"மர்மம் விலகியது-சிறுகதை (உண்மைச் சம்பவம்)

இலங்கைக் கம்யூனிஸ்ட் (சீன சார்பு) கட்சியில் இருந்து பிரிந்து சென்ற ரோகண வீஜயவீர, மக்கள் விடுதலை முன்னணி [சிங்களத்தில் Janatha Vimukthi Peramuna] என்ற ஒரு  கட்சியைநிறுவினார். இவற்றால் கவரப்பட்ட படித்த கிராமப்புற இளைஞர்கள், மாணவர்கள், தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள், முக்கியமாக சிங்கள மக்கள் பெருமளவாக ஜே.வி.பி.யில் இணைந்தனர். அவர்கள் 1971ம் ஆண்டும் மீண்டும்  1987-1989 ம் ஆண்டும் ஆயுதப் புரட்சி அரசுக்கு [பெரும்பாலும் சிங்களவர்களை கொண்ட]  எதிராக செய்தனர்.

அப்படியான ஒரு காலகட்டத்தில், நான் பேராதனை வளாகத்தில் இரண்டாம் ஆண்டு மாணவனாக இருந்தேன்.

 

என்னுடன் பல்கலைக்கழக நூலகத்தின் உதவி நூலகர், ஆறுமுகம், மிகவும் நண்பராக இருந்தார். அவர் மலை நாட்டில் பிறந்து வளர்ந்ததால், சிங்களம் தாராளமாக தெரியும். நான் யாழ்ப்பாணம் என்பதால் சிங்களம் அறவே தெரியாது. அவர் ஓய்வு நேரத்தில், எங்களுடன் வந்து  கேரம் பலகை அல்லது சீட்டு விளையாடுவார்.

 

ஜே.வி.பி அரசுக்கு எதிராக ஆயுத புரட்சி செய்து கொண்டு இருந்த ஒரு கட்டத்தில், ஒரு நாள், அவர் எம்முடன் வந்து ஓய்வை பொழுதுபோக்காக கழித்துவிட்டு, இருள தொடங்க தன் விடுதிக்கு சென்றார். நாம் இருட்டுக்குள் போகவேண்டாம். இது பல்கலைக்கழக வளாகம் என்பதால், ஜே.வி.பி க்கு கூடுதலான ஆதரவு இங்கு இருப்பதால், ஒரு வேளை ராணுவம் பதுங்கி இருக்கலாம், விடிய போவது நல்லது என்று கூறினேன். ஆனால் அவர் இது சிங்களவரும் சிங்களவரும் அடிபடும் போராட்டம், ஆகவே பயம் இல்லை என்று கூறிவிட்டு போனார்.

 

நான் ஒரு முறை இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில், ராணுவத்திடம், நடந்து போகும் பொழுது அகப்பட்டேன். அவர்கள் என்னை திடீரென சுற்றி வளைத்தார்கள். கொஞ்சம் பயமாக இருந்தாலும், தமிழிலும் ஆங்கிலத்திலும், நான் மாணவன் , நண்பனிடம் ஒன்றாக படிக்க போய்விட்டு திரும்புகிறேன் என்றேன். என் மொழியில் இருந்து தமிழன் என்று அறிந்ததும், அரைகுறை தமிழில், கெதியாக விடுதிக்கு  போ என்று சொல்லி அனுப்பினார்கள். ஆகவே நான் அவர் போவதை பெரிதாக தடுக்கவில்லை.

 

ஆனால் அடுத்த நாள் என் நண்பர் ஆறுமுகத்தின் உடல், மகாவலி ஆற்றங் கரையில் துப்பாக்கி சூடுகளுடன் கண்டு எடுக்கப்பட்டதை அறிந்து அதிர்ந்தே போய்விட்டேன். அவர் தமிழர். ராணுவத்தாலும் ஜே.வி.பி யாலும் சந்தேகப்பட கூடியவர் அல்ல. அப்படி என்றால் உண்மையில் என்ன நடந்தது. அதன் மர்மம் என்ன ?. என்னையும் என் நண்பர்களையும் வாட்டியது.

 

ஆகவே மதியப்பொழுது, அவர் உடல் இருந்த மகாவலி ஆற்றங்கரைக்கு போய், அங்கு அருகாமையில் குடி இருக்கும் கிராமத்தவர்களிடம், சிங்கள நண்பர்களின் உதவியுடன் என்ன நடந்தது என விசாரித்தோம்.

 அவர்களில் ஒரு குடும்பத்தினர்  கூறியதாவது ,  துப்பாக்கி காயங்களுடன், தங்கள் வீட்டை வந்து தட்டிய இவர் , தன்னை ராணுவம் சுட்டு, மகாவலியில் எறிந்து விட்டு போனதாகவும், ஆம்புலன்ஸ்க்கு  அறிவிக்கும் படி, அவர் நல்ல சிங்களத்தில் கூறியதால், தாம் இவரை புரட்சி செய்யும்  இளைஞர் கூட்டம் என நினைத்து, ஆம்புலன்ஷை  கூப்பிடாமல், ராணுவத்துக்கு செய்தி அனுப்பினோம்’  என்று கூறினர்.

 

அப்பொழுதுதான் அவரின் மரணத்தின் மர்மம் விலகியது!. அவர் தாராளமாக தமிழ் போல், சிங்களம் பேசும் ஆற்றல், அவரை சிங்கள இளைஞர்  என்றே நம்ப வைத்துவிட்டது, தெரியவந்தது. அந்த கள்ளம் கபடமற்ற உன்னத மனிதன்  இன்னும் என் நினைவில் வாழ்கிறார்!!

:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,-/-அத்தியடி, யாழ்ப்பாணம்

0 comments:

Post a Comment