மகாவம்சத்தில் புதைந்துள்ள…(பகுதி 06)

  உண்மைகளும், வரலாற்று சான்றுகளும் மகாவம்சம் என்பது, இலங்கையில், தேவநம்பிய தீசன் அனுராதபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த காலமான கி.மு 247-207 இல், பௌத்தம் அறிமுகமாகி, அதன் பின் அது  நிலைபெற்ற பின்னர், தேவநம்பியதீசனால் கட்டப்பட்ட மகாவிகாரையில், பௌத்தத்துடன் வருகை தந்த வட இந்திய மொழியான பாளி (பிராகிருதம்) மொழியில் செய்யுள் வடிவில், கி.மு 543ம் ஆண்டு இந்தியாவில் இருந்து விஜயன் எனும் ஒரு இளவரசன் வந்தான் என்பது முதல், கி.பி 361ம் ஆண்டு மகாசேனன் என்பவன் ஆட்சி செய்தான் என்பது வரை இலங்கையின் வரலாற்று குறிப்புகளை காலவரிசையுடனும் மற்றும் பௌத்தம் இந்தியாவில் தோன்றி பரவிய வரலாற்றையும், அது இலங்கைக்கு அறிமுகம் செய்யப்பட்டு நிலைபெற்ற வரலாற்றையும், கூடவே புத்தரையும், பௌத்த மதத்தையும், பௌத்தம் தோன்றி வளர்ந்த வட இந்தியாவுடன் இலங்கையை தொடர்புபடுத்தியும், எழுதப்பட்ட நூலாகும். அன்று மக்களிடையே பரவிய அல்லது பரப்பப்பட்ட செவிவழி கதைகளையும், மற்றும் 4ஆம் நூறாண்டில் எழுதப்பட்ட  தீபவம்சத்தையும் அடியாகக் கொண்டும் 5ம், 6ம் நூற்றாண்டில், மகாநாம தேரோ எனும் பௌத்தப் பிக்குவால் இது எழுதப்பட்டது.

 

பொதுவாக வரலாற்று நூலைப் படிக்கு முன் வரலாற்று ஆசிரியனைப் படி என்பது வரலாற்று மாணவர்களின் அடிச்சுவடி ஆகும். அதாவது இன, மத, மொழி, கலாசார, பண்பாட்டு இயல்புகளுக்குள் அல்லது வெறிக்குள் தொலைந்து போயிருக்கும் மனிதனிடமிருந்து உண்மை வரலாற்றை பிரித்துப் பார் என்பது அதன் பொருள் எனலாம். எனவே மகாவம்சத்தை வாசிக்கும் பொழுது இதையும் மனதில் கொள்ள வேண்டும் என்பதுடன், அது எழுதப் பட்ட சூழ்நிலையையும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்பது என் பணிவான வேண்டுகோள். 

 

மகாவம்சம் தேரவாத பௌத்தத்தை [‘Theravatha Buddhism’] முற்றும் முழுதாக ஆதரிக்கும் ஒரு நூல். எனவே அது கட்டாயம் மகாயான பௌத்தத்தில் [‘Mahayana Buddhism’] இருந்து வேறுபட்டது. கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி முதல், பல்லவர் ஆட்சி ஏற்பட்ட காலமான கி.பி. ஏழாம் நூற்றாண்டின் தொடக்ககாலம் வரையிலான காலகட்டத்தில், சமண, பௌத்த மதங்களின் செல்வாக்கால் தமிழகத்தின் நிலைமை மெல்ல மெல்ல மாறுபட்டு, அங்கு மகாயான பௌத்தம் தலை தூக்க தொடங்கியது. என்றாலும் இந்து சமயமும் [சைவ சமயமும்] அங்கு இன்னும் வழமையில் இருந்து, இச் சமயங்களுடன் முட்டி மோதிக் கொண்டு இருந்த காலம் அது. எனவே 6ஆம் நூறாண்டில் [தேரவாத] மகாவம்சம் எழுதும் பொழுது தமிழர்கள் அவருக்கு ஒரு சவாலாகவே இருந்துள்ளார்கள் [In that period even tamils following Mahayana Buddism and Hindusiam which was big challenging Theravatha]. இதுவும் தமிழர்களை ஒரு அந்நியராக கருத நூல் ஆசிரியருக்கு ஒரு காரணமாக அன்று அமைந்து இருக்கலாம்? புத்தர் மரணித்து ஆயிரம் ஆண்டுகளின் பின் மகாவிகாரை துறவி, மகாநாம தேரர், தன்னை புத்தரின் தூதுவராக முன்னிலைப்படுத்தி, மகாவம்ச காப்பியத்தின் ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் இந்த தொகுப்பு " பௌத்தர்களது [பௌத்த பக்தர்களது] மனக் கிளர்ச்சிக்கும் ஆனந்தத்திற்கும் ஆக தொகுக்கப்பட்டது" [“serene joy of the pious”], என்ற அறைகூவலை திருப்ப  திருப்ப பதித்து எழுதுகிறார்.

 

எது எப்படி இருப்பினும், இன்று கல்வெட்டுக்கள் உண்மையை எடுத்துக் காட்டுகின்றன. உதாரணமாக, இலங்கையில் கண்டுபிடிக்கப் பட்ட கிருஸ்துக்கு முற்பட்ட  கல்வெட்டுகளில், 50 மேற்படட இடத்தில் முக்கிய இடத்தை வகுத்த சொல் 'பருமக' [parumaka] ஆகும். இது தென் இந்தியாவில் காணப்பட்ட, தமிழ் சொல் பருமகன் அல்லது  பெருமகன் [perumakan] உடன் ஒன்றிப் போவதாக, ராசநாயகம், சி. பத்மநாதன், . புஸ்பரத்தினம் போன்ற அறிஞர்கள் அடையாளம் கண்டுள்ளார்கள். இதற்கு ராசநாயகம் , தலைவன், கோமான், மன்னன் [chief, lord, and king] மற்றும் பரணவிதான [Paranavitana] இதற்கு அதே பொருள் பட, ஆனால் பொதுப் படையாக இல்லாமல், இந்தோ ஆரியன் தலைவர்கள் [Indo-Aryan chieftains] என விளக்கி உள்ளார். ஆனால் கிருஸ்துக்கு பின் இந்த பெயர் மாற்றப் பட்டு அது மாபருமக [maparumaka / பெரும் பெருமகன்] என பிரதியீடு செய்யப் பட்டுள்ளது. அப்படியான கல்வெட்டு ஒன்று மட்டக்களப்பு, வெல்லாவெளி - தளவாய் என்ற இடத்தில் [Vellaveli Brahmi Inscription / The initial finding says that it is dated to approximately 2200 years] கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இந்த பிராமிச் சாசனம் 'பருமக நாவிக ஷமதய லெணே' என்பதாகும். இதை 'பருமக' [பெருமகன்] என்ற பட்டத்திற்குரிய கப்பல் தலைவன் ஷமதய என்பவன் கொடுத்த குகை என பொருள் படுத்தப் படுகிறது. எனவே இந்த இடத்தில் கிருஸ்த்துக்கு முன், தமிழ் மொழியையும்  அல்லது வேறு மொழியையும் [பரணவிதான கூறியது போல் இந்தோ ஆரியன்] பேசியோர் வாழ்ந்து உள்ளனர் என்பது உறுதிப் படுத்தப் படுகிறது. எனவே விஜயன் வரும் பொழுது அவனுக்கும் அவன் தோழர்களுக்கு அடைக்கலம் கொடுத்த பூர்வீக குடிமக்களில் இவர்களும் ஒருவராகும், எனவே இவர்களை நீங்கள் ஒதுக்க முடியாது, இவர்களும் இம் மண்ணின் மைந்தர்களே !! 

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடி, யாழ்ப்பாணம்]

பகுதி: 07 தொடரும், அடுத்த பகுதி வாசிக்க அழுத்துக   Theebam.com: மகாவம்சத்தில் புதைந்துள்ள.....[/பகுதி 07]: 

 ஆரம்பத்திலிருந்து வாசிக்க, அழுத்துக Theebam.com: மகாவம்சத்தில் புதைந்துள்ள.../ பகுதி 01:

 

 

 

 

0 comments:

Post a Comment