நவீன உலகில் எம்மை நெருங்கி வரும் புதுமைகள்

  அறிவியல்

உலகின் முதல் ஒளிச் சில்லு!

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர் ஹரீஷ் பாஸ்கரன் தலைமையிலான விஞ்ஞானிகள், உலகிலேயே முதல் முறையாக, ஒரு புது வகை சில்லை உருவாக்கிஉள்ளனர்.


தகவல்களை அதிவேகமாக அலசும் இச்சில்லுகள், நேனோ கம்பிகள் மூலம் ஒளிக் கதிர்களை கடத்துகின்றனமின்சாரத்திலுள்ள எலெக்ட்ரான்களைவிட, ஒளிக் கதிரிலுள்ள போட்டான்கள் அதிவேகமாக பயணிப்பவை என்பதால், ஒளியால் இயங்கும் சில்லின், தகவல் அலசல் வேகம் பன்மடங்கு இருக்கும். தவிர, ஒளிக் கதிரில் பல அலைவரிசைகள் இருக்கும். இந்த ஒவ்வொரு அலைவரிசையும் இன்னொன்றுடன் குறுக்கிடாமல் பயணிக்கும். எனவே பலவகை தகவல்களை ஒரே ஒளிக் கதிரில் செலுத்த முடியும்.

 

அதேபோல, ஒளிக் கற்றை மூலம் அதிக அடர்த்தியான தகவல்களை அனுப்பலாம். ஒளியால் தகவல்களை பரிமாறி அலசும் சில்லு ஒரு சிறிய துவக்கம் தான். அடுத்து வரும் ஆண்டுகளில், சில்லு உலகில், எலெக்ட்ரானிக்ஸ் துறையின் இடத்தை, போட்டோனிக்ஸ் கைப்பற்றப்போகிறது. தகவல் பரிமாற்றம் மற்றும் அலசல்களுக்கு ஒளிக் கதிர்கள் புரட்சிகரமான வசதிகளைத் தரப்போகின்றன.

 

போட்டோனிக் சில்லுகள் புழக்கத்திற்கு வருகையில், செயற்கை நுண்ணறிவு, அதிதிறன் கணினி ஆகிய துறைகள் வேகமெடுக்கும்.

 

பூச்சிக் கொல்லி மருந்தை காட்டும் உணரி

சில ஆய்வுகளின்படி, ஐரோப்பாவில் விற்கப்படும் பாதி பழங்களில் பூச்சி மருந்து நச்சு படிந்திருக்கிறது. இந்த நச்சு, பழங்களை உட்கொள்வோருக்கு பல நோய்களை, குறைபாடுகளை உண்டாக்குகிறது.

 

ஆனால், பூச்சி மருந்து பழங்களின் மேல் படிந்துள்ளதா என்பதை சோதிப்பதற்கு அதிக நேரமும், செலவும் ஆகும். எனவே, இந்த சிக்கலைத் தீர்க்க ஒரு புதிய உணரியை உருவாக்கியுள்ளனர் சுவீடனிலுள்ள கரோலின்ஸ்கா ஆராய்ச்சி நிலையவிஞ்ஞானிகள். மிகவும் நேனோ அளவில் உள்ள இந்த உணரிகளை பழங்களின் மேல் துாவிவிடவேண்டும். பின் அந்த உணரிகளை லேசரால் துாண்டினால் கிடைக்கும் அதிர்வுகளை வைத்து, பூச்சி மருந்து நச்சு உள்ளதா என்பதை கண்டறியலாம்.

 

இந்த உணரியை பெரிய கிடங்குகள் முதல் சிறிய கடைகள் வரை எங்கும் பயன்படுத்த முடியும் என்பதோடு அதிக செலவும் ஆகாது என கரோலின்ஸ்கா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


செயற்கை நுண்ணறிவு வைத்தியர்!

அமெரிக்காவின் பிரபல மருத்துவமனையான மேயோ கிளினிக், அண்மையில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தத் துவங்கியிருக்கிறது. இதற்கான அல்காரித நிரலை, 'கே ஹெல்த்' என்ற தொலைவு மருத்துவ நிறுவனம் உருவாக்கியுள்ளது.

 

கே ஹெல்தின் 100க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், ரத்த அழுத்தம் தொடர்பான நோயறிதல் மற்றும் சிகிச்சையை விரைவுபடுத்த இந்த சேவையைப் பயன்படுத்துவர். மேயோவிடம் ஒரு கோடி நோயாளிகளின் சிகிச்சை விபரங்கள் கொண்ட தரவுக் களஞ்சியம் உள்ளது.இந்த தரவுகளிலிருந்து தனி நபர் அடையாளங்களை நீக்கிவிட்டு, செயற்கை நுண்ணறிவு மென்பொருளிடம் தருவர். இந்த தரவுகளுடன், புதிய நோயாளியின் தரவுகளை ஒப்பிட்டு, செயற்கை நுண்ணறிவு கணிப்புகளை வழங்கும்.

தொகுப்பு:செ.மனுவேந்தன்

0 comments:

Post a Comment