‘’இன்னா நாற்பது’’ -/03/-உலகத்தில் கூடாதவை என்னென்ன...

 

‘’இன்னா நாற்பது’’ என்னும் நூல் ‘கபிலர்’ என்னும் புலவரால் இயற்றப்பட்டது. நாற்பத்தொரு பாடல்களைக் கொண்ட இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என அழைக்கப்படும் சங்கம் மருவிய காலத் தமிழ் நூற்றொகுதியுள் அடங்குவது. உலகத்தில் கூடாதவை என்னென்ன என்பது பற்றிக் கூறி நீதி உரைப்பது இந்நூல். இது கி. பி. நான்காம் நூற்றாண்டைச் சார்ந்த நூலாகும். இந்நூல் இன்னிசை வெண்பாக்களால் ஆனது. இதில் நூற்று அறுபத்து நான்கு கூடாச் செயல்கள் கூறப்பட்டுள்ளன.


‘இன்னா நாற்பது’-தொடர்கிறது...

 


 

வெண்பா:11

உடம்பாடு இல்லாத மனைவி தோள் இன்னா;

இடன் இல் சிறியாரோடு யாத்த நண்பு இன்னா;

இடங்கழியாளர் தொடர்பு இன்னா; இன்னா,

கடன் உடையார் காணப் புகல்.       

 

விளக்கம்உள்ளம் பொருந்தாத மனைவியின் தோளினைச் சேர்தல் துன்பமாகும். விரிந்த உள்ளமில்லாத சிறுமையுடையாருடன் நட்பு கொள்ளுதல் துன்பமாகும். மிக்க காமத்தினை உடையாரது சேர்க்கை துன்பமாகும். கடன் கொடுத்தவரைக் காணச் செல்லுதல் துன்பமாம்.

 

வெண்பா:12

தலை தண்டமாகச் சுரம் போதல் இன்னா;

வலை சுமந்து உண்பான் பெருமிதம் இன்னா;

புலை உள்ளி வாழ்தல் உயிர்க்கு இன்னா; இன்னா,

முலை இல்லாள் பெண்மை விழைவு.      

 

விளக்கம்தலை அறுபடும்படி காட்டினிடை செல்லுதல் துன்பமாகும். வலையை நம்பி வாழ்பவனின் செருக்கு துன்பமாகும். புலாலை விரும்பி உண்ணுதல் துன்பமாகும். முலை இல்லாதவள் பெண் தன்மையை விரும்புதல் துன்பமாகும்.

 

வெண்பா:13

மணி இலாக் குஞ்சரம் வேந்து ஊர்தல் இன்னா;

துணிவு இல்லார் சொல்லும் தறுகண்மை இன்னா;

பணியாத மன்னர் பணிவு இன்னா; இன்னா,

பிணி அன்னார் வாழும் மனை.       

 

விளக்கம்மணியில்லாத யானையின் மீது ஏறிச் செல்லுதல் அரசனுக்குத் துன்பமாகும். பகையை வெல்லுந் துணிவில்லாதவர்கள் கூறும் வீர மொழிகள் துன்பமாகும். வணங்கத்தகாத அரசனை வணங்குதல் துன்பமாகும். நோயுள்ளவர் வீட்டில் வாழ்வது துன்பமாகும்.

 

வெண்பா:14

வணர் ஒலி ஐம்பாலார் வஞ்சித்தல் இன்னா;

துணர் தூங்கு மாவின் படு பழம் இன்னா;

புணர் பாவை அன்னார் பிரிவு இன்னா; இன்னா,

உணர்வார் உணராக்கடை.

 

விளக்கம்கருமையான கூந்தலையுடைய மகளிர் தம் கணவனை வஞ்சித்தல் துன்பமாகும். கொத்தாகத் தொங்குகின்ற மாம்பழம் கனிந்து விழுந்தால் துன்பமாம். வேற்றுமையின்றிக் கூடிய பெண்ணைப் பிரிந்து செல்வது துன்பமாம். அறிந்து கொள்ளக் கூடியவர்கள் அறியாவிட்டால் துன்பமாம்.

 

வெண்பா:15

புல் ஆர் புரவி மணி இன்றி ஊர்வு இன்னா;

கல்லார் உரைக்கும் கருமப் பொருள் இன்னா;

இல்லாதார் நல்ல விழைவு இன்னா; ஆங்கு இன்னா,

பல்லாருள் நாணுப் படல்.      

 

விளக்கம்புல்லை உண்கின்ற குதிரையின்மேல் மணியில்லாமல் ஏறிச் செல்லுதல் துன்பமாம். கல்வியில்லாதவர் உரைக்கும் காரியத்தின் பொருள் துன்பமாம். பொருள் இல்லாதவர் விரும்பும் விருப்பம் துன்பமாம். அவ்வாறே பலர் நடுவே வெட்கமடையும்படியான நிலையில் இருத்தல் துன்பமாம்.

‘’இன்னா நாற்பது’’ தொடரும்.... ››››››

தேடல் தொடர்பான தகவல்கள்:

இன்னா நாற்பது - பதினெண் கீழ்க்கணக்கு, இன்னா, துன்பமாகும், துன்பமாம், இலக்கியங்கள், செல்லுதல், நாற்பது, கீழ்க்கணக்கு, பதினெண், பொருள், வஞ்சித்தல், உரைக்கும், ஏறிச், முலை, கடன், சங்க, விழைவு, அன்னார்

0 comments:

Post a Comment