‘’இன்னா நாற்பது’’ -/01/உலகத்தில் கூடாதவை என்னென்ன...

‘’இன்னா நாற்பது’’ என்னும் நூல் ‘கபிலர்’ என்னும் புலவரால் இயற்றப்பட்டது. நாற்பத்தொரு பாடல்களைக் கொண்ட இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என அழைக்கப்படும் சங்கம் மருவிய காலத் தமிழ் நூற்றொகுதியுள் அடங்குவது. உலகத்தில் கூடாதவை என்னென்ன என்பது பற்றிக் கூறி நீதி உரைப்பது இந்நூல். இது கி. பி. நான்காம் நூற்றாண்டைச் சார்ந்த நூலாகும். இந்நூல் இன்னிசை வெண்பாக்களால் ஆனது. இதில் நூற்று அறுபத்து நான்கு கூடாச் செயல்கள் கூறப்பட்டுள்ளன.‘’இன்னா நாற்பது’’

 

வெண்பா:01

பந்தம் இல்லாத மனையின் வனப்பு இன்னா;

தந்தை இல்லாத புதல்வன் அழகு இன்னா;

அந்தணர் இல் இருந்து ஊண் இன்னா; ஆங்கு இன்னா,

மந்திரம் வாயா விடின்.

விளக்கம்: சுற்றமில்லாத மனையின் அழகு துன்பம். தந்தையில்லாத மகனின் அழகு துன்பம். துறவோர் வீட்டிலிருந்து உண்ணுதல் துன்பம். அவ்வாறே மந்திரங்கள் பயன் தராவிடில் துன்பம்.

 

வெண்பா :02

பார்ப்பார் இல் கோழியும் நாயும் புகல் இன்னா;

ஆர்த்த மனைவி அடங்காமை நற்கு இன்னா;

பாத்து இல் புடைவை உடை இன்னா; ஆங்கு இன்னா

காப்பு ஆற்றா வேந்தன் உலகு.        

விளக்கம்: பார்ப்பாருடைய வீட்டில் நாயும், கோழியும் இருத்தல் துன்பம். கட்டிய மனைவி கணவனுக்கு அடங்காமை துன்பம். பகுப்பு இல்லாத புடைவையை உடுத்தல் துன்பம். அவ்வாறே காப்பாற்ற அரசன் இல்லாத நாடு துன்பம்.

 

வெண்பா :03

கொடுங் கோல் மற மன்னர் கீழ் வாழ்தல் இன்னா;

நெடுநீர் புணை இன்றி நீந்துதல் இன்னா;

கடு மொழியாளர் தொடர்பு இன்னா; இன்னா,

தடுமாறி வாழ்தல் உயிர்க்கு.  

விளக்கம்: கொடுங்கோல் அரசனது கீழ் வாழ்தல் துன்பம். தெப்பம் இல்லாமல் பெரிய ஆற்றினைக் கடந்து செல்லுதல் துன்பம். வன்சொல் கூறுவோரது தொடர்பு துன்பம். உயிர்கள் மனம் தடுமாறி வாழ்தல் துன்பம்.

 

வெண்பா :04

எருது இல் உழவர்க்குப் போகு ஈரம் இன்னா;

கருவிகள் மாறிப் புறங்கொடுத்தல் இன்னா;

திருவுடையாரைச் செறல் இன்னா; இன்னா,

பெரு வலியார்க்கு இன்னா செயல்.

விளக்கம்: எருது இல்லாத உழவர்க்கு அருகிய ஈரம் துன்பமாம். கருவிகளை இழந்து போரில் புறமுதுகிடுதல் துன்பமாம். செல்வம் உடையவர்களிடம் கோபம் கொள்ளுதலும், திறனுடையவர்களுக்குத் தீங்கு செய்தலும் துன்பமாம்.

 

வெண்பா:05 

சிறை இல் கரும்பினைக் காத்து ஓம்பல் இன்னா;

உறை சோர் பழங் கூரை சேர்ந்து ஒழுகல் இன்னா;

முறை இன்றி ஆளும் அரசு இன்னா; இன்னா,

மறை இன்றிச் செய்யும் வினை.      

விளக்கம்: வேலியில்லாத கரும்புப் பயிரைப் பாதுகாத்தல் துன்பமாம். மழைத்துளி ஒழுகுதலையுடைய பழைய கூரையையுடைய மனையில் வாழ்தல் துன்பமாம். நீதி இல்லாமல் ஆளுகின்ற அரசரது ஆட்சி துன்பமாகும். வெளிப்படையாகச் செய்யும் வேலை துன்பமாகும்.


‘’இன்னா நாற்பது’’ தொடரும்.... ››››››

 

தேடல் தொடர்பான தகவல்கள்:

இன்னா நாற்பது - பதினெண் கீழ்க்கணக்கு, இன்னா, துன்பம், துன்பமாம், இல்லாத, வாழ்தல், இலக்கியங்கள், நாற்பது, அவ்வாறே, அழகு, பதினெண், கீழ்க்கணக்கு, ஆங்கு, தடுமாறி, தொடர்பு, இன்றி, இல்லாமல், எருது, செய்யும், ஈரம், துன்பமாகும், அடங்காமை, மனையின், சங்க, தொழாதார்க்கு, கோழியும், நாயும், இருத்தல், மனைவி, கீழ்

 

0 comments:

Post a Comment