கொள்ளும் சடங்கே ஆகும் என்பது குறிப்பிடத் தக்கது. 

 

'புதிதாக இயற்றிய, மெழுகு தேய்த்த மேல் பகுதியில் வலிமையான கொம்புடன் மேட ராசி (ஆடு) முதலாக விண்ணில் ஊர்ந்து திரியும் ஓவியம் இருந்தது.  கதிரவனிடமிருந்து மாறுபாடு மிகுந்த சிறப்புடைய நிலவோடு நிலையாக நின்ற உரோகிணியை நினைத்து, உரோகிணியைப் போல் பிரிவின்றித் தான் இல்லையே என்று வருந்தினாள். பெருமூச்சு விட்டாள். பெரிய (சிறந்த) இமைகள் கொண்ட அவளுடைய கண்களிலிருந்து மிகுந்த மென்மையான கண்ணீர்த் துளிகள் விழுந்தனஎன

 

"புதுவது இயன்ற மெழுகு செய் படமிசைத்

திண் நிலை மருப்பின் ஆடு தலையாக,  160

விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து

முரண் மிகு சிறப்பின் செல்வனொடு நிலைஇய

உரோகிணி நினைவனள் நோக்கி, நெடிது உயிரா,"

 

என்று நெடுநல்வாடை  159 - 163, பாடுகிறது. இது அவர்களுக்கு, வானவியலில் விண்மீன் குழாம் [இராசி / Constellation], உதாரணமாக  மேட ராசி [Aries is a midsize constellation that's not particularly luminous, with only a few stars that are easily visible to the naked eye. Aries lies along the zodiac, through which the sun, moon and stars appear to travel] தெரியும் என்பதுடன், உரோகிணி [ரோகிணி நட்சத்திரம். சூரியனைப் போல் 36 மடங்கு பெரியது. சூரியனை விட 100 மடங்கு பிரகாசமானது. 65 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது], சந்திரன் புராணக்கதையும் தெரியும் என்று கொள்ளலாம். அதனால் தான் 'விண்ணில் ஊர்ந்து திரியும் [விண்மீன் குழாம்களின், விண்மீன்களின், சந்திரனின் , சூரியனின்   மற்றும் கிரகங்களின்] ஓவியம் இருந்தது' என்ற பாடல் வரி சுட்டிக்காட்டுவதுடன், 'உரோகிணியைப் போல் பிரிவின்றித் தான் இல்லையே என்று வருந்தினாள்' என்ற வரி சந்திரனுக்கு இருபத்தேழு நட்சத்திரங்களும் இன்பம் அளிக்கும் அன்பு மனைவியர்கள். அவற்றுள் உரோகிணியிடத்து அளவற்ற காதலுடையவன் சந்திரன், அப்படி தன் கணவனும் தன்னுடன் இருக்கவேண்டும் என்று தன்னையும் உரோணியையும் ஒப்பிட்டு சொல்வதை காண்கிறோம். மற்றும் படி இன்று நம் பாவனையில் உள்ளது போல எந்த சோதிடமும் இந்த பாடலில் இல்லை, சோதிடம் சங்ககாலத்தின் பின்னே தமிழர் மத்தியில் வந்தது எனலாம்.   

 

பண்டைய காலத்தில், நட்சத்திரங்கள் எல்லாம், பூமிக்கு மேலே உள்ள   'வான் கூரையில்' பதிக்கப்பட்டுள்ளன என்று நம்பினர். எனவே எல்லா நட்சத்திரங்களும் ஒரே தொலைவில் இருப்பதாக அவர்கள் கருதினர். ஆனால் உண்மையில் கோள்களெல்லாம் எமக்கு அன்மையிலும், நட்சத்திரங்களோ எமக்கு  நெடுந்தொலைவிலும் இருக்கின்றன. உதாரணமாக எமக்கு மிகவும் அன்மையில் இருக்கும், மேற்கு வானில் காணப்படும், பெரு நாய் (the Greater Dog) நட்சத்திர மண்டலத்தின் முதன்மை நட்சத்திரமும் மிகப் பிரகாசமான நட்சத்திரமுமான சிரியஸ் நட்சத்திரத்தின் (Sirius Star) ஒளி நம்மை வந்தடைய 8.6 ஆண்டு காலம் பிடிக்கின்றது. அதாவது நாம் அந்த நட்சத்திரத்தை இப்போது பார்க்கின்றோம் என்றால், அது உண்மையில் 8.6 ஆண்டுகளுக்கு முந்தைய தோற்றம் ஆகும். எனவே இன்றைய தோற்றத்தை நாம் காணவேண்டுமானால் இன்னும் 8.6  ஆண்டு காலம் கழித்துதான் அதனை பார்க்க முடியும்.  அதாவது 9 லட்சத்து 46 ஆயிரம் கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அதே போல திருவாதிரை நட்சத்திரமோ இன்னும் 80 மடங்கு தொலைவில் உள்ளதாகும். எனவே கோள்கள் நட்சத்திரத்துடன் கூடுகின்றது என்பதெல்லாம் அறிவுக்கு பொருந்தாதது ஆகும். எனவே தான், பேராசிரியர் சுந்தரம் பிள்ளை நட்சத்திரங்களைப் பார்த்து,

 

வான்கா டதனில் வறிதே சுழலும்

 மீன்காள்! வேறும் உளதோ விளம்பீர்

மதியிலா மாக்கள் விதியென நும்மேல்

சுமத்தும் சுமையும் தூற்றும் சும்மையும்

உமக்கிடு பெயரும் உருவமும் தொழிலும்

அமைக்கும் குணமும் அதில்வரும் வாதமும்

யுக்தியும் ஊகமும் பக்தியும் பகைமையும்

ஒன்றையும் நீவிர் உணரீர்!"

 

என்று கேட்டுக் கருத்திழக்கும் மக்களுக்காக கண்ணீர் வடிக்கின்றார். மகாவம்சத்தின் 'பாண்டு அபயன் பட்டாபிஷேகம்' [“Consecration of Pandukabaya”] என்ற பத்தாம் பாடத்தில், பண்டுலா [Pandula] எனும் பெயருடைய பணக்கார பிராமணன் ஒருவன், பாண்டு அபயன் அவனை சந்தித்த பொழுது, "நீ அரசன் ஆவாய், எழுபது வருட காலம் ஆட்சி நடத்துவாய்" என ஆருடம் கூறினான் என சுலோகம் [verse] 20 - 23 கூறுகிறது. அவ்வாறே அவன் ஆட்சிசெய்தான் என அது மேலும் உறுதி படுத்துகிறது. மகாவம்சத்தின் கதையின் படி, பாண்டு அபயன் முப்பத்து ஏழு வயதில் ஆட்சிப் பொறுப்பை ஏற்று, அதன் பின்பு தான் எழுபது வருடகாலம் ஆட்சி செய்தான் என்கிறது. ஆகவே அவன் 107 ஆண்டுகள் வாழ்ந்துள்ளான். அதன் பின் அவன் மகன் மூத்தசிவன் என்பவன் 60 ஆண்டுகள் ஆட்சி செய்தான் என்கிறது. அவ்வாறாகின் மூத்தசிவன் ஏறத்தாழ 120 / 130 அகவைக்கு மேல் வாழ்ந்து இருக்க வேண்டும்கௌதம புத்தரே தனது எண்பதாவது அகவையில், "நான் வாழ்வின் இறுதிக்கு வந்துவிட்டேன்" என கூறியதாக அதே மகாவம்சம் சான்று பகிர்கிறது. ஆகவே இவைகள் நம்பக்கூடிய செய்திகளாகத் தெரியவில்லை

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

பகுதி: 09 வாசிக்க அழுத்துங்கள் 

👉Theebam.com: "சோதிடம் பற்றி ஒரு அலசல்" / பகுதி: 09  

ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துங்கள் 

👉Theebam.com: "சோதிடம் பற்றி ஒரு சிறு அலசல்" / பகுதி: 01: 


0 comments:

Post a Comment