அறிந்துகொள்ள வேண்டிய அறிவியல்

 மீசையில் இருக்கு சூட்சுமம்!

பனிக் கடல் விலங்கினமான சீல், இன்னும் பல புதிர்களை தன் வசம் வைத்திருக்கிறது. சீல்களால் எப்படி இருட்டிலும் இரையை துல்லியமாகப் பிடிக்க முடிகிறது?

 

அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் ஜப்பானின் டோக்கியோ பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள், சில சீல்களின் மூக்கிற்கு அருகே கேமிராக்களையும், அகச்சிவப்புக் எல்..,டிக்களையும் பொருத்தி தகவல்களை சேகரித்து கண்டறிந்துள்ளனர்.

 

சீல்கள் தங்கள் மீசைகளை சற்றே நீட்டித்து, அசைக்கின்றன. இதன் மூலம் மீசை முடிகள், நீரின் அதிர்வுகளை உள்வாங்குகின்றன. அருகே மீன்கள் நீந்தினால், அந்த அதிர்வுகளை ஆன்டெனா போல சீல் மீசை முடிகள் உணர்த்துகின்றன. உடனே சீல்கள் பாய்ந்து உண்கின்றன.

 

பசியைத் தணிக்கும் உடற்பயிற்சி!

உடற்பயிற்சி செய்வோருக்கு எப்படி எடை குறைகிறது? இதை ஆராய்ந்த விஞ்ஞானிகள், உடற்பயிற்சியால், ஒரு அமினோ அமிலம், ரத்தத்தில் அதிகரிப்பதை கவனித்தனர். அது, உணவு உட்கொள்ளும் உந்துதலை மட்டுப்படுத்துகிறது. எலிச் சோதனைகளில், இது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த அமிலத்தை செயற்கையாகத் தயாரித்து, மனிதர்களுக்குக் கொடுத்தால், உணவு உட்கொள்ளும் விழைவு குறைந்து, உடல் எடை குறையுமா என விஞ்ஞானிகள் அடுத்து சோதிக்கவுள்ளனர். இந்த ஆய்வு நேச்சர் இதழில் வெளியாகியுள்ளது.

 

அதிகரிக்கும் பாலைவனப் பரப்பு!

புவி வெப்பமாதலால், மழை குறைவது, சராசரி வெப்பநிலை உயர்வது ஆகியவை தாவரங்கள் மற்றும் விலங்குகளின் வாழ்க்கை முறையை மாற்றிவிடுகின்றன. இதன் நேரடி, உடனடி விளைவாக, பாலைவனத்திற்கு அருகே உள்ள நல்ல நிலமும், பாலையாகின்றன. ஒரு ஆய்வின்படி, வடக்கு உஸ்பெக்கிஸ்தான், கிர்கிஸ்தான், தெற்கு கசகிஸ்தான் மற்றும் வடமேற்கு சீனா ஆகிய பகுதிகளில், 1980களில் இருந்ததைவிட, தற்போது, பாலை நிலங்கள் 100 கி.மீ., அளவுக்கு விரிவடைந்துள்ளன.

 

ஒலி, ஒளி மாசுகளின் தாக்கம்!

கண் கூசும் மின் விளக்குகளின் ஒளி வெள்ளம். காதைக் கிழிக்கும் வாகன-இயந்திர இரைச்சல். இவை மனித முன்னேற்றத்தின் அறிகுறிகள். ஆனால், மனிதன் உருவாகிய இத்தகைய மாசுகளின் தாக்கத்தால், வலசைப் பறவைகள் வழி தவறுகின்றன. வவ்வால்களின் கேட்கும் திறன் மந்தமாகியுள்ளது. கரையோரம் முட்டை பொறிந்து வெளி வரும் ஆமைகள், கடலுக்குள் போகாமல் திரிகின்றன. எனவே புலன் மாசுகளை குறைக்க அறை கூவல் விடுக்கிறார் அறிவியல் நுாலாசிரியர் எட் யோங்.

தொகுப்பு:செ.மனுவேந்தன்

0 comments:

Post a Comment