"சோதிடம் பற்றி ஒரு சிறு அலசல்" / பகுதி: 01

 

சோதிடம் குறித்த நம்பிக்கை நாட்டுப்புற மக்களிடம் பரவலாக காணப்படுகிறது. சாதகம் பார்ப்போர், குறி சொல்வோர், கைரேகை பார்ப்போர், ஏடு போட்டுப் பார்ப்போர், கிளி சோதிடம் கூறுவோர், "நல்ல காலம் பொறக்குது, நல்ல காலம் பிறக்குது" என்ற இந்த வார்த்தைக்கு சொந்தக் காரர்களான சாமக் கோடாங்கிகள் போன்றோர் கிராமத்து தெருக்களில் வலம் வருவதை இயல்பாக காணலாம். அதுமட்டும் அல்ல சோதிடத்தில் எடுத்துரைக்கப்படும் தீய பலன்களைப் போக்க, அதற்கான பரிகாரங்களை [Astrological Remedies] மேற்கொள்ளும் வழக்கமும் காணப்படுகிறது.

 

நவக்கிரகங்கள் ஒரு தனிமனிதனுக்கு நல்லதை அல்லது கெடுதல்களை மட்டுமே செய்வதில்லை என்றும் சில கிரகங்கள் சில நிலைகளில் இருக்கும்போது சோதனைக்கால சுமைகளையோ, கஷ்டங்களையோ ஒரு மனிதனுக்கு அளிக்கிறதாகவும், வேத சோதிடம் [vedic astrology] இதற்கு பரிகாரங்களையும், தீர்வுகளையும் கூறுகிறது எனவும் நம்பப்படுகிறது. ஒரு நடை பயணியை மழையிலிருந்தும், கடும் வெயிலிலிருந்தும் காப்பாற்றும் குடை போல, சோதிடம் கூறும் பரிகாரங்கள், ஒரு தனி மனிதனை கிரக நிலையினால்  தீர்மானிக்கப்படும், தீமைகளிலிருந்தும், சோதனைகளிலிருந்தும் பாதுகாக்கிறது என்கின்றனர். உதாரணமாக, செய்வாய் கிரகம் இரத்தத்திற்கும் விபத்திற்கும் உரியது என்பதால், ஒருவரின் சாதகத்தில் செய்வாய், சனி சேர்க்கை / பார்வை பெற்றிருந்தால், அவருக்கு விபத்துக்கள் ஏற்படுமாம். எனவே சம்பந்தப் பட்ட நபர், இரத்த தானம் செய்வது மூலம் இதை தடுக்கலாம் என பரிகாரம் கூறுகிறது. அதேபோல சர்ப்ப [நாக] தோஷம் இருப்பவர்களுக்கு பாம்புகளால் பாதிப்பு ஏற்படும். திருமணம் செய்வதில் தடையும் குழந்தை பாக்கியம் கிடைப்பதில் தாமதமும் ஏற்படும் என்று வேத சோதிடம் கூறுகிறது. இதனால், திருமணம் செய்யும் போது ஆணுக்கோ பெண்ணுக்கோ நாகதோஷம் இருக்கிறதா என பார்ப்பது ஒரு வழக்கமாக உள்ளது. இதற்கு விரதம் இருந்து  கோயிலில் உள்ள பாம்பு புற்றுக்கு பால், பழம் வைத்து வழிபடுதல் மற்றும் இவை போன்றவற்றை பரிகாரமாக எடுத்துரைக்கிறார்கள். இப்படியான பழக்கம் இந்துக்கள் வாழும் நாடுகளில் இன்னும் தொடர்கிறது. 

 

ஆகவே சோதிடம் என்பது வருங்காலத்தை எடுத்துரைப்பதுடன், வரப்போகும் கெடுதல்களில் இருந்து தப்பவும் வழியையும் காட்டுகிறது எனலாம். ஆனால் இது எப்படி முதல் முதல் கண்டுபிடிக்கப்பட்டது அல்லது ஆரம்பித்தது ?

  

காலம் காலமாக மனிதன் வானை நோக்கினான், அங்கே பூமி, இடி, மின்னல், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், கிரகங்கள் முதலியவற்றின் செயல்பாடுகளை, நகர்வுகளை கண்டான். அவைகள் நமக்கு பல நன்மைகளைத் தருகின்றன. சில தீமைகளையும் தருகின்றன என உணர்ந்தான். இந்த இயற்கையின் லீலைகளைக் கண்டு ஆதி மனிதன் ஆனந்தப்பட்டான். அதிசயப்பட்டான், சிலவேளை பயந்தான் மிரண்டான். இப்படி இயற்கையின் செயல்களை அதன் லீலா விநோதங்களைக் கண்டும் பயந்தும் வியந்தும் அனுபவித்த ஆதி மனிதன் படிப்படியாக, அவையை பற்றி அறிய முற்பட்டான். அதன் விளைவுதான் வானியலும் சோதிடமும் ஆகும்.

 

நமது அன்றாட அனுபவத்தின் மிக மர்மமான பகுதி வானம் ஆகும். தரையில், தாவரங்கள், மிருகங்கள் வளர்ந்து இறக்கின்றன, மழை பெய்கிறது, ஆறு ஓடுகிறது, இவை எல்லாவற்றையும் நாங்கள் புரிந்து கொண்டதாக உணர்கிறோம். ஏனென்றால் நாம் அவ்வற்றுடனான நேரடியான பரிச்சயம்,  தரை மட்டத்தில் நடக்கும் இப்படியான ஆச்சரியமான நிகழ்வுகள் எல்லாம் கிட்டத்தட்ட நமக்கு சாதாரணமாக  தோன்றுகின்றன. ஆனால் வானம் எம்மிடம் இருந்து மிக மிக தூரத்தில் இருப்பதால், அதை புரிந்துகொள்ள முடியாமல் அன்று இருந்தது. அந்த வானத்தினூடாக, குறிப்பாக இரண்டு பெரிய பொருள்கள் பயணிப்பதை மனிதன் கண்டான். அதில் ஒன்று சூடான மற்றும் நிலையானதாகவும் , மற்றொன்று குளிரானதாகவும் மற்றும் அதன் வடிவம் மாறக்கூடியதாகவும் [one hot and constant, the other cold and changeable] இருப்பதை கண்டான். பகல் நேரத்தில் எரியும் வெயில் அல்லது ஓடும் மேகங்கள் இருக்கலாம் அல்லது இருள் படர்ந்து இடி மற்றும் மின்னல் இருக்கலாம். என்றாலும் ஒரு தெளிவான இரவில் வானம் மிகவும் இதற்கு நேர்மாறாக இருக்கிறது. நீங்கள் போதுமான அளவு உற்றுப் பார்த்தால், நீங்கள் ஒரு அடையாளப்படுத்தி  காணக்கூடிய நட்சத்திரங்களின் குழுக்கள் மெதுவாக ஆனால் நம்பகமான முறையில் நகருவதை ஊகிக்கமுடியும். எனவே, சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திர குழுக்களின் செயற்பாடுகள் அவனை சிந்திக்க வைத்தன. அதன் எதிரொலிதான் வானியல், சோதிடம் மற்றும் நாட்காட்டி [astronomy, astrology and the calendar] பிறக்க வழிவகுத்தன எனலாம்.

 

வானியல் என்பது விஞ்ஞான ஆய்வுகள் மூலம் அறிவுபூர்வமாக சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள் பற்றி அறியும் ஒரு கலை ஆகும். ஆனால் சோதிடம் இதற்கு எதிர்மாறானது. இது நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைககளின் தொகுப்புகளை அறிவியல்பூர்வமான ஒன்று என்று தவறாக கருதப்படும் ஒரு கலையாகும் [A collection of beliefs or practices mistakenly regarded as being based on scientific method / pseudo-science]. ஆகவே இரண்டும் உண்மையில் வெவ்வேறானவை. இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். வானத்தில் தென்படும் சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள், மனித இருப்பு மீது, அவர்களின் வாழ்க்கை, எதிர்காலம், எதிர்பார்ப்பு போன்றவற்றில் தாக்கங்களை ஏற்படுத்தும் என்ற ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் உருவானதே சோதிடம். ஆனால் எது எப்படியாகினும் மனிதனின் முன்னைய வரலாற்றில் அதிகமாக வானியல் மற்றும் சோதிடம் இரண்டும் நெருக்கமாக  பின்னிப் பிணைந்து இணைக்கப்பட்டு இருந்தன. அதனால்தான் இன்னும் சோதிடம் உலகம் முழுவதும் எதோ ஒரு விதத்தில் நிலைத்து இருக்கின்றன. உதாரணமாக, இந்தியாவில், முன்னிலையில் இல்லாத சில கல்வி நிறுவனம் சோதிடத்தை பல்கலைக்கழகத்தில் இன்னும் போதிக்கின்றன என்பது தெரியவருகிறது. உதாரணமாக, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் சோதிடம் பட்டயப் படிப்புப் (Diploma) பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேவாறு, ஐரோப்பா முழுவதும் பல்கலைக்கழகங்களில் சோதிடம் ஒரு படமாக குறிப்பாக 11ம் நூற்றாண்டு தொடங்கி 17ம் நூற்றாண்டு வரை சேர்க்கப்பட்டு இருந்தது [Studied at universities throughout Europe from the 11th to the 17th centuries, astrology was included in the curriculum of every educated person] அதுமட்டும் அல்ல, வானவியலும் சோதிடமும் வெவ்வேறாக பிரியும் முன்பு, உலகின் மிகப் பெரிய விஞ்ஞானிகள் அல்லது வானியலாளர்கள் சோதிடனாகவும் [கணியன்] செயல் பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது [In the days before astronomy and astrology became separated, many of the greatest scientist/ astronomers were also practising astrologers] 

 

வானவியல் (Astrology), சோதிடம் (Astronomy) என்னும் இரண்டு சொற்களை நாம் அடிக்கடி பாவித்தாலும், அவை இரண்டினதும் வித்தியாசத்தைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. வானத்தில் இருக்கும் கோள்களைப் பற்றியும்,நட்சத்திரங்களைப் பற்றியும் இந்த இரண்டுமே சொல்வதால், இவற்றை அனேகர் ஒன்றாகவே பார்க்கின்றனர். ஆனால் வானவியல் என்பது விஞ்ஞானம், சோதிடம் என்பது சாத்திரம் ஆகும். உலகில் உள்ள பல பண்டைய நாகரிகங்கள் வானத்தில் உள்ள நட்சத்திரங்களினதும், கோள்களினதும் நகர்வுகளை பல ஆண்டுகளாக கவனித்தே வந்திருக்கிறார்கள். அந்த கவனிப்பினூடாக, சூரியன், சந்திரன் விண்மீன் திரள்கள்,  நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் நிலையை தமக்கு தெரிந்த அளவில் விபரித்துள்ளார்கள். சிலவேளை அவைக்கு புராண கருத்துக்கள் அல்லது கற்பனைக் கதைகளும்  சோடித்துள்ளார்கள். சோதிடம்  என்பது நமது சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களின் நிலையிலிருந்து நமது வாழ்க்கை பயணத்தில் அனைத்து மனிதர்களுக்கும் எந்த நேரத்தில் எவ்வாறு பாதிப்புகள் ஏற்படும் என்பதைப் பற்றி ஊகிக்கும் ஒன்று. உதாரணமாக, சோதிடர் ஒரு நபரின் சாதகத்தை வான சாத்திர  தரவுகளின் அடிப்படையில் கிரகங்களின் நிலைகள் கொண்டே கணக்கிடுகிறார்கள். எனவே, சோதிடமும் மற்றும் பண்டைய வான சாஸ்திரம் இரண்டும் வெவ்வேறு அறிவியல் அல்ல, இவை இரண்டும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டதாக அன்று இருந்தது. என்றாலும் பின்னைய காலத்தில், விஞ்ஞானம் முன்னேற வானசாத்திரம் என்பது வானியலாக தனித்து அறிவுபூர்வமாக இன்று பயணிக்கிறது. 

 

செங்கதிரவன் செல்லும் வழியும் அக்கதிரவனின் இயக்கமும் அந்த இயக்கத்தால் சூழப்பட்ட வட்டமான நிலப்பரப்பும் காற்று இயங்கும் திசையும் ஆதாரம் ஏதுமின்றி தானே நிற்கின்ற ஆகாயமும் என்று சொல்லப்பட்ட இவற்றை ஆங்காங்கே சென்று அளந்து பார்த்து அறிந்தவர்களைப் போல எல்லாம் இத்தனை அளவு என்று சொல்லும் கல்வி கற்றோரும் உள்ளனர் என புறநானூறு 30 

 

"செஞ்ஞா யிற்றுச் செலவும்

அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்,

பரிப்புச் சூழ்ந்த மண் டிலமும்,

வளி திரிதரு திசையும்,

வறிது நிலைஇய காயமும், என்றிவை

சென்றளந்து அறிந்தார் போல, என்றும்

இனைத்து என்போரும் உளரே"

 

என்று கூறுகிறது. அவ்வாறுதான் வானமண்டலத்திலுள்ள கோள்கள் நட்சத்திரங்கள் வருங்காலத்தைப் பற்றிக் கூறுகின்றன என சோதிடர்களும் சொல்லுகிறார்கள் என்று நாம் கருதலாம்?  

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

பகுதி: 02 வாசிக்க அழுத்துங்கள்👉Theebam.com: "சோதிடம் -ஒரு சிறு அலசல்" /பகுதி:02:   

0 comments:

Post a Comment