பழகத் தெரிய வேணும் – 28


-எதற்காகப் படிப்பது?

பரீட்சைப் பயத்தை எதிர்கொள்ள வேண்டுமா?

அதற்கான வழி இதோ!

என் பதின்ம வயது மாணவிகளுக்குச் சொல்வேன், “பிராக்டிகல் பரீட்சைக்கு முதல்நாள் ஏதாவது காதல் புதினம் படியுங்கள். அம்மா திட்டினால், ‘டீச்சர்தான் சொன்னார்கள்,’ என்று விறைப்பாகச் சொல்லிவிடுங்கள்!”

மாணவிகள் சிரிப்பார்கள், ‘ஏதடா, டீச்சரே அம்மாவை எதிர்க்கச் சொல்லிக்கொடுக்கிறார்களே!’ என்று.

படிப்பது என்றால், பள்ளிக்கூடப் பாடப்புத்தகங்களை மட்டும் குறிப்பதல்ல. அது புரியாது, பாலர் பள்ளி படிக்கும் நாளிலிருந்தே குழந்தைகளை, ‘வீட்டுப்பாடம் இருக்கா?’ என்று   விரட்டிக்கொண்டே இருந்தால், அவர்களுக்குச் சலிப்பு ஏற்படாமல் போகுமா?

அம்மா ஓயாமல், ‘படி, படிஎன்று தொணதொணக்கிறாள். இதில் மேல்படிப்பு வேறா! வேண்டாம்பா,’ என்று வேண்டுமென்றே, பரீட்சைகளில் தவறான பதில்களை அளித்த மாணவ, மாணவிகளை அறிவேன்.

ஞாபகசக்தி பெருக

படித்த கதையையே திரும்பத் திரும்பப் படிப்பது சிறு குழந்தைகளின் ஞாபகசக்தியை வளர்க்கும்.

தானே படிக்கும் வயது வரும்வரை வீட்டிலுள்ளவர்கள்தாம் அவர்களுக்குப் படித்துக்காட்ட வேண்டும். இப்பழக்கத்தால் உறவிலும் நெருக்கம் ஏற்படுகிறது, மொழித்திறனும் மேம்படும்.

மிகச் சிறு வயதிலேயே கதைப் புத்தகங்கள் படிக்கும் ஆசையைத் தூண்டிவிட்டால், புத்தகம் ஒன்றைக் கையில் எடுத்தாலே ஆனந்தம் பெருகும்.

சிறுவர்கள் கதைகளில் ராட்சதன், பூதம் எல்லாரும் சர்வசாதாரணமாக நடமாடுவார்கள்.

க்கதைகளைப் படித்துச் சொல்லும்போது, அவர்கள் கண்கள் பயத்தில் விரிந்தாலும், இறுதியில், தீயவர்கள் அழிவார்கள் என்று அறியும்போது ஏற்படும் நிம்மதியால் மகிழ்ச்சி பெருகும். தைரியம் பெருகும்.


செத்துப்போன சிங்கம்

என் பேரனுக்கு மூன்று வயதானபோது, ‘எந்தக் கதை வேணும்?’ என்றால், ‘சிங்கம்!’ என்று கொக்கரிப்பான்.

முயலானது குட்டியாக இருந்தாலும், அச்சத்தை ஊட்டிய சிங்கத்தை ஏமாற்றிய பஞ்சதந்திரக் கதைதான் அவனுக்குப் பிடித்தது. எத்தனை முறை கேட்டாலும் அலுக்கவில்லை.

கதையின் முடிவில், “சிங்கம் தண்ணிக்குள்ளே இன்னொரு சிங்கம் இருக்கிறதைப் பாத்து, கோபமா உள்ளே குதிச்சுது. அப்புறம் என்ன ஆச்சு?” என்று கேட்பேன்.

உடலை நிமிர்த்து, “சத் போச்!” என்பான், வீரமாக.

படங்களே இல்லையே!

பெரும்பாலான குழந்தைகளுக்குப் படங்கள் போட்டிருந்தால்தான் புத்தகங்களைப் படிக்கப் பிடிக்கும். ஏனெனில், அதுதான் எழுத்துக்களைவிட எளிதில் புரியும். அதனால், காமிக் புத்தகங்களை மட்டும்தான் விரும்பிப் படிப்பார்கள். ‘படித்தால் சரி!’ என்று விடவேண்டியதுதான்.

ஆனால், எந்த வயதிலும் படங்கள் நிறைந்த புத்தகங்கள்தாம் வேண்டும் என்றால் நடக்கிற காரியமா?

பதின்மூன்று வயதான என் மாணவிகள் ஆரம்பக்கல்வியைச் சீனப்பள்ளியில் படித்திருந்தார்கள். இடைநிலைப்பள்ளியிலோ, விஞ்ஞானப்பாடத்தை மலாய் மொழியில் படிக்கவேண்டும்.

வருத்தத்துடன், “எங்கள் புத்தகத்தில் படங்களே இல்லையே!” என்று புகார் செய்தார்கள் என்னிடம்!

கண்காணிப்பு

குழந்தைகள் பெரியவர்களாகும்வரை எத்தகைய புத்தகங்களைப் படிக்கிறார்கள் என்பதைக் கண்காணிக்க வேண்டுவது அவசியம்.

கதை:-

பத்து வயதாகியும், இரவில் தான் கழிப்பறைக்குச் செல்லும்போது யாராவது உடன்வரவேண்டும் என்று கெஞ்சுவான் பிரபு.

இத்தனைக்கும், வீட்டுக்குள்தான் இருக்கும் அந்த இடம். விளக்குகளும் உண்டு.

பின் எதற்காகப் பயம்?

நான் சின்ன வயசிலே நிறைய பயங்கரமான கதை படிப்பேன். அதனால ராத்திரியானா பயம்!” என்றான், என் கேள்விக்குப் பதிலாக.

சிறு வயதில் அந்தந்த பாத்திரங்களுடன் நாம் ஒன்றிவிடுவதால், அவர்கள் அனுபவிக்கும் உணர்வுகள் நம்மையும் தொற்றிவிடும்.

கல்லூரி நாட்களில் நான் ஆங்கிலப் புத்தகங்களை விரும்பிப் படிக்கும்போது, அம்மா, ‘இப்போ படிச்சியே, அதோட கதை என்ன?’ என்று தவறாது கேட்பாள். எதற்காகக் கேட்டாள் என்பது அப்போது எனக்குப் புரியவில்லை. சுவாரசியமாக விவரிப்பேன்.

அக்காலத்தில் ஒரு பெண் தடுக்கி விழும்போது அவளைப் பிடித்தாலோ, அல்லது அவள் நழுவவிட்ட புத்தகங்களை எடுத்துக் கொடுத்தாலோதான் காதல் வரும் என்பதுபோல் தமிழ்ப் புத்தகங்களிலும், திரைப்படங்களிலும் காணப்படும்.

நீ படிக்கிறதிலே ஒழுங்கா, கல்யாணம் பண்ணிக்கிறமாதிரி கதையே கிடையாதா!’ என்று அம்மா அங்கலாய்த்தபோது சிரிப்பாக இருந்தது.

இளம்வயதினருக்கான ஆங்கிலப் புதினங்களிலோ, கள்ளக்காதல்தான் அதிகமாக இருந்தது.

எதைப் படிப்பது?

சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பது, ‘நானும் பிறர் மதிக்க வாழ்வேன்,’ என்ற ஊக்கத்தை அளிக்கவல்லது.

சில சமயம், ‘எனக்குக்கூட அம்மாதிரியான திறமைகள் உண்டே!’ என்று தோன்றிப்போகும். இல்லாவிட்டால், அவைகளை வளர்த்துக்கொள்ளும் ஆர்வம் பிறக்கும்.

படிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்குப் பிறரைப் புரிந்துகொள்வது எளிது. ‘அந்தப் புத்தகத்தில் ஒருவன் இப்படித்தானே இருந்தான்!’ என்று, தீயவர்களைக் கண்டு அச்சம் ஏற்படும். தன்னைத்தானே புரிந்துகொள்ளவும் சிலருக்கு முடிகிறது.

ஓயாமல் காதல் நவீனங்களை மட்டும் படிக்கும் பழக்கம்கொண்ட பெண்கள் கதாநாயகியுடன் ஒன்றிவிடுவார்கள், ‘நம் வாழ்க்கை அப்படி அமையவில்லையே!’ என்ற ஏமாற்றம்தான் பிற்காலத்தில் எழும்.

நமக்குப் பிடிக்கிறதோ, இல்லையோ, ‘பிறர் படிக்கிறார்களே!’ என்று அவர்கள் படிக்கும் புத்தகங்களையே படிக்க ஆரம்பித்தால், நமக்கும் அவர்களுக்கும் வித்தியாசம் இருக்காது. நாம் ஒவ்வொருவரும் தனிப்பிறவி என்றால், எதற்காகப் பிறரைப்போல் இருக்கவேண்டும்?

நம்மை மாற்றும் சக்திகொண்டவை வார்த்தைகள்.

பதினைந்து வயதிலிருந்தே நான் தேடிப் படித்தது உளவியலுக்கான கல்லூரி பாடப் புத்தகங்களை.

ஓயாமல் இந்த மாதிரி புத்தகங்களையெல்லாம் படிக்காதே. பைத்தியம் பிடித்துவிடும்,’ என்று அம்மா கவலையோடு கெஞ்சுவாள்.

(தெரியாத்தனமாக விஞ்ஞானத்திலும் கணக்கிலும் அதிக மதிப்பெண்கள் பெற்றுவிட்டதால், அவைகளைக் கட்டாயமாகப் படிக்க நேரிட்டது).

எழுத்தாளர்களுக்கு உளவியல் தெரிந்திருப்பது அவசியம்.

கதாபாத்திரங்களின் உணர்வு புரிந்தால்தானே பாத்திரப்படைப்பில் நம்பகத்தன்மை இருக்கும்?

முதியோர்களுக்கு

படிக்கும் பழக்கம் முதியோர்களின் மூளைக்குப் பயிற்சி கொடுக்கவல்லது. தன்னையே மறக்கும் நிலை, அதாவது, அல்சீமர் நோய் அணுகாது.

ஒரே இடத்தில் ஒரு புத்தகத்தோடு அமர்ந்தால், பலரோடு பல நாடுகளுக்கும், எக்காலத்திற்கும் பிரயாணம் செய்ய முடியும். கற்பனையில்தான்!

அதிகம் அலைய முடியாத நிலையில், வாழ்வில் உற்சாகம் திரும்பும்.

இனி படித்து என்ன கிழிக்கப்போகிறேன்என்று அலுத்து விட்டுவிட்டால், வாழ்வில் சலிப்புத்தட்டாமல் என்ன ஆகும்?

:-நிர்மலா ராகவன் -/-எழுத்தாளர் -/-சமூக ஆர்வலர்-/-மலேசியா.

தொடரும்.... 
👉👉ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக 

0 comments:

Post a Comment