பூமி தட்டை வடிவமானதாம்.......😴?


இல்லை!

உலகில் தோன்றிய விஞ்ஞானிகளும், அறிவுஜீவிகளும் தங்கள் ஆழமான அவதானிப்புகள், ஆராய்ச்சிகளின் பின்னர், நாம் இருக்கும் இந்தப் பூமி, உருண்டை வடிவமானதுதான் என்றும், அது தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது என்றும் அன்றே நிறுவி இருக்கிறார்கள்.

ஆனால்,

தொழில் நுட்ப உச்சியில் இருக்கும் இந்தக் காலத்திலும், சில மனிதர்கள் பூமி தட்டை வடிவமானது தான் என்று திட்ட வட்டமாக நம்பி, இன்னமும் பறைசாற்றிக் கொண்டு திரிகிறார்கள்.

 

யார் இவர்கள்?

பழைய காலத்தில் இருந்த, படிப்பறிவற்ற சிலரால் எழுதப்பட்டு, அவற்றைக் கடவுள்தான் எழுதினார் என்று கூறி வைக்கப்பட்ட நூல்களில் சொல்லப்பட்டிருப்பதைப் படித்து, அந்தக் கடவுள் மயக்கத்தில் இருந்தபடியே, அவற்றை நம்பிக்கொண்டு திரியும் ஒரு சிறு வட்டத்துள் இருப்பவர்களே!

 

கடவுள் எழுதினால் நூறு வீதம் உண்மையாய் இருக்கும் என்று அப்படியே நம்பி விடுவார்கள். அவர் சொல்லிவிட்டார் பூமி தட்டையானது என்றும், பூமியைச் சுற்றி சூரியனும் சந்திரனும் சென்று மறைந்து மறுபுறம் வருகின்றன என்றும்! ஆகவே அது மறுப்புக் கூறிக் கேள்வி கேட்கப் படாத முழு உண்மையாகும் என்று இன்னமும் சாதிப்போர் பலர் இன்னமும் இணையத்தளங்களில் உலாவி வருகிறார்கள்.

 

இதை மறுத்து, உண்மையைக் கூறிய அநேகமான ஆராய்ச்சியாளர்கள் பலர், கடவுள் மறுப்பாளர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டுஅந்தக் காலத்தில் கொல்லப்பட்டும், சிறையில் வைக்கப்பட்டும், கொடுமைப்படுத்தப்பட்டும் இருந்திருக்கிறார்கள்.

 

ஆபிரகாம் கடவுளுக்கு முன்னரும், பின்னரும் எழுதப்பட்டிருக்கும் கடவுள்களின் நூல்கள் பலவற்றிலும் உலகம் படைக்கப்பட்ட விபரங்களில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களை வைத்துத் தயாரிக்கப்பட்ட மாதிரி உலக வரைப்படத்தை மேலே காண்க(நன்றி: ஆங்கில மூலம் Quora)

 

இதன்படி:

 

Tehom or Great Deep:

ஆழமான பரந்த கடல்: பூமி இதனுள் மூழ்கி இருந்தது. கடவுள் வந்து பூமியைப் பிரித்து எடுத்து மேலே (மேலே?) நிறுத்தினார்.

 

Pillars of the Earth:

பூமியைத் தாங்கிப் பிடித்திருக்கும் தூண்கள்: (இந்தப் பெரிய பாரத்தைத் தாங்க ஆழ் கடல் தரையில் கீழ் உள்ளே எத்தனை மீட்டருக்கு, எந்த அளவில் concrete pile கள் போட்டாரோ!. ஆனால் கடலுக்குத் தரை இல்லை, அது எங்கும் வியாபித்து இருக்கிறதாமே!)

 

Foundation of the Deep:

எல்லாத் தூண்களையும் இணைத்து ஒரு அத்திவாரம் Raft Footing அல்லது Pile Cap  . ( என்ன என்ஜினீயர் மூளை அப்பா!)

 

Earth:

கடலில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட உலர்மண் கொண்ட தட்டையான நிலப்பகுதி, 'பூமி'. (மத்திய கிழக்கின் ஒரு சிறிய பகுதிதான் உலகம் என்று கடவுள் நினைத்துவிட்டார், உலர் மண்ணை மட்டும்தான் அவருக்குத் தெரியும். பாவம்!)

 

Raqia  or  Firmament:

கடல் நீர் உட்புக்காதவாறு, ஓர் அரை மூடி (Dome) வடிவில் தடித்த சுவர் ஒன்று மண்ணில் இருந்து வானம் வரை  சுத்திவரக் கட்டிவிட்டார். இரும்போ, பாறைகள் கொண்டோ யார் அறிவார்? (பெரும் கடலின் நிறை, மையம் நோக்கிய அமுக்கம் எல்லாவற்றையும் நன்றாகவே கணித்துக் கட்டியிருப்பார்போலும் அந்தச் Structural Engineer!. அப்படி என்றால் எங்கள் rocket எல்லாம் இந்தச் சுவரைத் துளைத்துக் கடலின் ஊடாகத்தான் போய் இருக்க வேண்டும்!)

 

Mountains:

மலைத் திட்டிகளையும் உருவாக்கினார்.(மத்திய கிழக்கில் மலைகள் போல சில உள்ளன!)

 

Sheol:

இறந்த பின்னர், சொக்கம்/நரகம் போகும் முன்னர் இளைப்பாறும் இடம். (சிலரின் கொள்கையின்படி இதன்கீழ்ப் பல படிகளில் நரக உலகங்கள் உள்ளன. ஆகவும் அடியில் உள்ளது வெளிச்சமே இல்லாத கொடிய நரகமாம்!. அப்போ, முதலாவது Sheol உள்ளுக்குள் மின்சார இணைப்பு இருக்குமோ? யார் அறிவார், நான் இறந்தபின்னர் போகும் பாதைதானே; போகும்பொழுது பார்ப்போம்!).

 

Sun, Moon:

பகலுக்கும், இரவுக்கும் வெளிச்சம் தர சூரியன், சந்திரனை வானில் சுற்ற விட்டார். கடலுக்குள் ஒரு புறம்  விழுந்து மறு பக்கம் வந்தன! (எவ்வளவு கருணை மகான்!)

 

Stars:

பார்க்க அழகாய் இருக்கட்டுமே என்று ஆங்காங்கு நட்ஷத்திரங்களைப்  பதித்து மின்ன விட்டார். (நல்ல மகா இரசிகன்தான்!)

 

Windows Portals:

தேவதைகள் அவ்வப்போது பூமிக்குப் பறந்து வரும் பாதை, துளை வாசல்கள். - அடடே! பறப்பதால், காற்று மண்டலம் இருக்கும் தூரம்தான்; வலு கிட்ட! , அதுசரி, அதற்கு முதல் இருக்கும் கடலுக்குள் சிறகோடு நீந்தி வருவார்களா? எங்கிருந்து வருவார்கள்? -  ( கடல் நீர், சுவர் துளை ஊடாக பூமிக்கு வரமுடியாத One Way Directional Valve என்ஜினியரிங் டிசைன்).

 

Upper  Seas  or  Waters  above the Firmament :

தொடர் கடல் பூமி, வானம் முழுவதையும் சுற்றி உள்ளது. (சிலவேளை இங்கு உப்பில்லாத கடல் நீராய் இருக்குமோ? மழை இங்கிருந்துதான் பொழிகின்றதோ?).

 

Chambers  in  Heaven :

இங்குதான் நம்ம கடவுள் இருக்கிறார். பல அடுக்குகளில் சொர்க்கலோகங்கள் இருக்கின்றன. இறந்த நல்லவர்கள் எல்லோரும் அங்குதான் செல்வார்கள்.

 

(இவை எல்லாவற்றையும் மறுத்து, முழுப் பூசணிக்காய்களைச் சோற்றினுள் மறைத்து, நூல்களில் கூறிய பிதற்றல்களுக்கெல்லாம், வெகுளித்தனமான, அபத்தமான புதிய விஞ்ஞான விளக்கங்கள் கூறி, தொடர்ந்து தங்கள் கடவுள்களைக் காப்பாற்றிக்கொள்ள முனையும் அதி மேதாவிகளும் பலர் உள்ளனர்.)

 

நீங்கள் நினைப்பதுபோல் அவர் - கடவுள் - அதிக தூரத்தில் இல்லை. பறக்கக்கூடிய காற்று மண்டலம் அங்கு உள்ளபடியால்  ஓர் 30, 40 அல்லது அதிக பட்சம்  100 கிலோமீட்டர் தூரத்தில்தான் இருக்கிறார்.


நாம் அங்கு உல்லாசப் பயணம் சென்று, கடவுளோடு விருந்துண்டு  திரும்பும் காலம் வெகு விரைவில் வரும்!


பிற கிரகங்களுக்கே போய்விட்டோமாம்; இது என்ன கஷ்டமாவெறும் ....சி

- செ.சந்திரகாசன்

0 comments:

Post a Comment